Wednesday, June 29, 2016

ஸ்வாதி படுகொலையும் போலீஸின் நாடகமும்

குற்றவாளியின் சி.சி.டிவி படம்
ஸ்வாதி படுகொலை வழக்கில் தொடர்ந்து முரண்பாடான தகவல்கள் போலீஸ் தரப்பில் இருந்து கிடைத்து வருகின்றன. நேற்று ஒரு செய்தி இணையதளம் போலீஸ் குற்றவாளி தென் தமிழகத்தை சேர்ந்த வாடகைக் கொலையாளி என ஐயப்படுவதாயும், அங்கு விசாரணை முடுக்கி விடப்படுவதாயும் தெரிவித்தது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி தென் தமிழகத்துக்கு உரித்தானது என்பது காரணம் எனப்பட்டது.

ஆனால் இன்னொரு பக்கம் இன்றைய ஹிந்துவிலும் சரி, சற்று முன் படித்த இணைய செய்திகளிலும் சரி போலீஸ் தரப்பு இதை ஒரு பெண்களை பின் தொடரும் மனநிலை சிக்கலுள்ள ஒருவன் செய்த கொலை என சித்தரிக்க முயல்வதை கண்டேன். நுங்கம்பாக்கம் துணை ஆணையர் குற்றவாளி வாடகைக் கொலையாளியாக இருக்க முடியாது என்கிறார். கடந்த ஒரு மாதமாய் அவன் ஸ்வாதியை பின் தொடர்ந்துள்ளதாய் அவளது தோழிகள் மற்றும் குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் இது வாடகைக்கொலையாளிகளின் வழக்கமும் தானே. அவர்கள் ஒருவரது போக்குவரத்து மார்க்கங்கள், வழக்கங்கள், தினசரி நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர் தானே திட்டம் வரைந்து செயல்படுத்துவார்கள்!
வேறு சில கேள்விகளுக்கும் போலீஸ் பதிலளிக்க வேண்டும்.
குற்றம் பழகாத ஒருவர் இப்படி கச்சிதமாய் எப்படி கழுத்தில், அதுவும் ரத்தம் தன் மேல் படாதபடி, பின்னால் இருந்து ஸ்வாதியை வெட்டி சாய்க்க முடியும்?
குற்றம் செய்த கருவியை ஒருவரிடம் இருந்து கண்டெடுத்தால் அதுவே அவரை குற்றவாளி என நிரூபிப்பதற்கு பிரதான ஆதாரம். அதனால் தொழில்முறை குற்றவாளிகள் ஆயுதங்களை போகிற வழியில் கைவிடுவார்கள். இக்குற்றவாளியும் அதையே செய்திருக்கிறான். அதுவும் ரேகைகளை அழித்து விட்டு. குற்ற வாசனை இல்லாத, தொழில்முறை குற்றவாளி அல்லாத ஒருவன் இவ்வளவு தெளிவாய் செயல்படுவானா?
குற்றத்திற்கு பின் அவன் எப்படி தப்பி செல்வது என்பது அறிந்து வைத்திருக்கிறான். அது மட்டுமல்ல கொலை செய்த பின் ஓடித் தப்பும் போது அவன் போனில் பேசியிருக்கிறான். அது வாகனத்தோடு வெளியே காத்திருக்கும் சகாவுடன் என்பதை ஊகிப்பது சுலபம். எந்த நோக்கமும் அற்ற பின் தொடரும் ஒரு ஆள் இப்படி துணைக்கு ஆளை நியமித்து, வேலை முடிந்ததும் கச்சிதமாய் தப்பிச் செல்வானா?
இந்த களேபரத்துக்கு இடையில் அவன் ஏன் ஸ்வாதியின் ஸ்மார்ட் போனை எடுத்து செல்ல வேண்டும்? அவளைக் கொன்ற பின் அவளது போனில் அவனுக்கு என்ன அக்கறை? அவன் வெறுமனே பின் தொடர்கிறவன் என்றால் அவன் அவளுடன் முன்பு போன் மூலம் தொடர்பு கொண்டிருக்க முடியாது. அதனால் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அப்போனில் இருக்க முடியாது. பிறகு அவன் ஏன் போனை கவர்ந்து போக வேண்டும்?
இறுதியாய், இப்படி பின் தொடரும் நபர்கள் பெண்களை பொது இடத்தில் வெட்டி சாய்த்ததற்கு முன்னுதாரணங்கள் உண்டா? பொதுவாக நோக்கமற்று பின் தொடர்பவர்கள் அப்பெண்ணை தொந்தரவு செய்யலாம், பலாத்காரத்துக்கு கூட முயலலாம். ஆனால் அதை ஆளில்லாத இடங்களில் தானே முயல்வார்கள்?
பொது இடத்தில் கொல்லுவது, அதுவும் காலைப் பொழுதில் செய்வது வாடகைக்கொலையாளிகளின் பாணி அல்லவா?
காவல் துறை ஏன் வாடகைக்கொலையாளி சாத்தியத்தை ஏற்க தயங்குகிறது? மக்களிடம் பீதி பரவக் கூடாது என்பது ஒரு காரணமாய் இருக்கலாம். இன்னொன்று, வாடகைக்கொலையாளி என்றால் சம்மந்தப்படாத ஒருவரை கைது செய்து என்கவுண்டர் செய்வது சிக்கலாய் இருக்கும். காரணத்தை நிறுவ வேண்டும், செய்ய நியமித்தவரை கைது செய்ய வேண்டும். ஆனால் பெண்களை பின் தொடரும் மனம் பேதலித்த ஆள் என்றால் இந்த தொந்தரவெல்லாம் போலீசுக்கு கிடையாது அல்லவா! மேலும் வாடகைக்கொலையாளி எனும் போது அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகி விடுகிறது. வெறுமனே பெண்களை பின் தொடர்கிறவனின் குற்றம் ஒரு பிறழ்வு நடவடிக்கையாய் பார்க்கப்படும். குற்றத்தையும் பொறுப்பையும் சுலபத்தில் பிளாட்பார்மில் திரிகிறவர்கள், விளிம்புநிலையை சேர்ந்தவர் மீது திணித்து விட முடியும்.

இன்னும் சில வாரங்களில் ஒரு அப்பாவியை என்கவுண்டர் செய்து வழக்கை முடித்து விடுவார்கள் எனத் தோன்றுகிறது!

1 comment:

Srimalaiyappanb sriram said...

அப்படித்தான் முடியும் என்பதே ஏன் கருத்தும்