Wednesday, June 22, 2016

விராத் கோலி: ரன் இமையம்
சமீப காலத்தில் கோலியை அடிக்கடி சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் சச்சினையும் மிஞ்சி சென்று விடுவார் என முன்னாள் இங்கிலாந்து வீரர் டொமினிக் கார்க் கூறினார். அப்போது கோலி அனைவரையும் கேட்டுக் கொண்டார் “என்னை சச்சினுடன் ஒப்பிடாதீர்கள். சங்கோஜமாய் இருக்கிறது. அவர் திறமையுடன் பிறந்தவர். நான் கடுமையாய் உழைத்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். என்னை என் அளவில் மட்டுமே மதிப்பிடுங்கள்”.

ஒருவேளை திறமையை பொறுத்த மட்டில் கோலி சச்சின் உயரத்தை எட்டாமல் இருக்கலாம். ஆனால் அவர் வருடாவருடம் குவிக்கும் மலைமலையான ரன்கள் அவரை ஒரு நவீன மேதை என கொண்டாட நம்மை தூண்டுகிறது. வேறு வழியில்லை! நடந்து முடிந்த ஐ.பி.எல்லில் மட்டுமே அவர் 900 ரன்களுக்கு மேல் அடித்தார். ஐ.பி.எல் வரலாற்றிலே யாரும் இவ்வளவு ரன்கள் குவித்ததில்லை. 
கோலி இந்த ஐ.பி.எல்லில் நான்கு சதங்கள் அடித்திருக்கிறார். பொதுவாக T20 ஆட்டங்களில் மட்டுமே அவர் இவ்வருடத்தில் 1544 ரன்கள் மொத்தம் எடுத்திருக்கிறார். ஏன் இது ஸ்பெஷல்?
கோலி ஒரு இயல்பான T20 பேட்ஸ்மேன் அல்ல. அவரால் கெய்ல், டிவில்லியர்ஸ் போல விருப்பப்படி சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் இல்லை. இதை அவரே ஒரு பேட்டியில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் அபாரமான ஸ்டிரைக் ரேட்டுடன் தொடர்ச்சியாய் T20யில் ரன்கள் குவிக்கிறார். மிக நெருக்கடியான கட்டங்களில் தன் அணியை காப்பாற்றி வெற்றிடைய வைக்கிறார். 2016 T20 உலகக்கோப்பையின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது இன்னிங்ஸ் அப்படியான ஒன்று.
 அந்த ஆட்டத்தின் முடிவில் ”கோலி எனும் மேதையிடம் நாங்கள் தோற்றி விட்டோம்” என ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒத்துக் கொண்டார். அந்த ஆட்டத்தில் அவர் பொறுமையாய் ஒற்றை இரட்டை ரன்கள் ஓடியே சமாளித்து வந்தார். அன்று அவர் சிற்ந்த ரிதமில் இல்லை. பந்து சரியாய் மட்டையில் படவில்லை. டைமிங் இயல்பாய் அமையவில்லை. ஆனால் கோலி இந்தியாவை இறுதி இலக்கு வரை கொண்டு போயே ஆக வேண்டும் என முனைப்பாய் இருந்தார். 15வது ஓவருக்கு பிறகு அவர் சட்டென கியர் மாற்றினார். எதிரணியின் வேகவீச்சாளர் பாக்னரின் நல்ல பந்துகளை கூட தன்னால் விருப்பபடி பவுண்டரிகளுக்கு விளாச முடியும் என காட்டினார். அந்த கடைசி ஓவர்களில் அவர் ஆடுவது கண்டு உலகமே திகைத்து நின்றது. பந்தை எங்கு வீசினாலும் எப்படியான களத்தடுப்பு அமைத்தாலும் அவரால் அதை சுலபத்தில் மீறி எல்லைகோட்டை நோக்கி பந்தை துரத்த முடிந்தது. இந்த தருணத்தில் தான் சச்சின் நமக்கு நினைவு வந்தார். பவுலர்கள் கோலியை விழுந்து வணங்காதது தான் அன்று குறை. மற்றபடி அவர்கள் முழுக்க அவரது மேதைமை முன்பு அடி பணிந்தனர்.
கோலியின் தொடர்ச்சியான ரன் குவிப்பின் ரகசியம் என்ன?
1)   பணிவு
சச்சினுக்கும் கோலிக்குமான பொதுவான குணம் இது. இருவரும் பவுலர்களை, அவர்கள் யாரென்றாலும், முதலில் மரியாதை கொடுப்பார்கள். ”சிறந்த ஆட்டநிலையில் இருக்கும் போது நமக்கு சுலபத்தில் அகங்காரம் வந்து விடும். அதை தவிர்ப்பதில் நான் மிக கவனம் காட்டுவேன்.” என கோலி சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
2)   திட்டம்
 அவர் ஒவ்வொரு T20 ஆட்டத்தை துவங்கும் போது கவனமாய் ரிஸ்கான ஷாட்களை தவிர்ப்பார். மட்டையை நேராய் காட்டி ஆடுவார். முதல் இருபது பந்துகளில் சிங்கிள்ஸ், இரட்டை ஓட்டங்கள் மட்டுமே எடுப்பார். பவுண்டரி அடிப்பதென்றாலும் தரையோடு தான் டிரைவ் செய்வார். சில நாட்கள் அவர் நல்ல ரிதமில் இல்லையென்றாலும் ஒற்றை ஓட்டங்கள் கொண்டே அரைசதமாவது அடித்து விடுவார். இதை தொடர்ந்து தான் அவர் கொஞ்சம் ரிஸ்கான lofted drives ஆடத் துவங்குவார். அதுவும் மிகுந்த துல்லியத்துடன் களத்தடுப்பை பிளக்கும் விதமாய் ஷாட்களை place செய்வார். ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலி தவறாது ஒரு பார்முலாவை பின்பற்றுகிறார். அவர் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. திட்டமும் உழைப்பும் புத்திசாலித்தனமும் அவரை இந்த உச்சத்துக்கு கொண்டு சேர்த்துள்ளன.
ஒரே பலவீனம்:

இந்த ஐ.பி.எல்லில் கோலி ஒரே முறை தான் off stumpக்கு வெளியே முறியடிக்கப்பட்டார். அது தில்லி அணிக்காய் ஆடும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் பந்தில். அப்பந்து off stumpஇல் விழுந்து உள்ளே வருவது போல் தோற்றம் காட்டி வெளியே ஸ்விங் ஆனது. அதை கால் பக்கமாய் திரும்பிய மட்டை கொண்டு தடுக்க முயன்ற போது கோலி பீட் ஆனார். Off stumpக்கு வெளியே இன்றும் கோலிக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர் மட்டையை நேராய் பிடித்து டிரைவ் செய்வதில்லை. இந்த சிக்கலை சரி செய்தால் அவர் விரைவில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆகி விடுவார்.

2 comments:

King Viswa said...

//டொமினிக் குக்//????

Abilash Chandran said...

திருத்தி விட்டேன் :)