Sunday, June 19, 2016

குமரகுருபரனுக்கு அஞ்சலி



நேற்று இயல்பு விருது பெற்றவர்களின் படைப்புகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி தீராநதிக்கு அனுப்பினேன். அதில் குருபரனின் கவிதை பற்றியும் ஒரு பத்தி உண்டு. அது பற்றி அவரிடம் பேச நினைத்தேன். இன்று காலை மாரடைப்பில் அவர் மரணமுற்றார் என்ற அந்த எதிர்பாராத சேதி. வாழ்க்கையில் எவ்வளவு வேலைகள், எதிர்கால திட்டங்கள், தொடர்ந்து ஓட்டம் இதெல்லாம் முடிவுறாமல் சட்டென மின்சாரம் போவது போல் நின்று போகும் போது எதையோ பாதி முழுங்கி தவிப்பது போல் இருக்கிறது.

நான் குமர குருபரனுடன் அணுக்கமாய் பழகினதில்லை. சில விழாக்களில் உரையாடியிருக்கிறேன். பாண்டிச்சேரியில் நடந்த அவரது கவிதை விவாத கூட்டத்துக்கு கலந்து கொள்ள என்னை அழைத்தார். செல்வதாய் திட்டம் இருந்தது. ஆனால் உடல் நலமின்மையால் கடைசி நேரத்தில் ரத்து செய்தேன். பிரியமான உணர்ச்சிகரமான மனிதர் என ஊகித்தேன். எனக்கு அவரைப் பார்க்கும் போதெல்லாம் Jungle Book கதையின் பாலூ பாத்திரம் நினைவு வரும்.
 எழுத்துலகில் சிலரிடம் நெருங்கி பழகி இருக்கிறார். நிறைய பேருக்கு அவரது மரணம் திக்கென்று இருக்கிறது. அவரைத் தெரிந்து கொள்ளவில்லையே என கலங்குகிறார்கள்.
அவரைத் தெரிந்து கொள்ள அவர் கவிதைகள் உள்ளன. அத்தொகுப்புகளை வாசித்து பேசுங்கள். எழுத்தாளன் எப்போதும் நம் இதயத்தின் வெகு அருகிலேயே இருக்கிறான்.

குமர குருபரனுக்கு என் ஆழ்ந்த அஞ்சலி.

No comments: