Friday, June 17, 2016

கல்விப்பண்ணைகளின் இந்தியா

இன்றைய ஆங்கில ஹிந்து நாளேட்டில் பள்ளித் தேர்வுகளின் நெருக்கடி எப்படி பிள்ளைகளின் திறமை, படைப்பூக்கத்தை உலர்ந்து போக வைக்கிறது, தற்கொலைக்கு தூண்டுகிறது என்பது பற்றி ஒரு நல்ல நடுப்பக்க கட்டுரை வந்துள்ளது. எழுதியவர் ரோஹித் தன்கர். அஸிம் பிரேம்ஜி பல்கலையின் பேராசிரியர்.

ஒரு மாணவரின் திறமையை, உழைப்பை, வருங்கால சாத்தியங்களை எப்படி தேர்வுத்தாளின் வறட்டுக் கேள்விகளும் எந்திரத்தனமான மதிப்பீட்டு முறையும் மதிப்பிட முடியும்? ஏன் பிள்ளைகளை கறிக்கு வளர்க்கிற லகான் கோழிக்குஞ்சுகளைப் போல் நடத்துகிறோம்? இதற்கு ரோஹித் தன்கர் காணும் காரணம் நமது சாதிய, படிநிலை அமைப்பு. ஏற்கனவே இறுகிப் போயிருந்த சாதி அமைப்பு பிற்பாடு ஆங்கிலேய காலனிய காலத்தில் தேர்வு அமைப்பாய் நீட்சி பெற்றிருக்கிறது என்கிறார்.
இனி எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள்:
 மத்திய சாதியினர் தம் படிநிலை இடங்களில் இருந்து முன்னும் பின்னும் நகரவும், மேல் சாதியினர் தம் இடத்தை தக்க வைக்கவும் தேர்வு முறை பயன்படுகிறது. இரு சாராருக்கும் இடையில் போட்டி துவங்குகிறது. மத்திய சாதியினருக்கு இடையிலும் கூட ஓட்டப்பந்தயம் தான். தாழ்த்தப்பட்டவருக்கான ஒதுக்கீடு உண்மையில் நம் சாதிய கட்டமைப்பை குலைக்கவில்லை.
இந்தியாவில் வியாபாரம் மூலம் சமூகத்தில் உயர்ந்த மத்திய சாதியினருக்கு கல்வியை விலைக்கு வாங்கவும் கல்வித் தந்தைகள் ஆகவும் பண / அரசியல் அதிகாரம் பயன்படுகிறது. (பண அதிகாரத்துடன் அவர்களுக்கு கல்வி தரும் அந்தஸ்தும் முக்கியமாய் உள்ளது.) இப்படி கல்வி அதிகாரம் இருப்பவர்களுக்கு மட்டும் எட்டும் கனியாகிறது.
 கல்வி இருந்தால் மட்டும் கூட மத்திய வர்க்கத்தில் இருக்கும் ஒருவர் இதே அதிகாரத்தை அடைந்து இழந்த இடத்தை கைப்பற்றலாம் எனும் சாத்தியமும் உள்ளது. இப்படி ஒரு சுழற்சி தோன்றுகிறது. பணம் – கல்வி = கல்வி - பணம்
 அதாவது ஒரு மத்திய சாதி செல்வந்த குடும்பத்தினர், அரசியலில் பெரும் செல்வாக்கு படைத்தவர்கள், தம் பிள்ளைகளை நேரடியாய் வியாபாரத்தில் அறிமுகப்படுத்த மாட்டார்கள். அவர்களை வெளிநாட்டில் எம்.பி.ஏ, மருத்துவ படிப்பு கற்க அனுப்புவார்கள். அந்த பட்டம் வெறும் அலங்காரம் தான். இது நம் சமூக அமைப்பில் இன்றும் கல்வி பணத்தை கடந்த அதிகார மதிப்பை கொண்டுள்ளதை காட்டுகிறது. அதாவது பணம் ஈட்டுவது – கல்வி மதிப்பை பெறுவது – சாதிய அதிகாரத்தை உயர்த்துவது அல்லது தக்க வைப்பது --- இந்த சங்கிலித் தொடரில் இருந்து மக்கள் தப்பிப்பது எளிதே அல்ல.
எனக்கு இந்த கட்டுரை ராஜ் கௌதமனின் ஒரு கட்டுரையை நினைவுபடுத்தியது. அவர் எப்படி பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் விவசாய குடிகளாய் இருந்த பிராமணர்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கல்வி மற்றும் நகர மயமாக்கத்துக்கு உள்ள அதிகார சாத்தியங்களை புரிந்து கொண்டு நகர்ந்தார்கள் என்றும், பண்ணை வாழ்வை கைவிடாது, நிலப்பிரபுக்களாய் வாழ நினைத்த வெள்ளாளர்கள் எப்படி வீழ்ந்தனர் என்றும் விவரிக்கிறார்.
கல்வி அமைப்பை கேள்வி கேட்கும் அறிவுஜீவிகள் எப்படி தம் பிள்ளைகளுக்கு தேர்வு நேரம் வந்து விட்டால் மும்முரமாய் அதற்கு உதவுவதற்கு போய் விடுகிறார்கள் என்பதையும் ரோஹித் தன்கர் நக்கலடிக்கிறார். உண்மையில் நமக்கு வேறு வழியில்லை. நமக்கு தேர்வு அமைப்பில் நம்பிக்கை இல்லை என்பதற்காய் நம் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காமலோ தேர்வில் தோல்வியடைய அனுமதிக்கவோ முடியாது. தேர்வை விமர்சிக்கும் நாமும் அதை ஏற்று இயங்கித் தானே பிழைக்க முடிகிறது! இதுவும் சாதி அமைப்பின் சிக்கல் தான். சாதியை எதிர்க்கிற நீங்களோ நானோ அதற்கு வெளியில் நின்று வாழ முடியுமா? முடியாது.
தேர்வு முறைக்கு நம்மவர்கள் அளிக்கும் மிதமிஞ்சிய முக்கியத்துவத்திற்கு எனக்கு மற்றொரு காரணம் தோன்றுகிறது. நமது மக்கள் தொகை. அமெரிக்காவில் யாராவது பில் கேட்ஸ் அல்லது ஸ்டீவ் ஜாப்ஸின் கல்வித் தகுதி பற்றி கவலைப்பட்டார்களா? ஜாப்ஸ் தன் படிப்பை கூட முடிக்கவில்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். காரணம் அங்கு மக்கள் தொகை குறைவு, மிதமிஞ்சிய resources உள்ளன. பன்னிரெண்டு வயதில் இருந்தே நம் பிள்ளைகள் டியூசன் போய் மனப்பாடம் செய்யும் போது ஸ்டீவ் ஜாப்ஸ் தன் குடியிருப்பில் உள்ள பொது கணினியில் புரோக்ராம் எழுதவும் அதை புரிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருந்தார். சில வருடங்களிலேயே அவரும் நண்பர்களும் புது கணினியையே உருவாக்குகிறார்கள். ஆப்பிள் தோன்றுகிறது. நம் மாணவர்கள் இதற்கான வாய்ப்புகள் மட்டுமல்ல அவகாசமே இருக்காது. ஒரு மக்கள் தொகை குறைவான பணக்கார நாட்டில் நீங்கள் குறைவாய் படித்தால் கூட பிழைக்கலாம். நம் நாட்டில் பிச்சை எடுக்க வேண்டியது தான்.
 இங்கு நூறு பேர் வேலைக்கு ஆயிரம் பேர் வரிசையில் நிற்கிறார்கள். அவர்களை வடிகட்ட நமக்குள்ள ஒரே எளிய முறை எழுத்துத் தேர்வு. இந்த அமளிதுமளியில் நமக்கு ஒரு மாணவன் எதிர்கால ஸ்டீவ் ஜாப்ஸா என்பது பற்றி அக்கறை இருக்க முடியாது.
போட்டியிடும் மக்களின் எண்ணிக்கை உயரும் போது அது படைப்பூக்கத்தை, பரீட்சார்த்த முயற்சிகளை பின்னுக்கு தள்ளி, உற்பத்தியின் அளவையும், போல செய்வதையும் (imitation) மட்டுமே ஊக்குவிக்கும்.

டெஸ்மண்ட் மோரிஸ் எனும் விலங்கியல் ஆய்வாளர் The Human Zoo எனும் நூலில் இதைப் பற்றி பேசுகிறார். விலங்குகளால் மனிதர்களைப் போல் இவ்வளவு கூட்டமாய், மந்தையாய் வாழ முடியாது. அப்படி வாழும் போது மனம் இயல்பாகவே நெருக்கடிக்கு உள்ளாகிறது. அச்சமும் குழப்பமும் சூழ்கிறது. ஐம்பது பேர் இருக்க வேண்டிய இடத்தில் நூறு பேரை அடைக்கிறார்கள். அங்கு நீங்களும் இருக்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் உடல்கள். உங்கள் முதல் எண்ணமே எப்படி நம்மை பாதுகாப்பது என்பதாய் அப்போது இருக்கும். நம் கல்வி அமைப்பும் இப்படியான ஒரு மனித மிருக காட்சியகம் தானே. அதிலிருந்து தப்பிக்க ஒரே மார்க்கம் தேர்வு எனும் போது அனைவரும் முந்தியடிப்பதில் வியப்பில்லை தானே?

1 comment:

Pandiaraj Jebarathinam said...

எல்லோருமே கல்வி என்று வரும்போது கருத்தை தெரிவிப்பதுண்டு ஆனால் அது பொதுவில் மட்டுமே. தனி வாழ்வில் கருத்து தெரிவித்தவர் சாமானியனாக மாறிப்போகிறார் கருத்தும் தன்னை பிழையெனக் கருதி கரைசேராமல் ஆழத்தில் ஒளிந்து கொள்கிறது.