Wednesday, June 15, 2016

காந்தியின் கிறித்துவம்Image result for mahatma gandhi civil disobedience movement

நண்பர் அருள் ஸ்காட் ஒரு கட்டுரை எழுதி எனக்கு அனுப்பி இருந்தார். காந்தியின் ஆளுமை எப்படி தல்ஸ்தாயின் ரஷ்ய கிறித்துவத்தால் உருக்கொண்டது என அதில் விளக்குகிறார்.
அக்கட்டுரையின் விவாதம் சுவாரஸ்யமானது. காந்தியை போன்று அக்காலத்தைய அரசியல்/கலை ஆளுமையகள் ஐரோப்பிய கல்வியாய் தாக்கம் பெற்றவர்கள். காந்தி நம் மக்களின் ஆன்மாவோடு அணுக்கமாய் உரையாடினார். ஆனாலும் அவர் ஐரோப்பிய கிறுத்துவத்தின் ஒரு நீட்சி தான். வாழ்க்கை என்றால் நன்மை × தீமை எனும் எதிரிடை என அவர் நம்பினார். தான் நன்மையின் பக்கம் என விடாப்பிடியாய் கருதினார். இந்தியர்களிடம் இப்படியான ஒரு பகுப்பை காண முடியாது. இதை அவர் ஐரோப்பிய பயணம், கல்வி மூலம் பெற்றிருக்க வேண்டும். அவ்விவத்தில் காந்தி ஒரு கிறித்துவ பாதிரி என்பது சரி தான்.

 எனக்கு அவரிடம் உள்ள சிக்கல் அவர் நிலவுடைமை மனோபாவம் கொண்ட, ஒரு பாரபட்ச லட்சியவாதி என்பது. அவர் தலித்துகளை கையாண்ட விதம் எம்.ஜி.ஆர் ஏழைகளை எதிர்கொண்டது போன்றே இருந்தது. ஆனால் அவர் இந்திய மனதை, இந்திய கலாச்சாரத்தை மிக நன்றாய் புரிந்து கொண்டவர். மிக நல்ல அரசியல்வாதி. காந்தியின் போராட்டம் தான் விடுதலையை பெற்றுத் தந்ததா என்பதில் சர்ச்சை உள்ளது. பிரிட்டீஷ் அரசாங்கம் கௌரவமாய் இந்தியாவை விட்டுப் போக அவர் ஒரு முகவராய் செயல்பட்டார் என நினைக்கிறேன். அவர் பிரிட்டீஷ் அரசை அதன் சுரண்டலை பழிசொன்னதில்லை. ஒரு நாட்டை இரு நூற்றாண்டுகள் சுரண்டி விட்டு மற்றொரு நாடு ஒரே நாளில் அம்போ என விட்டுப் போகலாகாது, பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும் என கோரவில்லை. ஏனென்றால் பிரிட்டனின் கணிசமான செல்வத்தின் ஒரு பகுதி அநியாயமாய் இந்தியர்களிடம் இருந்து திருடியது தானே. காந்தி கிட்டத்தட்ட வை.கோவின் மூன்றாவது அணி போன்றே நடந்து கொண்டார்.
அது போகட்டும். நன்மை குறித்த அவர் புரிதல் எவ்வளவு தூரம் சரியானது? எல்லா மனிதருக்குள்ளும் நற்குணம் உண்டு என அவர் நம்பியது சரி தான். ஆனால் அது மனிதனுக்குள் உள்ளதா அல்லது ஒரு பண்பாட்டு/பொருளாதார discourse வழி தோன்றுவதா? மேல்சாதியினர் தன் நன்மையை உணர்ந்து தலித்துகளை சமமாய் நடத்த வேண்டும் என அவர் கூறிய போது அதன் பொருளாதார விளைவை அவர் உணரவில்லை. இன்று பல தலித்துகள் படித்து வேலைக்கு செல்ல ஆரம்பிக்கையில் பல நிலவுடைமையாளர்கள் தமக்கு பண்ணையிலும் வயலிலும் வேலை செய்ய ஆளில்லை என புகார் கூறுகிறார்கள். இன்று நம் தேசத்தில் பல சிரமமான அருவருப்பான வேலைகளை சாதி மற்றும் வறுமையின் பொருட்டு குறிப்பிட்ட சாதியினரை செய்ய வைக்கிறோம். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் அடிமைகளின் பொருட்டு நடந்ததும் கூட பொருளாதார நோக்கை கருத்தில் கொண்டு தான். ஆனால் உடலையும் லௌகீகத்தையும் இரண்டாம் பட்சமாய், தன் லட்சியப் பயணத்துக்கான கருவிகளாய் மட்டும் பார்த்த காந்தி எனும் ஜைன துறவிக்கு சாதியின் பொருளாதார, சமூகவியல் கோணம் முக்கியமாய் படவில்லை.
இந்த விதத்தில் தான் அம்பேத்கர் மனிதன் சூழலின் பிறவி என புரிந்து கொண்டது முக்கியமாய் உள்ளது. கருத்துக்களும் நம்பிக்கைகளும் மனிதனை மாற்றும் எனும் பார்வை தான் காந்தியின் முக்கிய குறை. தல்ஸ்தாய் ஒரு தனிமனிதராய் லட்சியவாதியாய் இருந்தாலும் அவரது நாவல்களில் லட்சியவாதம் இல்லை. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்கள் தாம் வருகிறார்கள். போரும் வாழ்வும் நாவலில் நடைமுறையை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பிழைக்கிறார்கள். அதிலுள்ள ஒரே லட்சியவாதியான ஆண்ட்ரூ வீழ்ச்சியை சந்திக்கிறான். பியர் இறுதி வரை வாழ்க்கை பற்றி முடிவுக்கு வர இயலாது தவிக்கிறான். முகமற்றவனாய் இருந்து, பின்னர் ஒரே நாளில் பெரும் செல்வந்தனாகி, மதம், போர், கைதி வாழ்க்கை என ஒவ்வொரு அனுபவத்துக்குள் நுழையும் போதும் அவன வேறொருவனாய் ஆகிறான். காந்தி தன் சபர்மதி ஆசிரமத்தில் காதலித்த ஒரு பெண்ணை மொட்டையடித்து தண்டனை அளித்ததாயும் ஆணுக்கு விரதம் இருக்கும் தண்டனை அளிதததாயும் படித்திருக்கிறேன். தல்ஸ்தாய் இந்த ஒழுக்க திணிப்பை ஏற்க மாட்டார். அவர் போரும் வாழ்வும் நாவலில் தன் சகோதரி மீது மெல்லிய காமஇச்சை கொள்ளும் ஒரு சகோதரன் வருகிறான். தல்ஸ்தாய் அவர்களை தன் நாவலில் தண்டிக்கவில்லை. அப்படியே இருக்க அனுமதிக்கிறார். இதுவே காந்தி இந்த இடத்தை எழுதியிருந்தால் இருவரும் குற்றவுணர்வில் வாடி, பரிகாரமாய் ஆசிரமத்தில் கக்கூஸ் கழுவியதாய், பொதுவில் மன்னிப்பு கேட்டதாய் எழுதியிருப்பார். மனிதர்களிடம் சரி, தவறு, நன்மை, தீமை என ஒன்றும் இல்லை என தல்ஸ்தாய் புரிந்து கொண்டது போல காந்தி புரிந்து கொள்ளவில்லை.
மேலும் காந்தி வறுமை, பட்டினி, உடல் துன்பம் ஆகியவற்றை ஆன்மீக வளர்ச்சிக்கான உபரணங்களாய் பார்த்தார். நான் அவரை கடுமையாய் மறுப்பது இந்த அலௌகீக பார்வைக்காய் தான். அது போன்றே அவருக்கு செக்ஸ் மீதிருந்த வெறுப்பு. தன் அப்பா உடல் நலமின்றி கிடக்கையில் தன் இளம் மனைவியுடன் காந்தி புணர்கிறார். அன்றிரவு அப்பா இறக்க காந்தி கடும் குற்றவுணர்வில் தவிக்கிறார். நம்மில் யாராவது இது போல் குற்ற எண்ணத்தில் மருகுவோமா? ஒருவர் சாகக்கிடக்கையில் அவர் மகன் இயல்பாய் செக்ஸில் ஈடுபடுவது அவரது முதிர்ச்சியான, வலுவான மன அமைப்பையே காட்டும் என உளவியல் சொல்லும். ஆனால் காந்திக்குள் என்றும் செக்ஸ் ஒரு கெட்ட காரியம். அவர் அதைப் பார்த்து பயந்து ஓடிக் கொண்டே இருக்கிறார். அதே போல இளமையில் கறி சாப்பிட்டதற்காய் மிகவும் மனம் வருந்துகிறார். என்ன ஒரு அபத்தம். நம்மில் யாராவது பீப் பிரை சாப்பிட்டு விட்டு அழுவோமா? அவரால் என்றுமே தனது சாதி மற்றும் மதத்தின் பழக்க வழக்கங்களில் இருந்து மீளவோ அதை தர்க்கரீதியாய் அலசி பகுத்து அறியவோ முடியவில்லை.
தனது ஜைன பின்புலத்தின் அர்த்தமற்ற நம்பிக்கைகளை அவர் கராறாய் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. தன் உடலையே பாவக்கறை என நினைத்த அவரால் எல்லா மானுட பிரச்சனைகளும் மனதில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன என நினைக்க வைத்தது. அதே போன்றே வன்முறை சூழல் ஒன்றில் இருக்கும் ஒருவனால் வன்முறையை மொழியை தவிர்த்து தன்னை அங்கு தக்க வைக்க முடியாது. சகமனிதன் திருட்டுத்தனத்தின், கயமையின், ஏமாற்றின் மொழியை பேசினால் நாமும் அம்மொழியில் தான் பதில் கூறவும் உரையாடவும் முடியும். மற்றொரு கன்னத்தை காட்டுகிறவன் சமூகத்தில் இருந்தே வெளியேற வேண்டிய்து தான். மகாபாரத்தில் துரோணரை கொல்வதற்காய் அவர் மகன் கொல்லப்பட்டதாய் பீமன் பொய் சொல்கிறான். யுதிர்ஷ்டிரனும் அதே பொய்யை மீள சொல்கிறான். ”நான் போய் பொய் சொல்வதா?” என யுதிர்ஷ்டிரன் கண்ணனிடம் வினவும் போது கண்ணன் கேட்பான்: “அவர்கள் உன்னை சூதில் ஏமாற்றி நாட்டை அபகரிக்கவில்லையா?” சூதின் மொழியை பேசித் தான் கௌரவர்கள் நாட்டை பிடுங்குகிறார்கள். அதே சூழ்ச்சி மொழியை கொண்டு தான் கௌரவர்கள் தோற்கடிக்கவும் படுகிறார்கள். இது தான் வாழ்க்கை. மனிதன் தான் உரையாடும் தரப்பின் பகுதியாக ஆகத் தான் வேண்டும்.

காந்தி இந்த உண்மையை மட்டும் புரிந்து கொள்ளவில்லை. பணமும் அதிகாரமுமே தாழ்த்தப்பட்டவர்களை மேம்படுத்தும் என அனைவரும் இன்று பேசுகிறோம். ஆனால் காந்தி மேல்சாதியினர் மன திருந்தினால் தீர்வு கிடைத்து விடும் என்றார். ஆனால் காந்தி சொன்னது தவறு என இன்றைய இந்தியா நமக்கு சொல்கிறது. அதனால் தான் நமக்கு அம்பேதர்கர் இன்னும் நெருக்கமானவராய் தோன்றுகிறார். “பொருள் வயின் உலகு” என வள்ளுவர் கூறியதை காந்தி ஏற்றிருப்பாரா சொல்லுங்கள். 

No comments: