Tuesday, June 14, 2016

வைரமுத்துவின் உதவியாளர்


-   எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது நான் கவிதை வெறியனாக இருந்தேன். அக்கட்டத்தில் நான் கல்கி, அகிலன் போன்றோரின் தலையணை நாவல்கள் வாசித்திருந்தாலும் கவிதை மட்டுமே என்னை உன்மத்தம் கொள்ள செய்தது. துரதிஷ்டவசமாய் என் வீட்டில் அவ்வளவாய் கவிதை நூல்கள் இல்லை. ஊரில் நல்ல நூலகங்கள் இல்லை. ஒரே புத்தகக் கடை நாகர்கோயிலில் இருந்தது. என்னால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது. பள்ளி முடிந்த வந்த பின் கணிசமான நேரம் இருக்கும். தனியாக கையில் கிடைத்த ஏதாவது காகிதங்களை திரும்ப திரும்ப வாசித்தபடி இருப்பேன்.

 என் பிறந்த நாள் ஒன்றுக்கு அக்கா எனக்கு பாரதியார் கவிதைகள் தொகுப்பு வாங்கித் தந்தார். அதை நான் விவிலியம் போல மனனம் செய்தேன். அப்போது விகடனில் வரும் வைரமுத்து கவிதைகளை கத்தரித்து என் நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைத்திருப்பேன். ஜெயா டிவியில் அப்போது வைரமுத்து தன் வெள்ளை ஜுப்பாவில் ஒரு தேவதை போல் கிட்டத்தட்ட மிதந்தபடி நடந்து தன் கவிதைகளை பாடும் ஒரு நிகழ்ச்சி உண்டு. காதல் கவிதைகளை நடிக நடிகையர் கொண்டு நடித்து காட்சிப்படுத்தவும் செய்வார்கள். பின்னணியில் கவிதை வரிகள் ஒலிக்கும். முடிவில் வைரமுத்து தோன்றி கவிதையின் இறுதி வரிகளை சொல்வார். நான் அந்நிகழ்ச்சியை மெய்மறந்து பார்த்திருப்பேன். என் பித்தை கண்டு சகிக்காத என் அக்கா அடுத்த பிறந்த நாளுக்கு ”வைகறை மேகங்கள்” தொகுதியை வாங்கி பரிசளித்தார். நான் அதை பலமுறை மனனம் செய்தேன். தினமும் அதை ஒரு புனித நூல் போல் எடுத்து ஒரு மணிநேரம் படிப்பேன். அதிலுள்ள உருவக மொழி, மிகை கற்பனை என்னை சொக்க வைத்தது.
 வைரமுத்துவிடம் நேரடியாய் வாசகனிடம் உரையாடும், கிட்டத்தட்ட சத்தமாய் அவன் காதில் சென்று யதுகை மோனை தடதடக்க ஓடும் ரயில் போல் ஒலிக்கும் தொனி உண்டு. அதே போல் நாம் இன்று சாரு மற்றும் ஜெயமோகனிடம் காணும் ஒரு நார்சிஸிஸம் வைரமுத்துவிடமும் உண்டு. இத்தகைய narcissistic ஆளுமை கொண்ட எழுத்தாளர்களிடம் ஆரம்ப நிலை வாசகர்கள் சராணாகதி ஆகி விடுவார்கள். ”நானே எல்லாம், ஆதியும் நானே அந்தமும் நானே” என அவர்களின் சொற்கள் எக்கோ எபக்டில் சொல்லும் போது வாசகர்கள் “ஆம் குருவே” என மீள கூறுவார்கள். வேறு எந்த எழுத்தாளனையும் விட இவர்களுக்கு அலைகடலென வாசகர்கள் திரள்வார்கள்.
எனக்கு பதினைந்து வயது இருக்கும் போது என் எதிர்காலம் குறித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தேன். அது சென்னைக்கு சென்று வைரமுத்துவின் உதவியாளராக சேர்வது. டிவியிலும் மேடையிலும் கவிதை சொட்ட சொட்ட அந்த கம்பீரமான குரலில் கிறக்கமான பார்வையுடன் அவர் பேசுவதை போன்றே நாளும் பொழுதும் வீட்டிலும் பேசுவார் என எனக்குள் ஒரு கற்பனை. அந்த தேன்சொட்டும் மொழியை 24 × 7 கேட்க வேண்டும், அதிலே என் வயிறு நிறைந்து விடும் என நினைத்தேன். இதை வீட்டில் சொன்ன போது அனைவரும் பதறி விட்டார்கள். யார் அந்த வைரமுத்து, அப்படி ஒருவர் நம் ஊரிலே இல்லையே என அம்மா குழம்பினாள். நீ படித்து பட்டம் பெற்ற பின் தாராளமாய் சென்னை போய் அவரிடம் சேரலாம் என அப்பா சமாதானப்படுத்தினார். நான் ரெண்டு பேர் சொன்னதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எப்படி சென்னை போய் அவரை பார்ப்பது என்றே அல்லும்பகலும் யோசித்துக் கொண்டிருந்தேன்.
இதன் பிறகு எனக்கு அப்பா ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தந்தார். நான் ஊரில் உள்ள புத்தகக் கடைகளில் வேட்டையாடி வைரமுத்துவின் பிற நூல்களை வாங்கி வாசித்து குவித்தேன். இதை அடுத்து மு.மேத்தா, தமிழன்பன், நா.காமராசு போன்றோரையும் வாசித்தேன். வைரமுத்து புலி என்றால் இவர்கள் வெறும் பூனைகள் எனப்பட்டது. ஆனாலும் மு.மேத்தாவின் மென்மையான ரொமாண்டிக் காதல், இழப்பின் கசப்பு கொண்ட காதல் கவிதைகள், ஒருவித குழைவு எனக்கு பிடித்தது. வைரமுத்துவின் ஒருவித பெண்-அம்சம் தான் மு.மேத்தா என கருதிக் கொண்டேன்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் தமிழ் பி.ஏ படித்து முடித்து சென்னைக்கு சென்று வைரமுத்துவிடம் சேர்ந்து கொள்ளலாம் என முடிவை மாற்றிக் கொண்டேன். வெண்பா, ஆசிரியப்பா போன்ற வடிவங்களிலும் காதல் கவிதைகள் எழுதிப் பழகிக் கொண்டிருந்தேன். தக்கலை பள்ளியில் ஒரு தமிழாசிரியர் இருந்தார். பார்க்க கொஞ்சம் சாலமன் பாப்பையா போல இருப்பார். அவர் என் காதல் கவிதைகளை ரசித்து ஊக்குவித்தார். சந்தம் இல்லாமல் கவிதை எழுதுவது குற்றம் என இருவரும் தீவிரமாய் நம்பினோம். இந்த வேளையில் தான் விதி விளையாடியது. பல வியாபாரங்கள் செய்து அலுத்துப் போன ஹாமீம் முஸ்தபா எனும் இடதுசாரி இலக்கியவாதியை தக்கலையில் ஒரு புத்தகக் கடை ஆரம்பிக்க வைத்தது.
 நான் முஸ்தபாவை பரிச்சயம் செய்து கொண்டேன். நான் அவரிடம் “வைரமுத்துவே ஆதியும் அந்தமும்” எனும் என் சத்தியவாக்கை முதல் சந்திப்பிலேயே வெளிப்படுத்தினேன். அவர் “வாப்போ நாம நிறைய பேசலாம்” என கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களுக்கு அழைத்துப் போனார்.
கூட்டங்களில் வறுமையில் அல்லாடும் ஷீணித்த நவீன கவிதைகளை பற்றி பேசினார்கள். குறியீடு, படிமம் என்றார்கள். நான் அக்கூட்டங்களில் ஒரு தனி போர் வீரனாய் நின்று வைரமுத்துவுக்காய் வாள் சுழற்றினேன். அவர்கள் கொண்டாடும் விக்கிரமாதித்யன், கல்யாண்ஜி, கலாப்ரியா, பிரமிள் போன்றோர் எழுதுவது சுத்த அனர்த்தம் என வாதிட்டேன். அவர்கள் என்னை மறுக்கவோ திருத்த முயலவோ இல்லை. பொறுமையாய் கேட்டனர். நான் வாசிக்கும் சந்தப் பாடல்களை கவனித்தனர். “நல்லா இருக்கு, மியூசிக் மட்டும் வேண்டாமே” என்றார்கள். கனிவாய் நிறைய சொல்லித் தந்தார்கள். ஆனால் நான் கேட்கும் மூடில் இல்லை. முஸ்தபா என்னை தனியே அமர வைத்து வானம்பாடி கவிதைகள் வெறும் ஜிமிக்ஸ் என்றும், formatஇல் சொற்களை இட்டு நிரப்பும் சர்க்கஸ் விளையாட்டு என்றும் விவரித்தார். நான் முழுக்க கேட்டு விட்டு நடந்ததை அப்படியே விவரிப்பது எல்லாம் கவிதையா என அவரிடம் திரும்ப வாதிட்டேன்.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் என்னை திருத்தவோ மறுக்கவோ செய்யவில்லை. ஒரு சூழலின் பகுதியாய் இருக்கும் போது நான் தானே மாறி விடுவேன் என அவர்கள் நம்பினார்கள்.
நவீன கவிஞர்களின் அறிமுகங்களை விட கூட்டங்களில் எங்க ஊர் கவிஞர்கள் சொந்தமாய் எழுதி வாசித்த நவீன கவிதைகளே என்னை வைரமுத்துவின் கற்பனாவாதத்தை கைவிட வைத்தது. தன்னுடைய அம்மா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மரித்தது பற்றிய நட.சிவகுமாரின் கவிதை என்னை கலங்க வைத்தது, அது எனக்கு வைரமுத்துவை விட இன்னும் உண்மையாய் பட்டது. வானம்பாடிகளும் பட்டாம்பூச்சிகளும் இல்லாத ஒரு உலகுக்கு நான் பயணப்பட்டேன். அது ஒரு சிறுபத்திரிகை உலகம். இழப்புகளின், குழப்பங்களும் சிக்கல்களும் இன்மையுமே பாடுபொருளாய் இருந்த உலகம். ஹெச்.ஜி ரசூல் எனக்கு மதச்சடங்குகளின் கலச்சார உலகை கவிதையாக்க முடியும் என்றும் என்.டி ராஜ்குமார் யட்சிகள், தொன்மக் கதைகளை கொண்டு பிரம்மாண்டமான ஒரு உலகை கட்டமைக்க முடியும் என்றும் காட்டினர். நான் இவர்களிடம் இருந்து தான் பிரமிள், பசுவய்யா, ஆத்மாநாம், கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்கிரமாதித்யன், மனுஷ்யபுத்திரன், சுகுமாரன் என வாசிப்பை அகலப்படுத்திக் கொண்டேன்.
 எனக்கு நவீன கவிதையில் ஏற்பட்ட பிரதான கவர்ச்சி அதன் விசித்திர தன்மை. சுகுமாரனின் “கோடைக்கால குறிப்புகள்” ஒரு உதாரணம். அது போன்ற ஒரு தலைப்பை நான் கனவிலும் யோசித்ததில்லை. அந்த உலகமும் நான் அதுவரை கண்டிராதது. மனுஷ்யபுத்திரனின் “கால்களின் ஆல்பம்” போன்ற கவிதைகளை திரும்ப திரும்ப வாசித்தேன். இப்படியெல்லாம் எழுதலாமா எனும் வியப்பே எனக்கு வானம்பாடி கவிதைகள் குறைபட்டவை என தோன்ற வைத்தது. வைரமுத்து திரும்ப திரும்ப வானம், அந்தி, பட்டாம்பூச்சி, பெண்ணே என்று மட்டுமே எழுதுகிறார் என அலுப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சிறுபத்திரிகைகள் அறிமுகம். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேர்ந்த போது நானாகவே நூலகத்தில் தேடி கவிதைகள் வாசித்தேன். நான் ”விந்தை உலகினுள் ஆலிஸ்” போல் அகன்ற கண்களுடன் மேஜிக் அனுபவங்கள் தேடி திரிந்தேன். டி.எஸ் எலியட்டின் Love Song of Prufrock அப்படி ஒரு மேஜிக் ஷோ. அக்கவிதையில் முதல் பத்தியில் அந்தியை மயக்க மருந்தூட்டி அறுவைசிகிச்சை மேஜையில் படுக்க வைத்த நோயாளி என எலியட் வர்ணிப்பார். மனம் என்பது சுவரில் ஆணியால் அறையபட்டு துடிக்கும் ஒரு பூச்சி போன்ற உருவகங்கள் அக்கவிதையில் வரும். இக்கவிதையை பற்றி ஒரு கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் பேசினேன். வைரமுத்துவின் “யாரங்கே? ராத்திரி வரப்போகும் ராச குமாரிக்கு மேற்கு அம்மியிலே மஞ்சள் அரைப்பது யார்?” போன்ற வரியின் மயக்கத்தில் இருந்து நான் வந்து சேர்ந்துள்ள இடம் மன்றத்து நண்பர்களுக்கு திருப்தி அளித்திருக்க வேண்டும். அவர்கள் புன்னகையுடன் என்னை ஆமோதித்தனர்.
அன்றைய கூட்டம் முடிந்ததும் ஒரு நண்பர் என் தோளில் கையிட்டு காதருகே கூறினார் “உன்னைப் போன்றே வைரமுத்து தாசனாய் ஒரு இளைஞர் எங்கள் மன்றத்துக்குள் ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்தார். அவரை கடைத்தேற்றினோம். அவர் பின்பு சுந்தர ராமசாமியை ஒருநாள் சந்திந்து அப்படியே வழிமாறி காலச்சுவடு அலுவலகத்துக்கு போய் விட்டார்”
அவர் தான் லஷ்மி மணிவண்ணன்.
இவ்வருட சென்னை புத்தகக் கண்காட்சியின் போது உயிர்மை ஸ்டாலுக்கு வைரமுத்து வந்திருந்ததை பார்த்ததும் இந்த நினைவுகள் உயிர்பெற்றன. இன்றும் எனக்கு அவர் வரிகள் மீது, அந்த குரல், முறுக்கு மீசை, வளைந்து சுட்டும் விரல், ராஜ நடை மீது பிரியம் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் நவீன கவிதை பற்றி பேசிய போது வரைமுத்துவில் இருந்து தான் ஆரம்பித்து ஒப்பிட்டு வித்தியாசங்களை விளக்கினேன். இன்றைய மாணவர்களும் அவர் வரிகளுக்கு சிலிர்க்கிறார்கள் என கவனித்தேன்.

 புகைபடத்தில் அவருக்கு வழுக்கை விழுந்திருப்பது பார்க்க சற்று ஏமாற்றம். வைரமுத்து என்பது அவர் கவிதை மட்டுமல்ல. அவரது புறத்தோற்றம், சைகைகள், அந்த பிம்பம் எல்லாமே சேர்த்து தான் அவரது வசீகரம் தோன்றுகிறது. வைரமுத்துவுக்கு வயசானால் அவர் கவிதைக்கும் வயசாகி விடும். அதை தவிர்க்க முடியாது. 

No comments: