Monday, June 13, 2016

எம்.ஜி.ஆரை சந்திப்பது

Image result for எம்.ஜி.ஆர்

 எங்கள் அலுவலக செக்யூரிட்டி தன் பாக்கெட்டில் எப்போதும் எம்.ஜி.ஆர் முகம் பொறித்த பேனா வைத்திருப்பார். அவரிடம் பேனா கேட்டால் இந்த பேனா சரியா எழுதாதுங்க என ஒருமுறை எடுத்து உதறி விட்டு மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். நான் அவரிடம் “நீங்க எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததுண்டா?” எனக் கேட்டேன். தலையாட்டினார். ஏதாவது பொதுக்கூட்டத்தில் சந்தித்திருப்பார் என நினைத்து விசாரித்தேன். அவர் நேரில் பார்த்து பேசியுள்ளதாய் சொன்னார்.

 செக்யூரிட்டி அப்போது ராமநாதபுரத்தில் நடைபாதையில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். நடைபாதை கடைக்காரர்களுக்கு போலிசால் தினம் தொந்தரவு. அதனால் நூற்றுக்கு மேல் கடைக்காரர்கள் கூடி எம்.ஜி.ஆரிடம் புகார் தெரிவிக்க போகிறார்கள். எம்.ஜி.ஆர் அப்போது முதலமைச்சர். ஆனால் இவர்களோ ஏதோ பஞ்சாயத்து தலைவரை பார்க்க போவது போல் கிளம்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தன் தோட்ட வீட்டில் இருப்பார். பாதுகாப்புக்கு போலீஸ் கிடையாது. அவரது சண்டைப்பயிற்சியாளர் தான் ஒரே பாதுகாப்பு துணை. உள்ளே சென்று இவர்கள் எம்.ஜி.ஆரிடம் முறையிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் போலீஸ் அதிகாரி ஒருவரை அழைத்து விசாரிக்கிறார். “சும்மா மிரட்டியிருப்பாங்க. கேஸ் எல்லாம் போட்டிருக்க மாட்டாங்க” என அதிகாரி சல்ஜாப்பு சொல்ல எம்.ஜி.ஆர் அவரை கடுமையாய் எச்சரிக்கிறார். பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது என உறுதியாய் கூறுகிறார்.
 எம்.ஜி.ஆர் வீட்டுக்கு அவரை தேடி செல்பவர்களுக்கு எப்போதும் இரண்டு பந்திகளில் உணவு விளம்பப்படும். ஒன்று சைவம். இன்னொன்று அசைவம். அவர்களை எம்.ஜி.ஆர் உணவருந்தி விட்டு போகச் சொல்கிறார். அது மட்டுமல்ல முன்னூறு ரூபாய் கொடுத்து பகிர்ந்து கொள்ள கேட்கிறார்.
இதையெல்லாம் நேரில் பார்த்தவரே சொன்னாலும் இதில் கொஞ்சம் புனைவுத்தன்மை உள்ளதை என்னால் ஊகிக்க முடிந்தது. பொதுவாய் எம்.ஜி.ஆர் பற்றி சொல்லப்படும் கதைகளை தொகுத்தால் அது புனிதரைப் பற்றின ஒரு புராண இதிகாசம் ஆகி விடும்.
எனக்கு உண்மையில் ஆச்சரியமளித்தது அன்றைய அரசியல் தலைவர்கள் உண்மையில் இந்தளவுக்கு சந்திக்க சுலபமானவர்களாய் இருந்தார்களா என்பது தான். இன்று ஒரு எம்.எல்.ஏ, வட்டச்செயலாளர் போகட்டும் ஒரு பிரபல எழுத்தாளரைக் கூட அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திக்க முடியாது. ஜெயலலிதாவை அவர் கட்சியின் சிறுதலைவர்களே எளிதில் பார்க்க இயலாது. நடைபாதை வியாபாரிகள் எல்லாம் அவர் வசிக்கும் தெரு பக்கமே போக முடியாது.
பொதுமக்கள் கூட இன்று நேரமின்மையால் தவிக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு தங்க நாணயம் போல் மக்களுக்கு தோன்றுகிறது. சும்மா இருக்கும் எழுத்தாளனுக்கு கூட வாரம் மூன்று கூட்டங்கள் இருக்கிறது தன் இருப்பை காட்டிக் கொள்ள. சிறு சிறு வேலைகள் ஆயிரம் நம்மை காத்திருக்கின்றன.
அது மட்டுமல்ல, பரஸ்பரம் சந்தேகம், பாதுகாப்பு பயம் அதிகரித்து விட்டது.
செக்யூரிட்டி நான் கேட்காமலே சொன்னார் “நாங்க இன்னிக்கும் எம்.ஜி.ஆருக்காகத் தான் அந்த முத்திரயில ஓட்டு போடுறோம். இந்த அம்மா நாட்டுக்கு நல்லது பண்றாங்க தான். ஆனா இவங்களுக்கு ரொம்ப ஹெட்வெயிட்டு சார். எம்.ஜி.ஆர் அப்படி இல்ல”
எனக்கு என்னமோ இது நம் காலத்தின் பிரச்சனை எனத் தோன்றுகிறது. நாம் இன்று எண்ணற்ற கதவுகளால் மூடப்பட்ட உலகில் வாழ்கிறோம். சுலபத்தில் அணுகப்படக் கூடியவராய் இருப்பவர் கூட பெயரளவில் தான் அப்படி இருக்கிறார். ஒருவர் உங்களை வெளியே பார்த்ததும் புன்னகைத்து அரவணைத்து விசாரிக்கிறார் என்பதாலே அடுத்த நாள் அவர் வீட்டுக்கு அனுமதி வாங்காமல் போய் நிற்க முடியாது. இன்று ஒவ்வொரு சிறு வட்டத்திற்கு உள்ளும் ஒரு அந்தஸ்து படிநிலை உள்ளது. சுலபத்தில் சந்திக்க முடிகிறவர் மதிப்பற்றவர் என நினைக்கிறோம். நிறைய நேரம் உள்ளவர் உதவாக்கரை என கருதுகிறோம். அதனால் எப்போதும் வேலையில் இருப்பவராய், நேரமே இல்லாதவராய், முன் திட்டமிட்ட சந்திக்க வேண்டியவராய் நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறோம். இன்று ஒருவர் கூட “எப்போ வேணும்னாலும் வாங்க பார்க்கலாம்” என சொல்ல மாட்டார்கள். “போன் பண்ணுங்க பாஸ்” என்பார்கள். உலகம் மாறி விட்டது.

நாமே இப்படி இருக்கும் போது தலைவர்கள்?

1 comment:

Senthil Prabu said...

romba correct abilash..