Wednesday, June 8, 2016

தமிழர்களுக்கு ஏன் வாசிப்பில் ஆர்வம் இல்லை? (1)ஏன் தமிழர்களின் கவனம் சினிமாவை தவிர வேறெங்கும் செல்வதில்லை என்பதை கோபமாய் வினவி சமஸ் தமிழ் ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். பொதுவாய் புத்தகங்கள் ஏன் வாங்குவதில்லை என்பதற்காய் சொல்லப்படும் காரணம் அதன் விலை. ஆனால் அது எவ்வளவு சொத்தையான காரணம் என சமஸ் விளக்குகிறார். உண்மை என்னவென்றால் இன்றுள்ள பொழுதுபோக்குகளிலே ஆக மலிவானது வாசிப்பு தான். சினிமா, உணவகங்களுக்கு செல்வது, பயணம் செய்வது என ஒவ்வொன்றுமே நம் சட்டைப்பையில் பெரிய ஓட்டையை போட்டு விடுகின்றன. ஆனாலும் குடும்பத்துடன் ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு அலுப்பான படத்தை பார்த்து வர நாம் தயங்குவதில்லை.
சரி புத்தகங்கள் விலை அதிகம் என்றே கொள்வோம். இந்தியாவின் மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்று கோட்டூர்புரத்தில் அமைந்துள்ளது. அதில் ஆயிரக்கணக்கான நூல்கள் இலவசமாகவே நமக்காய் காத்திருக்கின்றன. ஏன் நம்மவர்கள் அதை பயன்படுத்துவதில்லை?


கே.என். சிவராமனும் ஒரு நல்ல முகநூல் பதிவு இது சம்மந்தமாய் எழுதி இருக்கிறார். புத்தக வாசிப்பை ஒரு பயிற்சி என அவர் விளக்குகிறார். எப்படி மரபான இசை கேட்க பயிற்சி தேவையோ அது போல் புத்தக வாசிப்புக்கும் அது அவசியம் என்கிறார். ஒரு நாவலை வாசிக்க வாசகனுக்கு சொல்லித் தர வேண்டும், அப்பொறுப்பை பதிப்பகங்களூம் இலக்கிய அமைப்புகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பதிவை படித்த போது எனக்கு என் பதின்வயது அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. கலை இலக்கிய பெருமன்றத்தில் ஆரம்பத்தில் நிறைய நண்பர்கள் எனக்கு வாசிக்க டிப்ஸ் அளித்தார்கள். குறிப்பாய் கவிதையை புரிந்து கொள்ள அங்கு நடந்த விவாதங்கள் உதவின. அதன் பிறகு நான் ஜெயமோகனை தொடர்ந்து சந்தித்து உரையாட துவங்கினேன். ஏதாவது ஒரு நாவலை படித்து விட்டு அது பற்றி அவர் கருத்தை அறிந்து கொள்ள முனைவேன். அவர் சுலபத்தில் சொல்ல மாட்டார். நானாக வாசித்து என் கருத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பார். ரொம்ப கிளறினால் நூலை தான் வாசித்து உணர்ந்த அனுபவத்தை விளக்குவார். நான் அவரை அப்போதெல்லாம் பயங்கரமாய் கடுப்பேற்றுவேன். அவர் கம்பராமாயணத்தை விதந்தோதியது கேட்டு நான் என் கல்லூரி நூலகத்தில் இருந்து பால காண்டம் எடுத்து ஒரே மாதத்தில் வாசித்து விட்டேன். அதில் கவிதையாய் ஒன்றும் இல்லையே என அவரிடம் வாதிட்டேன். அவர் என்னிடம் கம்பராமாயணத்தை தொடர்ச்சியாய் அப்படி நான் வாசித்ததே தவறு என்றார். எப்படி அதை படிப்படியாய் ருசித்து படிக்க வேண்டும் என்று விளக்கினார். “குற்றமும் தண்டனையும்” வாசித்து விட்டு அது வளவளவென இருக்கிறது என விமர்சித்தேன். கோபத்தில் ஜெயமோகனின் முகம் சிவந்து விட்டது. அந்நாவலின் சில முக்கியமான இடங்களை குறிப்பிட்டு அதன் குறியீட்டுப் பொருள், விவாதப் புள்ளிகளை புரிய வைத்தார். குறிப்பாய், நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோ தன் கனவில் சிறு வயது துன்பியல் நினைவு ஒன்றை மீள காண்பான். குதிரையை ஒருவர் தொடர்ந்து சாட்டையால் விளாசி துன்புறுத்துவதை காண்பான். அவன் மிகவும் உணர்ச்சிவயப்படுவான். அக்கனவு எப்படி நாவலின் ஒரு முக்கியமான உணர்ச்சி மையம் என ஜெயமோகன் அன்று விளக்கினார். இன்று வரை எந்த விமர்சகரும் அப்படி அந்நாவலை அணுகி நான் பார்க்கவில்லை. அக்காட்சியை மையமாய் கொண்டு நாவலை மீள்வாசித்தால் ரஸ்கோல்நிக்கோவ் தன்னை ஒரு புரட்சியாளனாய் அல்ல கர்த்தராய் தான் கருதினான் என புரியவரும். தன்னை பலி கொடுக்காத, தீமையை பலி கொடுக்க மட்டும் எண்ணின, அறிவுஜீவி கர்த்தர். மறுப்புவாத, கலகவாத, போராளி கர்த்தர். நாவலின் இறுதியில் தான் அவன் எல்லா நன்மையும் தீமையும் தன்னில் இருந்தே ஆரம்பிக்கின்றன, சமூகத்தை திருத்த தன்னை திருத்த வேண்டும், சமூகத்தை தண்டிக்க தன்னை தண்டிக்க வேண்டும் என புரிந்து கொள்கிறான். இருபது வருடங்களுக்கு முன்பு ஜெயமோகன் முன்வைத்த சிறு அவதானிப்பு இன்று எனக்கு அந்நாவலை முழுக்க திறந்து விட்டுள்ளது. வாசிப்பின் போது இது போன்ற விவாதங்கள் மிக முக்கியம்.

சொல்லப் போனால் வாசிப்பு என்பது தனிமையில் நிகழ வேண்டிய ஒன்று அல்ல. அது ஒரு கூட்டு கலாச்சார செயலாக இருக்க வேண்டும். சென்னை பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர்கள் மாலையில் கூடி ஏதாவது ஒரு சிறுகதையை வாசிக்கும் பழக்கத்தை கடந்த வருடம் கொண்டிருந்தோம். சிலநேரம் கதையை விவாதிப்போம். ஆனால் பெரும்பாலும் அந்த அவசியம் கூட இராது. கதையின் முக்கியமான ஒரு ஜன்னலை எங்களில் யாரோ ஒருவர் சட்டென திறந்து வெளிச்சத்தை பாய்ச்சுவோம். எதேச்சையாய் செய்யும் ஒரு அவதானிப்பிலோ ஒரு குறிப்பிட்ட வரியை, இடத்தை நாங்கள் சிலாகிப்பதிலோ அது நிகழும். அது மட்டுமல்ல தனித்து வாசிப்பதை விட சேர்ந்து வாசிப்பது நினைவில் அவ்வளவு குதூகலமான அனுபவமாய் பதிந்திருக்கிறது.
சிவராமன் குறிப்பிடும் பயிற்சியை கல்வி நிலையங்கள் நிச்சயம் முன்னெடுக்க வேண்டும். சென்னையை முகாமிட்டு “வாசக சாலை” போன்று தீவிரமாய் இயங்கும் இலக்கிய அமைப்புகள் உண்டு. பனுவல், டிஸ்கவரி என புத்தக நிலையங்களில் தொடர்ந்து கூட்டங்கள் நடக்கின்றன. இக்கூட்டங்களில் பேச்சு, விவாதம் என மட்டும் நடத்தாமல் கதைகளை வாசிக்கும் நிகழ்வுகளயும் நடத்தலாம்.
போகன் சங்கர் ”வயதுக்கு வராதிருத்தல்” என ஒரு பதிவில் நம்மை கேரளாவுடன் ஒப்பிடுகிறார். அப்பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களில் ஏன் தமிழர்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லை என்பதற்கு பொதுவாக சொல்லப்படும் கிட்டத்தட்ட அனைத்து காரணங்களும் வந்து விட்டன: சினிமா மோகம், திராவிட அரசியல்வாதிகளின் சினிமா மீதான மனச்சாய்வு, பிராமண ஆதிக்கம், குழு மனப்பான்மை, இப்படி இப்படி. ஒருவர் தமிழகத்தில் நதிகள் வற்றி விட்டதும் ஒரு காரணம் என்கிறார். இது சற்று விநோதமாய் படலாம். ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு ஜெயமோகனிடம் நான் இக்கேள்வியை கேட்ட போது அவர் இது போன்ற பொருளாதார காரணத்தை தான் முன்வைத்தார். கடந்த நூற்றாண்டில் தமிழகம் கண்டுள்ள பஞ்சங்களை குறிப்பிட்ட அவர் அதனால் தான் இலக்கிய வாசிப்பு போன்ற நுண்பண்பாட்டு சமாச்சாரங்களுக்கு இங்கு முக்கியத்துவம் இல்லாதிருக்கிறது என்றார். அவரது அடிப்படை நம்பிக்கை இலக்கியம் ஒரு எலைட் சமாச்சாரம் என்பது. குறைந்தது கும்பி காயாமல் இருக்க வேண்டும். அப்போது தான் இலக்கியம், இசை, தத்துவம், கடவுள் என்றெல்லாம் சிலாகிக்க முடியும். இந்த தரப்பை முன்வைக்கிறவர்கள் எப்போதும் கிரேக்க மரபை காரணம் காட்டுவார்கள். கிரேக்கம் பண்பாடு, தத்துவம், நாடகம் என உச்சத்தில் இருந்த போது நாட்டின் லௌகீக தேவைகளை அடிமைகளின் உழைப்பு நிவர்த்தி செய்தது. சாக்ரடீஸும், பிளேட்டோவும் உணவைவும் பாதுகாப்பையும் மீறி யோசிக்க முடிந்தது. உண்மை என்றால் என்ன, நாட்டை ஆளும் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என விவாதிக்க முடிந்தது. பின்னர் ஐரோப்பா உலகம் முழுக்க படையெடுத்து சென்று காலனிகளை தோற்றுவித்தது. அங்கு ஐரோப்பியர்களுக்காய் உழைத்து செழிக்க வைக்க காலனிய அடிமைகள் கோடிக்கணக்கில் தோன்றினார்கள். ஐரோப்பிய பிரஜைகள் சௌகர்யமாய் ஓய்வு நேரத்தில் இலக்கியமும் பிற கலைகளும் பயின்றார்கள். இன்று உலகமயமாக்கலின் போதும் ஐரோப்பிய வளத்தை பெருக்க நம்மைப் போல் ஏராளமான அடிமைகள் இருக்கிறோம். நாம் 18 மணிநேரம் வேலை செய்ய வெள்ளைக்காரன் குறைவான உழைப்பு, தரமான வாழ்க்கை என மகிழ்கிறான். வாழ்க்கையை தரமாக்க அவனுக்கு வாசிப்பு இன்றும் தேவையாக உள்ளது. நம் ஆட்களுக்கு வாழ்க்கையை உருவாக்கவே அவகாசம் இருப்பதில்லை.
உண்மை இவற்றில் எல்லா காரணங்களுக்கும் சற்று அருகில் இருக்கலாம்.
 வங்காளமும் கேரளாவும் கல்வியில் சிறந்ததற்கு இடதுசாரி அமைப்புகளின் பணி மிக முக்கிய காரணம். சமூக முன்னேற்றத்தம், விடுதலை ஆகியவற்றை அவர்கள் கலாச்சார செயல்பாட்டுடன் இணைத்தார்கள். இதை நான் நேரில் சிறிய அளவில் அனுபவித்திருக்கிறேன். எங்கள் ஊரில் சு.ரா, ஜெயமோகன் இருவரும் ஆரம்ப கால இடதுசாரிகள், பின்னாளில் இயக்கத்துடன் முரண்பட்டவர்கள். அங்கு கலை இலக்கிய பெருமன்றத்தின் செயல்பாடு பல இளம் எழுத்தாளர்கள் தோன்றவும் நவீன இலக்கிய பரிச்சயம் பெறவும் பயன்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் தமுஎச பெரும் பங்காற்றி இருக்கிறது. இலக்கியத்தின் பால் மக்கள் ருசிகொள்ளவும் அதை பயிலவும் இது போன்ற இயக்கங்கள் நிச்சயம் உதவுகின்றன.
மக்கள் பரவலாய் வாசிப்பதற்கும் எழுத்தின் தரத்திற்கும் அதிக சம்மந்தமில்லை என்பதை போகன் குறிப்பிடுகிறார். இந்த உண்மையை நானும் பலமுறை மலையாள நவீன இலக்கியம் வாசிக்கையில் உணர்ந்திருக்கிறேன். நமது மௌனியின் காலடியில் உட்காரும் தகுதி கொண்ட ஒரு கதையாசிரியர் கூட மலையாளத்தில் இன்னும் தோன்றவில்லை. ஆனால் மௌனியை தமிழில் வாசித்தவர்கள் சில நூறு பேர்களே இருப்பார்கள்.
அப்படி என்றால் வாசிப்பு பரவலாவதும் இலக்கிய வாசிப்பு தீவிரமாவதும் ஒன்றல்ல. ஒரு மாநிலத்தில் லட்சக்கணக்கான இலக்கிய வாசகர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களில் ஆயிரம் பேர் தான் தீவிர, முதிர்ந்த வாசகர்களாய் இருப்பார்கள். மிச்ச லட்சம் பேரும் நுனிப்புல் இலக்கிய வாசகர்கள். இலக்கிய ஜன்னலில் இருந்து எட்டிப் பார்ப்பவர்கள். இலக்கிய தேவதையின் பாவாடை ஜரிகையை பற்றி பின்னால் ஓடி வரும் சிறுவர்கள்.
அப்படி என்றால் பரவலான இலக்கிய வாசிப்பு என்றால் என்ன? அதனால் மக்கள் பெறும் பயன் என்ன? எம்.டி வாசுதேவன் நாயரின் சிறுகதை ஒன்றை ஒரு சாமான்யனான மலையாளி வாசிக்கிறான். அப்போது அவன் அந்த மொழியின் நவீனத்தன்மையை, தளுக்கை, நளினத்தை சிறிது ரசிக்கிறான். பிற லட்சம் வாசகர்களுடன் அப்பிரதியை தானும் பகிர்ந்து கொள்வதில் உளம் மகிழ்கிறான். கோயில் விழாவில் பங்கெடுப்பது போன்ற ஒரு சமூகமாக்கல் மகிழ்ச்சி அவனுக்கு வாசிப்பு மூலம் கிடைக்கலாம். நான் ஒருமுறை கேரளாவில் கண்ணூருக்கு ரயிலில் சென்றேன். வழியில் பேப்பூரை ரயில் கடக்கும் போது நான் ஆர்வம் கொண்டு எட்டிப் பார்த்தேன். “பேப்பூர் இது தானா?” என தவிப்புடன் பக்கத்தில் இருந்த ஒரு மலையாளி குடும்பத்துடன் கேட்டேன். குடும்பத் தலைவர் இலக்கிய வாசகரோ விமர்சகரோ அல்ல. ஆனாலும் அவர் புன்னகையுடன் ”ஆம் பஷீரின் ஊர்” என்றார். அவருக்கு ஒருவேளை பஷீரின் எழுத்தின் உள் ஒளி தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர் பஷீர் எனும் கலாச்சார எழுச்சியில் பங்கு கொள்ள விரும்புகிறார். அந்த பேரலையில் சிறிது கால் நனைத்திருக்கிறார். இதைத் தான் தமிழ் சமூகம் தவற விட்டு விட்டது.
இந்த பதிவுகளில் சொல்லப்படாத வேறொரு காரணமும் எனக்கு படுகிறது. அதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்

(தொடரும்)

No comments: