Sunday, May 15, 2016

கத்தியுடன் திரிபவர்கள்

என் அப்பா ஒரு பேனா கத்தி வைத்திருந்தார். அடர்சிவப்பு பிடி கொண்டது. அதை கையில் வைத்து உருட்டும் போது அதன் இதமான குளிர்மை, கனம், அதன் உறுத்தலான கூர்முனை, மூடும் போது சட்டென வெட்கத்தில் சேலை தலைப்பில் பதுங்கும் முகம் போல் அது மறைவது என அந்த கத்தி மீது குழந்தைப் பருவத்தில் எனக்கு ஒரு தனிக்காதல். என் அப்பா அதை பெரும்பாலும் காய்கறி நறுக்கத் தான் பயன்படுத்திய ஞாபகம். எனக்கு அது போல் ஒரு பேனா கத்தி வாங்க வேண்டும் என ஆசை.

வளர்ந்த பின் hiking போது பயன்படுத்தும் ஒரு அலங்காரமான கத்தி வாங்கினேன். ஆனால் அது வெற்று உபகரணம், கடினமான பொருளை வெட்டினால் அதன் விளிம்பு உடைந்து விடும். சில வருடங்களுக்கு முன்பு ஷிலோங் போன போது அங்குள்ள சந்தையில் ஒரு பாட்டியிடம் நிறைய பேனா கத்திகள் பார்த்தேன். அதன் முனைப் பகுதி மேல் நோக்கி வளைவாய் இருந்தது. நல்ல கூர்மை. ஆனால் கனம் குறைவு. அவர் ஐம்பது ரூபாய் சொன்னார். நான் பத்து ரூபாய்க்கு கேட்டேன். அவர் என்னை குத்தி விடுவது போல் முறைத்தார். கொஞ்ச நேரத்தில் திட்ட ஆரம்பித்தவர் அவர் மொழியில் போ போ என சைகை காட்டினார். நான் அவரிடம் முப்பது ரூபாய் என்றேன். அவர் ஒத்துக் கொண்டார். ஆரஞ்சு வண்ண பிடி கொண்ட கத்தியை தேர்ந்தெடுத்தேன்.
 அது ஒரிஜினல் கத்தி. அதன் முனை இன்னும் உடையவில்லை. கூர்மையும் குறையவில்லை. எப்போதும் என் பையிலே வைத்திருப்பேன். பயன்பாடு கருதியல்ல. ஒரு விளையாட்டுக்கு. காதலியின் பெயரை பச்சை குத்துவது போல ஒரு த்ரில்லுக்காக. இன்று பீனிக்ஸ் மால் சென்றிருந்த போது பையை சோதனை போட்டார்கள். “உங்க பையில் கத்தி இருக்கு. அதை வெளியே எடுத்திருங்க” என செக்யூரிட்டி பெண் கீச்சென சொல்ல என கூச்சமாகி விட்டது. அது போதாதென்று எனக்கு பின்னால் பை வாங்க காத்திருந்தவரிடம் “அவரு பையில கத்தி இருக்கு. எடுக்கட்டும். அது வரை வெயிட் பண்ணுங்க” என்றார். என்னை ஏதாவது தீவிரவாதி என அசிங்கமாய் நினைப்பார்கள் என மனதுக்குள் குமைந்தபடி பையில் இருந்து நானே மறந்து போன அந்த பேனா கத்தியை தேடி கண்டெடுத்தேன். இதனிடையே சோதனைக்கான ஆட்களின் வரிசை நீளமாகிக் கொண்டே போக அப்பெண் என்னை காத்திருக்க சொன்னார்.
நான் ஒவ்வொரு பையாய் ஸ்கேன் ஆகி சதுரப் பெட்டியில் இருந்து வெளியே உருண்டு வருவதை, அவற்றின் உள் பிம்பங்கள் சிவப்பு நிற எலும்புக் கூடுகளாய் கணினித்திரையில் தெரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே காத்திருந்தேன். அப்போது அப்பெண் மீண்டும் “சார் உங்க பையில கத்தி இருக்கு” என மற்றொருவரை பார்த்து கத்தினார். “அதை வெளியே எடுங்க”. நான் காத்திருந்த ஒரு நிமிடத்தில் ஐந்து பேருக்கு மேல் பையில் கத்தியுடன் ”பிடிபட்டார்கள்”. அவர்கள் என்னைப் போல் அல்லாது கத்தியை கொண்டு வந்ததற்காய் நியாயங்கள் சொன்னார்கள். ஒருவர் “பழம் நறுக்கிறதுக்கு” என்றார். மாலுக்குள் அவர் ஏன் பழம் நறுக்கப் போகிறார்? அவர் எடுத்த கத்தி பழக்கத்தியும் அல்ல. இப்படி பிடிபடும் கத்திகளை போட்டு வைக்க அப்பெண் ஒரு பிளாஸ்டிக் கூடை வைத்திருந்தார். என் கத்தியை இறுதியாய் வாங்கி வைத்தவர் “போகும் போது வாங்கிக்கிங்க.” என்றார்.
என்னை ஒரு கேள்வி தொந்தரவு செய்தது. ஏன் இவ்வளவு பேர் கத்தியுடன் திரிகிறார்கள்? என்னைப் போல் சும்மா விளையாட்டுக்காய் என நான் நம்பவில்லை. இது போன்ற பொதுவிடங்களில் என் பாக்கெட்டில் மட்டும் தான் கத்தி இருக்கிறது என த்ரில்லாய் நினைத்துக் கொள்வேன். ம்ஹும். ஒவ்வொருவரும் அப்படித் தான் நினைத்துக் கொள்கிறார்கள்!No comments: