Monday, May 9, 2016

கொழுப்பின் அரசியல்


சமீபமாய் ஒரு ஆய்வு பற்றி படித்தேன். கொழுப்பு உடம்புக்கு அவசியமா என்பதே அதன் மையம்.

அமெரிக்காவில் எழுபதுகளில் கொழுப்பு உடம்புக்கு கேடு எனும் ஒரு கருத்து சமூகத்தில் அறிவியல் ஆய்வுகள் மூலம் வேகமாய் பரவியது, அதனால் பல கொழுப்புணவுகளை மக்கள் அங்கு தவிர்க்க ஆரம்பித்தனர். பாரம்பரிய உணவுகளுக்கு பதிலாய் துரித உணவுகளை அதிகம் உண்டனர்.

கொழுப்பு உடல் நலத்துக்கு அவசியம். செல்கள் தோன்றுவதற்கு, மூளை அணுக்களை புதுப்பிக்க, உள்ளுறுப்புகளை பாதுகாக்க, ஆற்றலை சேமிக்க கொழுப்பு தான் கைகொடுக்கிறது. ஜுரம் வந்து ஒரு வாரம் படுத்த படுக்கையானால் உங்கள் இயக்கத்துக்கு தேவையான ஆற்றலை கொழுப்பை எரித்து தான் உருவாக்குகிறது. கொழுப்பு இருப்பதனால் தான் உண்ணாவிரதமே சாத்தியமாகிறது. கொழுப்புக்காகத் தான் காந்தி தொடர்ந்து ஆட்டுப்பாலும் முந்திரிப் பருப்பும் உட்கொண்டார். ஏனென்றால் அடிக்கடி உண்ணாவிரதம் இருக்க அவருக்கு கொழுப்பு தேவைப்பட்டது.
இது சம்மந்தமாய் இப்போதுள்ள ஆய்வுகளின் முக்கியமான கண்டுபிடிப்பு என்னவெனில் இயற்கையான கொழுப்புணவுகளான நெய், வெண்ணெய், சீஸ், மாமிசம்,.பால் ஆகியன நம் உடல் எடையை அளவாய் வைத்திருக்க உதவுகின்றன. நாம் இது நாள் வரை இதை நேர்மாறாய் புரிந்து வைத்திருந்தோம்.

கொழுப்பு எப்படி எடையை கட்டுப்படுத்தும்?
மாவு மற்றும் புரத சத்துள்ள உணவை உடல் சரியாய் செரித்து சத்துக்களை உறிஞ்ச கொழுப்பு அவசியம். கொழுப்பு இல்லாத போது சரிவர பயன்படுத்தப்படாத உணவை உடல் கொழுப்பாய் மாற்றி சேமிக்கிறது. அதாவது எண்ணெயே இல்லாமல் நாலு சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள். அதை உடல் சரிவர உள்வாங்காமல் அதன் கலோரிகள் அதிகரிக்கும். இதையே நெய் தடவி சாப்பிட்டால் உடல் அதில் உள்ள மாவுச்சத்தை சரிவர உதிஞ்சும். கொழுப்பாக மாற்றாது. கலோரியும் குறையும்  இதனால் தான் அதிக சீஸ் உண்ணும் இத்தாலியர்கள் வெடுவெடுவென இருக்கிறார்கள்.

இப்போது நெய்யின் ஆரோக்கிய குணங்கள் பற்றி நிறைய கட்டுரைகள் இணையத்திலே கிடைக்கின்றன.

ஆனால் தொண்ணூறுகளில் அமெரிக்காவில் பரவலாக ஏற்பட்ட உடல் பருமன் கோளாறுக்கு இயற்கை கொழுப்புகளை அவர்கள் தவிர்த்ததே முக்கிய காரணம் என்கிறார்கள்.

ஒருவரின் ஆரோக்கியம் எதில் தெரியும்? சிற்றிடையிலா விரிந்த மார்பிலா தசை முறுகலிலா?
என்னைப் பொறுத்த மட்டில் தோலின் மிளிர்வு தான் உடல் நலத்தின் முக்கிய அறிகுறி. வற்ட்சியான தோல் கொண்டவர்கள் உணவில் சத்து பற்றாக்குறை எனப் பொருள். வெறும் காய்கறிகள், எண்ணெய் சேர்க்காத ரெண்டே சப்பாத்திகள் சாப்பிட்டு மெல்லிசாய் தோன்றும் பெண்களின் தோலை கவனித்தால் வறட்சியாய் இருக்கும். இதை மறைக்கவே நிறைய களிம்புகளும் moisterizerஉம் பயன்படுத்துகிறார்கள் (இயற்கையாய் தோல் வற்ட்சி கொண்டவர்களை இங்கு குறிப்பிடவில்லை)
குமரி மாவட்ட பெண்கள் இயல்பிலே பூசலாய் மினுமினுப்பாய் இருப்பார்கள். காரணம் தேங்காய் உணவில் முக்கிய பகுதியாய் இருப்பது.

ஒல்லியாக இருப்பதற்கான ஒரு முக்கிய அழுத்தம நவீன் ரெடிமேட் ஆடைகளில் இருந்து தான் வருகிறது. தேவைக்கு ஏற்ப உணவருந்தும் பெண்கள் இது போன்ற இறுக்கமான ஆடைகளுக்குள் பொருந்திக் கொள்ளவே முடியாது. பூசலான பெண்களுக்கு நவீன அழகான ஆடைகளே கிடையாது. அப்படியே அணிந்தாலும் அவை இயல்பான உடல் கொண்டோரையும் குண்டாய் தோன்ற வைக்கின்றன். ஆண்களின் ரெடிமேட் சட்டைகளும் இப்படித் தான். கொஞ்சம் தொப்பை இருந்தாலும் வயிற்றில் பிடித்துக் கொள்ளும்.

கொழுப்பை விட நாம் அன்றாடம் தேநீரிலும் இனிப்புகளிலும் சேர்க்கும் வெள்ளை சர்க்கரை தான் உண்மையில் ஆபத்து என்கின்றன சமகால ஆய்வுகள். இத்தனைக் காலமும் இந்த ஆய்வுகள் வெளிவராத படி கொக்கோகோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தடுத்து வைத்திருந்தன என கூறுகிறார்கள். இன்று தவிர்க்க இயலாதபடி வெள்ளை சர்க்கரை நம் உணவில் பகுதியாகி விட்டது. இந்த கோடையில் தாகமென்றால் உடனே பழரசம அல்லது ஸ்பிரைட் கோக் தானே குடிக்கிறேன். அதன் வழி சர்க்கரை உடலில் குவிந்து பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

சர்க்கரை பற்றி பேசியதனால் இதையும் சொல்லி விடுகிறேன். சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் அணுக்களில் வீக்கம் இருக்கும். இந்த வீக்கமே சர்க்கரை அணுக்களால் உள்வாங்க முடியாமல் தடுக்கின்றன. உள்வாங்கப்படாத சர்க்கரை ரத்தத்தில் பெருகி நீரிழிவு தோன்றுகிறது. இன்றைய ஆய்வுகளில் ஒன்று உணவில் போதுமான அளவு கொழுப்பு சத்து இல்லாததே செல் வீக்கத்துக்கு, அதனால் தோன்றும் நீரிழிவுக்கும் காரணம் என்கிறது.

இதனால் சொல்ல வருவது என்னவெனில் தட்டுத்தட்டாய் பஜ்ஜி சாப்பிடுங்கள் என்றல்ல. கொழுப்பை பார்த்து தேவையில்லாமல் அஞ்சாதீர்கள் எனபதே. உணவில் கொழுப்பை முழுக்க தவிர்க்காமல் மிதமாய் நிச்சயம் உட்கொள்ள வேண்டும். யாராவது பால் உணவுகளை தவிர்க்க சொன்னால் அவர்களை தவிர்த்து விடுங்கள்.

No comments: