Sunday, May 8, 2016

”ஊழியின் தினங்கள்” – சிதைந்த தேகங்களின் ஊடே…

Image result for ஊழியின் தினங்கள்

”ஊழியின் தினங்கள்” மனுஷ்யபுத்திரனின் 13வது கவிதைத் தொகுப்பு. அவரைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு இத்தொகுப்பு ”நீராலானது”, “மணலின் கதை” போன்ற கவிதை நூல்களை நினைவுபடுத்தும். மனுஷ்யபுத்திரனின் ஆரம்பத்தில் தனது திறந்தநிலை (plain) கவிதைகளுக்காக அறியப்பட்டவர். நேரடியாய் உணர்ச்சிகரமாய் எளிமையாய் வாசகனுடன் உரையாடும் பாணி அவரது கவிதைகளின் முக்கிய ஈர்ப்பு. பின்னர் அவர் சிக்கலான, தத்துவார்த்தமான கவிதைகளுக்கு, குறியீடுகளும் படிமங்களும் கொண்ட கவிதைகளுக்கு சென்றார். சிறுகதைகளை, நாவலின் சிறு அத்தியாயங்களை கவிதைக்குள் எழுதிப் பார்த்தார். கட்டுரை பாணியில் பரிட்சார்த்த முயற்சிகள் செய்தார். குறிப்பாய் ரெண்டாயிரத்தின் இறுதியில் இருந்து தொழில்நேர்த்திக்கு, இறுக்கத்துக்கு, கொஞ்சம் பூடகத்துக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்க துவங்கினார். “இடமும் இருப்பும்” நூலில் நாம் கண்ட மனித மனம், மனிதனின் இருப்பு, தத்துவ நிலை, அறம் பற்றின கவிதைகளை இன்னும் நுணுக்கமான பரவலான ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றார்.

 “பசித்த பொழுது”, “அருந்தப்படாத கோப்பை” ஆகிய முன்னூறு, நானூறு பக்க தொகுப்புகளை இதற்கு உதாரணம் காட்டலாம். ”பசித்த பொழுதில்” ஆழமான ஜென் பார்வை கொண்ட பல கவிதைகள் உள்ளன. அதே போல் அக்கட்டத்தில் அவர் எழுதிய மருத்துவருக்கும் நோயாளிக்குமான உடல் சார்ந்த தத்துவ/உளவியல் உறவாடலை பேசும் கவிதைகளும் எளிய வாசனுக்கு ஆனவை அல்ல. அவை கவிதையை நுணுக்கமாய் வாசிக்கிற, மனித நிலை பற்றி ஆய்வு செய்கிறவர்களுக்கானது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் மனுஷ்யபுத்திரனை வாசிக்க துவங்கிய ஒருவர் ஒரு மாந்திரிக மருந்தை அருந்தி பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து தூங்கி நேற்று எழுந்து வந்து மீண்டும் வாசிக்க துவங்குகிறார் என்றால் இத்தொகுப்பு அவருக்கு மனுஷ்யபுத்திரன் மாறவே இல்லை எனும் உணர்வைக் கொடுக்கும். ஏனென்றால் இத்தொகுப்பு மூலம் அவர் மீண்டும் தன் கவிதையின் துவக்க புள்ளிக்கு சென்றிருக்கிறார்.
மொழி:
 மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் ஏராளமான உவமைகள் இருக்கும். ”நீரடியில் வாள்” போன்ற அவரது குறியீடுகள் பிரலமானவை. ஆனால் மொழியை பொறுத்த மட்டில் இத்தொகுப்பின் கவிதைகளின் மொழி வெள்ளை வண்ணமடித்த அறையில் வைக்கப்பட்ட நீர் நிறைந்த ஒரு கண்ணாடிக் கோப்பை போல் உள்ளது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் நாம் பார்த்த திறந்த நிலை கவிதையில் இருந்து அவர் மிக மிக நேரடியான சகஜமான ஒரு உரையாடலாக தன் கவிதைகளை 2016இல் மாற்றி இருக்கிறார்.
உத்தி:
என் வாசிப்பில் இத்தொகுப்பில் உள்ள 52 கவிதைகளில் ஒரே ஒரு படிமம் தான் உள்ளது. அது 46வது கவிதையின் இறுதியில் வருகிறது. சென்னையை தாக்கிய மழைவெள்ளம் வடிந்த நிலையில் மக்கள் தங்கள் சகஜ நிலைக்கு திரும்பும் சந்தர்பத்தை சித்தரிக்கும் கவிதை அது. கடற்கரை தான் பின்புலம். மக்கள் முடிந்தளவு மனதை திடப்படுத்திக் கொண்டு, பிரச்சனைகளை துறந்து விட்டு பாசாங்கோடு அரசின் அநீதியை, சமூகத்தின் அவலம் ஒன்றை கண்டும் காணாமல் செல்கிறார்கள். அக்கவிதையில் வரும் இறுதி சித்திரம் இது:
“வெள்ளம் மக்கள் மனதிலிருந்து
வேகமாய் வடிந்து கொண்டிருந்தது
துயரத்தின் நீர்மையை
சுவடற்று உறிஞ்சிக் கொண்டிருந்த மணலிலிருந்து
காக்கைகள் சிதறிப் பறக்கின்றன”
இதில் துயரத்தை “சுவடற்று உறிஞ்சும் மணல்” மனதின் குறியீடு. சிதறிப் பறக்கும் காகங்களை தீமையின், இருண்மையின், பிரபஞ்ச இயக்கத்தின் படிமம் என தொடர்ந்து அர்த்தப்படுத்திக் கொண்டே போகலாம்.
ஆனால் இது போல் கவிதை விமர்சகனின் அறுவை சிகிச்சை கத்திக்கு மாட்டும் வரிகள் இத்தொகுப்பில் மிக மிக அரிது.
மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் மூன்று முக்கிய உத்திகள் பொதுவாக உண்டு. (1) தத்துவார்த்தமான, சமூகவியல் சார்ந்த உரையாடல் வடிவில், அடுக்கடுத்தான தர்க்கங்கள் கொண்டு கவிதையை உருவாக்கும் பாணி. (2) அடுத்தது ஒரு புதுமையான காட்சியை அன்றாட வாழ்வில் இருந்து குறுக்குவெட்டாய் நறுக்கி முன்வைக்கும் பாணி. இப்பாணி கவிதைகள் ஒரு சிறுகதை போன்றும் இயங்குவதுண்டு. (3) இந்த பாணி இவ்விரண்டு கவிதை உத்திகளையும் கலந்து எழுதப்படுவது. இதில் கவிதை வடிவம் சார்ந்த பிரக்ஞை அதிகம் இருக்கும். உத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பார். இறுதியில் நிச்சயம் ஒரு திருப்பம் இருக்கும். இம்மூன்று உத்திகளையும் இத்தொகுப்பில் கணிசமாய் பார்க்க இயலாது. தன் கவிதை பாணியில் இருந்து அவர் தெரிந்தோ தெரியாமலோ தப்பிச் சென்றிருக்கிறார். அதனாலே ஒரு விதத்தில் இத்தொகுப்பு வாசகனுக்கு freshஆன உணர்வை கொடுக்கும். இக்கவிதைகளை வாசிக்கும் வாசகன் சமீபத்தில் ருதுவான ஒரு அழகான பெண்ணுடன் இச்சையுடன் பழகும் ஒரு நாற்பது வயதுக்காரனைப் போன்று தன்னை உணர முடியும்.
மழையும் விசித்திர உடல்களும்
வாழ்வின் அபத்தத்தையும் பாசாங்கையும் மனுஷ்யபுத்திரன் தன் கவிதைகளில் தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளார் என்றாலும் இம்முறை வெள்ளத்தில் அகப்பட்ட பலவித குறைபட்ட, சிதைவுற்ற, விசித்திர தேகங்களை பின்புலமாய் வைத்து அதே அபத்தத்தை பேசுகிறார். பிணங்கள், காது கேளாதவர்கள், பார்வையற்றவர்கள், சக்கர நாற்காலியில் இருப்பவர்கள், குள்ளமானவர்கள், முதல் மாத விடாய் வந்த சிறுமி, வெள்ளம் புகுந்த போது நிர்வாணமாய் தூங்கிக் கொண்டிருந்த பெண், முதியோர் இல்லவாசிகள் என மாறுபட்ட உடல் அமைப்பும் நிலையும் கொண்டவர்களின் பின்னணியில் மழை வெள்ளத்தை பார்க்கும் இக்கவிதைகள் உலகம் நாம் புரிந்து கொண்ட விதத்தில் இருந்து மாறாக எவ்வளவு பொருத்தமற்றதாய், முரண்களின் விசித்திர கைகோர்ப்பாய் உள்ளது என காட்டுகிறது. இந்த தேகங்களும் அவற்றை வாழ்வின் விளிம்புக்கு தள்ளும் மழைவெள்ளமும் இருப்பின் அர்த்தமின்மையை இன்னும் துலங்க வைப்பதற்கான ஸ்விட்சுகளாகத் தான் செயல்படுகின்றன. இந்த அர்த்தமின்மையை பேசுவதற்கான சாக்கு மட்டும் தான் இத்தேகங்களும் மழைவெள்ளமும்.
”ஊழியின் தினங்கள்” தொகுப்பு அடிப்படையில் உங்கள் நெஞ்சை கனக்க செய்வது. ஆற்றாமையின் கண்ணீரும் இழப்பின் அதிர்ச்சியும் பரிதவிப்பும் யாரோ மண்ணை வாரி உங்கள் முகத்தில் தூற்றி கதறி அழும் உணர்வைத் தரும். படித்து முடித்ததும் வரிசை வரிசையாய் கிடக்கும் பிணங்களைக் கடந்து மீண்டும் நார்மலான வாழ்வுக்கு மீண்ட உணர்வு நமக்கு கிட்டும். ஆனால் இந்த கனத்த உணர்வு சீக்கிரமே அகன்று விடும். உங்கள் நினைவுகளில் தேங்கி நிற்கப் போவது இந்த கடும் துயரத்தை சற்று விலகி நின்று கொஞ்ச குரூரமான அபத்த நகைச்சுவையுடன் சித்தரிக்கும் வேறு கவிதைகள். ஏனென்றால் எவ்வளவு யோசித்தும் தெளிவுறாத புதிரும் புரியாமையும் இந்த துன்பியல் அனுபவத்தில் நமக்குள்ளது. மழைவெள்ளம் புரட்டிப் போட்ட வாழ்வின் விசித்திரம் குறித்த கவிதைகள் இத்தொகுப்பில் மிக முக்கியமானவை.
இத்தொகுப்பின் முதல் ”ஊழியின் தின” கவிதை அமரர் ஊர்தியில் படுத்து உலகை நீங்கும் பயணத்தில் இருக்கும் ஒரு அமரனைப் பற்றியது. அன்றைய தினம் வெள்ளம் சாலைகளை ஆக்கிரமித்த நிலையில் அவன் “மிதந்து மிதந்து சென்று கொண்டிருக்கிறான்”. பிணத்தை எரிப்பதும் புதைப்பதுமே இங்கு வழமை. ஆனால் மிதக்கும் பிணம் எனும் சித்திரம் நம்மை புன்னகைக்க வைக்கிறது. அதே நேரம் கங்கையில் மிதக்க விடப்படும் பிணங்களையும் நினைவுபடுத்துகிறது.
“உடன் வருபவர்கள் யாருமில்லை
தாரை தப்பட்டைகள் இல்லை
குடிகாரர்களின் ஆட்டம் இல்லை
வழிநெடுக கசியும்
பிரிவின் துயரங்கள் ஏதுமில்லை”
ஆனால் அமரனுக்கு அது குறித்து அக்கறையில்லை. இந்த ”கூட வரும்” ஆர்ப்பாட்டங்களின் பாசாங்கு அவன் அறிந்ததே. மழையின் சாரல் முகத்தில் அடிக்க அவனுக்கு எரிச்சலாகிறது. அவன் “சீக்கிரம் போ/ மழை கடுமையாகிக் கொண்டிருக்கிறது” என அவன் வாகன ஓட்டியை எரிச்சல்படுத்துகிறான். மரணமுற்றவர்களை நாம் தான் சுடுகாட்டுக்கு அழைத்து போய் அனுப்பி வைக்கிறோம். ஆனால் இங்கு பிணமே உயிரோடிருப்பவனை செலுத்தும் காட்சி அற்புதமானது. விஜயகாந்த் தன் பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை பற்றி பேசும் போது ஒன்று குறிப்பிட்டார். “நிம்மதியாக சாக முடிகிறதா இந்த ஆட்சியில்? மின்மயானத்தில் பாடியை வச்சு எரிக்கறப்போ பாதியில நின்னு போயிடுது.” நவீன வாழ்வில் இருக்கிற அவசரத்திலும் சிக்கல்களிலும் எதற்குமே அவகாசம் இல்லை: வாழ்வதற்கும் சாவதற்கும்.
”ஊழியின் தினங்கள் 3” கவிதையில் வெள்ளத்தில் மூழ்கிய வீடொன்றில் இருந்து சக்கர நாற்காலியில் இருந்த நிலையில் செத்து போனவனை மீட்புப் பணியாளர்கள் வெளியே கொண்டு வருகிறார்கள். அவன் அசைவற்று நாற்காலியில் இருப்பதானது அவர்களுக்கு அவனை தூக்கி கொண்டு வருவதை சுலபமாக்குகிறது. இதை அவர்கள் உணருகிறார்கள். அந்த கோணம் எவ்வளவு அதிர்ச்சியானது என கவிதை கேட்கிறது. எனக்கு இக்கவிதை பத்திரிகை செய்தி ஒன்றை நினைவுபடுத்தியது. வெள்ளத்தின் போது ராணுவத்தினர் ஒரு முழுமாத கர்பிணியை ஒரு நாற்காலியில் வைத்து தூக்கி மீட்டார்கள். அப்பெண் ஆரம்பத்தில் நாற்காலியில் இருந்து வர மிகவும் பயந்து மறுத்திருக்கிறாள். இது குறித்து பேட்டியளித்த ஒரு ராணுவ அதிகாரி ”அவரை தோளில் வைத்து தூக்கி வருவது எங்களுக்கு இன்னும் சிரமமாக சிக்கலாக இருந்திருக்கும்” என்கிறார். அந்த தருணத்தில் அப்பெண் அவர்களுக்கு வெறும் உடல் அல்லது தூக்க வேண்டிய ஒரு பொருள். சூழல் மாறும் போது மனித உடல் முற்றிலும் வேறொன்றாய் நம் மனதுக்கு படுவது வியப்பான விசயம்.
“ஊழியின் தினங்கள் 4” பார்வையற்ற சிறுவர்களின் விடுதியில் நிகழ்கிறது. அங்கு வெள்ளம் புகுந்து நிரம்புகிறது. அப்போது தம்மைத் தீண்டும் வெள்ளத்தின் தொடு உணர்வு தான் அவர்களை முதன்முதலில் தாக்குகிறது. ”அவர்கள் அதை/ தூக்கக் கலக்கத்தோடு/ தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள்”.
வாய் பேச முடியாத சிறுமிகளின் விடுதியில் வெள்ளம் புக அவர்களால் அபயக்குரல் எழுப்ப முடியவில்லை. அவர்கள் கடுமையாய் முயல்கிறார்கள். குரல் தொண்டையை தாண்டவில்லை. மீட்புக் குழுவினர் வரும் போது அவர்கள் கழுத்தளவு நீரில் “மௌனமாய்” நிற்கிறார்கள். இந்த மௌனம் வாழ்வின் பெரும் துயரத்தின் முன்பு ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அபத்த “மௌனம்”.
”ஊழியின் தினங்கள் 5”இல் ஒரு நோயாளிக்கு தான் வாழும் நகரம் சற்று நேரத்தில் முழுக்க மூழ்கி விடும் என சொல்லப்படுகிறது. ஆனால் அவன் மனம் முழுக்க வேறொரு எண்ணம் தான் ஆக்கிரமித்துள்ளது. அவனுக்கு உடனடியாய் நோய் நிவாரணத்துக்கான மாத்திரைகள் வேண்டும். சீக்கிரமே மரணத்தை தொடப் போகும் வேளையிலும் நாம் சிலநேரம் உடனடிப் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த நேர்கிறது. குறிப்பாய் உடல் ரீதியாய் கட்டுப்பாடுகள் கொண்டுள்ள, உடல் சார்ந்தே தம்மை அடையாளப் படுத்துவோர்களுக்கு. இது போன்ற பேரிடர் நமக்கு காலம் என்பது எதிர்காலமா நிகழ்காலமா என்கிற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
“ஊழியின் தினங்கள் 25இல்” அசோகமித்திரனின் கதைகளில் இருந்து ஒரு பெண் வருகிறாள். அவள் “தண்ணீர்” நாவலின் நாயகியைப் போன்றே இருக்கிறாள். தினமும் அவள் தனக்கான தண்ணீரை குடம் குடமாய் சுமந்து மூன்றாவது மாடியில் உள்ள தன் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும். அவள் ஆசையெல்லாம் கையெட்டும் தொலைவில் நீர் வராதா என்பது. அப்படியே நடந்தும் விடுகிறது. ஒருநாள் அவள் மூன்றாவது மாடி பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்கும் போது “அவள் கையருகில்/ கடல் தளும்பிக் கொண்டிருந்தது”. அவள் அஞ்சி பதறவில்லை. மாறாக அதை ஒரு விசித்திரமான கனவு என சிரித்தபடி கருதுகிறாள். நீரை அள்ளி தன் முகத்தை கழுவிக் கொள்கிறாள். அவள் அனுபவிக்கும் சிறிது நேர திகைப்பும் மகிழ்ச்சியும் ஊழியின் விசித்திர அலைகளில் ஒன்று.
அப்பா, தாத்தா, அம்மா, மகள்கள், மருமகன்கள் என எல்லாருமே குள்ளமாக உள்ள ஒரு குடும்பத்தை பற்றி ”ஊழியின் தினங்கள் 34” பேசுகிறது. எல்லார் வீட்டிலும் இடுப்பளவு வெள்ளம் வந்த போது இவர்கள் வீட்டில் அது கழுத்தளவு நின்றது.
“மக்கள் பதைக்கப் பதைக்க
இடுப்பளவு தண்ணீரில்
குழந்தைகளை
இடுப்பில் வைத்துக் கொண்டு
நடந்து போனார்கள்
குள்ளர்களும்
அவர்களோடு சேர்ந்து நடந்தார்கள்
கழுத்தளவு தண்ணீரில்
தங்கள் குழந்தைகளை
தலைக்கு மேலாகத்
தூக்கிப் பிடித்தபடி”

பொதுவாக ஒரு சிறுமி ருதுவாகும் போது அவள் உடல் தனக்கான பிரக்ஞை கொள்கிறது. ஹார்மோன்களின் உற்பற்றி அவளை தளர்த்தி நெகிழ்த்தி குலைய வைக்கிறது. அவள் நீரில் பாதி கலைந்த பிள்ளையார் சிலை போல் ஆகிறாள். வெள்ளத்தின் போது இப்படி ருதுவான முதல் நாளில் காலின் கீழ் குருதி வழிய ஒரு சிறுமி தன் அம்மாவுக்காய் காத்து நிற்கிறாள். அவள் காலடியில் வெள்ளம் பெருகிக் கொண்டே இருக்கிறது. அவளில் இருந்து பெருகும் வெள்ளமும் பூமியில் இருந்து பெருகும் வெள்ளமும் ஒன்றாகிறது. தொலைவில் நீரில் அவள் அம்மா பதைக்க பதைக்க நடந்து வந்து கொண்டிருக்கிறாள். இந்த வெள்ளம் அந்த சிறுமியின் ருதுவான உடல் இனிமேல் எப்படி தொடர்ந்து வாழ்க்கை முழுக்க அழிந்து மீள்கிற ஒன்றாய் இருக்க போகிறது எனக் காட்டுகிறது. பலவித உடல் உபாதைகளை, உடல் குறைகள் கொண்டவர்கள், விசித்திர உடலமைப்பு கொண்டோருக்கு அருகில் ருதுவான பெண்ணுடலை வைத்துப் பார்க்கும் இக்கவிதை அவ்விதத்தில் முக்கியமானது.
இத்தொகுப்பின் இறுதிக் கவிதையில் ஒரு பெண் ஆடையில்லாமல் தன் அறையில் தூங்கும் போது வெள்ளம் வீட்டை சூழ்கிறது. சீக்கிரம் வெளியே தப்பி வந்து விடும் படி ஆட்கள் அழைக்கிறார்கள். அவள் தன் ஆடையை வெள்ளத்தின் இடையே தேடுகிறாள். கிடைக்கவில்லை. வெளியே வர முடியாது தவிக்கிறாள். ஒருவன் கதவை உடைத்துக் கொண்டு அவளை மீட்க வருகிறான். “எல்லாரும் இருக்கிறார்கள்” என அவள் பதறுகிறாள். அவன் அவள் தலைமயிரை கொத்தாய் பற்றி இழுத்து வெளியே கொண்டு போகிறான். மகாபாரத சூதாட்ட காட்சியை மனுஷ்யபுத்திரன் இங்கு குறிப்புணர்த்தும் இடம் நம்மை ஒரு கணம் திடுக்கிட வைக்கிறது. நிர்வாணம் அப்பெண்ணை மாறுபட்ட உடல் கொண்டவளாக்குகிறது. அதாவது தற்காலிகமாக ஏனும். மாறுபட்டவர்கள் இங்கு எப்போதும் பலவீனப்படுத்தப்படுகிறார்கள். பலவீனமாய் உள்ளவர்கள் இந்த வெள்ளத்தின் போது மேலும் பலவீனமாய் ஆகிறார்கள்; சமூக அதிகாரத்தின் முன் மேலும் தலைகுனிகிறார்கள்.
இக்கவிதையில் மட்டுமல்ல வேறு சில கவிதையிலும் மனுஷ்யபுத்திரன் நம் தொன்மங்களை குறிப்புணர்த்தும் வரிகளை எழுதுகிறார். இது அவர் கவிதைக்கு முற்றிலும் புதிய ஒரு இயல்பு. முழுக்க நவீனப்பட்ட ஒரு தன்னிலையில் இருந்து பெரும்பாலும் நகர்சார்ந்து எழுதி வந்துள்ள அவர் இத்தொகுப்பில் மரபை நோக்கி சில காலடிகள் எடுத்து வைக்கிறார்.


நன்றி: உயிர்மை, ஏப்ரல் 2016

1 comment:

Arupam said...

//இக்கவிதைகளை வாசிக்கும் வாசகன் சமீபத்தில் ருதுவான ஒரு அழகான பெண்ணுடன் இச்சையுடன் பழகும் ஒரு நாற்பது வயதுக்காரனைப் போன்று தன்னை உணர முடியும்.// -> Very Bad taste.