Wednesday, May 11, 2016

தனித்துவமான நடை எப்படி உருவாகிறது?


நண்பர் சதீஷை சில வாரங்களுக்கு முன்பு கோட்டூர்புரம் நூலகத்தில் சந்தித்தேன். எழுதுவது பற்றி நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். சொந்தமாய் ஒரு ஸ்டைல் உருவாக என்ன செய்ய வேண்டும் என குறிப்பாய் கேட்டார். அவர் என்னை ஒரு உதாரணமாய் சொன்னார். ”உங்கள் எழுத்தை படிக்க துவங்கியதுமே அது அபிலாஷ் நடை என உணரும் மட்டும் உங்களுக்கொரு தனித்துவமான நடை இருக்கிறது” என்றார். எனக்கு இது விசித்திரமாக பட்டது. ஒன்று, எனக்கு என்று ஒரு தனி நடை இருப்பதாய் நான் எண்ணவில்லை.
ஆனால் நான் விரும்பி வாசிக்கும் பலரது ”நடையின்” கைரேகைகளை எனக்கு நுணுக்கமாய் தெரியும். வண்ணதாசன், விக்கிரமாதித்யன், பிரமிள், சு.ரா போன்ற கவிஞர்களாகட்டும், எஸ்ரா, சாரு, ஜெமோ, மனுஷ்யபுத்திரன் போன்ற உரைநடையாளர்களாகட்டும் ஒவ்வொருவரின் மொழியும் தனித்துவமானது தான். ஆனால் எழுதும் போது தம் மொழியின் தனித்துவத்தை உணர்கிறார்களா என தெரியாது.


எழுத்தாளன் நடை பற்றி கவலைப்படக் கூடாது என்று மட்டுமே நண்பரிடம் கூறினேன். நடை நமது ஆளுமையின் நீட்சி. அதை திட்டமிட்டு வடிவமைக்கக் கூடாது. இயல்பாக அது நமக்குள் இருக்கும். வெளிவர அனுமதித்தால் போதும். நமக்கு பிடித்த எழுத்தாளர்களின் தாக்கம் நிச்சயம் நம் மொழியில் இருக்கும். ஆனால் அது அவர்கள் மொழியை நகலெடுப்பதாய் இருக்கக் கூடாது. எஸ்.ராவை நகலெடுக்காத இளம் எழுத்தாளர்கள் எத்தனை பேர் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் இருந்தார்கள்? சாரு மற்றும் ஜெ.மோவின் வட்டங்கள் ஜெராக்ஸ் கடைகள் போன்றே இயங்குகின்றன. ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் நான் ஒரு இலக்கிய இதழில் அறிவியல் புனைகதை எழுத்து பற்றி ஒரு கட்டுரை படித்தேன். நடையை பார்த்ததும் ஜெயமோகன் என கண்டு கொண்டேன். ஆனால் ஒரு குழப்பம். கட்டுரையில் வேறு ஒருவர் பெயர் இருக்கிறது. சில மாதங்களுக்கு பிறகு ஜெயமோகனை சந்தித்த போது அந்த பெயரை குறிப்பிட்டு ”நீங்கள் இந்த புனைபெயரில் எழுதுகிறீர்களா?” எனக் கேட்டேன். அவர் சிரித்தபடி சொன்னார் “அவர் என்னுடைய ஒரு தீவிர வாசகர். என்னை அச்செடுத்தது போல் எழுதுவார்”.

நாம் ஏன் நகல் எடுக்கிறோம்? இது பலவீனத்தின் அறிகுறியா? இல்லை. எனக்கு ஒரு காரணம் தோன்றுகிறது. நடை என்பது உள்ளடகத்தின் மீதுள்ள ஆடை மட்டுமே. அதை ஒரு இறுக்கமான ஆடை எனலாம். தொப்பை உள்ள ஆள் அதை அணிந்தால் தொப்பை துருத்திக் கொண்டு தெரியும். எலும்பும் தோலுமானவர் அணிந்தால் எலும்புகள் தெரியும். ஆனால் நம் “உடலையே” சில நேரம் வெளியில் இருந்து கடன் பெறுகிறோம். அப்போது நாம் நம்மையறியாது அந்த உடலின் உயரம் பருமன் பொறுத்து ஒரு ஆடையும் தயாரிக்கிறோம். இந்த ஆடை தான் நமது நகல் நடை. நம்மால் இப்படி ஒருவரின் உள்ளடகத்தை கடன் வாங்கி நமக்கானதாய் மாற்றி பயன்படுத்த முடியும். அப்போது நடையும் அவரைப் போன்றதாகிறது. மற்றொரு எழுத்தாளனின் நோக்கம், லட்சியம், கருத்துகள், அவரது வாழ்க்கை அனுபவம், அவர் தன் கதை அல்லது கவிதைகளுக்கு உருவாக்கும் சூழல் என ஒவ்வொன்றையாய் நாம் ஸ்வீகரிக்கும் போது நாம் முழுமையாய் ஒரு ஜெராக்ஸ் எந்திரம் ஆகி விடுகிறோம்.

அதாவது நாம் எளிதாய் ஒருவரின் நடையை மட்டும் கைமாற்றாய் வாங்குவதில்லை. அப்படி ஒரு எழுத்தாளனின் அழகான நடையை சற்றே போல செய்வதும் பிரச்சனை அல்ல. பேசும் விசயம் உங்களுடையது என்றால் விரைவிலேயே கடன் வாங்கிய நடை உங்களுடையதாய் உருமாறி விடும். கடிக்கும் புது செருப்பு விரைவில் உங்கள் காலுக்கு ஏற்றபடி தேய்ந்து பொருந்துவது போன்றது இது.

ஒரு எழுத்தாளனால் நாம் மிகவும் கவரப்படும் போது அவரது மொழி மட்டும் அல்ல உலகமும் தான் நம்மை வசீகரிக்கிறது. அவரது மொழியில் நாம் எழுதிப் பார்க்கும் போது தன்னிச்சையாய் அவரது உலகையும் அதிலுள்ள மனிதர்களையும் நம் மொழிக்கு கடத்தி வர முயல்கிறோம். இது நம்மையும் அறியாமல் மிகவும் தன்னிச்சையாய் நடக்கிறது. அதாவது அசோகமித்திரனின் மொழி என்னை கவர்கிறதென்றால் அதன் சிறந்த அம்சங்களை நான் வரித்துக் கொள்ளலாம். அப்போது என் சொந்த ஸ்டைலை இழந்து விட மாட்டேன். ஆனால் அவர் கதைகளில் வருகிற அதே வறுமையில் உழலும் பிராமண இளைஞன், அன்றாட சிக்கல்களில் தவிக்கும் வீட்டுப் பெண்களையே நான் எழுத முயன்றால் அவரை அப்படியே நகல் எடுக்க நேரிடும். ஒரு எழுத்தாளனின் உலகம் அவனது உலகப் பார்வையின் வடிவம். அவனது கருத்துக்களின் கற்பனை வடிவம் அது. அது அவனது வாழ்க்கையின் சாரம். அதை நாம் புது வண்ணம் தீட்டி நமதானதாக்க முடியாது.

நடை எப்படி இரண்டு விதமாய் தாக்கம் செலுத்தும் என்பதற்கு இரு உதாரணங்கள் தருகிறேன். லஷ்மி சரவணகுமார், அஜயன் பாலா போன்றோரின் மொழியில் எஸ்,ரா, கோணங்கியின் கடுமையான தாக்கத்தை காண முடியும். ஆனால் இருவரும் தம்முடைய பார்வையை, கருத்துலகை இழக்கவில்லை. லஷ்மி சரவணகுமாரின் கதைகளையும் எஸ்.ராவின் கதைகளையும் இன்று அருகருகில் வைத்துப் பார்க்கையில் லஷ்மி எப்படி தனதான ஒரு உலகை கண்டடைவதில் தீவிரமாய் நகர்ந்திருக்கிறார் என புரியும்.

 போகன் சங்கர் இதற்கு ஒரு மாற்று உதாரணம். அவரைப் படிக்கையில் ஜெயமோகன் நினைவு வருவதை தவிர்க்கவே முடிவதில்லை. ஏனென்றால் நடை ஒத்திருப்பது மட்டுமல்ல பிரச்சனை. அவர் ஜெயமோகனின் அதே கதைமாந்தர்கள், அவர்களின் வாழ்ந்து கெட்ட மனிதர்களின் உலகம், அதே வட்டார வழக்கு, கதைப்போக்கு, உணர்ச்சிநிலை ஆகியவற்றை போல செய்கிறார். அவர் ஒருவேளை இந்த உலகம் தான் பார்த்து அனுபவித்த உலகம் என்று கூட நினைக்கலாம். ஆனால் அவர் ஜெயமோகனின் கண்கள் வழி பார்த்தையே நமக்கு அளிக்கிறார் எனும் உணர்வை நம்மால் தவிர்க்க இயலவில்லை. இதை தவிர்க்க ஒரே வழி அவர் ஜெயமோகனுக்கு தொடர்பற்ற ஒரு அனுபவ உலகை எழுதுவது தான்.

சதீஷ் என்னிடம் தனது வேலை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். இணையதளங்களை வடிவமைக்கும் code எழுதுவது அவரது பணி. அதில் உள்ள பல சவால்கள், சிக்கல்கள் பற்றி சொன்னார். குறிப்பாய் FIFA உலகக் கோப்பையின் போது டிவி திரையில் பந்து பயணிக்கும் இடத்தில் மட்டும் விளம்பரங்கள் தெரியும் மட்டும் ஒரு code எழுத நேர்ந்ததைப் பற்றி சொன்னார். எனக்கு இதில் ஒரு கதை இருப்பதாய் பட்டது. தமிழில் ஏன் தொழில்நுட்ப மின்னணு உலகம், மென்பொருள் கட்டமைப்பு ஆகியவை பற்றி இத்துறைக்கான மொழிநடையுடன் கதைகள் வருவதில்லை?

ஒருவர் இந்த மென்பொருள் உலகில் இருப்பதாலே இதைப் பற்றி எழுதவும் அவசியம் இல்லை. விநாயக முருகனும் செல்லமுத்து குப்புசாமியும் மென்பொருள் துறையில் இருந்தாலும் வெவ்வேறு உலகங்கள் பற்றி எழுதுகிறார்கள். வி.மு மென்பொருள் துறையினால் கீழ்த்தட்டும் மக்களும் சூழலும் பாதிக்க்கப்படுவதைப் பற்றி அதன் அரசியல் சமூக காரணிகள் பற்றி எழுதுகிறார். ஒருவர் மென்பொருள் மொழியில் புனைவு எழுத அத்துறையில் இருக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. ஆனால் ஒரு புது துறை, புது விசயம் பற்றி எழுதும் போது அங்கு ஒரு புது மொழி தோன்றுகிறது. அங்கு தனித்துவமான ஸ்டைலும் தோன்றுகிறது.

மொழியின் வழியாக ஒரு புது அனுபவப் புலத்தை கண்டடைவதை விட ஒரு புது அனுபவப் புலம் வழியாக புது மொழியை அடைவது சரியான மார்க்கம். எழுத்தாளனின் மிகப்பெரிய சவால் புது உலகங்களை தன் மொழியில் கட்டியெழுப்புவதும், அதற்காய் தன் மொழியை நெகிழ்ச்சியாய் வைத்திருப்பதும் தான்.

தொண்ணூறுகளில் எழுத்தாளர்கள் ஐரோப்பிய எழுத்தாளர்களின் பாணியை பின்பற்றி அதே கதைப்பின்புலத்தை இங்குள்ள சூழலில் பொருத்தி எழுதிப் பார்த்தார்கள். மொழியை திருகி திருகி கவித்துவ பின்னல்கள் மூலம் மிகவும் நுணுக்கமான அசாத்தியமான ஒரு உலகை சித்தரித்தார்கள். சு.ராவை உதாரணம் காட்டலாம். தி.ஜாவின் கும்பகோணத்தை தேடி செல்பவர்களைப் போல சு.ராவின் நாகர்கோயிலை தேடி யாரும் வர மாட்டார்கள். ஏனென்றால் சு.ராவின் உலகம் அவருக்குள்ளும் அவர் வாசித்த ஐரோப்பிய மேதைகளின் புனைவுகளுக்குள்ளும் மட்டும் இருந்தது. அது நாகர்கோயிலில் இல்லை. சமூகத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையிலான அதிகார மோதலை அவர் சமூகத்தில் உணர்ந்து படைப்பில் கொணரவில்லை. புத்தகங்களில் வாசித்து அறிந்து அதை பின் தான் பார்த்த மனிதர்களில் கவனித்து படைப்பாக்கினார். அவர் படைப்புகளில் உண்மை இருப்பதால் அவை இன்னும் வாசிக்கத் தக்கவையாய் உள்ளன.

 இப்படி இது தன் வாசிப்பு மற்றும் கருத்து நிலையின் தூண்டுதலால் எழுதுவதும் ஒரு பாணி. இதிலும் தவறில்லை. ஆனால் இம்முறையிலும் சு.ராவைப் போன்றோர் படித்தறிந்த கருத்துக்களை அப்படியே எழுதாமல் அதன் தாக்கத்தில் புது பார்வைகளை உருவாக்க வேண்டும். தாம் சொல்வதற்கு என ஒரு புது விசயத்தை கண்டுபிடித்ததை கவனிக்க வேண்டும். அவர் அதை செய்தார் என்பதே சாதனை. அதனால் தான் அவர் நகல் எந்திரம் ஆகவில்லை.

நான் இதுவரை சொன்னதற்கு ஒரு மாற்று முறையும் உண்டு. அதாவது மொழியில் இருந்து உள்ளடக்கத்திற்கு செல்வது. மிகவும் தத்துவார்த்தமான சிக்கல்களை பேசும் புனைவெழுத்தாளர்களுக்கு மொழியின் ஊடாக தம் கருத்துலகினுள் பயணிப்பது சுலபமாய் இருக்கும். ஏனென்றால் தத்துவம் அரூபமானது. லௌகீக அனுபவம் போல அதை நேரடியாய் அனுபவித்திருக்க முடியாது. அதனால் அவர்கள் அனுபவம் அல்லது ஒரு துறை சார்ந்த தகவல்களைக் கொண்டு கதைக்கான மொழியை கண்டுபிடிக்காமல் மொழியை வைத்து இயங்கி அனுபவ தளத்தை கண்டறிவார்கள். அதாவது மொழி ஒரு டார்ச் என்றால் அந்த ஒளியை இருளில் பாய்ச்சி அங்கு மறைந்திருப்பதை கண்டறிகிறார்கள். மௌனி, நகுலன் ஆகியோரை இந்த பாணிக்கு உதாரணம் காட்டலாம். ஆனால் இந்த தத்துவ பின்புலம் இல்லாதோர் இப்படி மொழியை டார்ச்சாக கையாண்டால் இருட்டில் ஏதாவது படுகுழியில் விழ நேரிடும். 

“அழியாச்சுடர்” கதையை எடுத்துக் கொள்வோம். மௌனியின் தத்துவ தீப்பிழம்பு மனம் இல்லாதவர்கள் அதே கவித்துவ மொழியில் அதே கதையை எழுதினால் அது ஒரு அசட்டு காதல் கதையாக முடிந்து போகும். அந்த மொழியைக் கொண்டு தான் எதை நோக்கி பயணிக்க வேண்டும் எனும் அறிதல் மௌனிக்கு இருந்தது. இல்லாவிட்டால் அந்த பெண்ணைப் பற்றி பேசும் போது அந்த இருளடைந்த கோயில் பிரகாரம், வௌவால்கள் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்.

எப்படியும் மூக்கைத் தொடலாம். நேரடியாகவோ, தலையை சுற்றியோ. நம் இஷ்டம். எப்படியும் ஒரு படைப்பை உருவாக்கலாம். மொழி வழியாக அனுபவத்திற்கு சென்றோ அனுபவம் வழியாக மொழிக்கு சென்றோ. மொழியை டார்ச்சாக பயன்படுத்தி அனுபவத்தைக் காணலாம். அல்லது அனுபவத்தை டார்ச்சாக பயன்படுத்தி மொழியை காணலாம். இரண்டாவது சற்று ஆபத்து குறைந்த வழி.

நான் ஒரு கிறித்துவ நண்பரிடம் தமிழ் கவிதை விமர்சன மொழியில் உள்ள வெளிப்பாடு, தரிசனம் போன்ற சொற்களைப் பற்றி பேசும் போது அவர் மிகவும் வியப்பாக இவையெல்லாம் கிறித்துவ சொற்கள் என்றார். ஜெயமோகன் கவிதை விமர்சனம் எழுதிய காலத்தில் எப்படி தரிசனம் எனும் இறையியல் சொல்லை பிரபலமாக்கினார் என அவரிடம் சொன்னேன். சொல்லப் போனால் எழுபதுகளில் இருந்தே கவிதையியலுக்கான மொழிக்காக நாம் இறையியலுக்கு தான் செல்ல வேண்டி இருந்துள்ளது. ஏனென்றால் கவிதையும் ஆன்மீகமும் பக்கத்தில் பக்கத்தில் உள்ளது. நாளை ஒருவர் பொருளாதாரம் பற்றி பேச உளவியலின் மொழியை பயன்படுத்த முடியும். அங்கும் ஒரு புது நடை உருவாக முடியும். இப்படி பல துறைகள் ஒன்றோடொன்று முயங்கியும் எழுத்தாளனுக்கான மொழி உருவாகலாம். அதனால் தான் பலதுறை சார்ந்து வாசிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

 கட்டுமானவியல் சார்ந்து எழுதப் போகிறவர் முற்றுமுழுதாய் ஒரு மொழியை உருவாக்க முடியாது. அவர் முதலில் தான் என்ன கோணத்தில் எழுதப் போகிறோம் என முடிவெடுக்கிறார். அடுத்து தமிழில் இந்த விசயத்தை பற்றி எழுத எந்த துறையில் இருந்து சொற்களை உருவப் போகிறேன் என அவர் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாய் கட்டுமானவியல் மனிதனின் உளவியலை எப்படி காட்டுகிறது, அதே போல் எப்படி மனித மனதை அதை வடிவமைக்கிறது என எழுத விரும்புகிறார் என்றால் அவர் தமிழின் ஆன்மீக இலக்கியங்களில் இருந்து கூட தன் மொழியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

 தமிழை எடுத்துக் கொண்டால் இறையியல், சித்த மருத்துவம் ஆகிய துறைகளில் தான் மரபான சொற்களும் படிமங்களும் நிறைய உள்ளன. ஒரு புது துறையை பற்றி எழுத தன் மரபில் இருந்து மொழியை கடன்வாங்கி புதுப்பிக்கிறவர் சுலபமாய் தனக்கென ஒரு நடையை உருவாக்க முடியும் என்பது மட்டுமல்ல மக்களிடமும் மிகவும் அந்தரங்கமாய் பேச முடியும். அவரது மொழி மக்களின் உணர்ச்சியையும் ஆழ்மனத்தையும் அசைக்க முடியும். அவர்களுடன் ஒன்ற முடியும். இத்தகைய மொழி மிகவும் இயல்பாகவும் சரளமாகவும் இருக்கும். 

நாற்பது, ஐம்பதுகளில் கு.ப.ரா, புதுமைபித்தன், க.நா.சு போன்றோர் ஐரோப்பிய நவீன கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த எப்படியான மொழியை பயன்படுத்தினார்கள் என ஆய்வு செய்தால் இது இன்னும் ஆழமாய் புரியும். அவர்கள் வெளிநாட்டு சரக்கை இங்கு அறிமுகப்படுத்த நினைத்தாலும் அவர்களின் மொழி மிகவும் இயல்பாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்றாலும் மரபான இலக்கியம், இறையியல் ஆகியவற்றில் பரிச்சயம் கொண்டிருந்தார்கள். ஆனால் தொண்ணூறுகளில் சிறுபத்திரிகை கோட்பாட்டாளர்கள் நேரடியாய் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கின ஒரு விநோத தமிழில் புது கருத்துக்களை சொல்ல முயன்றார்கள். அவர்கள் உருவாக்கிய பல சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம் என்றாலும் அம்மொழி நமதானது அல்ல. அந்த செயற்கையான தமிழ் வாசகனை உடனே அந்நியப்படுத்தக் கூடியது. ஏனென்றால் நாம் நம் மரபில் இருந்து அத்தமிழை உருவாக்கவில்லை.


பிறரது மொழியால் நாம் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருப்போம். ஆனால் மிகத் தெளிவாய் நாம் எழுதுவதற்கு என்று ஒரு உலகை வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கான ஒரு நடை உருவாவதற்கான முதல் படி அது தான். 

நன்றி: தீராநதி, பிப்ரவரி 2016

No comments: