Monday, May 2, 2016

எழுத்தாளனின் வறுமையை ஏன் கொண்டாட வேண்டும்?


ஆக்காட்டி இதழுக்காக ஷோபா சக்தி லஷ்மி மணிவண்ணனை கண்ட பேட்டி இம்மாத அம்ருதாவில் மறுபிரசுரம் ஆகி உள்ளது. அதில் மணிவண்ணன் தன் தாயைப் பற்றியும் சு.ரா பற்றியும் பேசியுள்ள இடங்கள் மிக நன்றாய் வந்துள்ளன. மணிவண்ணன் இலக்கியம் குறித்து கூர்மையான பார்வை கொண்டவர். அவதானிப்பு தான் அவரது பிரதான திறன். லேசர் கதிர் போல் எதையும் ஊடுருவிப் பார்க்கக் கூடியவர். சு.ரா பற்றின இந்த இடத்தை ரசித்தேன். சு.ராவை ஏன் முற்போக்குவாதிகள் கடுமையாய் எதிர்த்தார்கள் என்பது கேள்வி. அது சு.ராவின் குற்றம் அல்ல எனும் மணிவண்ணன் சு.ரா தேவைக்கதிகமாய் முற்போக்காளர்கள் மீது அக்கறை கொண்டிருந்தார் என்கிறார்: ”பல எழுத்தாளர்கள் முற்போக்கு கம்பெனிகளை பொருட்படுத்தியதே இல்லை. முற்போக்குகள் கருத்துநிலைகளைத் தாண்டி வர இயலாதவர்களாய் இருப்பதற்காக, அவர் அவரது உரைநடைகளிலேயே நிறைய கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்”.

“ஜெ.ஜெ சில குறிப்புகளை” “நா.பார்த்தசாரதி வகையறா நாவல் தான்” என மணிவண்ணன் மதிப்பிடுவது கொஞ்சம் மிகைதான் என்றாலும் அதில் முக்கியமான பார்வை உள்ளது. அந்நாவலின் சிக்கல் அதில் உள்ள லட்சியவாதத் தளும்பல். அறிவார்ந்த, கலை சார்ந்த லட்சியவாதம் ஏன் லௌகீக உலகில் மதிப்பு பெறுவதில்லை, ஏன் லட்சியவாதிக்கு தான் வாழும் உலகம் புரியவில்லை போன்ற கேள்விகள் “சித்திரப் பாவையிலும்” பேசப்பட்டவை தான். என்ன சு.ரா இன்னும் நுணுக்கமான தீவிரமான நிலைக்கு அந்த அக்கறைகளை எடுத்து செல்கிறார்.
இடைநிலை இதழ்களை ஈமு கோழி பண்ணைகள் என மணிவண்ணன் மதிப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது வரலாற்று கவனம் இல்லாத தட்டையான பார்வை. ஒரு சூழலில் நன்றாய் எழுதுகிற ஐந்து எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். அவர்கள் முன்னூறு பேர் படிக்கிற சிறுபத்திரிகையில் எழுதினாலும் ஐயாயிரம் பேர் படிக்கிற இடைநிலை பத்திரிகையில் எழுதினாலும் என்ன வித்தியாசம் ஏற்பட்டு விடப் போகிறது? இடைநிலை பதிப்பகங்கள் நமது பல செவ்வியல் படைப்புகளை பரவலாய் பதிப்பித்திருக்கின்றன. புது எழுத்தாளர்களுக்கு இடம் கொடுத்திருக்கின்றன. இதில் வணிகமும் உள்ளது. இலக்கியத்தை விற்கக் கூடாது எனும் லட்சியவாதம் மணிவண்ணனுக்கு உள்ளது. அந்த லட்சியம் அவருக்கு சு.ராவிடம் இருந்து ஏற்பட்ட ஒரு கருத்து மயக்கமாக இருக்கலாம்.
 இலக்கிய பிரசுரம் வியாபாரமாய் சூடுபிடிக்க ஆரம்பித்த பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் தான் அமெரிக்க இலக்கியம் பெரும் உச்சத்தை அடைந்தது. அச்சுத்தொழில் அறிமுகமாகி புத்தக விற்பனையில் பணம் கிடைத்த தொடங்கிய கட்டத்தில் தான் இங்கிலாந்தில் ஐரோப்பிய இலக்கியங்கள் அறிமுகமாகி புத்தொளிக்காலம் துவங்கியது. ஷேக்ஸ்பியரும் மில்டனும் தோன்றினார்கள். புத்தக விற்பனை இல்லாவிட்டால் இருவரும் அவ்வளவு பெரும் எழுத்தாளர்களாய் மலர்ந்திருக்க முடியாது. கடந்த ஐம்பது வருடங்களில் நாம் கொண்டாடிய மார்க்வெஸ், போர்ஹெஸ், முராகாமி, ரஷ்டி போன்றோரெல்லாம் மணிவண்ணன் சிலாகிக்கும் சிறுபத்திரிகை சூழலில் சின்ன சின்ன குழுக்களுக்குள் நூறு பிரதிகள் பிரசுரித்து விநியோகித்து பள்ளி வகுப்பறையில் இலக்கிய கூட்டம் நடத்தி உருவானவர்கள் அல்ல. போர்ஹெஸ் முழுநேர எழுத்தாளனாகும் முயற்சியில் கடனாளி ஆகிறார். “நூற்றாண்டுகளின் தனிமை” மட்டுமே பொருளாதார ரீதியில் தன்னை காப்பாற்றக் கூடும் என நம்பி அதை எழுதுவதில் இறங்குகிறார். தன் மனைவியிடம் ஒரு மாதம் என்னை தொந்தரவு பண்ணாதே என்று கூறி விட்டு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறார். அந்நாவல் வெற்றி பெறுகிறது. மொழியாக்கமாகி உலக அளவில் பெயர் பெறுகிறது. மார்க்வெஸ் பெரும் பணம் ஈடுகிறார். கடன் தொல்லைகளில் இருந்து தப்பிக்கிறார். தன் மொத்த வாழ்க்கையையும் எழுத்துக்கு அர்ப்பணிக்கிறார். முராகாமிக்கும் இதுவே நடக்கிறது. அவர் முப்பத்தைந்து வயதுக்கு மேல் தன் இசைக்கடையை மூடி விட்டு எழுத்தாளனாக முயற்சி எடுக்கிறார். அவர் நாவல்களும் எடுத்த எடுப்பில் பெரும் வணிக வெற்றி பெறுகின்றன. ரஷ்டி தன் நாவலை வார இறுதியில் மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாய் எழுதினார். நாவல் வெற்றி பெற்றால் அன்றாட வேலை வாழ்வின் அலுப்பில் இருந்து தப்பிக்கலாம் எனும் நம்பிக்கை அவரைத் தூண்டியது. அப்படியே அவர் ஒரே நாவலில் முக்கிய எழுத்தாளராகவும் செல்வந்தராகவும் ஆனார்.
 மூவரும் இது போன்ற ஐரோப்பிய தொடர்புகள் இல்லாமல் தமிழகத்தின் கடைக்கோடியில் பிறக்கிறார்கள் எனக் கொள்ளுங்கள். என்னதான் முக்கி முனகி எழுதி இருந்தாலும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிந்திருக்காது. அவர்களின் படைப்புகளை முன்னூறு பேர் தாண்டி யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். அவர்களின் இலக்கிய படைப்புகள் கோடிக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டதால் அவை தரம் குறைந்தவை ஆகி விட்டனவா? இல்லையே!
 இன்று ஈழ இலக்கியத்துக்கு ஐரோப்பாவில் உள்ள சந்தை மதிப்பு கூட துரதிஷ்டவசமாய் தமிழ் எழுத்துக்கு இல்லை. அதற்கு சர்வதேச அரசியலும் நாம் இந்திய தேசத்தின் ஒரு எளிய, யாரும் பொருட்படுத்தாத பகுதியாகவும் இருப்பது காரணம். சரியான மொழியாக்கமும் கார்ப்பரேட் வளர்ச்சியும் இல்லாதது காரணம்.
தமிழில் இப்போதுள்ள ஒரே ஆசுவாசம் ஒரு இளம் நாவலாசிரியனால் யார் காலையும் பிடிக்காமல் வருடக்கணக்காய் தவம் கிடக்காமல் தன் புத்தகத்தை பிரசுரிக்க முடியும் என்பது. அதிக நூல்கள் பிரசுரமாவதும் அது மக்களை போய் சேர்வதும் இலக்கியத்துக்கு கேடு அல்ல. நல்லது. ஐரோப்பாவில் கடந்த முன்னூறு ஆண்டுகளில் அப்படித் தான் நடந்து வந்துள்ளது.
ஏழ்மையும் குறைவான பிரசுர வாய்ப்புகளும் வாசக கவனமின்மையும் படைப்பின் தரத்தை உயர்த்தாது; படைப்பூக்கத்தையும் தூண்டப் போவதில்லை. அப்படி செய்யும் என்பது நம் கற்பிதங்கள் மட்டுமே. நாம் கொண்டாடும் தஸ்தாவஸ்கி, ஏழ்மையில் நொந்து தளர்ந்ததாய் நாம் புரிந்து கொள்ளும் தஸ்தாவஸ்கி, தன் நாவல்கள் எவற்றையும் ராயல்டி இல்லாமல் பதிப்பித்ததில்லை. ராயல்டி என்ன, அவரது பல முக்கிய நாவல்களை முன்பணம் வாங்கித் தான் எழுதவே செய்திருக்கிறார். (ஆனால் தஸ்தாவஸ்கிக்கு பணத்தை பாதுகாக்கக் தெரியாது) தமிழில் ஒரு கோணங்கியோ அசோகமித்தரனோ ரெண்டு லட்சம் முன்பணம் வாங்கிக் கொண்டு நாவல் எழுத முடியுமா? நாவலை டைப் செய்ய ஒரு அழகிய இளம் பெண்ணை வேலைக்கு வைக்க முடியுமா? (எனக்குத் தெரிந்து இலக்கியவாதிகளில் சு.ரா மட்டுமே தமிழில் அந்த வசதியை கொண்டிருந்தார்.) சூதாட்ட விடுதிகளில் சூதாடி பணத்தை அழிக்க முடியுமா? (சூதாட்ட கிளப் பக்கமே நம் ஆட்கள் போக முடியாது). என்னதான் ஏழைத் தோற்றம் கொண்டிருந்தாலும் தஸ்தாவஸ்கி கூட நம் ஆட்களை விட வசதியாகவே இருந்தார். காரணம் ரஷ்யாவில் நாவல்கள் விற்றன. விற்கும் நாவல்களுக்காய் பதிப்பாளர்கள் காத்திருந்தார்கள்.
தமிழ் எழுத்தாளன் தான் உலகிலேயே பெரும் பிச்சைக்காரன். அது கூட பரவாயில்லை. பிச்சைக்காரத்தனத்தை ஏன் நாம் லட்சியப்படுத்தி கொண்டாட வேண்டும் என எனக்கு புரியவில்லை.
தமிழ் எழுத்தாளன் தன் நூல்களுக்கு சில லட்சங்களாவது வாங்க முடிந்தது எஸ்.ரா, சாரு, ஜெயமோகன் விசயத்தில் மட்டுமே முதன்முறையாய் நம் வரலாற்றில் நடந்தது. அதற்கு காரணம் அவர்கள் தம் முயற்சியால் ஒரு வாசகர் கூட்டத்தை சேர்த்தது தான். அந்த வாசகர் பரப்பை பயன்படுத்தி வணிகம் செய்ய ஒரு பதிப்பாளர் நினைப்பது குற்றம் அல்ல. அதனால் எழுத்தாளன் பலன் அடைகிறானே!
லஷ்மி மணிவண்ணன் இன்று தன் நண்பர்களின் உதவியை நம்பியே வாழ்கிறார். இதை நான் குறையாக சொல்லவில்லை. முழுநேர எழுத்தாளனுக்கு வேறு வழியில்லை. தமிழில் கேரளாவில் உள்ளது போன்ற வாசகப் பரப்பு இருந்திருந்தால் அவர் தன் ராயல்டி பணத்தைக் கொண்டே நிம்மதியாய் வாழ முடியும். நாம் ஐரோப்பிய தேசமாய் இருந்தால் அவர் மிக வசதியாய் வாழ முடிந்திருக்கும். சோற்றைப் பற்றி கவலைப்படாமல் எழுத முடியும். நிறைய அவமானங்களையும் நெருக்கடிகளையும் தவிர்க்க முடியும்.

சரி இந்த அவமானங்களும் நெருக்கடிகளும் தான் ஒரு சிறந்த படைப்புக்கான ஊக்கத்தை, அழுத்தத்தை தருகின்றனவா என்றால் இல்லை. தல்ஸ்தாய் என்ன ஏழ்மையிலா வாழ்ந்தார்? நான் மேற்குறிப்பிட்ட முராகாமி, மார்க்வெஸ் போன்றோர் தம் சிறந்த படைப்புகளை பணக்காரர்கள் ஆன பின்னரும் எழுதினர்.
அடுத்த நூற்றாண்டிலாவது நாம் அந்த சிறந்த நிலைக்கு போய் சேர வேண்டும் என எதிர்பார்ப்போம். படைப்பு நன்றாய் அமைவது போன்றே இலக்கிய எழுத்தாளன் வசதியாய் சிரமம் இல்லாமல் இருப்பதும் முக்கியமே.
உயிர்மையும் காலச்சுவடும் இருக்கும் இடத்தில் ஒரு ஐம்பது உயிர்மைகளும் காலச்சுவடுகளும் தோன்ற வேண்டும் என்பதே என் விருப்பம். அப்போது தான் இலக்கிய எழுத்துக்கு சந்தை மதிப்பு உருவாகும். இல்லாவிட்டால் குப்பை எழுத்துக்களே முக்கியத்துவம் பெறும். கடந்த பத்தாண்டுகளில் இருந்து உதாரணம் தருகிறேன். 2005இல் இருந்து 2008-10 வரை பதிப்புத்துறைக்கு பொற்காலம் எனலாம். நூலக ஆணைகள் சுலபமாய் கிடைத்தன. புத்தகங்கள் அதிகம் விற்றன. அப்போது தான் பதிப்பாளர்கள் மூத்த படைப்பாளிகளின் செம்பதிப்புகளை நிறைய கொணர்ந்தார்கள். ஒரேயடியாய் நூறு புத்தகங்களை கூட பதிப்பித்தார்கள். அப்போது இலக்கிய படைப்புகளுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.
 அதை சந்தை மதிப்பு என்றும் நீங்கள் கூறலாம். ஆனால் அந்த மதிப்பு காரணமாய் தான் அசோகமித்திரனின் சிறுகதைகளின் மொத்த தொகுதிகள் வெளியாகின. அவை நம் அலமாரிகளிலும் நூலகங்களிலும் இருப்பதற்கு அந்த சந்தை மதிப்பே காரணம். கடந்த சில வருடங்களில் நிலைமை நேர்கீழாகி விட்டது. நூலக ஆணையும் இல்லை, போதுமான புத்தக விற்பனையும் இல்லை. இதனால் நேரடியாய் பாதிக்கப்படுகிறவன் இலக்கிய எழுத்தாளனே. புது நூல்களை வெளியிட, பெரிய நாவல்களை பதிப்பிக்க தயங்குகிறார்கள். ரொம்ப இலக்கியத்தனமாய் இருந்தால் அந்த புத்தகங்கள் வெளிவர சிக்கல் ஏற்படுகின்றன. இலக்கிய எழுத்தாளனுக்கு நெருக்கடி தோன்றுகிறது. அவன் இடத்தை வணிக மொழியில் இலக்கியம் எழுதுகிறவர்கள் பிடித்துக் கொள்கிறார்கள். சுவாரஸ்யமான, மேலோட்டமான புத்தகங்களை பதிப்பித்து விற்றுப் பிழைக்கலாம் என பதிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களும் வாழ வேண்டுமே?
லஷ்மி மணிவண்ணன் கற்பனை செய்து சிலாகிக்கும் எழுபதுகளின் இலக்கிய சூழல் இலக்கிய எழுத்தாளனுக்கு முழுக்க விரோதமான ஒன்று. அன்று ஏன் கிட்டத்தட்ட நாவல்களே எழுதப்படவில்லை? ஏன் புதுமைப்பித்தன் காசநோய்க்கு மருந்தில்லாமல் இறந்து போனார்? ஏன் நகுலன் தன் புத்தகங்களின் விற்பனை குறித்த வருத்தத்துடன் இருந்தார்? ஏன் அசோகமித்தரன் பழைய அச்சான தாள்களின் பின்னால் எழுதி குறைவான உணவுடன் வாழ்ந்தார்? இவையெல்லாம் சிறப்பான காரியங்களாய் நான் நினைக்கவில்லை. நல்ல வளமான சூழல் இருந்திருந்தால் இவர்கள் இன்னும் அதிகமான தரமான படைப்புகளை தந்திருப்பார்கள். சிக்கல் இல்லாமல் வாழ்ந்திருப்பார்கள்.
இறுதியாக ஒரு குற்றச்சாட்டுக்கு வருவோம். இன்று எழுதப்படுகிற படைப்புகள் வெறும் குப்பை என்பது மணிவண்ணன் மதிப்பீடு. எனக்கு இதில் முழுக்க உடன்பாடில்லை. என் கருத்துப்படி தமிழின் முதல் சிறந்த நாவல்கள் ஜெயமோகனின் ”விஷ்ணுபுரமும்”, எஸ்.ராவின் “நெடுங்குருதியும்”. நாவலை மட்டுமே வைத்து மதிப்பிட்டால் கடந்த நாற்பது, ஐம்பது வருடங்களின் இலக்கிய முயற்சிகளை சுலபத்தில் வியர்த்தங்கள் எனக் கூற முடியும். சரி நவீன கவிதை? நவீன கவிதை நாற்பதுகளிலே இங்கு துவங்கி விட்டது. ஆனால் எண்பதுகளின் பிற்பகுதியில் அது சிறப்படைய ஆரம்பிக்கிறது. நமது ஆகச்சிறந்த கவிஞர்களான தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், யுவன் போன்றோர் தொண்ணூறுகளின் பிரதிநிதிகள். அப்படி என்றால் நாற்பது வருட கவிதை எழுத்து முயற்சிகள் வீணா? எண்பதுகள் வரையிலான தமிழ் எழுத்தின் சாதனை என்பது சிறுகதையில் மட்டும் தான்.
சரி நம் சிறுபத்திரிகைகளுக்கு வருவோம். இன்று எழுத்து, கசடதபறா உள்ளிட்ட பல சிறுபத்திரிகைகளின் தொகுப்புகள் கிடைக்கின்றன. அவற்றை படித்தவன் என்ற நிலையில் 80% அரைகுறை படைப்புகள் அல்லது தேறாதவை என நான் கூற முடியும். (அவை சரியான நோக்கம் கொண்டிருந்தன என்பதை நான் மறுக்கவில்லை) நிறப்பிரிகை இதழ்கள் மட்டுமே நம் சிறுபத்திரிகை மரபில் முழுக்க முழுக்க மிகத் தரமாய் வெளிவந்தவை. சு.ரா எடிட் செய்த “காலச்சுவடு” இதழ்களின் தொகுதியை பாருங்கள். பெரும்பகுதி மொழியாக்கம், கச்சிதமான வடிவம் கொண்ட ஆனால் உள்ளீடு அற்ற சிறு கவிதைகள் என்று தான் அவ்விதழ்கள் இருக்கும். அது பத்திரிகையே அல்ல சு.ராவின் மதிப்பீட்டுக்கு ஏற்ற படைப்புகளின் தொகுப்பு எனத் தோன்றும். ஆனால் காலச்சுவடு ஒரு நடுநிலை இதழாக மறுவருகை புரிந்த போது தான் அதில் பல சிறந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகின. இதை நாம் எப்படி புரிந்து கொள்ள?
எல்லா காலத்திலும் பத்திரிகைகள் வெற்று படைப்புகள் அதிகம் நிறைந்ததாகவே இருக்கும். அங்கங்கே சிறந்த படைப்புகள் தென்படும். ஒரு கற்பனை உலகத்தில் மட்டுமே முழுக்க தரமான பத்திரிகைகள் எந்த வெளிவர முடியும். அதற்காய் அவற்றை ஈமூ பண்ணைகள் என்றெல்லாம் கொச்சைப்படுத்துவது நியாயம் அல்ல.
ஜெயமோகன், எஸ்.ரா போன்றவர்கள் நம் காலத்தில் நம்முடனே இருப்பதால் அவர்களை சற்று அலட்சியத்துடன் அணுகும் போக்கு உள்ளது. ஆனால் அடுத்த தலைமுறையினர் மிகுந்த ஆர்வத்துடன் இவர்களை படிக்க போகிறார்கள். இவர்களுக்கு அடுத்த தலைமுறையிலும் பல சிறந்த சிறுகதையாளர்கள், கவிஞர்கள் தோன்றி இருக்கிறார்கள். (இங்கு அவர்களை பட்டியலிட்டால் வளர்ந்து கொண்டே போகும் என்பதால் தவிர்க்கிறேன்). இவர்களுக்கு நாம் ஒரு முப்பது வருடங்களையாவது அளிக்க வேண்டும். நாற்பதுகளில் இருந்து எண்பதுகள் வரை எழுதினவர்களை மொத்தமாய் படிக்கையில் ஐந்தோ பத்தோ தானே தேறுகிறது. அப்படி என்றால் மிச்ச தொண்ணூறு பேர்கள் யார்? அவர்களின் நூல்கள் எங்கே போயிற்று? ஒவ்வொரு ஐம்பது வருடங்களிலும் உள்ளங்கையளவு எழுத்தாளர்கள் தான் தேற முடியும். மற்றபடி இன்றொரு தேக்கநிலை உள்ளதாய் நான் நம்பவில்லை.
 அப்படி நம்மை நாமே மதிப்பிடும் இடத்திலும் நாம் இன்று இல்லை. புதுமைப்பித்தனைக் கேட்டிருந்தால் தன் காலத்தில் முழுக்க குப்பை வண்டிகளே எழுத்தாளர்களாக இருக்கிறார்கள் என்றிருப்பார். ஒவ்வொரு எழுத்தாளனும் தான் வாழும் காலம் குறித்த அதிருப்தியுடனே இருப்பான். அந்த அதிருப்தி தான் அவனை எழுத வைக்கிறது.

 ஐம்பது வருடங்கள் கழித்து நம்மை நம் அடுத்த தலைமுறையினர் மதிப்பிடுவதே சரியாக இருக்கும்.

No comments: