Sunday, May 15, 2016

நல்லவர்கள் வாழ்க

இன்று காலையில் என்னுடைய ஸ்கூட்டரை சர்வீஸ் விடுவதற்காய் ஹோண்டா ஷோரூம் சென்றிருந்தேன். மதியம் ஒரு மணிக்கே தந்து விடுவதாய் சொன்னார்கள். இரண்டு மணியுடன் மூடி விடுவார்கள். இடையில் உள்ள இரண்டு மணிநேரங்களை என்ன பண்ண எனத் தெரியவில்லை. வீட்டுக்கு போகலாம் என்றால் ஆட்டோ கட்டணமே இருநூறு ரூபாய்க்கு மேல் தீட்டி விடுவார்கள். அது மட்டுமல்லாமல் மூன்று மாடிகள் இந்த வெக்கையில் ஏற வேண்டும்; இறங்க வேண்டும். பக்கத்திலே இருந்தது பீனிக்ஸ் மால். ஏஸியில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வந்து வண்டியை எடுக்கலாம் என யோசித்தேன். ஒரு ஆட்டோவை அழைத்து ஏறிக் கொண்டேன்.

 என் தற்போதைய வழக்கப்படி “உங்க ஏரியால யார் சார் ஜெயிப்பாங்க?” என்றேன். அவர் சொன்னாரே பாருங்கள் ஒரு பதில்: “எல்லாம் நல்லவங்க சார் தான் ஜெயிப்பாங்க”. எனக்கு பட்டென சிரிப்பு வந்து விட்டது. அடக்கிக் கொண்டு சீரியசாய் முகத்தை வைத்தபடி சொன்னேன் “நல்லவங்க எல்லாம் எந்த காலத்தில ஜெயிச்சாங்க?”. பிறகு அந்த “நல்லவரும்” இந்த “கெட்டவனும்” சிரித்தபடியே பரஸ்பரம் பார்த்து தலையாட்டிக் கொண்டோம்.
பொதுவாய் நல்லவர்களுக்கு பட்டென கோபம் வரும். பீனிக்ஸ் மால் வாசல் வரை ஆட்டோவை அனுமதிக்க மாட்டோம் என தடுத்தார்கள். உடனே ”நல்லவருக்கு” கோபம் பொத்துக் கொண்டு வர “அவரு முடியாதவரு. உள்ளே விட மாட்டேன்னா சொல்றீங்க?” என கத்தத் துவங்கினார். இதனிடையே நான் என் கைத்தடியை தூக்கி காவலாளியிடம் காட்டினேன். அவர் உடனே ”நீங்க உள்ளே வரைக்கும் போங்க சார்” என்றார். ஆட்டோக்காரர் இதையெல்லாம் கவனிக்காமல் தனக்குள் புலம்பியபடி ஆட்டோவை நகர்த்திக் கொண்டே போய்க் கொண்டிருந்தார். அவரை அமைதிப்படுத்தி மீண்டும் மாலுக்கு அழைத்து சென்றேன். ஒரு கிலோமீட்டர் தான் தொலைவிருக்கும். ஐம்பது ரூபாய் வாங்கினார். அவர் போன பின் இந்த நல்லவர்களே இப்படித் தான் சிறுபிள்ளைத்தனமாய் கோபப்பட்டு சுற்றி நடப்பதை கூட சரிவர கவனிக்க மாட்டார்கள் என நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
திரும்ப செல்வதற்கு அதே காவலாளியே ஸ்டண்டில் இருந்து ஒரு ஆட்டோ அழைத்துக் கொடுத்தார். இந்த ஆட்டோக்காரர் முறைத்துக் கொண்டே வந்தார். கல்நெஞ்சக்காரர் என்பது மீண்டும் ஷோரூம் போன பின் தான் தெரியும். “நூறு ரூபா எடுங்க” என்றார்.
”ஒரு கிலோமீட்டருக்கு நூறு ரூபாயா? போக ஐம்பது தானே கொடுத்தேன்”
அவர் சொன்னார் “ஸ்டாண்ட் ஆட்டோ சார். இது தான் சார்ஜ். காலைல ஒம்பது மணியில இருந்தே நிக்கிறேன். ஒரு சவாரி கூட வாய்க்கல. இப்போ நீங்க முத சவாரி. ஐம்பது ரூபாங்கிறீங்க. ஏன்யா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க?”
ஸ்டாண்டில் இருந்து வந்தாலும் அதே தொலைவு தானே என்றேன். மால் வாசல் வரை வந்து பிக் அப் பண்ணினேனே என்றார். அது ஒன்றும் பெரிய தொலைவு இல்லையே? அவருக்கு காலையில் இருந்து சவாரி வாய்க்காததற்கும் என்னிடம் இரட்டிப்பு கட்டணம் வாங்குவதற்கு என்ன சம்மந்தம் எனக் கேட்டேன். அவர் தன் வாழ்க்கையின் மொத்த கோபத்தையும் என் மீது கக்க துவங்கினார். விட்டால் போதும் என தப்பி வந்து விட்டேன். இவருக்கு அந்த ”நல்லவரே” பரவாயில்லை என்று அப்போது தான் தோன்றியது.

நல்லவர்கள் தம் மனசாட்சிக்காய், நம்பும் ஒரு விழுமியத்துக்காய் கொதிப்பார்கள். ஆனால் தனிப்பட்ட எரிச்சல்கள், கசப்புகளை அடுத்தவர்கள் மேல் கொட்ட மாட்டார்கள். தனக்கேற்பட்ட நஷ்டங்களை போக்க இன்னொருவர் பாக்கெட்டில் இருந்து திருடலாம் என நினைக்க மாட்டார்கள். சென்னை ஆட்டோக்காரர்களின் பெயரை கெடுப்பவர்கள் இந்த ஏமாற்று பேர்வழிகள் தான். நான் பல கருணை நெஞ்சங்களை ஆட்டோகாரர்களில் பார்த்திருக்கிறேன். என் பழைய வண்டி அடிக்கடி சாலையில் நின்று விடும். அப்போது அதை tow செய்து வொர்க்‌ஷாப் வரை எடுத்து சென்று சரி பண்ணித் தந்திருக்கிறார்கள். சிலர் இதற்கு பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். ஆனால் இந்த நல்ல நெஞ்சங்கள் நினைவில் நிற்பதில்லை. மோசமான அனுபவங்களே அழுத்தமாய் பதிகின்றன. ஏனென்றால் நாமும் எல்லாவற்றிலும் “கெட்டவர்களே வெல்வார்கள்” என நம்புகிறவர்களாய் இருக்கிறோம்.

No comments: