Wednesday, May 25, 2016

நினைவுத்திறனும் இலக்கியமும்

சினிமாவில் ஹெலன்
அபிலாஷ் சார்.
 வணக்கம், எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம். இது சிறுபிள்ளைத் தனமான சந்தேகமோ என்றெனக்கு தோன்றியதால், உங்களிடம் இதைப் பற்றி கேட்டதேயில்லை. இதற்கு கொஞ்சம் விரிவான பதிலெழுதுங்களேன். நான் இப்போதெல்லாம் நிறைய வாசிக்கிறேன். படிக்கும் போது எல்லா புத்தகங்களுமே ஆர்வமாக ,சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஆனால் சில மாதங்களுக்கு முன்போ, அல்லது போன வருடமோ வாசித்த ஒரு புத்தகத்திலிருந்து எதாவது சம்பவங்களையோ, தகவல்களையோ நினைவு படுத்திப் பார்த்தோமேயானால், துல்லியமாக நினைவு படுத்த முடியவில்லை. அவை மேலோட்டமாக தான் நினைவில் இருக்கின்றன. நிறைய மறந்தே போய்விடுகிறது.

 இதைப்பற்றி புத்தகம் வாசிக்கும் என்னுடைய சில நண்பர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் அப்படியே இருப்பதாக கூறினர். ஆனால் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் தாங்கள் எப்போதோ படித்த புத்தகங்களை கூட துல்லியமாக நினைவில் வைத்து அதில் உள்ள தகவல்களை விரிவாக பேசுகிறார்களே, எழுதுகிறார்களே. அது எப்படி? ஜெயமோகனின் இணையத்தை தினமும் படிப்பேன். அவர் இதுபோல நிறைய புத்தகங்களை நினைவு படுத்திப் பேசுகிறார்.
நீங்கள் உடனே அவசரமாக பதில் எழுத வேண்டாம். உங்களுக்கு எப்போது ஓய்வு நேரம் கிடைக்குமோ,அப்போது எழுதுங்கள் .
 நன்றி ~.அசோக்ராஜ்

அன்புள்ள அசோக்ராஜ்
வணக்கம். உங்கள் கேள்வி முக்கியமானது. நான் சமீபமாய் வாசக சாலை நடத்திய காலபைரவன் கதைகள் பற்றின கூட்டத்தில் பேசினேன். கிரேக்க தொன்மங்கள், அதன் பின்னுள்ள கதைகள், காரணக்கள், ஐரோப்பிய, அமெரிக்க கதைகள், போர்ஹெஸ், மார்க்வெஸ், எஸ்.ரா, அசோகமித்திரன், ஜெயமோகன் என நிறைய எழுத்தாளர்களின் கதைகளை குறிப்பிட்டு மிக விரிவாய் பேசி இருப்பேன். அந்த உரை யுடியூபில் உள்ளது. அதைக் கேட்டால் உங்களுக்கு இவரால் எப்படி இவ்வளவு நூல்களை நினைவு வைத்திருந்து பேச முடிகிறது எனத் தோன்றும். ஆனால் அதற்கு தயாரிப்பதற்காய் நான் செலவழித்த உழைப்பு உங்களுக்கு தெரியாது. ஒருநாள் முழுக்க நான் அது சம்மந்தமான படைப்புகளை நினைவுபடுத்தி, புத்தகங்களை புரட்டி குறிப்புகள் எடுத்தேன். பேசும் போது அக்குறிப்புகள் தேவைப்படவில்லை என்றாலும் தயாரிப்பு நிச்சயம் உதவியது. இது ஒரு எளிய யுக்தி தான். யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.
இன்றுள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு என்னால் சுலபமாய் சோழர் வரலாறு பற்றி கூட ஒரு கதை எழுத முடியும். சில நேரம் இதற்கு நீங்கள் அரைமணி செலவழித்தால் கூடப் போதும். வாசகர்களை திகைக்க வைக்க முடியும். எந்த தகவலை தேர்ந்து எங்கு எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.
இனி தயாரிப்பின்றி நினைவுகளை மீட்டெடுப்பதற்கு வருவோம். நினைவுத்திறன் இரண்டு வகை. உடனடி நினைவு, நீண்ட கால நினைவு. Short-term memory loss பற்றின படங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு இதை விளக்க அவசியம் இருக்காது. ஆனாலும் சொல்கிறேன் “பிரேமம்” படத்தில் மலர் டீச்சருக்கு விபத்தில் உடனடி நினைவுத்திறன் பழுதாகும். அவரால் நிவின் பாலியை நினைவுகொள்ள முடியாது. ஆனால் மாமா மகன் நினைவில் இருப்பார். நம்மில் சிலருக்கு உடனடி நினைவுத்திறன் வலுவாகவும் சிலருக்கு அது பலவீனமாகவும் இருக்கும்.
நினைவை மேலும் பல வகைகளாய் பிரிக்கிறார்கள். முக்கியமாய் உணர்வு சார்ந்த நினைவு, தகவல் சார்ந்த நினைவு. எனக்கு தகவல் நினைவு ரொம்ப வீக். ஆனால் உணர்வுபூர்வமான நினைவு கில்லி. பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு, பேசப்பட்ட சொற்களை என்னால் துல்லியமாய் மீட்க முடியும். எனக்கு ஆறு வயதிருக்கும் போது ஒரு கன்வெண்டில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் மாலையில் வழக்கம் போல் அக்கா என்னை வீட்டுக்கு அழைத்துப் போக வரவில்லை. ஒரு இசைப்பயிற்சிக்காக அவர் தோழிகளுடன் சென்று விட்டார். என் நண்பர்கள் அனைவரும் சென்று விட்டார்கள். காலியான வகுப்பறையில் நான் தனியாக் இருக்கிறேன். அங்குள்ள ஒரு ஆயா என்னை விளையாட்டு மைதானம் அருகே தூக்கிப் போய் அமர வைத்தார். எனக்கு துணையாக சில அக்காக்கள் வந்து கூட இருந்தனர். அவர்கள் என்னை அருகிலுள்ள முயல் கூண்டு ஒன்றிற்கு தூக்கிப் போய் வேடிக்கை காட்டினர். அன்று நடந்த விசயங்கள் முப்பது வருடங்களுக்கு பிறகு இன்றும் என் நினைவில் படக்காட்சி போல் ஓடுகின்றன. நான் என் நாவல்கள் ஒன்றில் இதைப் பற்றி எழுதினேன்.
மனுஷ்யபுத்திரன் தான் குழந்தையாய் இருக்கையில் ஒருமுறை மதுரைக்கு சென்ற போது யானைக்கு யாரோ கவளம் சோறு ஊட்டியதை பார்க்கிறார். அந்த சித்திரம் அவர் நினைவில் பதிகிறது. வளர்ந்த பின் அது பற்றி தம் அம்மாவிடம் கேட்டு மேலதிக தகவல்களை அறிந்து கொள்கிறார்.
எழுத்தாளர்களுக்கு தகவல் நினைவை விட உணர்வுபூர்வ நினைவு மிகவும் அவசியம்.
வாசிப்பில் கூட அப்படித் தான். தகவல்கள் இரண்டாம் பட்சமே. எனக்கு தல்ஸ்தாயின் “போரும் அமைதியும்” நாவலில் பல தகவல்கள் மறந்து விட்டன. ஆனால் சில நுணுக்கமான விவரணைகளை இன்றும் மறக்க இயலவில்லை. உதாரணமாய் பியர் என்றொரு தலையாய பாத்திரம் வருகிறான். அவன் ஒரு அழகியை காதலித்து மணக்கிறான். அவளுக்கு ஹெலன் என கிரேக்க தொன்மத்தின் அழகியின் பெயரை தல்ஸ்தாய் அளித்திருப்பார். அவள் ஆண்களை தொடர்ந்து கிளர்ச்சியில் ஆழ்த்தும் பெண். ஆழமற்றவள். செக்ஸை ஒரு விளையாட்டாய் கருதும், கணவனுக்கு சுலபத்தில் துரோகம் செய்யும் பெண். அவளுக்கு தன் சகோதரனுடனே தகாத உறவு இருக்கும். அது சம்மந்தமாய் அவளுக்கு குற்றவுணர்வோ சிறுமை உணர்வோ சற்றும் இருக்காது. முழுக்க தீமையில் ஆழ்ந்து அதை இயல்பாய் கருதும் பெண். அதனாலே அவளிடம் ஒரு களங்கமின்மையும் இருக்கும். காமத்தை ஒரு விளையாட்டாய் கருதும் குழந்தை அவள். அவள் தோற்றத்தை பற்றி சொல்லும் போது தல்ஸ்தாய் அவளுக்கு மேலுதடு எப்போது சற்று மேல்நோக்கி தூக்கி இருக்கும். அது அவளை மிக கவர்ச்சியாய் காட்டும் என்பார். எனக்கு ஹெலன் என்கிற பெயர் கூட மறந்து விடும். ஆனால் அந்த உதடுகள் மறக்காது. ஏனோ அவள் சற்று பூசலான தேகம் கொண்ட வட்ட முகப்பெண் என மனதில் பதிந்து விட்டது. பிறகு சினிமாவில் அவள் பாத்திரத்தில் வந்திருந்த பெண் ஒல்லியாய் இருந்தாள். என்னால் அதை ஏற்கவே இயலவில்லை. என் கற்பனையில் தீமையில் திளைக்கும், ஒழுக்கத்தை கடந்த குழந்தைமை கொண்ட பெண் சற்று பருமனாகவே இருக்க முடியும்.
இப்படி நான் வாசிப்பதை தகவல்களால் அல்ல என் கற்பனையால் மேலும் பன்மடங்காய் பெருக்கவே நான் விரும்புவேன். அதையே நீண்ட காலம் நினைவில் பொறித்து வைத்திருப்பேன்.
பெண்களின் கழுத்துக்கு பின் இளம் பொன்னிறத்தில் மென்மையான மயிர்கள் இருக்கும். எனக்கு பார்த்தாலே கிளர்ச்சி ஏற்படும். புல்லரித்து விடும். அதை ஆங்கிலத்தில் downy hair என்பார்கள். இச்சொல்லை நான் மேற்சொன்ன நாவலில் தல்ஸ்தாய் ஹெலனின் பின்னங்கழுத்தை மயிர்களை வர்ணிக்கும் போது தான் முதலில் எதிர்கொண்டேன். அதன் பிறகு என்னால் அதை மறக்கவே முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு எங்கள் அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சி. ஊழியர்கள் கூட்டமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். என் முன்னால் வெகு அருகில் ஒரு பெண். அவள் கழுத்தில் தங்க இளமயிர்கள் கதிரொளியில் மினுங்கின. எனக்கு பார்த்ததும் downy hair என நினைவு வந்தது. உதடுகள் தானே ஹெலன் என உச்சரித்தன.
”போரும் அமையும்” நாவலை நான் படித்தது இருபத்தோரு வருடங்களுக்கு முன்னால்.
சமீபத்தில் ஒரு தோழி என் நாவல் “கதை முடிவுக்கு வந்து விட்டீர்களுக்கு” ஒரு விமர்சனம் எழுதினார். தன் புனைப்பெயர் பூங்குழலி என்றார். அதைக் கேட்டவுடனே நீங்கள் “பொன்னியின் செல்வன்” படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். அந்நாவலில் ஒரு மிக சின்ன பாத்திரம் தான் பூங்குழலி. சேந்தன் அமுதனின் காதலி. நான் அந்த நாவலை பன்னிரெண்டு வயதில் படித்தேன். அப்போது என் அப்பா அந்நாவலின் பாகங்களை தன் அலுவலக நூலகத்தில் இருந்து எடுத்து வருவார். நான் அக்கா மற்றும் அப்பா போட்டி போட்டுக் கொண்டு அதை பகிர்ந்து படிப்போம். ஆளுக்கு ஒரு மணிநேரம் தான் அவகாசம். பூங்குழலி முதலில் தோன்றும் காட்சியில் மழை பெய்யும். அப்போது ஒரு குடிசையில் யாரோ தோசை வார்த்து கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அப்படித் தான் எனக்கு நினைவு (ஒருவேளை இது தவறாகவும் இருக்கலாம்) ஆனால் எனக்கு துல்லியமாய் நினைவுள்ளது நான் அதை வாசிக்கும் போதும் மழை பெய்து கொண்டிருந்தது என்பது. நான் அப்போது அப்பாவிடம் அக்காட்சியில் வரும் சாப்பாட்டு காட்சியை சிலாகித்தேன். அவர் சொன்னார் “மழை பெய்யும் போது சுடாய் தோசை விண்டு சாப்பிட்டால் அபாரமாய் இருக்கும்”. என்னால் பூங்குழலியை மறக்க முடியாதது அன்றைய மழையும், அப்பா சொன்ன வாக்கியமும் காரணமாய் தான்.
இன்னொரு விசயம். படிக்கிற புத்தகத்தின் தகவல்களை நினைவு வைத்திருப்பது ஆரோக்கியமானது அல்ல. தகவல்கள் உங்கள் மூளையை குப்பை போல் அடைத்துக் கொள்ளும். நிறைய தகவல்களை நினைவு வைத்திருப்பவர்களால் படைப்பூக்கத்துடன் புது கருத்துக்களை உருவாக்குவது முடியாது. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் யோசிக்கும் போதே அவர்கள் மனதை ஒரு நூறு மேற்கோள்கள் சூழ்ந்து கொள்ளும். அதனால் தான் தமிழில் சில நல்ல படிப்பாளிகள் வெறும் நடமாடும் விக்கிபீடியாக்களாய் இருக்கிறார்கள். அவர்களால் ஒரிஜினலாக யோசிக்க முடிவதில்லை. எந்த அபுனைவு புத்தகத்தையும் வாசித்ததும் அதன் சாரத்தை தவிர்த்து மிச்சத்தை மறப்பது நல்லது. புனைவு என்றால் உங்கள் கற்பனையை கவர்கிற தகவல்களை நினைவு வைத்திருந்தால் போதும். பாத்திரங்களின் பெயர்கள் கூட முக்கியம் அல்ல.

அந்த விதத்தில் நீங்கள் பாக்கியசாலி தான். மறதி ஒரு வரம். இலக்கிய வாசகனுகு மறப்பதே தேவையான இயல்பு.

No comments: