Thursday, May 12, 2016

இந்தியர்கள் ஏன் சுயதொழில் என்றால் ஓடுகிறார்கள்?


அமெரிக்காவில் ஆளாளுக்கு கண்டமேனிக்கு சுயதொழில் ஆரம்பிப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். எந்த அடிப்படை பயிற்சியும் இல்லாமல் எப்படி ஸ்வீவ் ஜோப்ஸ் முதல் ஆப்பிள் கணினியை உருவாக்கி அதை ஒரு கண்காட்சியில் வைத்தார் என்பதை அவர் வாழ்க்கைக்கதையில் படிக்க வெகுசுவாரஸ்யமாய் இருந்தது. அந்த துணிச்சல் நம் ஆட்களிடம் இல்லை என்று ஒரு நண்பன் என்னிடம் அடிக்கடி புலம்புவான். அவன் தற்போது பங்களூரில் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் நடத்தி வருகிறான். முதல் நிகழ்ச்சியிலே ஒரு லட்சம் சம்பாதித்து விட்டான். ஒரே வாரம் தான் வேலை. தொடர்புகள், திறமை, உழைப்பு போது வியாபாரத்தில் நிறைய பணத்தை சுலபமாய் ஈட்டுவது எளிது என்கிறான்.


ஆனால் இதற்கெல்லாம் ஒரு பின்னணி வேண்டும். ஸ்திரமான வாழ்க்கைச்சூழல் வேண்டும். எல்லாராலும் முடியாது என அவனிடம் வாதிட்டேன். அவன் சொன்னான் “இல்லடா, நம்மை பள்ளியில் இருந்தே குமாஸ்தாவாக தான் பயிற்சி அளித்து வளர்க்கிறார்கள். நமக்கு நோகாமல் அலுங்காமல் சம்பாதிக்க வேண்டும். அதில் ரிஸ்க் இருக்கக் கூடாது. ஆனால் ஒரு ஊழியனாய் நாம் ஒரு பிராஜெக்டை முடித்துக் கொடுத்தால் அதன் பத்து சதவீதம் கூட நமக்கு சம்பளமாய் வருவதில்லை. 99% லாபத்தையும் என்னைப் போல் ஒரு முதலாளி விழுங்கி விடுவான். இப்படி ஏன் நம் உழைப்பை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என நம் ஆட்களுக்கு உறைக்கவே செய்யாது”
அவன் சொல்வதில் ஓரளவு உண்மை உண்டு. இன்றைய இளைஞர்கள் சுயதொழிலின் வேகமாய் உணர்ந்து வருகிறார்கள். நான் அன்று டீக்கடையில் நிற்கும் போது வெகு தளுக்காய் ஆடையணிந்த இரண்டு இளைஞர்கள் புகையை ஊதியபடி ஆங்கிலத்தில் வெகுசுவாரஸ்யமாய் கதைத்துக் கொண்டிருந்தார்கள். எதைப் பற்றி என்றால் தட்டுக்கடை நடத்துவது பற்றி. கடைசியில் ஒருவன் சொன்னான் “தெருமுனையில் சிக்கன் பகோடா கடை நடத்துகிறவன் நம்மை விட அதிகம் சம்பாதிக்கிறான் தெரியுமா?”
முன்பு செம்மொழி மையத்தில் வேலை செய்து வந்த ஒரு நண்பர் எனக்கிருந்தார். பெரும் வாசகர். பத்து வருடங்கள் எந்த வேலையும் செய்யாமல் அறையில் படிப்பு, நண்பர்களுடன் அரட்டை என ஒரு டிப்பிக்கல் சிறுபத்திரிகை அறிவுஜீவியாக வாழ்ந்தார். செம்மொழி மைய வேலையிலும் அவர் ரொம்ப நாள் தாக்குப்பிடிக்க வில்லை. அங்கு அவருக்கு வேலையே இல்லை. காலையில் போய் அமர்ந்து புத்தகம் படித்து விட்டு மாலை திரும்புவார். ஆனால் அங்குள்ள அரசியல் அவரை கொதிப்படைய செய்ய ஒரு கட்டத்தில் வேலையை விட்டு விட்டார். அவர் என்னிடம் அடிக்கடி கோழிப்பண்ணை வைக்கப் போகிறேன், சினிமா எடுக்கப் போகிறேன் என்றெல்லாம் பேசுவார். உலகம் தெரியாமல் கனவு காண்கிறார் என நினைத்தேன். ஆனால் மனிதர் திடீரென எதிர்பாராத ஒரு தொழிலில் இறங்கினார். தன் கைவசம் இருந்த கொஞ்ச பணம், ஊரில் நிலமொன்றை விற்ற கொஞ்ச பணத்தை சேர்த்து வட்டிக்கு விட ஆரம்பித்தார். தஸ்தாவஸ்கி, தல்ஸ்தாயில் ஊறினவர் எல்லாம் வட்டிக்கடைக்காரர் ஆவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் ஆள் இப்போது ஷோக்காக இருக்கிறார்.
 சமீபத்தில் அவரை ஒரு நூலகத்தில் சந்தித்தேன். அவர் அங்கு தனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் அரசு கடன் பெற பரிந்துரைக்காய் வந்திருந்தார். அரசாங்கத்தில் தொழில்முனைவோருக்கு கொடுக்க ஏகப்பட்ட கடன் பணம் இருக்கிறது. சரியான வழியில் சென்று முயன்றால் வாங்கி விடலாம் என என்னிடம் சொன்னார். எவ்வளவு ரூபாய் எதிர்பார்க்கிறார்? ஒரு கோடி. நான் அதிர்ந்து போனேன். ”ஒரு கோடியா? என்ன பண்ணுவீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து?” அவர் சொன்னார் “அதை இன்னும் முடிவு செய்யவில்லை”. ஆனால் கடனுக்கு விண்ணபிக்க முதலில் ஒரு செயல்திட்டம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார். நான் சொன்னேன் ”ஒரு ஓட்டல் அல்லது டீக்கடை ஆரம்பிப்பதாய் திட்டம் இடுங்கள். நஷ்டம் வராது”. அவர் ”அதெல்லாம் செள்ளுபிடித்த வேலை” என்றார். நான் பல்வேறு வியாபார சாத்தியங்களை குறிப்பிட்டேன். அவருக்கு எதுவும் பிடிக்கவில்லை. “அவ்வளவு எல்லாம் வேலை பண்ண தேவையில்லை.” என திரும்ப திரும்ப கூறினார். “ஏதாவது ஒரு நல்ல செயல்திட்டம் மட்டும் வரைவாக தயாரித்துக் கொடு” எனக் கேட்டார். நானும் தலையாட்டி விட்டு வந்து விட்டேன். எனக்கு புரிந்து விட்டது: அவர் ஒரு பெரிய தொகையை தொழில்முனைவதற்கு என வாங்கி வட்டிக்கு விட திட்டமிடுகிறார்.
எங்கள் அலுவலகத்தில் டீ கொடுக்கிறவர் தான் ஒரு சின்ன ஓட்டல் நடத்தின கதை சொன்னார். ஓட்டலில் நல்ல வருமானம் வந்தது. ஆனால் அவரால் எட்டு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இழுத்து மூடி விட்டார். ”ஏன் நல்ல லாபம் வருமே, இப்படி டீ சப்ளை பண்றதுக்கு அது மேல் இல்லையா?” என்று கேட்டேன். அவர் சொன்னார் “நீங்க சொல்றது சரி தான். வியாபாரத்தில எவ்வ்ளவு உழைக்கிறோமோ அதுக்கு ஏத்த பணம் வரும். இப்போ பண்றதுக்கு பல மடங்கு அப்போ சம்பாதிச்சேன். ஆனா வேலை தான் ஆண்டிராயிர் கிழிஞ்சிரும். காலைல மூணு மணிக்கு எழுந்து ஓடத் தொடங்கினா ராத்திரி ஒன்னு, ரெண்டு ஆயிரும் தூங்குறதுக்கு. இது போக மாஸ்டர் லீவு போடாம வரணுமேன்னு டென்சன் வேற. இல்லேண்ணா வேறொரு மாஸ்டர் காலைப் பிடிக்கணும். வேலை வேலை வேலை. அந்த எட்டு மாசத்தில துரும்பா எளைச்சிட்டேன்”
அவர் பார்க்க மலையே இளைத்தாலும் இவர் இளைக்க மாட்டார் என்று தான் தோன்றும். ஆனாலும் சுண்டு விரலைக் காட்டி “துரும்பாய்” என்றவர் சொன்ன போது பரிதாபமாய் தான் இருந்தது.
நான் கேட்டேன் “மதியம் கடையை மூடி ஓய்வு எடுக்க வேண்டியது தானே?”
அவர் சொன்னார் “அதெங்க சார்.. அதான் நாலு கம்பெனிக்கு டீ ஊத்தணுமே”
“அட இப்பிடி கடைக்கு நடுவில டீ பிஸினஸையும் விடலையா? பின்ன எப்பிடி துரும்பா எளைக்காம இருப்பீங்க?”
“என் வூட்டுக்காரி சொன்னா முழுசா கடையையே பாத்துக்கலாம், டீ ஊத்துறதுங்க விட்டுடலாமுன்னு… நான் தான் சொன்னேன் அடியே அரசனை நம்பி புருசனை கைவிடக் கூடாதுன்னு. என்னைக்கானாலும் பிஸினஸ் படுத்திட்டாலும் நமக்கு கஞ்சி ஊத்துறது இந்த டீ தொழில் தான்”
இரண்டு வேலைகளையும் சமாளிக்க முடியாமல் தான் அவர் வியாபாரத்தை இழுத்து மூடுகிறார். நிரந்தர வருமானமே மேல், அது குறைவானதாய் இருந்தாலும் என நினைத்திருக்கிறார்.
அவர் ஏன் அப்படி நினைத்தார் என்பதற்கு ஒரு பின்னணி உள்ளது. அவர் இருபது வருடங்களுக்கு முன்னால் ஒரு அரசு வேலையில் இருந்தார். ஆனால் வியாபாரம் ஆரம்பிப்பதற்காய் வேலையை துறந்தார். வியாபாரம் படுத்தது. அடுத்த வியாபாரம் ஆரம்பித்தார். அதுவும் கவிழ்ந்தது. கடைசியில் இந்த வேலை. இப்போது அந்த அரசு வேலையில் இருந்திருந்தால் மாதம் நல்ல வருமானம், கௌரவம் என ஜம்மென இருந்திருப்பார். அவர் கெட்ட நேரம் தப்பான நேரத்தில் தப்பான ரிஸ்க் எடுத்தார். இப்போது அவருக்கு டீ ஊத்தும் வேலையை விடுவது அரசு வேலையை விட்ட காயத்தை நினைவுபடுத்துகிறது.

நம்மாட்களுக்கு சுயதொழில் துவங்க கடன் மட்டும் போதாது. அதைத் தாண்டி ஒரு சாகச மனப்பான்மை, துணிவு, சூதாட்ட மிதப்பு வர வேண்டும். ஒருவேளை ஏழ்மையின் சுவடு அதிகம் படாத நம் அடுத்த தலைமுறையினர் அப்படி உருவாகி வரலாம். 

2 comments:

Santhose said...

//ஒருவேளை ஏழ்மையின் சுவடு அதிகம் படாத நம் அடுத்த தலைமுறையினர் அப்படி உருவாகி வரலாம். //

That is true

sundar said...

நியாயமான வாதம் தான். இதற்கு எல் கே ஜி லெவலில் இருந்தே பயிற்றுவிக்க வேண்டும்