Friday, May 13, 2016

நிஜமாவா சொல்றே?


நான் மூன்று மாதங்கள் முன்பிருந்தே என்னளவில் இந்த தேர்தல் சார்ந்து மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என அறிய முயன்று வருகிறேன். எந்த ஊருக்கு போனாலும் எல்லா தரப்பு மக்களிடமும் விசாரிப்பேன். அப்போது அவர்களின் நிலைப்பாடு குளிர்பிரதேசத்தின் ஒரு பனிமூட்டமான விடிகாலைப் பொழுது போல் இருந்தது. ஆனால் இப்போது தேர்தல் நெருங்கி இதோ அதன் மூச்சு நம் கழுத்தில் நெருடுகிறது. இப்போது மக்கள் தெளிவாய் தன் கோபங்களையும் ஏமாற்றங்களையும் வெளிப்படுத்துகிறார்கள்.

 கடந்த ஒரே வாரத்தில் அ.தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு ஓரளவு சரிந்து விட்டது. நான் இதை பேஸ்புக் ஆரவாரங்களை வைத்து சொல்லவில்லை. நான் பேசியுள்ள பொதுமக்களின் எதிர்வினைகளில் இருந்து சொல்கிறேன். ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு வலுவான மனநிலை உருவாகி விட்டது. இப்போதைக்கு ஜெயலலிதாவின் வெற்றிவாய்ப்பு 40-60 தான். இதை ஜெயலலிதா ஒரு மாதம் முன்பே உணர்ந்து விட்டார் என்பது அவரது நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களில் தெரிந்தது. அவர் மிக தாமதமாய் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தோல்வி பயம் சிவப்பு விளக்காய் எரிந்தது.
ஆனால் ஜெயலலிதா கடந்த சில வருடங்களில் பண்ணின துஷ்ட காரியங்களால் தான் அவர் மீது வெறுப்பு தோன்றியிருப்பதாய் நான் நம்பவில்லை. நாம் ஒரு பக்கம் அரசின் நிர்வாக சீர்கேடு, ஊழல், வெள்ளத்தின் போதான குளறுபடிகளை விமர்சிக்கலாம். ஆனால் மக்கள் ஓட்டுப் போடும் முன் இத்தகைய தர்க்க நியாயங்களை அலசுகிறார்களா என்ன? இதுவே எனது எளிய சந்தேகம்.
என் அம்மாவிடம் ஒரு பழக்கம். அவர் எந்த கட்சி அனுதாபியும் அல்ல. ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் ஆளுங்கட்சி மீது ஏதாவது ஒரு புகாரை வாசிக்க துவங்கி விடுவார். அ.தி.மு.க தன்னைப் போன்ற மத்தியவர்க்கத்தினருக்கு எதுவும் “தரவில்லை” எனும் கோபம் அவருக்கு. வேறு தரப்பு மக்களுக்கு மட்டுமே இந்த அரசு அள்ளி அள்ளி கொடுக்கிறது, எனக்கு என்ன பயன் என அடிக்கடி நெட்டி முறிப்பார். நேற்று நான் பேசும் போது இறுதி கட்டத்தில் இருக்கும் வாக்காளர்களுக்கே உரித்த ரகசிய தொனியில் தான் யாருக்கு வாக்களிக்க போகிறேன் என என்னிடம் கூறினார். அதுவல்ல சுவாரஸ்யம்: ”இந்த முறை அ.தி.மு.க ஜெயிக்காது போலத் தெரியுது இல்ல?’ என்று என்னிடம் நான் கேட்காமலே கூறுகிறார். செய்தித்தாள் படிக்காத, முகநூலில் சர்ச்சிக்காத, டி.வி செய்திகளை கொட்டகொட்ட பார்க்காத என் அம்மாவுக்கு எப்படி இதை ஊகிக்க முடிகிறது?
 கடந்த வாரம் கோட்டூர்புரம் பகுதியில் தன் குழுவினருடன் மக்களை பேட்டி எடுக்க வந்திருந்தார் ராஜ்தீப் சர்தேசாய். நான் அவரிடம் சென்று கேட்டேன் “யார் வெல்வார்கள் என உங்களுக்கு படுகிறது?”. அவர் சொன்னார் “நீங்கள் தானே உள்ளூர்க்காரர். நீங்கள் சொல்லுங்கள்”. நான் அ.தி.மு.கவுக்கு எதிராய் ஒரு வெறுப்பு அலை சமீபத்தில் எழுந்திருப்பதாய் சொன்னேன். அவர் ”நாங்களும் அப்படித் தான் நினைக்கிறோம்” என்றார்.
வெள்ளபாதிப்புகளை முன்னிட்டு அரசு மீது மக்கள் எப்படியான அதிருப்தியில் இருக்கிறார்கள், அது எப்படி தேர்தலை பாதிக்கப்போகிறது என்பதே சர்தேசாய் குழுவினரின் கோணம். அதை ஒட்டியே கேள்விகளும் விவரணைகளும். ஒவ்வொருவரிடமாய் சென்று வெள்ளத்தினார் அவர்கள் எத்தகைய இழப்புகளுக்கு உள்ளானார்கள் என விசாரித்தார்கள். மக்கள் பதிலளிக்க தயங்கினார்கள். அப்பகுதியினரும் ஜெயலலிதா திறந்து விட்ட ஏரியில் மூழ்கினவர்கள் தாம். ஆனால் ஆத்திரம் காட்டுத்தீயாய் அங்கு வெகுண்டெழவில்லை. மக்கள் அமைதியாய் மசமசவென நின்றார்கள். நான் எனக்குத் தெரிந்த மெக்கானிக் பையனிடம் தேர்தல் வாய்ப்புகள் யாருக்கு சாதகம் என மெல்ல கேட்டேன். அவன் நேரடியாய் பதிலளிக்காமல் சொற்களை முழுங்கினான். ஆனால் அது அ.தி.மு.கவின் வலுவான ஏரியா என மட்டும் கூறினான். அங்குள்ளவர்கள் அ.தி.மு.வுக்கு தான் பொத்தானை அழுத்துவார்கள். அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காய் மட்டும் அவர்கள் ஆளுங்கட்சியை போட்டு மிதிக்கப் போவதில்லை.
 ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பொறுப்பான கட்சி நபர் அங்கு எப்படியான வேலைகள் செய்திருக்கிறார், மக்களை ஒருங்கிணைத்திருக்கிறார், ஆதரவு பெற்றிருக்கிறார் என்பதும் முக்கியமான காரணியாக இருக்கிறது. வட-இந்திய ஊடகங்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வதில்லை. வெள்ளம் என்றே ஒரே பார்முலாவை வைத்து இத்தேர்தலை புரிந்து கொள்ள முயல்கிறார்கள். ஆனால் மக்கள் உணர்வுகள் அவ்வளவு எளிதானவை அல்ல.
என்னுடைய தோழி ஒருவருடன் தேர்தல் அரசியல் பற்றி அரட்டை ஓடிக் கொண்டிருந்தது. அவர் ரெல்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர். அவர் ஆளுங்கட்சி மீது கடுப்பில் இருந்தார். மின்கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிப்பதாய் நடைமுறையை மாற்றின அரசு அதன் மூலம் 500 ரூபாய் கட்டணம் தாண்டினவர்களை இரட்டை கட்டணம் கட்டுமாறு வற்புறுத்துவதாய் வருத்தப்பட்டார். மாதம் ஒருமுறை இனி கட்டணம் செலுத்தலாம் எனும் தி.மு.கவின் தேர்தல் உறுதி அவருக்கு வசீகரமாய் படுகிறது. நானும் இத்தனை வருடமாய் மின்கட்டணம் செலுத்துகிறவன் இப்படி ஒரு கோணத்தில் இதை பார்த்ததில்லை.
 இதை விட முக்கியமாய் அவருக்கு மற்றொரு கோபம் இருக்கிறது. அவர் வீட்டு பக்கத்தில் உள்ள நாய்களுக்கு தினமும் சோறு வைக்கிறார். இதற்காய் அவர் ரேசனில் மாதாமாதம் பத்து கிலோ அரிசி வாங்குவார். அம்மா உணவகம் ஆரம்பிக்கப்பட்ட பின் முன்பு போல் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்றார் அவர். “அது ஏன்?” என்றேன். ரேசன் பொருட்களில் பாதி அம்மா உணவகத்துக்கு போய் விடுவதாயும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு போக வேண்டிய உணவுப்பொருட்களின் அளவும் குறைந்து விட்டதாம். அவரால் முன்பு போல் தன் நாய்களுக்கு தாராளமாய் சோறு போட முடியவில்லை. இந்த தேர்தலின் போது அவர் அரசை தண்டிக்காமல் விடப் போவதில்லை.
 நான் அம்மா உணவகத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது, அதைக் கண்டு தான் கலைஞரே தன் தேர்தல் வாக்குறுதியில் “அண்ணா உணவகம்” ஆரம்பிக்க போவதாய் கூறியிருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் தோழியின் பகுதி மக்களுக்கு அம்மா உணவகம் தான் முதல் எதிரியே. அம்மாவுக்கு எப்படியெல்லாம் வில்லங்கம் முளைக்கிறது பாருங்கள்!
என் தோழி இப்படி நடைமுறை சிக்கல்கள் காரணமாய் எதிர்நிலையில் இருக்கிறார் என்றால் மற்றொரு நண்பர் தனது தேர்தல் நிலைப்பாடு பற்றி வித்தியாசமான கோணத்தில் பதில் அளித்தார். அவர் திருவல்லிக்கேணி பகுதி. அங்கு இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம். அ.தி.மு.க ஒரு இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தி உள்ளது. தி.மு.க இந்து வேட்பாளரை நிறுத்தி உள்ளது. “ஏற்கனவே சின்ன விசயம் என்றால் கூட இஸ்லாமியர் கூட்டம் சேர்ந்து விடுகிறார்கள். தேர்தலில் வேறு அவர்கள் ஆள் ஜெயித்தால் என்ன ஆகும் என நினைத்தால் பயமாய் இருக்கிறது. அதனால் தி.மு.கவின் இந்து வேட்பாளருக்கே என் ஓட்டு”, என்றார். நான் அவரிடம் இஸ்லாமியர் ஒற்றுமையாய் இருப்பது ஒரு வரவேற்கத்தக்க, பிற மதத்தினரும் கண்டு பின்பற்றத்தக்க நல்லியல்பு தானே என்றேன். அவர் அதை ஒத்துக் கொண்டார். ஒரு இஸ்லாமிய வீட்டில் இழவு விழுந்தால் அங்கு முன்னூறு நானூறு பேர் திரண்டு விடுகிறார்கள். சவ ஊர்வலத்தின் போது ஆயிரம் பேர் திரளுகிறார்கள். இதுவே இந்து வீடு என்றால் பத்து இந்துக்கள் கூட வர மாட்டார்கள். நெருங்கின உறவினர், சாதிக்காரர்கள் வந்தால் உண்டு. நண்பர் இந்த ஒற்றுமை சிறப்பானது என ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல தொழில் செய்வதிலும் தவறாமல் பிரார்த்தனைக்கு செல்வதிலும் இஸ்லாமியரை விஞ்ச முடியாது, ரொம்ப கராறானவர்கள், சுத்தமானவர்கள் என்றார். இத்தனை இருந்தாலும் அவர் ஆழ்மனதில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, ஒற்றுமை மீது ஒரு பயம் புகையாய் மூண்டு விட்டது. அவர் அதனாலே அ.தி.மு.கவுக்கு எதிராய் முடிவெடுத்து விட்டார்.
படித்த, அறிவார்ந்த சிறுபான்மையினர் தமது வாக்களிக்கும் முடிவை தர்க்கரீதியாய் நிர்வாகம், ஊழல் என நியாயப்படுத்தலாம். ஜெயலலிதா அல்லது கலைஞர் மீது புள்ளிவிபரங்களுடன் குற்றப்பட்டியல் வாசிக்கலாம். ஆனால் பெரும்பாலான பொதுமக்களுக்கு ஓட்டளிக்கும் காரணங்கள் அதர்க்கமாய், விசித்திரமாய், பல சமயங்களில் அபத்தமாய் கூட இருக்கின்றன. அவர்களின் எதிர்ப்பு என்பது ஒரு உணர்வு. அது எரிச்சலாகவோ பயமாகவோ சிறுபிள்ளைத்தனமான கோபமாகவோ இருக்கலாம். எப்படியோ இந்த உதிரி உணர்வுகள் தேர்தலுக்கு சற்று முன் ஒன்று திரண்டு ஒரு அலையாய் எழுந்து நிற்கிறது. இந்த முறை அந்த அலையில் அம்மா மூழ்கப் போகிறார் என்பது என் ஊகம். அது முழுக்க அவர் தவறினால் மட்டும் அல்ல. அவர் நிறைய தவறுகளை இந்த ஆட்சியில் செய்திருந்தாலும் கூட.
நாம் என்ன தான் மக்கள் நலக் கூட்டணியை பேஸ்புக்கில் போட்டு வெளுத்தாலும் நான் விசாரித்த மட்டில் ஒரு தரப்பு மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. இடதுசாரிகள், வி.சி.க, வை.கோ எனும் சேர்க்கை எப்படியோ ஒரு வசீகரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் இன்னொரு தரப்பு மக்களின் ஓட்டுகளை கணிசமாய் இழுக்க போகிறார். இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றை நாடுபவர்களின் ஓட்டுகள் இக்கூட்டணிக்கு தான்.
என்.டி. டிவி ஒரு புள்ளிவிபரத்தை தந்திருந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் தமிழகத்தில் ஐந்தில் இருந்து பத்து சதவீத வாக்குகள் தாம் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என தீர்மானிக்கிறதாம். அதாவது ஒரு சிறுபகுதி மக்கள் தம் ஓட்டுகளை மாற்றி அளித்தால் ஆளுங்கட்சி அம்பேல் ஆகி விடும். ஆனால் இந்த ஐந்து முதல் பத்து சதவீதத்தினரும் பெரும் மக்கள் அலை ஒன்றின் வால் தான். உடல் போகும் திசையில் தானே வாலும் அசையும்.
நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெறும் கட்சி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைவது தான் வரலாறாம்.
 எப்படியும் தமிழர்கள் மாற்றி மாற்றி அதிகாரத்தை திராவிட கட்சிகளுக்கு கொடுப்பார்கள் என்பது தெரிந்தது தானே. இம்முறை தி.மு.க பலவீனமாய் இருந்ததால் ஜெயலலிதா சுலபத்தில் வெல்வார் என கணிக்கப்பட்டது. வெள்ளத்தின் போது ஜெயலலிதாவின் தோல்வி பயம் தொடங்கியது. ஆனால் அப்போது தி.மு.கவும் வெகு உற்சாகமாய் இல்லை என்பது தான் விசித்திரம். நான் பேசிய தி.மு.க நண்பர்கள் தன்னம்பிக்கையுடன் அப்போது இல்லை. இப்போதும் தி.மு.கவினர் பதற்றமாய் தான் இருக்கிறார்கள்.

 தி.மு.கவினர் வனவாசம் முடிந்து தங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது கொடுங்கள் என கேட்க வந்திருக்கிறார்கள். மக்கள் ”ஏன் அவ்வளவு கம்மியா கேட்கிறீங்க?” என நாட்டையே கொடுத்து விடுவார்கள் போலத் தெரிகிறது. தி.மு.கவினர் ”கற்றது தமிழ்” அஞ்சலி போல “நிஜமாவா சொல்றே?” என்று மக்களின் கரத்தைப் பற்றி வியப்புடன் கூவப் போகிறார்கள்…

No comments: