Tuesday, May 10, 2016

என் கட்டுரைகள் குறித்து சுரேஷ் கண்ணன்

இது முகநூலில் என் கட்டுரைகள் பற்றி சுரேஷ் கண்ணன் எழுதியுள்ள விமர்சனம். எனது அபுனைவுகள் இதுவரை நூலாக வராததால் ஒட்டுமொத்தமாய் என் எழுத்து எப்படி என மதிப்பிடும் பதிவுகள் வந்ததில்லை. சில பாராட்டுகள், சாடல்கள் வந்துள்ளன என்றாலும் அவற்றை மதிப்பிடலாய் கருத இயலாது. இதுவே ஒரு விமர்சகரிடம் இருந்து எனக்கான முதல் முத்தம், முதல் அறை... சுரேஷ் கண்ணன் தொடர்ந்து மாதப்பத்திரிகைகளில் எழுதுவதன் நெருக்கடிகள் குறித்து என்னை கருத்து சொல்லவும் கேட்டிருக்கிறார். விரைவில் எழுதுகிறேன். இனி அவர் எழுதியுள்ளதை படியுங்கள்:

நண்பர் அபிலாஷ் கடந்த பல மாதங்களாக அச்சு ஊடகங்களில் எழுதும் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக அவர் எழுதுவற்கு பின்னுள்ள உழைப்பு குறித்து பிரமிப்பாக இருக்கிறது. மேலும் அவரது எழுத்தின் மூலம் வெளிப்படுகிற அவரின் பரந்து பட்ட வாசிப்பு குறித்தும் ஆச்சரியமாக இருக்கிறது.

என்னளவில் வார, மாத இதழ்களுக்கு அந்தந்த டெட்லைன்களுக்குள் எழுதுவதென்பது நிச்சயம் மன  அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயம். சமீபமாக அந்த அழுத்தத்தை என்னால் நன்கு உணர முடிகிறது. அது குறித்த அலாரம் மனதில் ஒரு சுமையாக அப்படியே உறைந்து மிரட்டிக் கொண்டேயிருக்கும் சமயங்களில் நடுஇரவில் கூட அது சார்ந்த அலாரம் உள்ளே பலமாக அடித்து பதறியடித்து எழுந்து உட்கார்நது எழுதியிருக்கிறேன்.

எப்போது பறக்கத் தோன்றுகிறதோ அப்போது சுதந்திரமாக பறக்கும் பறவையைப் போல் எழுத்தாளன் இயல்பாக இயங்க வேண்டியவன். ஆனால் இம்மாதிரியான நடைமுறை அழுத்தத்தையும் அதனால் படைப்புகளில் எதிரொலிக்கக்கூடிய கோர்வையின்மையையும்  அவன் எதிர்கொள்ள வேண்டியிருப்பது சிக்கலான விஷயம்தான்.

ஆனால் சிலர் இம்மாதிரியான டெட்லைன்கள் இருந்தால்தான் அது சார்ந்த அழுத்தம் காரணமாக எழுதி முடிப்பார்கள். எழுதுவதற்கான ஊக்கத்தையே அத்தகைய அழுத்தங்கள்தான் தரும். பத்திரிகைகளின் துரத்துதல்களின் காரணமாகத்தான் பல படைப்புகளை எழுதியிருப்பதாக சொல்லியிருக்கிறார் சுஜாதா.

'எழுத்து எனக்கு சுவாசம் போல' என்று  சிலர் சொல்வதெல்லாம் நிச்சயம் உட்டாலக்கடி என்பதாக எனக்குத் தோன்றுகிறது. பறவையை உதாரணம் சொன்னேன் அல்லவா? பறத்தல் என்பது ஒரு பறவைக்கு தன்னியல்பாக படிவது போல எழுதுவதென்பது அப்படியாக அமைந்தவர்கள் மட்டுமே  அப்படிச் சொல்ல முடியும்.

என்னைப் பொறுத்த வரை அச்சு ஊடகத்திற்கு எழுதுவது என்பது ஒரு வாதை. எழுதுவது குறித்த திட்டவட்டமான கருத்துக்களும் வடிவமும் மனதில் ஏற்கெனவே தோன்றியிருந்தாலும் அவற்றை சொற்களின் வடிவத்தில் வலுக்கட்டாயமாக பிடுங்கி கோர்வையாக அமைப்பது என்பது சள்ளை பிடித்த வேலை. எவ்வளவு தூரம் ஒத்திப் போட முடியுமோ அத்தனை தூரம் ஒத்திப் போடத் தோன்றும்.

இணையத்தில் எழுதும் போது அது நம்முடைய ஏரியா என்பதால் எவ்விதப் பிழைகளையும் பற்றி கவலைப்படாமல் இயல்பாக எழுதி விட முடிகிறது. ஆனால் அச்சு ஊடகம் எனும் போது அது இன்னொருவரின் பொறுப்பில் இருக்கும் பிரதி என்பதால் தன்னிச்சையாகவே ஒரு பதட்டமும் ஒழுங்குணர்வும் உள்ளே வந்து விடுகிறது.

மட்டுமல்லாமல் எழுத்து மேஜையின் பின்னிருந்து ஒரு கற்பனையான வாசகன் நான் எழுதுவதையெல்லாம் கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறான், அதன் பிசிறுகளை, தவறுகளை திருத்தச் சொல்லி எச்சரித்துக் கொண்டே இருக்கிறான். அவனைச் சமாளிப்பது பெரும்பாடாக இருக்கிறது. திருத்தி திருத்தி எழுத வேண்டியதாக இருக்கிறது.

ஒரு திரைப்படக் கட்டுரைக்காக நான் என்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் தருகிறேன். ஒரு குறிப்பிட்ட திரைப்டத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அதை குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை பார்க்கிறேன். அதன் தகவல்களை தேடித் தேடி சரி பார்த்துக் கொள்கிறேன். அப்படியும் சில பிசிறுகள் அமைந்து விடுகின்றன. ஆனால் மிகுந்த உழைப்பைச் செலுத்தி எழுதப்படும் எழுத்து பரலவாக கவனத்திற்கு உள்ளாகாத போது அது சார்ந்த சோர்வும் ஏற்படுகிறது. என்றாலும் கூட எழுத வேண்டும் என்கிற ஊக்கம் குறையாததால் அடுத்ததற்கு நகர முடிகிறது.

()

இம்மாதிரியான சிக்கல்களை அபிலாஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொதுவில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

மே 2016 குமுதம் தீராநதி இதழில் 'நவீன புனைவுகளில் ஊனத்தை குறியீடாக்குவதின் சிக்கல்'  என்கிற அவரது கட்டுரை முக்கியமானது மட்டுமல்ல சுவாரசியமானதும் கூட. நவீன தமிழ் இலக்கியத்தின் புனைவுப் பிரதிகளில்  ஊனம் எனும் கருத்தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்பதை சில உதாரணங்கள் கொண்டு ஆராய முயல்கிறார் அபிலாஷ். அக ஊனங்களே அதிகம் கையாளப்பட வேண்டிய இலக்கிய வடிவத்தில் புற ஊனங்கள் வாயிலாக நிகழும் அகச்சிக்கல்கள் பற்றிய குறிப்புகளை ஒரு தேர்ந்த ஆய்வு நடையில் பதிவாக்குகிறார்.

அபீலாஷின் புனைவு எழுத்தை நான் அதிகம் வாசித்தது இல்லை. ஆனால் அபுனைவு எழுத்துக்களில் நான் உணரும் ஒரு நெருடலை அவருக்கு கவனப்படுத்த விரும்புகிறேன். இதை அவர் சரியான தொனியில் எடுத்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையுண்டு.

தான் அறிந்த எல்லாவற்றையும் உணர்ந்த அனைத்தையும் தன்னுடைய வாசகனுக்கு கடத்திவிட வேண்டும் என்கிற வேகமும் தத்தளிப்பும் அது சார்ந்த குணாதிசயமும் இளம் எழுத்தாளர்களின் எழுத்தில் அமைவது அவ்வகை எழுத்தில் உள்ள சிக்கல்களில் ஒன்று. இதன் காரணமாக அந்தப் படைப்பின் கலையமைதி சிதைவுறுவதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அபிலாஷின் அபுனைவு எழுத்திலும் இந்த நெருடலை உணர்கிறேன். அவர் தன்னுடைய மனம் நெய்யும் வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டே போகிறார். இதற்கு எப்படி உதாரணம் சொல்லலாம் என்றால், எவ்வித குறிப்புகளும் அல்லாமல் பேச முயலும் ஓர் அனுபவமற்ற பேச்சாளர், தம் மனதில் உருவாகும் கருத்துக்களையெல்லாம் பார்வையாளர்களுக்கு கடத்தும் வேகத்தில் கோர்வையற்று துண்டு துண்டாக பல விஷயங்களை சொல்லிச் செல்வதுடன் ஒப்பிடலாம். அவர் பேசியதில் பல ஆழமான நல்ல கருத்துக்கள்  இருந்திருக்கும். ஆனால் மனம் இயங்கும் வேகத்தில் பேச்சும் இயங்க முயல்வதால் ஏற்படும் சிக்கல் காரணமாக கோர்வையற்று கச்சிதமற்று இருக்கும்

பின்பு எவராது அந்தப் பேச்சின்  தேவையற்ற பகுதிகளை எடுத்து திருத்தி  கோர்வையாக்கி ஒரு நல்ல கட்டுரையாக மாற்ற முடியும்.

கோர்வையாகவும் அதே சமயம் ஆழமாகவும் பேசுவதற்கு மிகுந்த உழைப்பும் பயிற்சியும் தேவைப்படுகிறது.

தமிழ் எழுத்து சூழலில் எடிட்டர் எனும் பிரத்யேகமான பணியின் அவசியம் பல காலமாக உரையாடப்பட்டுக் கொண்டு வந்தாலும் நடைமுறையில் அது பரவலாக சாத்தியப்படாதது துரதிர்ஷ்டமே.  அபிலாஷின் எழுத்திற்கு தேவை அம்மாதிரியான ஒரு எடிட்டர். எழுத்தாளனே தன் எழுத்தை சீர்திருத்துவதென்பது மனஉளைச்சலை தரக்கூடிய வேலை.

ஒருவகையில் அபிலாஷிற்கு கூறுவதை எனக்கே கூறிக் கொள்வதாகவும் பார்க்கிறேன்.

No comments: