Saturday, May 21, 2016

ராமின் சினிமா

Image result for taramani ram
சமீபத்தில் வெளியாகி உள்ள ராமின் “தரமணி” டீஸர் ஒரு கூர்முனை கத்தி போல் இருக்கிறது. சில விநாடிகளில் படம் எதைப்பற்றி என புரிய வைத்து விட்டார். “தங்கமீன்கள்” டீஸரை விட இது சிறப்பு. ஒரு நல்ல டீஸர் இப்படித் தான் இருக்க வேண்டும்.

 அதேநேரம் ஒரு நல்ல டீஸர் கிளீவேஜ் போல சிக்கனமாகவும், அடுத்து என்ன நடக்கும் என தூண்டும்படியாகவும் இருக்க வேண்டும். இந்த டீஸரில் ஒரு சமகால தலைமுறை இளைஞன் வருகிறான். அவன் ஒரு ஐ.டி நவீனப் பெண்ணை காதலிக்கிறான். அவள் விசயத்தில் பொஸஸ்ஸிவாக இருக்கிறான். அவள் போனில் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்புகிறாள் என ரகசியமாய் சோதிக்கிறான். அவள் பேஸ்புக்கில் ஏன் இத்தனை நண்பர்கள் என வினவுகிறான். அவளை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது தற்கொலை செய்வேன் என மிரட்டுகிறான். இதெல்லாம் இன்றைய ஆண்களின் சிக்கல்கள். ராம் இவற்றை அவதானித்திருப்பது சுவாரஸ்யம்.
 பெண்களின் ஆடை, அவர்கள் புற உலகோடு கொள்ளும் தொடர்புகள் இன்றைய ஆணுக்கு உறுத்தலாய் உள்ளது. அவள் எங்கே தனதாக மட்டும் இருக்க மாட்டாளோ என அவனது பாதி-மரபான மனம் துணுக்குறுகிறது. இன்றைய பல குடும்ப தகராறுகள் இப்படித் தான் ஆரம்பிக்கின்றன. பங்களூரில் ஒரு ஐடி கணவன் தன் மனைவியின் போன் குறுஞ்செய்திகளை சோதிக்க போக மனைவி கொந்தளித்து அவன் கையை கத்தியால் பல இடங்களில் கீறி விட்டார். இருவரும் பரஸ்பரம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதை ராமின் இதுவரையிலான சினிமாவின் மையம் எனலாம்: ஒரு மரபான ஆண் மனம் தாராளமயமாக்கலில் என்னவாகிறது? குறிப்பாய், குடும்பம், பெண்கள், பொருளாதாரம், சமூகத்தில் தன் அந்தஸ்து சார்ந்து.
ராமின் “தரமணியின்” கதை எனக்குத் தெரியும். ”நீயா நானா“ ஆண்டனியிடம் இக்கதையை ராம் கூறியிருக்கிறார். ஒரு உரையாடலின் போது ஆண்டனி எனக்கு சுருக்கமாய் சொன்னார். ”இப்படம் கமர்ஷியலாய் வெற்றி பெறும்” என்றும் அவர் கூறினார். கதை காட்சிபூர்வமாய் அபாரமாய் இருந்தது. அதாவது காட்சிபூர்வமாய் கதையின் துவக்கத்தையும் முடிவையும் இணைக்கும் இயல்பு கொண்ட திரைக்கதை அது. ஆண்டனி கதையை சொன்னதுமே படம் எப்படி வரப் போகிறது என ஊகித்து விட்டேன். கதையை நான் இப்போது சொல்வது அறமாக இருக்காது என்பதால் தவிர்க்கிறேன்.
எதற்கு இந்த முஸ்தீபு என்றால் இந்த டீஸரில் ராம் “கற்றது தமிழ்” மற்றும் “தங்க மீன்களில்” இருந்து கதையின் கூறல் மற்றும் தொனியில் பெருமளவு மாறி இருப்பதாய் தோன்றுகிறது. இன்றைய படங்களை அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார். நச்சென்ற சுருக்கமான வசனங்கள், நகைச்சுவை, நாடகீயமாய் உணர்ச்சிகரமாய் காட்சி வைக்காமல் லைட்டாய் வேகமாய் நகர்த்துவது போன்ற இயல்புகளை டீஸரில் கவனித்தேன். படம் ஒருவேளை வேறுமாதிரியாய் ராமின் இயல்பான நாடகீயமான தருணங்கள், அடர்த்தியான, சமூக விமர்சன வசனங்களுடன் அமையலாம். ஆனாலும் டீஸரில் அவர் சமகால திரைமொழியை கொண்டு வந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

No comments: