Thursday, May 19, 2016

தேர்தல் முடிவுகள்: காரணங்களும் மக்களின் சேதியும்


கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதற்கு முன்பான சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுக்கு கிடைத்த இடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 89 இடங்கள் (கூட்டணியாக 98 இடங்கள்) ஒரு பெரும் தாவல் என புரிந்து கொள்ள முடியும். கடந்த வருடம் டிசம்பருக்கு முன்பு திமுக அனுதாபிகள், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் மிகவும் அவநம்பிக்கையாய் இருந்தார்கள். கட்சி மிகவும் பலவீனப்பட்டு போயிருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பட்ட கடும் அடி மற்றும் கலைஞரின் மூப்பை கணக்கில் கொண்டு பலரும் திமுக அந்திம காலத்தில் இருக்கிறது என கருதினர். அழகிரியின் கலகம், அவர் வெளியேற்றப்பட்ட வேளைகளில் திமுகவை பத்திரிகைகள் ஒரு வயதான நகைச்சுவை நடிகரைப் போன்றே நடத்தின. கேலி செய்தன.

 டிசம்பர் மாத வெள்ளம் முதலில் திமுகவுக்கு ஒரு சிறு நம்பிக்கையை அளித்தது. ஆனால் விரைவில் மக்கள் வெள்ள பாதிப்புகளை மறந்து விடுவார்களோ என திமுகவினரோ ஐயம் கொண்டனர். கடந்த சில மாதங்களில் இத்தேர்தலில் அதிமுக மிக சுலபமாய் வெல்லும் என நிலையே இருந்தது. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க மக்கள் அதிமுக மீது தமக்குள் இருந்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளியே அருவா போல் தூக்கி காண்பிக்க துவங்க திமுக சட்டென வலுவான கட்சியாய் தோன்ற துவங்கியது. பத்திரிகையாளர்கள், நிபுணர்கள், தேர்தல் கணிப்பாளர்கள் அனைவரும் திமுகவே வெல்லும் என்றனர். Exit poll முடிவுகளும் இதை உறுதிப்படுத்தின. எட்டு மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட நிலைகுலையும் கட்டத்தில் இருந்த ஒரு கட்சி இப்போது வெற்றிக் கட்சியாக பார்க்கப் பட்டது. இதை நிச்சயம் திமுகவே எதிர்பார்க்கவில்லை.
இப்போது கிடைத்துள்ள 89 இடங்கள் திமுகவை ஒரு வலுவான எதிர்க்கட்சியாய் முன்னிறுத்தி உள்ளது. காங்கிரஸை விடுத்து மற்றொரு வலுவான கூட்டணி அமைந்திருந்தாலோ அல்லது திமுகவே தனித்து அனைத்து இடங்களிலும் நின்றிருந்தாலோ ஒருவேளை கூடுதலாய் இருபது இடங்களையாவது பெற்றிருக்கலாம். இத்தேர்தல் முடிவுகள் நிச்சயம் ஜெயலலிதாவுக்கு கிலியை ஊட்டி இருக்கும். திமுக தன் கழுத்தை பற்றி நெருக்குமளவுக்கு இவ்வளவு பக்கத்தில் வரும் என எட்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயம் கற்பனை செய்திருக்க மாட்டார்.
திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் தோற்கடித்த இடங்களில் வாக்கு வித்தியாசம் சொற்பம் தான். இது மக்கள் எந்தளவுக்கு அதிமுக மீது வெறுப்பின் உச்சத்துக்கு போயிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதுவே முழுக்க பலவீனமாகி இருந்த திமுகவை இவ்வளவு பலம் பொருந்தியதாய் இப்போது மாற்றி இருக்கிறது.
கடந்த தேர்தலில் கிடைத்த இடங்களுடன் ஒப்பிட்டால் இது அதிமுகவுக்கு விளிம்புநிலை வெற்றி தான். ஆனால் பத்திரிகைகளும் ஊடகங்களும் ஏனோ அதிமுக பிரம்மாண்ட வெற்றியை பெற்றது போல் தவறான் தோற்றத்தை உருவாக்குகின்றன.
ஆனால் இந்த உண்மையை வேறு யாரையும் விட ஜெயலலிதா நன்றாகவே அறிவார். அவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே மக்கள் திமுகவை கொம்பு சீவி சட்டமன்றத்தில் எதிரில் நிறுத்தி இருக்கிறது. இனி அவர் சட்டமன்றத்தை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தீபாராதனை போல் நடத்த முடியாது. சின்ன வாய்ப்பு கிடைத்தால் கும்பலாய் எதிர்க்கட்சியினரை வெளியேற்றி தன் விருப்பப்படி செயல்பட முடியாது. கலைஞர் முதல்வராய் இருப்பதை விட எதிர்க்கட்சி தலைவராய் இருக்கும் போது தான் படு துடிப்பாய் இருப்பார் என்பது நாம் அறிந்ததே.
சரி, அதிமுகவின் இந்த வெற்றியை (அது சல்லிசானது என்றாலும்) எப்படி புரிந்து கொள்வது? ஊடங்கள் ஜெயாவின் இலவசங்கள் தான் பிரதான காரணம் என்கின்றன. இது ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் திமுக கடைசியாய் தோல்வி அடையும் முன்னரும் ஆளுங்கட்சியாய் ஏகப்பட்ட இலவசங்களை அள்ளிக் கொடுத்தது என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். நம் மக்கள் இலவசங்களை வாங்கி அனுபவித்தபடி ஓட்டை மாற்றிப் போடும் மனம் படைத்தவர்கள் தாம்.
 இன்று சன்நியூசில் சுப.வீ பேசும் போது அதிமுக அரசின் குற்றங்கள் மற்றும் அநீதிகள் குறித்த பரப்புரையை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியாதது காரணம் என்றார். எதிர்ப்பலை ஒரு பிரம்மாண்ட கோபமாய் மாறுவதற்கு ஒரு உணர்ச்சிகரமான சம்பவமோ தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் தீவிரமான குற்றச்சாட்டுகளோ வேண்டும். காங்கிரஸ் அரசு வீழ்வதற்கு காரணமாய் நிர்பயா போராட்டங்கள், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் போன்ற மக்கள் உணர்வுகளை ஒருமுகப்படுத்தும் விசயங்கள் நடந்தது போல இங்கு ஏதும் நிகழவில்லை - ஒரு momentum உருவாகவில்லை. அன்னா ஹசாரே போராட்டத்தின் போது ஊடகங்கள் அதற்கு அளித்த முக்கியத்துவத்தை இங்கு ஜெயாவுக்கு எதிரான பிரச்சனைகளின் போது ஊடங்கள் அளித்தனவா?
சன் நியூசில் மனுஷ்யபுத்திரன் பேசும் போது எப்படி தமிழ் ஊடகங்கள் ஒருதலை பட்சமாய், மென் அதிமுக அணுகுமுறையுடன் செயல்பட்டன என்றார். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று இனி ஆட்சி செய்ய முடியாது எனும் நிலை ஏற்பட்டதும் தினமலர் எப்படி தொடர்ச்சியாய் அதிமுகவின் ஊழல்களை பற்றி பல செய்திகள் வெளியிட்டன என்பதை நான் நினைவுகூர்ந்தேன். அப்போது பல ஊடகங்களும் சட்டென எதிர்-அதிமுக நிலைப்பாடு எடுத்தன. ஆனால் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை பெற்றதும் ஊடகங்கள் உடனே ஜகா வாங்கின. ஜெயலலிதா எனும் தனிநபர் தமிழக ஊடகங்கள் மீது கொண்டிருந்த முழுஅதிகாரத்தை உணர நேர்ந்த சந்தர்ப்பம் அது.
 இந்நிகழ்ச்சியை என்னுடன் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு நண்பர் கேட்டார்: ”திமுகவிடம் தான் சொந்த பத்திரிகைகள், டிவி சேனல்கள் உண்டே? சன் நியூசை விட வேறென்ன ஆயுதம் வேண்டும்?”. நான் அவரிடம் சொன்னேன்: “சன் நியூஸ் என்றுமே வெளிப்படையாய் அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்ததில்லை. முன்பு சன் நியூசின் பல விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவன் என்ற நிலையில் ஒருமுறை கூட அதில் திமுக சார்பு கருத்துக்கள் கூட வெளிப்பட்டதில்லை என கண்டிருக்கிறேன். சொல்லப் போனால் தேர்தலுக்கு சற்று முன்பு தான் சன் நியூஸ் வில் அம்புடன் போர்க்களத்தில் இறங்கியது.” கலைஞர் செய்திகள் உடப்பட்ட வேறு திமுக ஊடகங்களுக்கு மக்கள் செல்வாக்கு குறைவு தான் எனும் போது மனுஷ்யபுத்திரன் கூறியது நியாயமே எனப்படுகிறது.
இத்தேர்தலில் வைகோ புண்ணியத்தில் திமுகவை தவிர எதிர்க்கட்சியே அதிமுகவுக்கு இல்லை என்ற அவல நிலை ஏற்பட்டது. மக்கள் நலக் கூட்டணியினரின் ஒரே நோக்கம் திமுகவை சேறு வாரி அடிப்பதாய் இருந்தது. அவர்களின் தாக்குதலை கவனிக்கும் போது ஆளுங்கட்சி இங்கு அதிமுகவா அல்லது திமுகவா எனும் குழப்பமே நமக்கு ஏற்பட்டது. இது அதிமுகவின் மீதான குற்றச்சாட்டுகளின் முனையை மழுங்கடிக்க செய்தது. வைகோ – திமுக அம்பு மழையின் போது ஜெயலலிதா நைசாக சிரித்தபடி தப்பிக் கொண்டார். ஆளுங்கட்சி எதிர்ப்பலை ஒரு சிற்றலையாய் சோர்ந்து போக மக்கள் நலக் கூட்டணி பெரிதும் உதவியது.
ஆனால் இவையெல்லாம் எளிய புறக்காரணங்களே. மக்கள் இன்னும் திமுகவை முழுமையாய் ஏற்க தயாரில்லை, அதேநேரம் ஜெயலலிதா மீதுள்ள அதிருப்தியும் தணியவில்லை என்பதே இத்தேர்தல் முடிவின் செய்தியாக நான் பார்க்கிறேன்.
திமுக என்ன செய்ய வேண்டும்?
எதிர்க்கட்சியாக அவர்களின் செயல்பாடு மக்கள் கவனத்தை கவர்வதாய் இருக்க வேண்டும்.
ஜெயலலிதா நிறைய புது வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்ததில் இருந்து திமுக கற்க வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது அவர்களின் எதிர்கால இலக்காக இருக்க வேண்டும்.


2 comments:

Ramani S said...

விரிவான நியாயமான நடு நிலையான
அருமையான தேர்தல் அலசல்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

‘தளிர்’ சுரேஷ் said...

நல்லதொரு அலசல்! திமுக தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். தேமுதிகவில் இருந்து பிரிந்துவந்தவர்களுக்கும் சிறு சிறு கட்சிகளுக்கும் கூட தொகுதிகளை வாரி வழங்கியது தவறான அணுகுமுறை ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருக்க வேண்டும்.