Tuesday, May 17, 2016

அடுத்தவர்களை பாராட்டலாமா?


ஒரு எழுத்தாள நண்பரிடம் கேட்டேன் “நீங்கள் அரசியல் தலைவர்கள் பலரையும் என்கவுண்டர் செய்கிறீர்கள். ஆனால் ஏன் சக எழுத்தாளர்களை விமர்சிப்பதில்லை?”
அவர் சொன்னார் “ஒரு முக்கியமான காரணம் உண்டு. நான் எந்த எழுத்தாளனையாவது கடுமையாய் திட்டினால் அவர் மீது எனக்கு பிரியம் அதிகமாகி விடுகிறது. அவர்களும் என்னை பதிலுக்கு திட்டுவார்கள். ஆனால் நேரில் பார்த்தால் நண்பர்களை விட அதிக பிரியத்துடன் என்னை அணைத்துக் கொள்கிறார்கள். இந்த அன்புத் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவே நான் எந்த எழுத்தாளனையும் இப்போது விமர்சிப்பதில்லை”.

அவர் கூற்றுக்கு மறுபக்கம் இது: நீங்கள் யாரையாவது பாராட்டினால் பாராட்டுக்குரியவர் உங்களை நுணுக்கமாய் வெறுக்க ஆரம்பிப்பார்.
அடுததவர்களை பாராட்டுவது நிறைய விபத்துகளை ஏற்படுத்தும். தலைக்கவசம் அணிந்தால் கூட தப்பிக்க இயலாது. சொல்லப் போனால் பிறருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கவர்களை அலுவலகத்தில், நண்பர் வட்டத்தில், குடும்பத்தில், உறவுகளில் கிட்டத்தட்ட ஒரு கோமாளியை போன்றே நடத்துவார்கள். நெருக்கமான உறவுகளில் சுலபத்தில் பாராட்டுகிறவர்கள் ஒரு எதிரியைப் போன்றே நடத்தப்படுவார்கள்.
நீங்கள் பாராட்டுகிற பத்து பேர்களில் எட்டு பேர் உங்களை கடுமையாய் வெறுப்பார்கள். இது ஏன்? நம்மை அவர்கள் பதிலுக்கு நேசிக்கத் தானே வேண்டும்?
இந்த பத்து பேர்களை ரெண்டு விதமாய் பிரிப்போம். 1) தன்னிறைவான தன்னம்பிக்கை மிக்கவர்கள், 2) தன்னிறைவு இல்லாமல் தம் இடம் குறித்த குழப்பம் கொண்டவர்கள்.

முதல் வகையினரை புகழ்ந்தாலோ பாராட்டினாலோ மகிழ்ச்சியாய் ஏற்பார்கள். நிதானமாய் பாராட்டை எதிர்கொள்வார்கள். ஆனால் இவர்கள் எண்ணிக்கையில் அரிது என்பதால் இவர்களை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.

இரண்டாம் வகையினர் தாம் எண்ணிக்கையில் அதிகம். இவர்களுக்கு ஏற்றத்தாழ்வான, படிநிலை சார்ந்த உறவு தான் ஏற்புடையதாக இருக்கும். ஒன்று தம்மை விட மேலே இருப்பவர்களுடன் ஒட்டிக் கொண்டு அவர்களின் பெருமையை தம் பெருமையாக நினைப்பார்கள். யார் பின்னாலாவது நின்று அவரது ஆளுமையின் ஒளியில் ஜொலிக்க முயல்வார்கள். ஆனால் தாம் சார்ந்திருப்பவர்களை வெளிப்படையாய் ஜால்ரா அடிக்கவோ தோளில் சுமக்கவோ முயல மாட்டார்கள். இவர்கள் அடிபொடிகள் அல்ல. இவர்களுக்கு ஈகோ தூக்கலாக இருக்கும். இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் இருப்பார்கள். இது ஒரு சிக்கலான மனநிலை. திறமையானவர்களாகவும் ஈகோ கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தம் திறமையை மீது முழுமையான மரியாதை இருக்காது. பாகனுக்கு அடிபணியும் யானை இவர்கள். எப்போது அது பாகனை போட்டு மிதித்து கூழாக்கும் என பாகனுக்கும் தெரியாது, யானைக்கும் தெரியாது.
. இவர்களுக்கு ஏதாவது ஒரு எதிர்துருவம் தான் சரிப்படும். தம்மை கடுமையாய் எதிர்ப்பவர்களிடத்தும் பழிக்கிறவர்களிடமும் கனிவாக இருப்பார்கள். அதே போல தம்மை விட மேலாக அதிகாரத்தில் இருக்கிறவர்களையும் கொண்டாடுவார்கள். ஆனால் தான் மேலாக நினைக்கிற ஆள் இவரை பாராட்டினால் இவருக்கு அவர் மீது உள்ளார்ந்து ஒரு கசப்பு ஏற்படும்.
 அதாவது பாராட்டு கிளுகிளுப்பு தரும். ஆனால் இனம்புரியாத வெறுப்பும் ஏற்படுத்தும். தனக்கு மேலே உள்ளவரை எப்படியாவது காயப்படுத்தும் நோக்கில் காரியங்கள் செய்வார். அதே நேரம் அவர் மீது இவருக்கு பிரியமும் இருக்கும்.
இதை நாம் தந்தை மகன் உறவில் பார்க்கலாம். காதலன் காதலி நடுவே. கணவன் மனைவி இடையே, குரு சீடன் நடுவே பார்க்கலாம். அதாவது எல்லா படிநிலை உறவுகளிலும்.

ஏதாவது ஒரு கட்டத்தில் தன் குருவை கடந்து மேலே செல்லும் சீடன் அவரை தொடர்ந்து காயப்படுத்தவும் வெறுப்பு உண்டாக்கவும் முயற்சி செய்வான். அதாவது தன் விரோதியை விட அதிகமாய் அவர் மீது கசப்பை காட்டுவான். வரலாற்றில் இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். கார்ல் யுங் - பிராயிட் உறவு, நீட்சே - வாக்னர் பந்தம், தமிழில் ஜெ.மோ - சு.ரா உறவு...

இது ஏன் நிகழ்கிறது?
உறவுகளை நம் மனம் மேலே கீழே அல்லது கீழே மேலே என்று தான் புரிந்து கொள்கிறது. (நட்பு மட்டுமே விதிவிலக்கு.) சட்டென ஒருநாள் நாம் மேலாக வைத்து நேசித்தவரை கடந்து வாழ்க்கையில் மேலே செல்லவொ அல்லது அவரை கருத்தளவிலோ வேலை சார்ந்தோ எதிர்க்க நேரும் போது அவரை நமக்கு மேலே வைப்பதா கீழே வைப்பதா எனும் தத்தளிப்பு ஏற்படுகிறது. இந்த குழப்பத்தை தள்ளிப் போட ஒரே வழி அவரை கடுமையாய் மறுப்பது தான். மறுப்பதன் மூலம் அவரது நினைவுகளில் இருந்து தப்பி விடலாம் என மனம் கணக்கு போடுகிறது. இன்னொரு விசயம் தீவிரமான அன்பும் வெறுப்பும் அதன் உச்சத்தில் படிநிலை எல்லைகளை கடக்க கூடிய உணர்வுகள். அதுவும் ஒரு காரணம்.
இதற்கு இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.
எப்போதும் உங்களுக்கு பின்னால் கைகட்டியபடி ஒரு தம்பியை போல் திரிந்தவர் ஒருநாள் உங்களை விட பணத்திலும் அந்தஸ்திலும் உயர்ந்து விட்டார் என்று கொள்வோம். அப்போது அவர் உங்கள் மீது கண்மூடித்தனமான வெறுப்பை காட்ட துவங்குவார். ஏனென்றால் இனிமேல் அவர் உங்களுக்கு தம்பியாக இருக்க இயலாது. நீங்களும் அவருக்கு அண்ணனாக தொடர முடியாது. நீங்கள் அவருக்கு விரோதி ஆவது தான் ஒரே மாற்று. அல்லது உங்கள் இருப்பு அவர் இடத்தை தொந்தரவு பண்ணிக் கொண்டே இருக்கும். நீங்கள் அவரிடம் நார்மலாக பழக பழக அவருக்கு உங்கள் மேல் கொலைவெறி அதிகமாகிக் கொண்டே போகும்.
அடுத்த உதாரணம். உங்களோடு சக ஊழியராக இருந்தவர், உங்களை விட தகுதியிலும் திறமையிலும் சற்று குறைவானவர், எப்படியோ உஙகளைத் தாண்டி மேலதிகாரி ஆகி விடுகிறார். இப்போது அவர் ஒரு சர்வாதிகாரியாக மாறி உங்களை பயங்கரமாக கொடுமைப்படுத்துவார். இதற்கும் மேற்சொன்ன காரணங்களே.
சரி இனி பாராட்டுவதன் பிரச்சனைக்கு வருவோம். இப்படியானவர்களை  நீங்கள்  பாராட்டினால் என்ன ஆகிறது?
”நீ என்னை பாராட்டி விட்டாய், இனி நீ எனக்கு மேலா கீழா?” இப்படி குழம்ப துவங்குவார்கள். உங்களை கீழே தள்ளுவது தான் ஒரே வழி என்று மறைமுகமாய் உங்களுக்கு எதிராய் அரசியல் செய்வார்கள். நீங்கள் உடனே "இந்த காலத்தில் யாருக்கும் நல்லது பண்ணக் கூடாது போல" என புலம்பத் துவங்குவீர்கள். ஆனால் உண்மையில் சிக்கல் நன்மை செய்வதில் இல்லை.
இதை சாக்ரடீஸ் Dialogues நூலில் குறிப்பிடுகிறார். காதலியை ஒரு போதும் புகழக் கூடாது. அது அவர்களின் அகந்தையை பெரிதாக்கி உங்கள் மீது வெறுப்பை உண்டு பண்ணும் என்கிறார். இதற்கு தீர்வு புகழ்ந்து விட்டு உடனே கொஞ்சம் மட்டம் தட்டி விடுவது. இது நிலைமையை சமனம் செய்ய உதவும். "திமிர்" அடங்கி விடும்.
காதலிகளுக்கு அடுத்தபடியாய் இந்த லவ் கெமிஸ்டிரி சிக்கலை இலக்கிய (எழுத்தாள) நண்பர்களிடம் பார்க்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு புனைவெழுத்தாளரிடம் இலக்கிய உலகம் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது அவர் ஒரு மூத்த எழுத்தாளரை குறிப்பிட்டு கடுமையாய் விமர்சிக்க துவங்கினார். என்ன காரணம்? இத்தனைக்கும் அந்த மூத்த எழுத்தாளர் இவரைப் பற்றி நல்லவிதமாய் தான் பேசுவார். இவர் படைப்புகளை பாராட்டி எழுதி உள்ளார். நான் கேட்டேன் “பிறகு அவரை ஏன் வையுறீங்க?” அவர் சொன்னார் “என்னை பாராட்டினது இருக்கட்டும். ஆனால் அதே வாயால் கண்ட நாயையும் பாராட்டலாமா? யார் கதை எழுதினாலும் அற்புதம் என்கிறார். யார் கவிதைத் தொகுப்பை நீட்டினாலும் உச்சி முகர்கிறார்.”
 இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த புனைவெழுத்தாளரை கடுமையாய் விமர்சிக்கிற வேறு சில எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இவர் மாறாக கனிவான அபிப்ராயம் கொண்டிருந்தார்.
இன்னொரு எழுத்தாளர் இருக்கிறார். அவரது படைப்புகளை ஒரு விமர்சகர் மிகவும் கொண்டாடி எழுதியிருந்தார். இவர் என்னிடம் சொன்னார் “அவன் என் கதையை பாராட்டினாலே எனக்கு பீயை பார்த்த மாதிரி இருக்கு. அருவருப்பா இருக்கு. தயவு செஞ்சு அவனை நிறுத்த சொல்லு”. இத்தனைக்கும் இருவருக்கும் இடையில் எந்த பகைமையோ பங்காளி சண்டையோ இல்லை.
இந்த உதாரணங்கள் வெளிப்படையானவை. மறைமுகமாய் இப்படியான கசப்பு வெளிப்படும் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கும். குறிப்பாய் சக எழுத்தாளர்கள் சேர்ந்து மதுவிடுதிக்கு செல்லும் போதோ எங்காவது சேர்ந்து தங்கும் போதோ யார் மிகவும் இணக்கமாக இருப்பவர்களோ அவர்களைத் தான் குறித்து வைத்து வெறித்தாக்குதல் செய்வார்கள். அதுவும் அடுத்தவர் படைப்புகளை குறித்து நல்லவிதமாய் சொல்கிறவர்களை சுற்றி நின்று அபிமன்யுவை போல் வதம் செய்வார்கள்.
இலக்கிய உலகில் இந்த உளவியலை புரிந்து கொண்டு பணம் பிடுங்குகிறவர்கள் உண்டு. 1999இல் ஜெயமோகன் தக்கலையில் உள்ள தொலைபேசி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த காலம். அப்போது நான்கு பின்நவீனத்துவ எழுத்தாளர்களை நாகர்கோவிலில் சந்தித்தேன். அவர்கள் “நாங்கள் ஜெயமோகனைப் பார்க்க போகிறோம்.” என்றார்கள். நானும் கூட சென்றேன். போனவர்கள் அவரது அலுவலக அறையில் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டார்கள். சற்று நேரத்தில் மறைமுகமாய் அவரை தாக்கி பேசத் துவங்கினார்கள். ஜெயமோகனும் திரும்ப பல அஸ்திரங்களை பிரயோகித்தார். ஒரு மணிநேரம் ஒரு குட்டி பாரதப்போரே நடத்திய பின் அவர்கள் ஜெயமோகனிடம் ஐநூறு ரூபாய் கேட்டார்கள். அதுவும் மிகுந்த அதிகார தோரணையில் “இவ்வளவு நேரமும் வச்சு அடிச்சதுக்கு பணம் கொடு” என்கிற கணக்கில் கேட்டார்கள். ஜெயமோகன் தன்னிடம் பணமே இல்லை என சாதித்தார். கடைசியில் அவர்கள் பேரத்தில் இறங்கி வந்து ”நூறு ரூபாயாவது கொடுங்கள்” என்றார்கள். அவர் தன் பாக்கெட்டை திறந்து ”பாருங்கள் பஸ்ஸுக்கு பணம் மட்டும் தான் இருக்கிறது” என்றார். அதன் பிறகு ஜெயமோகன் பேருந்து ஏறி கிளம்பி விட்டார். கிளம்பும் முன் அவர் அவர்களிடம் எங்கள் ஊரில் உள்ள ஒரு கவிஞரை குறிப்பிட்டு “வேணுமுன்னா அவரை போல் இதே மாதிரி மிரட்டி கேளுங்க. கண்டிப்பா கொடுப்பாங்க” என்றார்.
 ஜெயமோகன் சொன்ன மாதிரியே இவர்கள் அக்கவிஞரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றார்கள். அவர் அப்போதும் தான் அலுவலகத்தில் இருந்து திரும்பி இருந்தார். களைப்பாக மின்விசிறியின் கீழ் லுங்கி பனியனுக்கு மாறி தன் கவிதை ஒன்றை திருத்திக் கொண்டிருந்தார். நான்கு எழுத்தாளர்களும் அவரை வணங்கி விட்டு சுற்றி அமர்ந்து கொண்டனர். கவிஞர் அவர்களை தேநீர் கொடுத்து உபசரித்தார். உற்சாகமாய் நலம் விசாரித்தார். அடுத்து சற்று நேரத்தில் இவர்கள் அவரது கவிதைகளை மறைமுகமாய் கேலி செய்தும் பழித்தும் பேசி அவரை வறுத்து எடுத்தனர். அவர் முகம் வெம்பி வெதும்பியது. கண்கள் பளபளத்தன. குரல் கிட்டத்தட்ட வெளியேவே வரவில்லை. நான்கு பேரும் ஒரு நிமிடம் இடைவெளி விட்டனர். மௌனம். கவிஞர் தன் நகங்களை பார்த்தபடி இருந்தார். இவர்கள் அவரை இமைக்காமல் முறைத்து பார்த்தனர். சட்டென “ஐநூறு ரூவா இருந்தா கொடுங்க. திரும்ப ஊருக்கு போக பணம் இல்ல” என்று அவர்களில் ஒருவர் குரலை கனிவாக்கி கேட்டார். கவிஞர் அவசரமாய் எழுந்து தொங்கிக் கொண்டிருந்த தன் சட்டையில் இருந்து பணத்தை எடுத்து நீட்டினார். அவர்கள் வாங்கிக் கொண்டு நேரே சாராயக் கடை நோக்கி விரைந்தனர். ஒருவேளை மாறாக அவர்கள் அவ்வளவு நேரமும் அக்கவிஞரை பாராட்டி பேசி இருந்தால் அவர் பணத்தை அவ்வளவு சுலபமாய் எடுத்துக் கொடுத்திருக்க மாட்டார். நிறைய கேள்விகள் கேட்டிருப்பார். இறுதித் தொகையில் இருநூறு ரூபாய் குறைத்துக் கூட இருப்பார்.
ஏற்றத்தாழ்வான உறவுகளில் உள்ள இந்த புதிரை நன்றாய் புரிந்து கொண்டவர்கள் ஆசிரியர்கள். குறிப்பாய் பள்ளி ஆசிரியர்கள். அதுவும் போன தலைமுறை ஆசிரியர்கள். அவர்கள் சுலபமாய் ஒரு நல்ல மாணவனை பாராட்டி விட மாட்டார்கள். சொல்லப் போனால் நல்ல மாணவனைத் தான் அதிகமாய் கண்டிப்பார்கள். மட்டம் தட்டுவார்கள். அல்லாவிட்டால் அவனுக்கு அகந்தை கூடி விடும் என்பார்கள். அப்படி வேறுவழியில்லாமல் அம்மாணவனைப் பாராட்ட நேர்ந்தாலும் ஏதாவது ஒரு குறையை சுட்டிக் காட்டி லேசாய் ஒரு குட்டு வைப்பார்கள். அதேநேரம் வகுப்பில் உள்ள மோசமான மாணவர்களிடத்து இன்னும் கனிவாக நட்பாக இருப்பார்கள். ஏனென்றால் அந்த மாணவர்கள் ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார்கள். ஆசிரியர் மீது ஒரு பயமும் வெறுப்பும் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் கொஞ்சம் நெகிழ்வாய் இருந்தால் சுலபத்தில் பணிந்து ஒழுக்கமாய் இருப்பார்கள். மாறாக அவர்களை கண்டித்தாலோ சுத்தமாய் அடங்காதவர்கள் ஆகி விடுவார்கள்.
இன்றைய தலைமுறை பெற்றோர்கள் இந்த சமன்பாட்டை தவறாய் புரிந்து கொண்டு அல்லாடுகிறார்கள். பிள்ளைகளை மிதமிஞ்சி கொஞ்சுவதும் பாராட்டுவதும் அவர்களுக்கே வினையாகி விட்டது. குழந்தைகள் தம்மை பெற்றோர்களாகவும் பெற்றோர்களை தம் குழந்தைகளாகவும் நடத்துகிறார்கள்.
நீங்கள் இலக்கிய உலகை சேர்ந்தவரில்லை என்றாலோ, ஆசிரியரோ பெற்றோரோ அல்ல என்றாலோ இதை பரிசோதித்து பார்க்க வேறு வழி உள்ளது. உங்கள் மனைவியை உடனடியாய் அழைத்து தொடர்ந்து பதினைந்து நிமிடம் உச்சி குளிர குளிர புகழுங்கள். முடிந்த அடுத்த நிமிடமே அவர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிக்க துவங்குவார்.
சரி இதற்கு ஒரு தீர்வு இருக்கிறதா? அன்பு ஒரு சிறந்த தீர்வு. அதிகாரம், அந்தஸ்து, அறிவார்ந்த மதிப்பீடு ஆகியவற்றை கலக்காமல் ஒருவரிடம் முழுமையான அன்பை மட்டுமே காட்ட வேண்டும். அன்பை வெளிப்படுத்தும் போது அவர் பற்றின உங்கள் அபிப்ராயத்தை, நிலைப்பாட்டை, மதிப்பை சற்றும் காட்டக் கூடாது. ஒரு குழந்தையை போல் அவரை கையில் ஏந்தி கொஞ்சி சீராட்ட வேண்டும். இப்படி அன்பைக் காட்டத் தெரிந்தவர்கள் பதில்-வெறுப்பில் இருந்து தப்பிக்கலாம்.

ஆனால் அறிவைக் கடந்து, பிரக்ஞையின்றி அன்பைக் காட்டுவது சுலபம் அல்ல. ஏனென்றால் நவீன மனிதன் தெளிவாய் தர்க்கமாய் கோர்வையாய் பேசக் கூடியவன். அப்பேச்சு வழி அவனால் பேதைத்தனமான அன்பைக் காட்ட முடியாது. அவன் தன் மொழியை சிதைப்பதே அதற்கு ஒரே வழி. அவன் அன்பைக் காட்டும் போது உளற வேண்டும்; ஏறுக்குமாறாய் பேச வேண்டும்; முரட்டுத்தனமாய் உணர்ச்சிகளைக் கொட்ட வேண்டும். முரணான சொற்களாய் பொழிய வேண்டும். தன் மொழியை பைத்திய நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். ஒரு குழந்தையிடம், காதலியிடம், மிகவும் நேசிக்கிற ஒருவரிடம் தனிமையில் இதை செய்யலாம். ஆனால் எல்லாரிடமும் இது சாத்தியமா என்ன? அதனால் தான் சொல்கிறேன் பாராட்டுவது என்பது ஹெல்மட் அணியாமல் ரேஸுக்கு போவதைப் போன்ற காரியம். 
நன்றி: அம்ருதா, மே 2016

No comments: