Monday, May 16, 2016

கருணை போலியானதா?


கண் தெரியாத ஒருவரிடம் சென்று “ஐயய்யோ எவ்வளவு பாவம் நீங்க. எவ்வளவு கஷ்டம் உங்க வாழ்க்கை” என்று சொல்லிப் பாருங்கள். அவர் கடுப்பாகி விடுவார். எனக்கு உங்கள் கருணையெல்லாம் தேவையில்லை என்பார். ”குக்கூ” படத்தை ”பார்த்த” என் நான்கைந்து பார்வையற்ற நண்பர்களாவது அதை கடுமையாய் பரிகாசம் செய்து பார்த்திருக்கிறேன். சரி, நான் இதை கருணை காட்டுகிறவரின் பக்கம் இருந்து பார்க்க விரும்புகிறேன்.

ஒருவர் சிரமப்படுவதை பார்க்க இயல்பிலேயே நமக்கு வருத்தம் ஏற்படுகிறது. எப்படியாவது அத்துன்பத்தை தணிக்க முயலுமா என யோசிக்கிறோம். ஒரு துளி கண்ணீர் விழியோரம் தோன்றுகிறது. தவறில்லையே? நிச்சயம் தவறில்லை. எனக்கு பிச்சைக்காரர்களை பிடிக்கும். அவர்களைப் பார்க்கும் அவர்கள் என் சக தொழிலாளிகள் எனத் தோன்றுகிறது. சமீபத்தில் சிக்னலில் காத்திருக்கும் போது ஒரு வயதான பிச்சைக்காரர் ஒரு கார் கதவின் முன் நின்று வயிற்றைத் தொட்டுக் காட்டி பிச்சை கேட்டதை பார்த்தேன். உள்ளிருந்து ஒரு பெண்ணின் கை பத்து ரூபாய் நீட்டியது. அவர் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு அந்த மகிழ்ச்சி முழுக்க முகத்தில் இருந்து வடியாமலே மீண்டும் அவல பாவத்தை ஏற்றிக் கொண்டு அடுத்த வாகனத்திடம் சென்று வயிற்றை தொட்டு கண்களை இடுக்கி வேண்டினார். அந்த பெண் ஏன் பத்து ரூபாய் கொடுத்தார்? அவருக்கு அந்த முதியவர் தன் வாழ்க்கையில் நேசித்த ஏதோ ஒரு வயதான ஆளை நினைவுபடுத்தியிருக்கலாம். எனக்கு ஏன் பிச்சைக்காரர்களை பிடிக்கிறது? அவர்கள் என்னையே நினைவுபடுத்துகிறார்கள். நாங்கள் இருவரும் அவருக்கு ஓரளவு மரியாதை அளிக்கிறோம். நான் எனக்கு சமமாக அவரைப் பார்க்கிறேன். அப்பெண் ஒரு தாத்தா அல்லது அப்பாவிடன் இடத்தில் வைத்து பார்க்கிறாள். ஆனால் இதை அந்த பிச்சைக்காரரிடம் சொன்னால் அவருக்கு இரண்டும் அற்பமாகவும் அபத்தமாகவும் தோன்றும்.
ஏனென்றால் இரண்டு பிம்பங்களும் அவர் அல்ல. அப்பெண் தன் அகத்தில் உள்ள குற்றவுணர்வை அவர் முகத்தில் பிரதிபலித்து பார்க்கிறார். நானோ அதிகாரத்தின் முன் அடிபணிவதாய் நடித்து மாத சம்பளம் பெற நேர்கிறவர்களின் குறியீடாக அவரை பார்க்கிறேன். ஆனால் பிச்சைக்காரர் இவை இரண்டுமே அல்ல என்பது எளிதாக புரியும். அப்பெண்ணின் இரக்கமும் எனது “தோழமையும்” அவர் மீது சுமத்தப்படுகிற வேற்று உணர்வுகள். அவர் எங்களுடைய கண்ணாடி ஆகிறார். ஆனால் அதைக் கடந்து அவருக்கு வேறொரு சுயம் உள்ளது.
இது எனக்கு அனுபவரீதியாக புரியும். யாராவது என் ஊனத்தை சுட்டிக் காட்டி இரக்கப்பட்டால் எனக்கு எரிச்சல் தோன்றும். யாராவது எனக்கு உதவ படபடப்பு காட்டினால் அதை அற்பமென மனதுக்குள் கடிந்து பல்லைக் கடிப்பேன். அதே வேளை அவர்களின் உதவ வேண்டும் எனும் விருப்பம் உண்மையானது, மகத்துவமானது எனவும் அறிவேன். இந்த முரண்பாட்டில் எது சரி?

இதைப் பற்றி ஆடம் ஸ்மித் எனும் பதினெட்டாம் நூற்றாண்டு சிந்தனையாளர் நிறைய விவாதித்திருக்கிறார். ஆடம் ஸ்மித் தனது Wealth of Nations எனும் பொருளாதார நூலுக்காக அறியப்பட்டவர். நவீன (தாராளமய) பொருளாதாரத்தின் தந்தை. ஆனால் அவருக்கு அறம் மீது மிகுந்த ஈடுபாடு. ஆடம் ஸ்மித் ஒரு நடைமுறை தத்துவவாதி. அவர் காலத்தில் செண்டிமெண்டல் பார்வை கருத்தியல்வாதிகளிடம் தூக்கலாக இருந்தது. அவர் இந்த போக்குக்கு எதிராக இயங்கினார். இந்த செண்டிமெண்டல் போக்கின் வரலாற்றை சற்று பார்ப்போம்.
 ஐரோப்பிய காலனியாதிக்கம் எழுச்சி பெற்ற காலம் அது. ஐரோப்பாவில் செல்வம் குவியத் தொடங்குகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து பசிபிக் கடலின் பல்வேறு சிறு தீவுகளில் இருந்தும் பூர்வகுடிகள் கடத்தி வரப்பட்டு அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். இந்த அடிமைகளின் கடும் பணியால் ஐரோப்பிய நாடுகள் பெரும் வளர்ச்சி பெறுகின்றன. ஐரோப்பாவின் நாகரிகமும் கலை கோட்பாட்டு வடிவங்களும் கொழிக்கின்றன. ஆனால் பொருளாதார நாகரிக வளர்ச்சியின் ஒரு இருட்டான பக்கமாய் இந்த பூர்வ குடிகளின் சுரண்டல் இருக்கிறது. அவர்கள் நாகரிகமற்ற விலங்குகள், அதனால் மனிதர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கு இல்லை என காலனியவாதிகள் தம் சுரண்டலை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் கிறித்துவ மதவாதிகள் இதை வேறுவிதமாய் அணுகுகிறார்கள். கல்வியும் நாகரிகமும் அளித்து இம்மக்களை “மனிதர்கள்” ஆக உயர்த்தலாம் என கூறுகிறார்கள். அவர்களை மதமாற்றம் செய்து தேவனின் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தலாம் என நினைக்கிறார்கள். சரி தான். ஆனால் விலங்குகளை எப்படி கிறுத்துவர் ஆக்க முடியும் என பொது மக்கள் கேட்கிறார்கள். இப்போது புகைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பாதிரியார்கள் என பலரும் ஒன்றிணைந்து பூர்வகுடிகளுக்கு கல்வியும் வாய்ப்புக்ளும் அளித்து “கடைத்தேற்றும்” பணியை செய்ய உழைக்கிறார்கள். பூர்வகுடிகளின் அவல வாழ்க்கையை பற்றின பல கண்ணீர் சித்திரங்கள் ஊடகங்களில் பரவுகின்றன. பல ஐரோப்பியர்கள் இந்த அடிமைக்ளுக்கு உதவிட முன்வருகிறார்கள். அவர்களின் இரக்கத்தை தூண்டும் வண்ணம் பழங்குடிகள் பற்றி மிகையான சித்திரங்கள் எழுப்பப்பட்டன. அவர்களின் துயரங்களும் நல்ல குணங்களும் பலமடங்கு ஊதிப் பெருக்கப்பட்டன. அக்காலத்திலும் அடுத்த நூற்றாண்டிலும் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்காவில் தோன்றின நாவல்களிலும் புகைப்படங்களிலும் எப்படி அடிமைகளின் வாழ்க்கை செண்டிமெண்டலாக செயற்கையாக காட்டப்பட்டது என Photography, Humanitarianism, Empire எனும் நூலில் ஜேன் லைடன் பேசுகிறார். மனித நேயம், செண்டிமெண்டலிசம், தொண்டு மனப்பான்மை ஆகியவை எழுச்சி பெறும் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் பழங்குடி அடிமைகளின் சுரண்டலும் உச்சம் பெறுகிறது. இந்த பாசாங்கை ஜேன் லைடன் நுட்பமாய் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.
அமெரிக்காவின் பெரும் நிலப்பரப்பும் இயற்கை வளமும் அங்கு வாழ்ந்த பழங்குடிகளுக்கு உரித்தானவை. வெள்ளையர்கள் அவற்றை பிடுங்கி கொண்டதுடன் ஆப்பிரிக்க பழங்குடிகளை விலைக்கு வாங்கி வந்து இரு நூற்றாடுகள் தம் நிலங்களில் விவசாயம் செய்யவும் ரயில் பாதைகள் அமைக்கவும் வீட்டு வேலை செய்யவும் பயன்படுத்தினர். அமெரிக்காவின் பெரும் வளர்ச்சிக்கு இந்த கூலியில்லா உழைப்பு பெரும் பங்காற்றியது. தென் அமெரிக்க பண்ணைகளில் இருந்து அடிமைகளை விடுவிக்கும் பெரும் போராட்டமும் உள்நாட்டு கலகங்களும் பின்பு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அங்கு நடந்ததது. அடிமைகளை விடுதலை செய்யும் சாசனம் இயற்றப்பட்டது. இதற்கு வித்திட்டவர் ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் எனும் நாவலாரிசிரியர். அடிமை வாழ்வின் கொடூரங்கள் பற்றி அவர் எழுதிய செண்டிமெண்டல் நாவல் Uncle Tom’s Cabin விவிலியத்துக்கு அடுத்தபடியாய் பெரும் எண்ணிக்கையில் விற்பனையானது. அமெரிக்கர்களின் மனசாட்சியை அசைத்து பார்த்து கறுப்பர்களின் மீட்சிக்கு அடித்தளம் அமைத்தது என இந்நாவல் போற்றப்பட்டது. ஆனால் சமீபமாய் இந்நாவல் கறுப்பர்களை சித்தரித்த விதம் அடிமை சுரண்டலுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கிறது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 கறுப்பர்களை ஹேரியட் ஸ்டோர் தட்டையாக மிகையாக சித்தரித்த வண்ணம் அடிமை பண்பாட்டின் எதார்த்தத்தில் இருந்து வெள்ளையர்கள் தப்பும் விதமாகவும், அவர்களின் குற்றவுணர்வை சுரண்டும் விதமாயும் உள்ளது என கண்டனங்கள் எழுகின்றன. நல்ல கறுப்பர்கள் வெள்ளாந்தியான வேடிக்கையான, முதலாளி விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஹேரியட் ஸ்டோவ் நாவலில் மறைமுகமாய் வலியுறுத்துகிறார். காலனிய ஆதிக்கவாதத்தை முறியடித்து, கறுப்பர்களுக்கு உரிமைகளையும் நிலங்களையும் திரும்ப கொடுப்பதை அவர் வலியுறுத்தாமல், கிறித்துவ விழுமியங்களான அன்பு, கருணை மூலம் அவர்களை சீர்திருத்தி காப்பாற்ற வேண்டும் என்றே கூறுகிறார். இந்நாவல் கறுப்பு அடிமைகளின் நிலையை அல்ல, வெள்ளையர்களின் குற்றவுணர்வையும் அவர்களை அறவழிப்படுத்துவதையும் பேசுவதற்கு கறுப்பர்களை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என்று விமர்சகர்கள் இன்று கூறுகிறார்கள். பாலாவின் “நான் கடவுள்”, ராஜுமுருகனின் “குக்கூ”, எம்.மணிகண்டனின் “காக்கா முட்டை” ஆகிய படங்களுக்கும் இந்த விமர்சனம் பொருந்தும்.
இந்த செண்டிமெண்டல் பண்பாட்டுக்கு எதிர்தரப்பில் நின்று குரல் கொடுத்தவர் ஆடம் ஸ்மித். இரக்கம் எப்படி தோன்றுகிறது என அவர் கேட்டார்? ஒருவர் துன்பப்படுவதை பார்க்கும் போது அவர் இடத்தில் நம்மை வைத்துப் பார்க்கிறோம். பசுமாட்டை கசாப்பு பண்ணுவது கண்டால் நம் இதயம் விம்முகிறது. ஆனால் எருமை மாட்டை வெட்டி துண்டு துண்டாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருடத்துக்கு 30,000 கோடி சம்பாதிக்கலாம். அதற்காய் கண்ணீர் சிந்த மாட்டோம். ஏனென்றால் எருமை மாட்டை நமது நீட்சியாக பார்க்கும்படி நம் பண்பாடு நமக்கு கற்பிக்கவில்லை.
நான் முயல், ஆடு. மாடு ஆகிய பிராணிகளை சாப்பிடக் கூடாது என என் மனைவி அடிக்கடி என்னிடம் சத்தியம் வாங்குவாள். நான் கேட்பேன் “கோழிக் கறி பரவாயில்லையா? கோழியை கொல்வதும் தப்பு தானே? அதற்கும் வலிக்கும் இல்லையா?”. அவள் சொல்வாள் “கோழி ஆடு, மாடு அளவுக்கு அழகாக இல்லை. அதை மட்டும் தின்று விட்டு போ”. ஆனால் கறிக்கடையில் வரிசையில் நிற்கையில் சில நேரம் எனக்கு கூண்டில் அடைபட்ட கோழியை பார்த்தும் இரக்கம் தோன்றும். எல்லா உயிரனங்களும் அழகாய் அப்பாவியாய் தான் தெரிகின்றன. கொல்வது பாவமில்லையா? நம்மைப் போல் அவற்றுக்கும் வாழ ஆசை இல்லையா? அப்படி என்றால் சைவமாக இருப்பது தான் சரியானதா?
 அப்போது பார்த்து நான் ஒரு கட்டுரை படித்தேன். தாவரங்களை வைத்து ஆய்வு செய்த அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு இலையை கிள்ளினால் கூட தாவரங்களுக்கு வலிக்கும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது தாவரங்களுக்கு வேறு வகையான “நரம்பணு மண்டலம்” உண்டு. அவற்றால் வலியை உணர முடியும். அவற்றால் தம்மை பூச்சிகள் உண்ணும் ஓசையை கேட்கவும் தனித்து உணரவும் முடியும். வலி ஏற்படும் போது தாவரங்கள் எத்திலீன் போன்ற சில ரசாயனங்களை காற்றில் பரப்புகின்றன. அவற்றில் லேசர் கற்றைகளை கடத்தி ஆய்வு செய்ததில் தாவர வலி நீருக்குள் குமிழிடும் ஓசை கேட்டதாம் இது தான் தாவரங்களின் அழுகை ஒலி என்கிறார்கள் ஆய்வாளர்கள். நான் இந்த ஆய்வு பற்றி என் மனைவியிடம் குறிப்பிட்டேன். அவள் சொன்னாள் “இருந்து விட்டு போகட்டும். தாவரங்கள் அழுவது என் காதுக்கு கேட்காது. அவை கண்ணீர் விடுவது என் கண்ணுக்கு தெரியாது. அவை துடிப்பதை என்னால் பார்க்க முடியாது. அதனால் அவற்றை தாராளமாய் சாப்பிடலாம்”. சரியான வாதம் தான். துன்பப்படும் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள், தாவரங்கள் இடத்தில் நம்மை வைத்து பார்க்க முடிந்தால் மட்டுமே நம்மால் இரக்கப்பட முடியும்.
பிறரிடம் இரக்கம் கொண்டு சமூக தொண்டு செய்வதன் நன்மை பற்றி ஆடம் ஸ்மித் அக்கறை கொள்ளவில்லை. அடிப்படையில் இரக்க சுபாவம் சுயமையமானது என அவர் கருதினார். கறுப்பர்கள் இடத்து தம்மை வெள்ளையர்கள் வைத்து பார்த்தார்கள். அவர்கள் கறுப்பர்களை உண்மையாக அருகாமையில் சென்று அறியவில்லை. ஆனால் தம் பிரபலிப்பை கறுப்பர்களில் கண்டார்கள். இந்த பார்வை தான் அடிமை வழமையை ஒரு முடிவுக்கு கொண்டு வர உதவியது. கறுப்பர்களின் மீட்சிக்காய் போராடியவர்களில் வெள்ளையர்களும் கணிசமாய் இருந்தார்கள். கறுப்பர்களை கீழான பண்பாடற்ற விலங்குகள் என கருதியவர்கள் எப்படி திடீரென அவர்களிடத்து தம்மை வைத்து பார்க்க தொடங்கினார்கள்? இதற்கு தான் செண்டிமெண்டலிசமும் மனித நேய இயக்கமும் உதவியது. கறுப்பர்களின் அவலங்களையும் நற்குணங்களையும் மிகைப்படுத்துவதன் மூலம் இனவெறியை தற்காலிகமாய் கடந்து செல்லவும், அவர்களை நேசிக்கவும் வெள்ளையர்களுக்கு இந்த கருத்தியல்கள் உதவின.
இந்த வெள்ளையர்கள் கறுப்பர்கள் இடத்தில் தம்மை வைத்து பார்த்தார்களே ஒழிய அவர்களை தமக்கு இணையான இனமாக ஏற்கவில்லை. இந்த வித்தியாசம் முக்கியமானது. நம்மிடையே அடுத்தவர்களைக் கண்டு இரக்கப்படுகிறவர்களும் இதே போன்று இரக்கத்துக்கு உரியவர்களை தமக்கு இணையாக நினைப்பதில்லை. இது விசித்திரமானது. கால் ஒடிந்து சாலையில் ஊர்ந்து செல்லும் ஒருவரைக் காணும் போது அங்கு நம் காலே ஒடிந்து நாமே அங்கு ஊர்வதாய் ஒரு உணர்வு வந்து மனம் நடுங்குகிறது. ஆனால் அதேநேரம் அவர் நாம் அல்ல, நமக்கு கீழானவர் என்றும் நம் மனம் சிந்திக்கிறது. நீங்கள் கேட்கலாம்: மனம் எப்படி ஒரே நேரத்தில் முழுக்க முரண்பட்டு சிந்திக்க முடியும் என. ஆனால் மனித மனத்தின் அடிப்படை பண்பே அது தான். காலனியாதிக்கம் அதன் உச்சத்தில் இருக்கும் போது மனிதர்கள் உலகெங்கும் சுரண்டப்பட்டு பஞ்சத்தில் சாகும் போது வெள்ளையர்கள் அதை ஏற்றபடியே தம்மால் பாதிக்கப்படும் மக்களின் சார்பாகவும் தொண்டு மனப்பான்மையுடன் யோசித்தார்கள். மனித மனதில் வக்கிரங்களும் கொடூர எண்ணங்களும் வலுப்பெறும் போது தான் கூடவே கருணை, அன்பு போன்ற நற்குணங்களும் உச்சம் பெறுகின்றன. ஒன்றில்லாமல் இன்னொன்று தோன்றாது.
Empathy எனும் அடுத்தவர் இடத்தில் நம்மை வைத்துப் பார்க்கும் புரிந்துணர்வு பற்றி முதலில் பேசியவர் ஆடம் ஸ்மித் தான். சமீபத்தில் நரம்பியல் ஆய்வுகளில் இந்த empathyக்கு அடிப்படை நம்முடைய mirror neurons எனும் கண்ணாடி நரம்பணுக்கள் என கண்டுபிடித்திருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கிறவர் சிரித்தால் நமக்கும் சிரிக்க தோன்றும். யாராவது ருசித்து சாப்பிடுவது பார்த்தால் நமக்கு எச்சில் ஊறும். இந்த பண்பின் உயர்வான வடிவம் தான் அடுத்தவரின் உணர்வுகளை நமதாக உணர முடிவது. இந்த empathy சிலருக்கு கூட குறைவாக இருக்குமே ஒழிய இது இல்லாத மனிதனே இல்லை. அடுத்தவர் துன்பப்படுவதை கண்டு கருணை கொள்ளும் போது நீங்கள் அவரிடத்து உங்களைப் பார்த்து உங்கள் மீதே கருணை கொள்கிறீர்கள் என ஆடம் ஸ்மித் கூறியது முழுக்க சரியா? ஈகை, தொண்டு செயல்பாடுகள், சமூகப் பணி எல்லாம் பாசாங்கா? கருணை என்பது நம் அகங்காரத்தின் வெளிப்பாடு மட்டும் தானா?
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் உளவியலாளர்கள் ஒரு ஆய்வை செய்தனர். கருணை, பச்சாதாபம், உதவும் குணம் இவையெல்லாம் சமூகம் கற்பிக்கிற சுபாவங்களா அல்லது பிறக்கும் போதே நம்மிடத்து உள்ளவையா என்பதை அறிவது ஆய்வின் நோக்கம். சிறு குழந்தைகளிடம் இயல்பிலேயே பிறருக்கு உதவும் உள்ளுணர்வு உண்டு என இவ்வாய்வில் நிரூபிக்கப்பட்டது. பெரும்பாலான மனிதர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவுவதில் பெரும் உற்சாகம் நிச்சயம் உள்ளது. ஏன் தனக்கு பலனில்லாத ஒரு விசயத்திற்காய் மனிதன் இவ்வளவு முனைப்பு காட்ட வேண்டும் என நான் குழம்பியதுண்டு. என் காலில் அணியும் காலிப்பர் எனும் கருவி ஒரு நாள் உடைந்து விட்டது. என்னிடம் மாற்று காலிப்பர் இல்லை. அதை எப்படி கடைக்கு கொண்டு போய் பழுது பார்ப்பது என தவித்துக் கொண்டிருந்தேன். இது பற்றி அறிய வந்த ஒரு நண்பர் என்னை போனில் அழைத்து காலிப்பரை தானே கொண்டு போய் பழுது பார்த்து வாங்கி வருவதாய் கூறினார். அவர் சென்னைக்கு புறநகரில் இருந்து வர வேண்டும். எனக்கு உதவுவதால் அவரது ஒரு நாள் வேலை பாழாகும். அதனால் அவர் எவ்வளவு வற்புறுத்தி கேட்டும் நான் மறுத்து விட்டேன். அன்று அந்த உடைந்த கருவியை காலில் மாட்டி நானாகவே நடந்து சென்று மிகுந்த சிரமத்துக்கு இடையில் பழுது பார்த்து வாங்கி வந்தேன். பிறகு இச்சம்பவத்தை மற்றொரு நண்பரிடம் குறிப்பிட்ட போது அவர் சொன்னார் “நீ ஒரு முட்டாள்”. ஏன் என அவர் விளக்கினார். “உனக்கு உதவுவது உனக்காக மட்டும் அல்ல. உனக்கு உதவுவதன் மூலம் அவர் மிகுந்த களிப்பும் நிறைவும் கொள்வார். அவருக்கு நீ அதை மறுத்து விட்டாய்”. சரி தான்!
அன்பும் கருணையும் சில நிமிடங்கள் நம்மை தன்னுணர்வின் பாரத்தில் இருந்து விடுவிக்கின்றன. அன்றைய தினத்தில் உங்களுக்கான பிரச்சனைகளை பற்றி மனதுக்குள் புகைந்தபடி சாலையில் போகிறீர்கள். ஒருவர் விபத்தில் அடிபட்டு விழுகிறார். அவரை ஓடிப் போய் தூக்கி விடுகிறீர்கள். முதலுதவி செய்கிறீர்கள். மடியில் ஏந்தி தண்ணீர் புகட்டுகிறீர்கள். ஒரு விதத்தில் அந்த அரைமணி நேரம் உங்கள் வாழ்வின் தித்திப்பான கட்டம். பின்னர் எப்போது யோசித்தாலும் மகிழ்ச்சி ஏற்படுத்துகிற நினைவு அது. அதற்காக தான் “வாடின பயிரைக் கண்டு வாடுகிறீர்கள்”.

கருணை சுயநலமானதா? ஆம். அது போலியானதா? இல்லை. கருணை ஒரு போலியான உண்மை. காம்பில் முட்கள் அடர்ந்த ரோஜா அது. அது தப்பா? தப்பில்லை. உங்களுக்கு அகவிடுதலை தரும் என்றால் ”நாலு பேருக்கு நல்லது” செய்வதில் தப்பில்லை!”

நன்றி: அம்ருதா, ஏப்ரல் 2016