Sunday, May 1, 2016

”கபாலியும்” ரஞ்சித்தை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு போகிறவர்களின் அரசியலும்

Image result for kabali

முதலில் இதை சொல்லி விடுகிறேன். எனக்கு ”கபாலி” ட்ரெய்லர் பிடித்திருந்தது. குறிப்பாய் அந்த வசனம்: கபாலி என்றால் பழைய படத்தில் நம்பியார் டேய் கபாலி என்றதும் ஓடிப் போய் எசமான் என்று நிற்கிறவன்னு நினைச்சியா என வில்லனை நோக்கி ரஜினி பேசும் இடம். ரஜினியிடம் இப்போதும் அந்த நெருப்பு அணையாமல் இருக்கிறது. அதுவும் இறுக்கமான உடலை சட்டென நெகிழ்வாக்கி குழைத்து குனிந்து கைகளை குவித்து அவர் மிமிக்றி செய்யும் படுவேகம். அப்போது முகத்தை மட்டும் உணர்ச்சியில்லாமல் கண்களில் கோபத்தை தக்க வைப்பது. அந்த வசனத்தில் உள்ள நுணுக்கமான சாதி விமர்சனத்தையும் ரசித்தேன். தேவர் சாதியினர் பட்டவர்த்தமாய் தம்மை முன்வைப்பதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.
இந்த டிரெய்லரை ஒட்டி முகநூலில் ரஞ்சித்தின் சாதியை கொண்டாடி முன்வைக்கப்படும் பதிவுகளை விமர்சித்து ஸ்வர வைத்தீ வெளியிட்ட வீடியோவையும் பார்த்தேன். எனக்கு அவர் சொல்வதில் உடன்பாடு உண்டு. ரஞ்சித் தெளிவாகவே இருக்கிறார். அவர் சாதிப் பெருமைக்காக படம் எடுப்பதில்லை. “மெட்ராஸ்” படத்தில் வி.சி.க மீது நுணுக்கமான விமர்சனம் இருந்தது. எனக்குத் தெரிந்து சுயசாதியின் பிரச்சனைகளை கூர்மையாக பேசின ஒரே இயக்குநர் ரஞ்சித் தான். ஆனால் தலித் ஆதரவாளர்களும் முற்போக்காளர்களும் இந்த சுயவிமர்சனத்தை ஒதுக்கி வைத்து விட்டு “தலித் வாழ்க்கை ஒரு தலித்தால் படமாக்கப்பட்டு விட்டது” என்பதை கொண்டாடுவதிலேயே குறியாக இருந்தனர். ”காட்சிப்பிழை” இதற்காக ஒரு தனி சிறப்பிதழே கொண்டு வந்தது. படத்தை ஆய்வு செய்ய அல்ல, தலித் சாதி அடையாளத்தை பதிவு செய்வதை ஒரு வரலாற்று நிகழ்வாய் மாற்றுவதற்கு. முழுக்க தலித்துகள் மட்டுமே வேலை செய்த படம் என்று ஒருவர் முகநூலில் அதை பாராட்டி இருந்தார். இப்போது “கபாலி” டிரெய்லர் வெளியாகும் போதும் இந்த சாதி புரொமோஷன் ஆரம்பித்திருக்கிறது. ஸ்வர வைத்தீ இதைத் தான் கண்டிக்கிறார்.
முன்னர் பிராமண ஆதிக்கம் கொண்ட படங்கள் வந்தன. அதன் பிறகு தேவர்கள், நாடார்கள், கௌண்டர்கள் என இடைநிலை சாதிகள் வெளிப்படையாகவே தம்மை கொண்டாடும் படங்கள் வந்தன. கடந்த சில வருடங்களில் இந்த வெளிப்படைப் போக்கு குறைந்திருக்கிறது. மதுரைப்படங்கள், மண்சார்ந்த படங்கள் எனும் போர்வையில் இப்படங்கள் வருகின்றன. அதையும் மீறி சாதிய ஆதிக்கமும் வன்முறையும் சித்தரிக்கப்படும் போது அதை விமர்சிக்கிறோம். நேற்றைய ஹிந்துவில் ரவிக்குமார் எவ்வாறு “தேவர் மகன்” போன்ற படங்கள் தலித்துகள் மீதான வன்முறைக்கு வித்திட்டன என கருத்து சொல்லி இருக்கிறார். என் ஐயமெல்லாம் தலித் ஆதரவாளர்கள் ரஞ்சித்தின் படங்களை ஒரு பதாகை போல் பயன்படுத்துவது ஆதிக்க சாதியினரின் அதெ கத்தியை கையில் தூக்குவது ஆகாதா என்பதே.
உன் சாதிப் பெருமையை நீ பேசு, என் சாதிப்பெருமையை நான் பேசுகிறேன் எனும் சூழல் ஆரோக்கியமானதா? இது நம்மை அந்நியப்படுத்தாதா? தலித்துகள் நாங்கள் தனிக்குழுவாய் இயங்கி படம் எடுக்கிறோம், எங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம் என்பதான பிம்பங்கள் பிறருக்கு எரிச்சல் ஏற்படுத்தாதா?
ஏனென்றால் “கல்யாண சமையல் சாதம்” போன்ற படங்கள் ரொம்ப பிராமணீயமாக இருக்கிறது என விமர்சிக்கப்பட்ட போது ஹிந்துவில் பரத்வாஜ் ரங்கன் ஒரு கேள்வி எழுப்பினார்: தேவர்கள் தம் சாதி வழக்கங்களை, வட்டார வழக்கை படமாக்கினால் அது பண்பாட்டு சினிமா, பிராமணர்கள் செய்தால் அது ஆதிக்க அரசியலா என்றார். தத்தமது சாதியின் வரலாற்றை பேசுவதில் சிக்கல் இல்லை. ஆனால் அங்கு பிற மக்களுக்கும் இடம் அளிக்க வேண்டும். முழுக்க சுயசாதி உணர்வு மட்டுமே நிரம்பி இருக்கக் கூடாது. எந்த படைப்பும் பிறருக்கு சுவாசிப்பதற்கான இடத்தை அளிக்க வேண்டும். “அட்டைக்கத்தியில்” அந்த இடம் இருந்தது. அது தலித் பிரச்சனையை, வரலாற்றை பேசும் படம் மட்டுமே அல்ல. அதில் சமகால வாழ்வின் பின்நவீனத்துவ கூறு சித்தரிக்கப்பட்டிருந்தது. “மெட்ராஸ்” படத்தை தமிழகத்தை அனைத்து சாதியினரும் ரசித்தது அதில் தன் சமூகத்தின் அரசியலில், வன்முறைக்குள் மாட்டின ஒரு எளிய இளைஞனின் அவஸ்தையும் பயமும் சித்தரிக்கப்பட்டதாய் அவர்கள் அதை கற்பனை பண்ணிக் கொண்டதால் தான். ஆனால் தலித் ஆதரவாளர்களுக்கு இதெல்லாம் முக்கியமாய் படவில்லை. அவர்கள் ”மெட்ராஸை” மற்றொரு “தேவர் மகனாய்” மாற்றிக் கொண்டார்கள். இது அப்படத்துக்கு செய்யும் அநீதி என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அப்படத்தின் மையமே எப்படி தலித் சாதி அரசியல் இங்கு சீரழிந்து, தன் கண்ணையே குத்துவதாய் ஆயிற்று என்பது தானே. அதை இவர்கள் கவனமாய் பேசாமல் தவிர்த்து, “மெட்ராஸை” தலித் வாழ்க்கை ஆவணமாய் மட்டுமே பார்த்து முன்வைத்ததன் அரசியல் தான் என்ன?

 எப்போதும் இயக்குநர்களாலோ பார்வையாளர்களாலோ சிக்கல் இல்லை. படத்தின் மீது பல வண்ண பெயிண்ட் அடிக்கும் (ஒருவர் எப்படி நீலம் “மெட்ராஸ்” முழுக்க வண்ணமாய் பயன்படுத்தப்பட்டிருந்தது என சிலாகித்திருந்தார். இதில் என்ன பெரிய தத்துவம் இருக்கிறது வியக்க?) ஆட்களால் தான் பிரச்சனைகள் உருவாகின்றன. ரஞ்சித் தன் அரசியலை சுயசாதி விமர்சனத்தோடு நுணுக்கத்தோடு, சாதிய தம்பட்டம் அடிக்காமல் தான் முன்வைக்கிறார். ஆனால் அவரை பல்லக்கில் ஏற்றி கொண்டு போகிறவர்களை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது!

1 comment:

GG KRISHNAN said...

Good words sir,


already you said about kabali movie otherwise medras movie is denote for saathi arasiyal
oru eluthaalanin allathu yethenum oru thurai sarntha padaippalan sathi matrum arasiyalai
purinthu vaithirukkavendum anal samuga matrum pothu thala reethiya thangalukkana suya adaiyalathirkkaga mattume yethenum padaippai anuguvathu yenpathu migavum arivatra thanmai ranjithai vida avarukku sathi matrum arasiyal sayam pusubavargal samugathirkku migavum apaththanvargal. Nallathoru parvai matrum vimarsanamum kuda

Gopiriyan