Sunday, May 1, 2016

வாசிப்பு ஏன் ஆறுதல் தருகிறது?

ஒவ்வொருவருக்கும் ஓய்வு கொள்வதற்கு, மனதை ஆறுதல்படுத்துவதற்கு, உடலின் கடிகாரத்தை மீண்டும் முடுக்கி விடுவதற்கு தமக்கான வழிமுறைகள் இருக்கும். சிலருக்கு குடிப்பது, நண்பர்களுடன், பெண்களுடன், ஆண்களுடன் பேசுவது, கலவி கொள்வது, படம் பார்ப்பது, தூங்குவது, ஊர் சுற்றுவது, வீட்டு வேலைகள் செய்வது, சமைப்பது, வீட்டுப் பொருட்களை துடைத்து ஒழுங்கு பண்ணுவது. நான் அடிப்படையில் சோம்பேறி – எனக்கு வாசிப்பு தான் ஒரே மார்க்கம். வேலை நாள் முடிந்ததும் என் மனம் அம்பெய்த நாண் போல் அதிர்ந்தபடியே இருக்கும். அப்போதெல்லாம் நான் ஏங்குவது வீட்டுக்கு சென்று படுத்துக் கொண்டு சில பக்கங்களாவது படிக்க வேண்டும் என்பது.
வாசிப்பு இன்பம், அறிவுப்பெருக்கம், மொழிகூர்மை போன்ற பொதுவான காரணங்கள் தான் என்னையும் வாசிப்பை நோக்கி ஈர்ப்பது. ஆனால் ஓய்வு நேரத்தின் சிறந்த பொழுதுபோக்காக, ஆறுதல் அனுபவமாய் வாசிப்பு இருப்பது ஏன் என யோசிக்கிறேன்.

டி.வி பார்ப்பது, பேஸ்புக்கை புரட்டுவது, அரட்டை அடிப்பதை விட மிக அதிகமான கவனமும் மன உழைப்பும், உணர்வுகளின் குவிப்பும் வாசிப்புக்கு தேவைப்படுகிறது. அதாவது வாசிப்பு ஒரு ஓய்வு செயல் அல்ல, அது மூளையையும் உணர்வுகளையும் அதிகமாய் தூண்டும் ஒரு வேலை. ஆனால் வாசிப்பின் ஒரு முக்கிய தன்மை வேறு பொழுதுபோக்குகளுக்கு இல்லை. அது தனிமை.

 தனிமை என்றால் பௌதிகமான தனிமை அல்ல. அகத்தனிமை. வேறு பொழுதுபோக்குகளின் போது ஒன்று மனிதர்களோ, குரல்களோ, பிம்பங்களோ நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள். வாசிப்பு மட்டுமே யாருமில்லாத பிரதேசத்துக்கு நம்மை அழைத்துப் போகிறது. எல்லாரையும் விட்டு எல்லாவற்றையும் விட்டு கொஞ்ச நேரம் தனித்திருக்க மனம் ஏங்குகிறது. புத்தகம் மட்டுமே எனக்கு அதற்கு உதவுகிறது.

என்னுடைய பேராசிரியர் ஒருவர் ரொம்ப களைப்பானால் தன் அலமாரியில் உள்ள புத்தகங்களை அடுக்கத் துவங்கி விடுவார். நாங்கள் மாணவர்கள் அவர் அறையில் கூட்டமாய் இருந்து சத்தமாய் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் நைசாய் கழன்று ஒரு புத்தகத்தை தேடும் சாக்கில் அலமாரிக்குள் சரணடைந்து விடுவார். நடுநடுவே எதையாவது சொல்லி எங்கள் அரட்டையில் தானும் பங்குபெறுவதாய் தோற்றம் கொடுப்பார். ஒரு அடுக்கு நூல்களை கலைத்து புது நூல்களை கண்டறிந்து புரட்டிப் பார்த்து அடுக்கினதும் அவர் முகத்தில் நூறு வால்ட் பல்ப் எரியும். எங்களுடன் மீண்டும் உற்சாகமாய் அரட்டையில் கலந்து கொள்வார்.

நமக்கு எந்தளவு மனிதர்களோடு இருப்பது அவசியமோ அந்தளவு மனிதர்கள் இல்லாது இருப்பது தேவை. ”இவ்வாறு சொன்னான் ஜாருதஷ்டிரனில்” ஜாருதஷ்டிரன் பல ஆண்டுகளாய் மனிதர்களிடம் இருந்து ஒதுங்கி மலை உச்சியில் தனிமையில் வாழ்கிறான். ஒரு கட்டத்துக்கு மேல் தனிமை தரும் ஒளி அவன் மனமெங்கும் நிரம்புகிறது. தன்னை தேனால் நிரம்பிய ஒரு தேனியாக கற்பனை செய்கிறான். ”என் கழுத்து வரை ஞானம் நிரம்பி நிற்கிறது. நான் அதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்.” என்கிறான். ”மாலையில் கடலில் மூழ்கிய சூரியன் காலையில் அதில் இருந்து எழுவது போல் நான் தனிமையில் இருந்து உதித்து மக்கள் மத்தியில் எழப் போகிறேன்” எனக் கோருகிறான். இல்லாவிட்டால் அவன் திக்குமுக்காடி உருக்குலைந்து போவான். அதனால் அவன் மலையில் இருந்து இறங்கி ஊருக்கு மக்கள் மத்தியில் வருகிறான். அந்த ஞானம், அந்த தேன், மொழி தான்.

நமக்கு பேசிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பேச்சு ஒரு கட்டத்தில் அலுப்படைய வைக்கிறது. களைத்து ஒதுங்க நினைக்கிறோம். அப்போது தனிமை அவசியமாகிறது. ஆனால் தனிமை என்பதும் நாம் நம்முடன் நிகழ்த்தும் ஒரு பேச்சு தானே. அந்த பேச்சின் சொற்கள் நமக்குள் மலையாக குவியும் போது நாம் தனிமையில் இருந்து வெளியே வருகிறோம். யாரிடமாவது உரையாட தவிக்கிறோம். மிகவும் உக்கிரமாய் தீவிரமாய் தீக்கங்குகளைப் போல் சொற்களை சமூகத்துக்கு கொண்டு வருகிறோம். இத்தகையோர் – அதாவது தொடர்ந்து தனிமையில் இருந்து எழுதுபவர்கள், படிப்பவர்கள், சிந்திப்பவர்கள் – வெளியே வந்ததும் பித்துப் பிடித்தது போல் பேசுவார்கள். ஒரு உக்கிரமான உறவுக்காக ஏங்குவார்கள். மலைப்பாம்பு போல் நண்பர்களை தம் நாவால் சுருட்டி கட்டிக் கொள்வார்கள். கொஞ்ச நாளில் மீண்டும் இந்த தீப்பிழம்பான உறவுகளில் இருந்து தப்பித்து தனிமைக்கு செல்ல ஏங்குவார்கள்.
வாசிப்பது ஒரு விதத்தில் மொழியில் இருந்து தப்பிப்பதற்கான உத்தி தான். வெளியே பேசும் மொழியில் இருந்து தப்பித்து உள்மொழிக்கு செல்வது. ஆனால் மனிதர்கள் முழுக்க மொழியில் இருந்து தப்பிக்கவே இயலாது. சாருவின் நாவல் ஒன்றில் கதைசொல்லி ஒரு களேபரமான கொண்டாட்டத்தில் இருப்பான். அவனைச் சுற்றி நண்பர்கள் கேளிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். கதைசொல்லி சட்டென அவர்களுடன் தான் இல்லை என உணர்வான். அந்த கூட்டத்தின் நடுவே தான் மிகவும் தனியாய் இருப்பதாய் சொல்வான். அவனுக்கு அந்த தனிமை தான் வசதிப்படும். அவனால் கூட்டத்திற்கு வெளியிலும் செல்ல முடியாது. உள்ளுக்குள்ளும் சிறைப்பட முடியாது. மனிதனின் ஆகப்பெரும் அவஸ்தையே இது தான்.
அடிக்கடி பேஸ்புக்கில் இருந்து டி-ஆக்டிவேட் செய்து துறவறம் போகிற நண்பர்களை எனக்குத் தெரியும். பாதி வழியில் எப்படியும் திரும்ப வந்து விடுவார்கள். ஆனாலும் ஏன் அப்படிப் போகிறார்கள்? இரைச்சல் தாங்க முடியாமல் தான். உலகில் மிக அதிகமான ஜனநெருக்கடி உள்ள இடம் பேஸ்புக் தான். பேஸ்புக்கை சீரியசாய் எடுத்துக் கொண்டு அதில் மூழ்கும் போது சட்டென வெறுப்பு ஏற்படுகிறது. இதில் வரும் கொண்டாட்டங்கள், அன்புப் பெருக்கு, கோபம் எல்லாம் பொய் எனத் தோன்றுகிறது. ஆனால் இதை தவிர்க்கவோ தள்ளி நிற்கவோ முடியாது. நிஜ உலகில் அதற்கு ஒரு இடம் உள்ளது. பேஸ்புக்கில் நீங்கள் அமைதியாய் இருக்க ஒரு ஊசிமுனை இடம் கூட கிடையாது. இங்கு இருந்தால் நீங்கள் எதையாவது செய்து கொண்டு, பார்த்துக் கொண்டு, பேசிக் கொண்டு இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சொற்கள் நம் கழுத்து வரை நிரம்பி நின்று மூச்சு முட்ட செய்கின்றன. டி-ஆக்டிவேட் செய்கிறோம். பேஸ்புக்கை தம் தேவைக்காய் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே நிரந்தரமாய் அதில் இருக்கிறார்கள்.


வாசிப்பின் மிக முக்கியமான பயன் அது நமக்கு தனிமையின் அத்தியாவசியத்தை கற்பிக்கிறது என்பதே. பேஸ்புக் நம்மை “தனியாய் போய் விடாதே” என அச்சுறுத்திக் கொண்டே இருக்க, புத்தகங்கள் தனித்திரு என காதில் சொல்கின்றன. இரண்டுக்கும் நடுவே மகிழ்ச்சி இருக்கிறது. 

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

கூட்டு வாசிப்பு அதிகம் நிகழ்வதில்லை, ஆனால் அது இன்னமும் மகிழ்ச்சி தரும் என்று எண்ணுகிறேன். புத்தகக் கண்காட்சியில் இதை படிப் படியாக அறிமுகம் செய்ய வேண்டும். அதுபோலவே ஃபேச்புக்கில் கூட்டத்தில் இருந்து விலகி தனி உரையாடல்களில் திளைப்போரின் இன்பம் வார்த்தை களுக்கு அப்பாற்பட்டது.