தலைமுறைகள்

இப்போதெல்லாம் மைலாப்பூர் பக்கமாய் அடிக்கடி இலக்கியவாதிகளை சந்திக்கிறேன். அதுவும் சற்றும் எதிர்பாராமல். போன வாரம் ஒருநாள் காலை ஆறுமணிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். மைலாப்பூர் ஆர்.கெ சாலைக்கு பக்கத்து தெருவில் இந்திரா பார்த்தசாரதி நடைபழகுவதை பார்த்தேன். கைத்தடியால் மெல்ல மெல்ல ஊன்றி ஒரு குழந்தை நடக்க கற்பது போல் தனியாய் நடந்து போய்க் கொண்டிருந்தார். முதலில் இ.பாவா அல்லது அவரைப் போன்று வேறொருவரா என குழப்பம். வண்டியை திருப்பி அவர் அருகே போனேன். என்னைப் பார்த்ததும் அவர் குழப்பமாகி நின்று விட்டார். அவரிடம் சென்று வணங்கினேன். “இ.பா தானே?” என்றேன். அவர் கண்களில் ஆர்வம் ஒளிர தலையசைத்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இ.பா போல் உதட்டை மென்மையாய் குவித்து பல்லைக்காட்டாமல், கன்னத்தசைகளை விரிக்காமல் புன்னகைக்க வெகுசிலருக்கே வரும். பார்க்க அவ்வளவு அழகு.

நேற்று மாலை நேர இடைவேளையின் போது ஒரு கடையில் சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மங்கலான சட்டையும் பேண்டும் அணிந்து தோளில் பை மாட்டின ஒருவர் என்னிடம் தயக்கத்துடன் வந்தார். நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். வெளி.ரங்கராஜன் போல் மிக சன்னமான குரலில் அந்தரங்கமான தொனியில் பேசினார். என் பெயரை தயங்கி தயங்கி குறிப்பிட்டு ”நீங்கள் தானா?” என்றார். ஆமாம் என்று கைகுலுக்கி விசாரித்தேன்.
நான் ஊகித்தது போல் அவர் போன தலைமுறை இலக்கிய வாசகர். அவர்கள் தான் இவ்வளவு அருகில் வந்து மென்மையாய் உரையாடுவார்கள். இன்றைய தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் கைகளை ஆட்டியபடி குரலை உயர்த்தி பேசுவார்கள் (என்னையும் சேர்த்து தான்). இருபது வருடங்களில் நம் குரலும் உடல்மொழியும் முழுக்க மாறிப் போய் விட்டது.  
அவர் பெயர் செந்தில். அருகில் ஜெம் எனும் பருத்தி நூலை பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலை மேலாளராக வேலை செய்கிறார். என் கட்டுரைகளை படிப்பதாய் சொன்னார். “நீங்கள் கட்டுரைகளில் வெளிப்படுத்தும் கருத்துக்களை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு விவாதிப்பேன்” என்றார். எனக்கு சங்கோஜமாய் இருந்தது. அவர் இலக்கியம் வாசிக்கும் காலத்தில் நான் பள்ளியில் ஹோம்வொர்க் செய்து கொண்டிருந்திருப்பேன்.
போன தலைமுறையினர் என்னைப் படிப்பதாய் அறிந்தால் நான் மிகுந்த உவகை கொள்வேன். நான் ஊரில் சிறுவனாய் அத்தகையோருடன் தான் வளர்ந்தேன். சு.ரா, ஜெ.மோ, கலை இலக்கிய மன்றத்தின் பொன்னீலன், முஸ்தபா, ரசூல், என்.டி, நட.சிவகுமார் இவர்கள் எல்லாருமே என்னை விட இருபது வயது மூத்தவர்களாகவே நான் சந்திக்கும் போது இருந்தனர். அவர்களிடம் இருந்து தான் நான் அத்தனையும் கற்று வளர்ந்தேன். சொல்லப் போனால் என் வயது எழுத்தாள நண்பர்களை விட இவர்களிடமே நான் அதிக சௌகர்யமாய் உணர்வேன். நேற்று அந்த நண்பருடன் உரையாடும் போது என் அத்தனை சீனியர்களும் என்னை ஆசீர்வதித்ததாய் உணர்ந்தேன்.
“எனக்கு அ.மார்க்ஸ் நண்பர்” என்றார். நிறப்பிரிகை வெளிவந்த காலகட்டம் பற்றி பேச ஆரம்பித்தோம். அதன் ஒவ்வொரு இதழும் எப்படி ஆழமான பார்வையும் விவாதமும் கொண்டிருக்கும் என வியந்தேன். அதன் பின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்திருக்கிறது. நிறப்பிரிகை குழுவில் உள்ளவர்கள் இருவர் சேர்ந்து விரிவாய் வாசித்து தயாரித்து விவாதித்து ஒரு கட்டுரை எழுதுவார்கள். அதன் பின் இருபது நாள் உழைப்பாவது இருக்கும். இன்றைக்கும் பல நிறப்பிரிகை கட்டுரைகள் படிக்க முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது. அவர் “ஏன் அந்த பத்திரிகை நின்று போனது?” எனக் கேட்டார். அது போன்ற ஒரு பத்திரிகை சில தீவிரமானவர்கள் ஒரே சமயத்தில் கூடி வேலை செய்யும் சந்தர்ப்பம் அமையும் போது நிகழும் அற்புதம். அதற்கு குறைவான ஆயுள் தான் இருக்க முடியும் என்றேன். உயர்வான தரத்தில் நீண்ட காலம் ஒரு பத்திரிகை கொண்டு வர இயலாது.
 நிறப்பிரிகை வட்டத்தில் மிகத் திறமையானவர் ரவிக்குமார் தான் என்றேன். அவர் “கண்காணிப்பின் அரசியலை” குறிப்பிட்டார். ரவிக்குமார் மட்டும் அரசியலுக்கு சென்றிராவிட்டால் இன்று எழுத்தில் முன்னணியில் உள்ள பலரை தாண்டி சென்றிருப்பார் என பேசிக் கொண்டோம். அப்போது அவர் சொன்னார் “மார்க்ஸே என்னிடம் ஒருமுறை இப்படி ரவிக்குமார் பற்றி குறிப்பிட்டார்: ‘ரவிக்குமார் என்னை விட தரமாய் எழுதக் கூடியவர்’”. எனக்கு அதைக் கேட்டு வியப்பு தீரவில்லை. மார்க்ஸ் தன்னைக் கடந்து சிந்திக்கக் கூடியவர், ஈகோ பார்க்காதவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தளவுக்கு தன்னையே விட்டுத் தந்து இன்னொருவரை பாராட்டுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேரால் இப்படி self-effacingஆக இருக்க முடியும் சொல்லுங்கள். அப்படி பேசினாலே அது நம் பலவீனம் என கருதுவார்கள்.
அவர் வளர்மதியைப் பற்றி குறிப்பிட்டார். எனக்கு அவரது “இசையின் அரசியல்” நூல் மிகவும் பிடித்தமானது என்றேன். பேராசிரியர் அரசுவின் பதிப்பான “கங்கு வெளியீட்டின்” நூல்கள் அத்தனையும் அபாரமானவை. 70 பக்கங்களுக்குள் பல வேறு கருத்துநிலைகள், கோட்பாடுகள் பற்றின எளிய அறிமுக நூல்கள், ஆனால் மிக தரமாகவும் இருக்கும். அவர் சொன்னார் “நான் வளர்மதியிடம் உங்களைப் பற்றி குறிப்பிட்டேன். கேள்விப்பட்டிருக்கிறேன், ஒருநாள் சந்திக்க வேண்டும் எனச் சொன்னார்”. வளர்மதி ஒரு இணையதளம் நடத்தி வந்தார். அதில் என் ரசிகன் நாவல் பற்றி மதிப்புரை ஒன்று பிரசுரித்தார். அப்போது என்னை போனில் அழைத்து பேசினார். நான் சந்திக்க விரும்பும் ஒருவர் என்னையே போனில் நம்மை அழைத்து பேசினது எனக்கு மிகவும் நிறைவாய் இருந்தது. நான் அதைப் பற்றி இவரிடம் கூறவில்லை. ஏனோ கூச்சமாய் இருந்தது. மௌனமாய் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
”ஏன் கட்டுரைத் தொகுப்பு ஒன்று கூட வெளிக்கொணர வில்லை; நாவல்களாய் எழுதித் தள்ளுகிறீர்களே?” எனக் கேட்டார். என் தவறு தான். நான் அதற்கான போதுமான முயற்சிகள் எடுக்கவில்லை. போன வருட இறுதியில் அம்ருதாவில் என் கட்டுரைத் தொகுப்பு வெளியிடலாம் எனக் கேட்டார்கள். தொகுக்க ஆரம்பித்து அதை வெகுவாக தாமதித்து விட்டேன். இன்னொரு பக்கம் பெரும்பாலான பதிப்பாளர்களும் கதைத் தொகுப்புகள், நாவல்களை வெளியிடவே விரும்புகிறார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. வாசகர்கள் கதைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கட்டுரைகளுக்கு கொடுப்பதில்லை.
மிக மென்மையாய் கைகுலுக்கி பிரிந்தார். அவர் ஒரு வேலை நாளின் களைப்புடன் வீட்டுக்கும், நான் மீதி வேலை நாளின் களைப்பை அனுபவிக்க என் அலுவலகத்துக்கும் சென்றோம்.

Comments