ரோலக்ஸ் வாட்ச்

சரவணன் சந்திரன் எழுத்தில் எனக்கு பிடித்த விசயம் அவரிடம் முற்றிலும் புதிய சுவை மணம் குணம் எல்லாம் உண்டு என்பது. அவரது “ரோலக்ஸ் வாட்ச்” நாவலும் வாசகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாத ஒரு தளத்தை தொடுகிறது: கீழ்மட்டத்தில் இருந்து போராடி மேலே வருகிற ஒருவன் இறுதி வரை தன்னை நிரூபிக்க முடியாமல் போவது. அவன் அரசியல் தரகு செய்கிறான் என்பது சாக்குபோக்கு மட்டும் தான்.

 இது அகச்சீரழிவு பற்றின நாவல் அல்ல. இதில் அறம் சார்ந்த வீழ்ச்சி ஒன்றும் இல்லை. வியாபாரம், அரசு வேலை, மென்பொருள் வேலை என எதை செய்தும் மேலே வருகிறவருக்கும் இந்நாவல் நாயகனின் தத்தளிப்பு இருக்கும். ஒரு தலித் படிப்பு, வேலை, உழைப்பு மூலம் பெயர் பெற்று வெற்றியடைகிறார் என்று கொள்வோம். அப்போதும் அவருக்கு தனக்கு ஒரு பிராமண வெற்றியாளனுக்கு உள்ள எதுவோ ஒன்று சமூக அளவில் குறைகிறது எனும் உணர்வு இருக்கும். “ரோலக்ஸ் வாட்சின்” நாயகன் பெரும் செல்வந்தன் ஆன பிறகும் பொருளாதார அளவில் வெற்றியடையாத, ஆனால் உள்ளார்ந்து நிறைவும் கண்ணியமும் கொண்ட, தன் நண்பன் சரவணனுக்கு சமூக அளவில் உள்ள ஏற்பு தனக்கு இல்லை என புரிந்து கொள்கிறான்.  
எனக்கு இந்த நாவல் அரவிந்த் அடிகாவின் White Tigerஐ நினைவுபடுத்தியது. ஆனால் வைட் டைகர் போல் நம் சமகால சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்நாவல் அளிப்பதில்லை. தகழி சிவசங்கரப் பிள்ளையின் “ஏணிப்படிகள்” எனும் மலையாள நாவலும் நினைவு வந்தது. அது இந்திய விடுதலைப்போராட்ட காலத்தில் கேரள அரசியல் சூழலில் துவங்குகிறது. ஒரு எளிய குமாஸ்தா எப்படி பல்வேறு விட்டுக்கொடுத்தல்கள் மூலம் அதிகார தரகனாகி உச்சாணிக்கொம்பை அடைகிறான், அவன் எப்படி தன் மனசாட்சியை விற்று லௌகீக வாழ்வில் வெல்கிறான், அப்படி அவன் சீரழிவுக்கு காரணம் என்ன என மிக விரிவாய் அலசும் நாவல் அது. சாமர்த்தியமும் அறமின்மையும் மேலெழும் போது மனிதன் எப்படி துணிச்சலானவனாய் எதற்கும் கலங்காதவனாய் ஆகிறான் என “ஏணிப்படிகள்” காட்டுகிறது. ஆனால் அந்த கலங்காத துணிச்சலுக்கு பின்னால் ஒவ்வொரு கணமும் தான் அழிந்து போவேனோ எனும் பீதி இருக்கிறது. இப்படியான மனிதர்கள் குரங்கு போல. வாலில் சதா நெருப்பெரியும் குரங்குகள்.
தன் பொருளாதார வலிமையை நினைத்து பெருமைப்படும் “ரோலக்ஸ் வாட்சின்” நாயகன் உள்ளூர உணரும் கலக்கம் இதே போன்றது தான். ஆனால் “ஏணிப்படிகள்” போல் ஆழமான உளவியல், வரலாற்று பார்வையோ சித்தரிப்புகளோ “ரோலக்ஸ் வாட்சில்” இல்லை. இதை நான் சரவணன் சந்திரனின் கட்டுரைகளிலும் கண்டிருக்கிறேன். அவரிடம் ஒரு ஒளிக்கீற்று தோன்றும். ஆனால் அதை வளர்த்தெடுக்க மாட்டார். தேசலாய் தொட்டுக் காட்டி விட்டு சென்று விடுவார்.
“ரோலக்ஸ் வாட்ச்” தலைப்பே எனக்கு பிடித்திருந்தது. சமீபத்தில் இவ்வளவு பொருத்தமான தலைப்புள்ள நாவலை பார்த்ததில்லை. இதில் நாயகன் ஒரு போலி ரோலக்ஸ் வாட்ச் வாங்க வேண்டி ஒரு நண்பரிடம் கேட்க அவரோ போலி வாட்ச் உற்பத்தியாளர்கள் ரோலக்ஸ் வாட்சை மட்டும் போலி செய்ய மாட்டோம் எனும் கொள்கையை பின்பற்றுகிறார்கள் என்கிறார். ஆனால் கடைசியில் அவருக்கு நண்பர் ஒரு ரோலக்ஸ் வாட்சை பரிசளிக்கிறார். அது உண்மையானதா போலியானதா என இறுதி வரை அவனால் கண்டிபிடிக்க முடியாது. அந்த போலி ரோலக்ஸ் வாட்ச் உண்மையில் அவன் தான். அவனால் என்றைக்குமே தன் நண்பனான சந்திரன் போல் ஒரிஜினல் ஆக முடியாது. ரோலக்ஸ் வாட்ச் அவனைப் போன்ற போலிகளுக்கான குறியீடு.
துவக்கத்தில் இருந்தே இந்நாவல் ஆண்-பெண் உறவை மையமிட்டுத் தான் போலித்தனத்தை சித்தரிக்கிறது. ஒரு தரகனாய் அவன் வாழும் வாழ்வின் சிக்கல்கள், நுணுக்கங்களை அது பதிவு செய்வதே இல்லை. திவ்யா எனும் மேற்தட்டுப் பெண் நாவலின் நாயகனை எப்படி ஒரு அடிமை போல் நடத்துகிறாள் என்பது தான் நாவலின் முக்கிய சுவாரஸ்யம். அவள் அவனிடம் அன்பு காட்டுகிறாள். அவனுக்கு மேற்தட்டு வாழ்வின் நுணுக்கங்களை சொல்லித் தருகிறாள். பணமும் ஆடையும் தருகிறாள். படுக்கையில் புரிதலுடன் கனிவுடன் இருக்கிறாள். ஆனால் அதேவேளை அவன் அவளுக்கு இணையல்ல என்பதையும் சுட்டிக் காட்டியபடியே இருக்கிறாள். அவளது திருமணத்துக்கு பின்னும் இருவரின் உறவு தொடர்கிறது. ஒருமுறை அவள் தாம் இருவரும் செய்கிற “கெட்ட” காரியத்துடன் உயர்வான ஆட்களை ஒப்பிடக் கூடாது எனச் சொல்கிறாள். இது அவனை காயப்படுத்துகிறது. அவள் தனக்குள் இருக்கும் கழிசடையின் வடிகாலாக அவனைப் பார்க்கிறாள். அவன் அவளுக்கு பணரீதியாய் இணையாக முடியாது என்பதால் அவளால் அவனை அப்படி பார்க்க முடிகிறது. நடத்த முடிகிறது. ஆனால் அவன் செல்வந்தன் ஆன பின் அவனுக்கு அவள் மீது அலுப்பு ஏற்படுகிறது. அவளுக்கும் உறவு கசக்கிறது. ஒருநாள் சகஜமாய் பிரிந்து விடுகிறார்கள். காரணம் இதற்கு மேல் அந்த உறவுக்கான நியாயம் அவனது பொருளாதார/சமூக சமக்குலைவில் இல்லை என்பது. அவன் அவளுக்கு சமம் ஆன பின் அவளால் அவனை முன்போல் நடத்த முடியாது. அவனுக்கும் அவள் மீது பழைய சார்பு இல்லை.
அவன் ”மெத்தையில் இட்ட அட்டையை” போன்றவன் எனக் காட்ட நாவலில் இந்த உறவு மட்டுமே போதும். அதற்கு மேல் வேறு தளங்களில் அவன் எப்படியான மாறுதல்களுக்கு உள்ளாகிறான், அவனது ஆன்மீக, உளவியல் தத்தளிப்புகள் என்ன என்பதை சரவணன் சந்திரனால் காட்ட முடியவில்லை, அல்லது அவர் அதற்கு முயற்சி எடுக்கவில்லை. இப்படி நாவல் எங்குமே பறந்தெழாமல் உறவுநிலை சிக்கல்கள் பற்றி மட்டுமே பேசி சுருங்கிக் கொள்கிறது. இது இந்நாவலின் இலக்கியத் தரத்தை பெருமளவு தாழ்த்துகிறது.
சரவணன் சந்திரனின் நடை வாரமலரில் வரும் கதைகளில் வருவதைப் போன்றது. “அவன் ஓட்டலுக்கு போனான். ரெண்டு பூரி சாப்பிட்டான். எழுந்து வீட்டுக்கு வந்தான்” என்பது போல செய்தி கூறும் நடை. ஓட்டல் எப்படி இருந்தது, பூரி எப்படி சுவைத்தது, அதன் வாசனை, அது வயிற்றில் ஏற்படுத்திய புரட்டல் எப்படி இருந்தது போன்ற தகவல்கள் இருக்காது. நவீன நாவல் முழுக்க நுண் தகவல்களால் ஆனது. ஆனால் சரவணன் சந்திரன் எதையுமே விவரிக்காமல் எளிய தகவல்கள் மூலம் சுருங்க கூறிப் போகிறார். இது ஒருவிதத்தில் நாவலை வாசிப்பதை சுலபமாக்குகிறது. எந்த தடையுமின்றி இரண்டு மூன்று மணிநேரத்தில் படித்து விடலாம். ஆனால் வாசிப்பனுபவத்தை தட்டையாக்குகிறது.
இதனால் தான் நடையை பொறுத்த மட்டில் ஜனரஞ்சக வாசகர்களுக்கு இந்நாவல் நிச்சயம் சிலாகிக்கக் கூடியதாய் இருக்கும். மொழியை எடுத்துக் கொண்டால் என்னைக் கவர்ந்தது ஒரே ஒரு உவமை தான். ஒரு ஆளை கூட்டமாய் மொத்திக் கொண்டு இருப்பார்கள். அவன் உடம்பில் அடி விழுகிற ஒலி பீமபுஷ்டி அல்வாவை கத்தியால் தட்டுகிற போது வருகிற ஒலியை போன்றது என்பார். இதைக் கேட்கையில் நமக்கு உண்மையில் அந்த சுளீர் எனும் சத்தம், அடியின் போது எலும்பில் சதை அழுந்தி வெளிவருகிற ஒலி கேட்கிறது. எவ்வளவோ காட்சிகளை அவர் இது போல் துல்லியமாய் காட்சிபூர்வமாய் சித்தரித்திருக்க முடியும். ஆனால் அவர் கதையை சொல்கிறாரே ஒழிய ”காட்டவோ” “கேட்க, முகர” வைக்கவோ முயலவில்லை
இந்நாவலின் முதல் நாற்பது பக்கங்களில் சரவணன் சந்திரனின் இந்த தனித்துவமான கதைகூறலும் நடையும் இருக்கிறது. ஆனால் அடுத்த 120 பக்கங்களுக்கு நாவலுக்குள் சாரு நிவேதிதாவின் ஆவி புகுந்து விடுகிறது. முழுக்க சாருவின் மொழியில் எழுதுகிற சிலரை படித்திருக்கிறேன். ஆனால் சாருவே கூடுவிட்டு கூடு தாவி இன்னொரு எழுத்தாளரின் நாவலை பாதியில் ஹைஜேக் செய்து போவதை முதன்முறை பார்க்கிறேன். மேற்தட்டு வட்ட நண்பர்கள், அவர்களின் போதையும் கொண்டாட்டமுமான வாழ்க்கை, தாராளமாய் கிடைக்கும் பெண்ணுடல், பெண்களிடம் அப்பாவியாய் மாட்டும் நாயகன், ”எனக்கு இப்படித் தான் ஒரு நண்பன் இருந்தான்” என கதை நடுவே ஆரம்பித்து போகும் அரட்டைக் கதைகள், வாசகனிடம் அரட்டை அடிப்பது போன்ற எகத்தாளமான மொழி என நாற்பது பக்கங்கள் கடந்ததும் இறுதி வரை முழுக்க சாருவை பிரதியெடுக்கிறார் சரவணன் சந்திரன்.
 சாரு எப்படி நாவலின் கதையை நகர்த்த தெரியாமல் ஊர்க்கதைகளை எல்லாம் சரடு விட்டு நூறு பக்கங்களை ஓட்டுவாரோ அதையே சரவணன் சந்திரனும் செய்கிறார். இதில் வருகிற பெரும்பாலான துணைக்கதைகளால் நாவலின் மைய விவாதத்திற்கு பயம் இல்லை. உதாரணமாய், நாயகனின் தோழி ஒருத்தி ஒரு பண்பாடற்ற ஆளைத் திருமணம் செய்து அவதிப்படுகிறாள். ஒரு சினிமா நடிகன் செக்ஸ் பைத்தியமாய் அலைகிறான். ஒரு குடிகார மாமா வருகிறார். அவரது அழிச்சாட்டியங்களை எப்படி பிறர் பொறுக்கிறார்கள் என நாவல் சொல்கிறது. இதற்கும் நாவலின் பிரச்சனைக்கும் சம்மந்தமில்லை. நாவல் முட்டுசந்தில் வந்து நிற்கும் போது நாவலாசிரியர் இது போல் நம்மை ஜாலியாக ஊர் சுற்றவும் வெட்டிக்கதை பேசவும் அழைத்துப் போய் விடுகிறார். இதே போலத் தான் நாயகனும் அவன் நண்பன் சந்திரனும் அவர்கள் படித்த சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு போகும் காட்சியும், நாயகனுக்கு உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுக்கும் அத்தியாயமும் வெறும் தொங்கு சதைகளாய் உள்ளன.
சாருவின் 400 பக்க நாவல்கள் அடிப்படையில் 80 பக்கம் தான் கதையை வைத்திருக்கும். மிச்சம் முழுக்க ஜல்லி தான். சரவணன் சந்திரனின் நாவல் ஐம்பது பக்கங்களுடன் முடிய வேண்டியது. கூடுதலாய் நூறு பக்கங்களை வில்லுப்பாட்டால் நிறைக்கிறார்.
நாயனுக்கும் திவ்யாவுக்குமான உறவு பற்றின இடங்கள் எனக்கு சக்கரியாவின் “பாஸ்கர பட்டேலரும் எனது வாழ்வும்” நாவலை கூட நினைவுபடுத்தியது. நிச்சயம் இந்த நுணுக்கமான இடத்துக்காக இந்நாவலை ஒருமுறை படிக்கலாம். மூன்று மணிநேரத்தை அரட்டையாய் எதையாவது வாசித்து பொழுதுபோக்க விரும்புகிறவர்களுக்கும் இந்நாவலை பரிந்துரைக்கலாம்.
பின்குறிப்பு: இந்நாவல் பற்றி பிரபு காளிதாஸின் முகநூல் குறிப்பு படித்தேன். இதை மிக விஷுவலான நாவல் என்கிறார். ஒன்று பிரபுவுக்கு விஷுவலான மொழி என்றால் என்னவென தெரியவில்லை அல்லது அவருக்கு சரியாக வாசிக்க தெரியவில்லை. இளந்தலைமுறையினரின் angst இந்நாவலில் வெளியாகி இருப்பதாய் கூறுகிறார். Angst என்பது ஒரு தத்துவார்த்தமான சிக்கல். இது போன்ற சொற்களை போகிற போக்கில் தூக்கிப் போடும் முன் கூகிளிலாவது தேடிப் பார்க்கலாம். A feeling of deep anxiety or dread, typically an unfocused one about the human condition or the state of the world in general என்பது தான் angst. இந்நாவலில் human condition பற்றின விவாதம் எங்கு வருகிறது? எங்கும் இல்லை. மனித நிலை குறித்த அச்சம் என்பது இருத்தலியலோடு தொடர்புள்ள உணர்வு. இந்நாவலுக்கும் இருத்தலியலுக்கும் என்ன சம்மந்தம்? ஒன்றும் இல்லை. அன்புள்ள பிரபு, angst சார்த்தர் அல்லது காம்யு நாவல்களில் வரும் ஒரு தத்துவ/உளவியல் சிக்கல். ஒரு சொல்லின் பின்னால் உலகின் முக்கியமான கிளாசிக்குகள் உள்ளன. இருத்தலியம் போன்ற தத்துவங்கள் உள்ளன. உங்களுக்கு ஒருவரை பிடிக்கும் என்றால் கட்டியணைத்து முத்தம் கொடுங்கள். அவர் நாவலை நீங்கள் சிலாகிப்பதற்காய் எங்கோ போகிற சார்த்தரின் கையை பிடித்து இழுக்காதீர்கள்.

Comments