அன்புக்கான நேரமும் இடமும்


அன்புக்கான நேரத்தைக் கூட தனியாய் அளந்து வைத்திருக்கிறாய் என மனைவி அடிக்கடி குற்றம் சாட்டுவாள். அப்போதெல்லாம் நான் அதை ஏற்றதில்லை.

குழந்தை பிறந்து வள்ர்ந்து வருகிற இப்போது நான் என் நாயுடன் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைந்து வருவதை குறிப்பாய் உணர்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் முன்பு நான் என் நாயுடன் தினமும் ஒரு மணிநேரமாவது பேசுவேன். அது சுத்தமாய் கவனிக்காது. ஆனாலும் நான் லொடலொடவென அதனுடன் பேசுவதில் தனி மகிழ்ச்சி அடைவேன். அது மட்டுமல்ல, நான் வீட்டில் எங்கிருந்தாலும் என்ன வேலை பண்ணினாலும் நாய் என் காலடியிலேயே இருக்கும்.
குளிக்கும் போது வாசலில் காவல் இருக்கும். நான் சாப்பிட்டால் அதுவும் சாப்பிடும். போன் அடித்து நான் எடுக்காவிட்டால் குலைத்து ரகளை பண்ணும். ரொம்ப போரடித்தால் அதன் முகத்தில் பொய்யாய் குத்தி விளையாடுவேன். முகத்தில் என் முஷ்டி படும் முன் அது சரியாய் கவ்வி விட வேண்டும் என்பதே விதிமுறை.

இப்போது வீட்டில் பெரும்பாலான நேரம் குழந்தையுடனே இருக்கிறேன். எழுதும் போதும் சாப்பிடும் போதும் குழந்தை என் தோளில் இருக்கிறது. என் கவனம் முழுக்க குழந்தை பற்றின வேலைகளிலும் பிரச்சனைகளிலுமே. அது சாப்பிட விரும்புகிறதா, தூங்க வேண்டுமா, எப்படி அழுகையை நிறுத்துவது, எப்படி சிரிக்க வைப்பது, எப்படி தூங்க வைப்பது இப்படி என் வீட்டிலுள்ள நேரம் மையம் கொண்டு விட்டது.

இயல்பாகவே நாய் குழந்தையை தன் போட்டியாக நினைக்கிறது. இருவரையும் பக்கத்தில் வைக்க முடியாது. இதனால் நாய் இப்போது என் பக்கத்தில் இருப்பதில்லை. சற்று தொலைவில் அமர்ந்து என்னையே கவனிக்கிறது. அது பிறந்த பின் இவ்வளவு நாட்கள் அதன் அருகே நான் இல்லாமல் இருப்பது இப்போது தான் முதன்முறை.

நாய் எனக்காய் ஏங்கிப் போயுள்ளது அதன் உடலில் தெரிகிறது. முன்பெல்லாம் நான் மணிக்கணக்காய் கொஞ்சினாலும் மதிக்காது. இப்போது நான் சில நிமிடங்கள் சீராட்டினாலும் அப்படி உற்சாகம் கொள்கிறது. வீட்டுக்குள் வரும் போது ஒரு சின்ன பிஸ்கெட் துண்டு கொண்டு கொடுத்தால் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.
அதற்காய் கூடுல் நேரம் ஒதுக்கி செலவழிக்க நினைக்கிறேன். அப்போது தான் புரிகிறது என்னிடம் கூடுதலாய் நேரம் அப்படி இல்லை என.

ஒருவேளை நான் காலையில் சிக்கிரம் எழுந்தால் கூட செய்வதற்கு வேறு வேலைகள் தோன்றி விடும். வெளியே அழைத்துப் போனால் கூட நான் இதுவரை அதனுடன் செலவழித்த காலத்துக்கு ஒப்பாகாது. என் நாய்க்கு என்று என் வாழ்வில் இருந்த நேரத்தை மற்றொருவர் பறித்து விட்டார். அதை இனி மீட்க முடியாது.

அன்புக்கு அளவில்லை தான். ஆனால் அன்பு நாம் இருக்கும் இடம், நமக்கு தரப்பட்ட நேரத்தால் வடிவம் தரப்படுகிறது. இடத்துக்கும் நேரத்துக்கும் உள்ள கட்டுப்பாடு அன்புக்கும் வந்து விடுகிறது. இடத்தையும் காலத்தையும் அளப்பது போல் அன்பையும் தேக்கதண்டியால் அளக்க நேர்கிறது.

இதனால் தான் முற்றிலும் வேறொரு இடத்திற்கு கால அட்டவணைக்கு மாறும் போது நாம் அன்பால் நுரை தப்புகிறோம். அன்பை மிதமிஞ்சி பொழிகிறோம். டாஸ்மாக் ஒரு உதாரணம்.

Comments