Thursday, April 14, 2016

தூற்றுவதன் உளவியல்

திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் பேஸ்புக்கில் சிலர் மனுஷ்யபுத்திரனை பகடி செய்து எழுதியிருப்பதை படித்தேன். வா.மணிகண்டன் ஒரு தனி ஸ்டேட்டஸே போட்டிருந்தார். “இனிமேல் கூவுவதை குறையுங்க. அரசியல் அதற்கும் மேலே…” என எழுதியிருந்தார். இம்முறை மனுஷுக்கு இடம் கிடைக்காது என்பது தெரிந்தது தான். அதனால் எனக்கு இந்த பட்டியல் எல்லாம் வியப்பாக இல்லை. ஆனால் இந்த சந்தர்பத்துக்கு என்றே காத்திருந்தது போல் அவர் மேல் ஏன் விழுந்து குதற வேண்டும் எனத் தான் புரியவில்லை.
 அவருக்கு அரசியல் பின்புலமோ பணபலமோ கட்சிப்பதவியோ இல்லை. தனிமனிதனாய் மிக மிக சமீபமாய் கட்சியில் நுழைந்த ஒருவர் இன்று தேர்தலில் இடம் பெறக் கூடும் என எதிர்பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதே ஒரு சாதனை தானே. நேற்று வரை அவர் எப்படி இருந்தார் என எனக்குத் தெரியும். இன்று அவர் குரலை வெகுஜன மீடியா கவனிக்கிறது. செய்திகளின் திசையை திருப்புகிறவராக இருக்கிறார். எதிர்க்கட்சிக்காரர்களுக்கு அவர் மீது அபிமானம் உள்ளது. ஒரு அதிமுக நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் மனுஷ்யபுத்திரனை வெகுவாக சிலாகித்தார். “அவருக்கு அரசியல் நெளிவுசுளிவுகள் கைவந்து விட்டன. குரல், உடல்மொழி எல்லாம் அபாரம்” என்றார். சொன்னவர் இருபது வருடங்கள் அரசியலில் பழுத்தவர். முன்பு முக்கிய பொறுப்பு வகித்தவர். மனுஷ் மிக சமீபமாய் அரசியலுக்கு வந்தவர். இந்த குறைந்த காலத்தில் அவர் கட்சியின் குரலாக மாறி இருக்கிறார். சல்மா மற்றும் பல வருடங்களுக்கு முன்பே கட்சியில் இருக்கிற இன்னும் பிறரை தாண்டி சென்றிருக்கிறார். இதெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம்?
நாம் பேசுவதை டீக்கடையில் நாலு பேர் கூட மதிப்பார்களா? பேஸ்புக் தாண்டி நமக்கு என்ன இடம் இருக்கிறது? இன்று இன்னொரு போக்கு உருவாகி வருகிறது. பொதுமக்கள் கூட தமக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாய் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். பேச்சில் போகிற போக்கில் எனக்கு கட்சியில் இவரைத் தெரியும், அவரைத் தெரியும் என்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் அரசியல் அதிகாரத்துக்காக உள்ளூர ஏங்குகிறோம். இப்போது மனுஷ்யபுத்திரனை நோக்கி கல் எறிகிறவர்களே அவர் இடத்தில் தாம் ஏன் இல்லை எனத் தான் மருகுகிறார்கள்.
 இதற்குப் பதிலாய் நாம் ஏன் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ளக் கூடாது? நான் அன்று மனுஷ் ஒரு வட்டச்செயலாளருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். எப்படி கட்சியின் இருவேறு நிலைகளுக்கு ஏற்ப தான் இரு தர்க்கங்களை வைத்துள்ளதாய் கூறினார். முந்தின தேர்தல் முடிவுகளுக்கு பின் முதலில் தான் டிவியில் தோன்றிய போது எப்படி தேர்தல் முடிவை வேறு கோணத்தில் காட்டி விவாதத்தை மடைமாற்றினார் எனக் கூறினார். வட்டச்செயலாளர் திகைத்து விட்டார். பிளேட்டோவை படித்தவர்களுக்குத் தெரியும். Dialogues முழுக்க அவர் எப்படி ஒரு கருத்தை பல கோணங்களில் அணுகி நியாயப்படுத்தவும் முறியடிக்கவும் செய்வது என தன் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தபடியே இருப்பார்.
 கருத்துக்களை கட்டமைப்பதற்கும் ஒரு கட்சி அதிகார அரசியலை அடைவதற்கும் ஒரு தொடர்புள்ளது. ரவிக்குமார் இல்லாமல் வி.சி.க இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. பொது அறிவுஜீவிகள் ஒரு கட்சிக்கு முக்கிய பலம். தி.மு.க இதை உணர்ந்தே மனுஷ்யபுத்திரனுக்கு முக்கிய இடத்தை கொடுக்கிறது. அவர் பிறந்த நாளுக்கு ஸ்டாலினே வீட்டுக்கு வந்து வாழ்த்திப் போகிறார்.
 ஆனால் தி.மு.க வி.சி.க போல் ஒரு சிறிய் கட்சி அல்ல. தி.மு.கவில் மூன்று தலைமுறையினர் பின்னால் கியூவில் நிற்க மூத்து நரைத்தவர்கள் நாற்காலியை கெட்டியாக பிடித்தபடி இருப்பார்கள். ரவிக்குமாரால் தி.மு.கவுக்குள் இப்போது போல வளர்ந்திருக்க முடியாது.
அரசியல் அதிகாரம், தேர்தலில் சீட் வாங்குவது, வெல்வது எல்லாம் பேச்சுத்திறன் மட்டும் அல்ல தான். நான் சமீபமாய் ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்த தோழியை சந்தித்தேன். அவர் கோடீஸ்வரர். தொடர்ந்து கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்தவர்களில் மூன்றாவது தலைமுறை. அவரிடம் “இந்த முறை உங்களுக்கு சீட் கொடுப்பாங்களா?” எனக் கேட்டேன். அவர் சொன்னார் “பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அதுக்கே ஏகப்பட்ட செலவு ஆகும். தேர்தலில் நிற்பதெல்லாம் சாத்தியமே இல்லை”. அவருக்கே என்ன நிலை பாருங்கள்.
ஆனால் அரசியலில் ஒருவர் எப்போது பெரும் உயரத்துக்கு செல்வார் என கணிக்கவே முடியாது. இப்போது தூற்றுகிறவர்கள் எல்லாம் அப்போது என்ன பண்ணுவார்கள் என யோசிக்கிறேன். சத்தமே இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். அது கூடத் தேவையில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே இவர்கள் அவரிடம் சிரித்துக் கொண்டே வணக்கம் போடுவார்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த போது கட்சியின் அதிகார உள்வட்டத்தில் உள்ள இலக்கிய பிரமுகர்களிடத்து நம் இலக்கியவாதிகள் எப்படி எல்லாம் வளைந்தார்கள் எனப் பார்த்தோமே. ஏனென்றால் இவர்களாக வேண்டும் என்று தான் அவர்களே ஆசைப் படுகிறார்கள்.


No comments: