புத்தகத்தை பரபரப்பாக்குவது எப்படி? ஒரு கையேடு


புத்தக புரமோஷன் ஒரு தனிவேலை. அதற்கு என நேரம் ஒதுக்கி ஒரு மாதமாவது உழைக்க வேண்டும். முதலில் ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும்.

அடுத்து ஒவ்வொருவராய் பார்த்து புத்தகத்தை கொடுக்க வேண்டும். அதில் உள்ள பெர்சனல் டச் உதவும். கூடுதலாய் அவருடன் புத்தகத்துடன் சேர்ந்து போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடலாம். இதற்கு சமயோஜிதம் முக்கியம். (நானெல்லாம் ஆளைப் பார்த்த குஷியில் போட்டோவை மறந்து விடுவேன்.)

அப்படியே புத்தகத்தை கையெழுத்திட்டு கொடுப்பது போல் போட்டோ எடுக்க முடிந்தால் சால சிறந்தது.

நேரில் பார்க்க முடியாவிட்டால் குரியரில் அனுப்பலாம். நூறு புத்தகங்களை அனுப்பும் செலவைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

அவ்வளவு நூல்களை பதிப்பகம் கொடுக்காவிட்டால் நீங்களே இணையத்தில் ஆர்டர் பண்ணிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் நூல் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பிரதிகள் விற்பதாய் ஒரு பிம்பத்தை உருவாக்கலாம்.

இவ்வளவு புத்தகங்களை அனுப்பினால் போதாது. புத்தகங்கள் போய் சேர்ந்துள்ளனவா என போன் செய்து உறுதிப் படுத்த வேண்டும். அது மட்டுமல்ல பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். படிச்சிட்டீங்களா, அதைப் பற்றி ரெண்டு வரியாவது எழுதுங்களேன் என நச்சரிக்க வேண்டும். அதற்கும் ஒரு அளவு உண்டு. ஓவராய் நச்சரித்தால் அந்த வெறுப்பில் புத்தகத்தை குதறி விடுவார்கள்.

இலக்கிய எழுத்தாளர்களுக்கு இதில் ஒரு சிக்கல். எழுத்தாளர்கள் பரஸ்பரம் பாராட்டியதாக வரலாறே இல்லை. பிடித்திருந்தால் தமக்குள் வைத்துக் கொள்வார்கள். அல்லது போனில் ஓரிரு வார்த்தைகள் சொல்வார்கள். ஒரு தீர்வு நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இலக்கிய எழுத்தாளர்களுக்கு அனுப்புவது.

இதில் சில இரக்க சுபாவம் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் கூரியர் வந்ததும் அதைப் பிரித்து போட்டோ எடுத்து "இன்று தபாலில் வந்தது" என முகநூலில் போட்டு விடுவார்கள். இளங்கோ கிருஷ்ணன் உதாரணம். அவரை நிச்சயம் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

முகநூலிலும் டிவிட்டரிலும் மட்டும் எழுதுபவர்களிட்டது இந்த கோளாறு கிடையாது. போட்டிப்பொறாமை பெரிதாய் இருக்காது. உலகத்- தொழிலாளர்களே-ஒன்றுபடுங்கள் மனநிலையில் இருப்பார்கள். நம் கூட சுற்றியவன் புத்தகம் போட்டு விட்டானே என கொண்டாடுவர்கள். அதுவும் கூடப்படித்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது போன்றே கும்பலாக குதூகலமாய் வந்து மொய் எழுதுவார்கள். இவர்களுக்கும் புத்தகம் அனுப்பலாம். ஏமாற்ற மாட்டார்கள்.

முன்பு இலக்கிய எழுத்தாளர்கள் பிளாகர்களைத் தேடிப் பிடித்து புத்தகம் கொடுப்பார்கள். அவர்கள் மூலம் தீ போல் உங்கள் புத்தகம் இணையம் மூலம் பரவி விடும். இப்போது அவர்கள் இடத்தில் முகநூல் பதிவர்கள். அவர்கள் ஈகோ, கல்மிஷம் இல்லாதர்கள். திராட்சை புளிக்குது என்று சொல்லவே மாட்டார்கள். அதுவும் நமக்குப் போய் புத்தகம் அனுப்பிட்டாங்களே எனும் புல்லரிப்பில் மறக்காமல் எழுதுவார்கள்.

இலக்கிய எழுத்தாளர்கள், விமர்சகர்களின் அறை முழுக்க புத்தகங்களாய் இறைந்து கிடக்கும். புதிதாய் உங்கள் நூல் தபாலை வேறு பார்த்ததும் அவர்களுக்கு நீண்ட கால மனைவியை நிர்வாணமாய் பார்ப்பது போல் இருக்கும்.

ஆனால் இலக்கியவாதிகளுக்கு அனுப்பவதில் ஒரு சின்ன பயன் உண்டு. படிக்கிறார்களோ பிடிக்கிறதோ உங்கள் நூலை நினைவு வைத்திருப்பார்கள். பிற்பாடு என்றாவது உங்கள் நூலை ஒரு பரிந்துரைப் பட்டியலில் சேர்ப்பார்கள். யாராவது கேட்டால் இளந்தலைமுறை எழுத்தாளர் என உங்களை குறிப்பிடுவார்கள். புத்தக அட்டைக்கு அப்படியான மகத்துவம் உண்டு.

கூடுதலாக் பணமும் நேரமும் இருந்தால் புத்தக அறிமுக கூட்டம் நடத்தலாம். இதனால் புத்தகம் எல்லாம் விற்காது. ஆனால் வாசகர்களை ஒரே இடத்தில் சேர்க்கவும் அவர்களுக்கு உங்களை நினைவு படுத்தவும் உதவும்

இதை கேலிக்காக சொல்லவில்லை. ஒரு புத்தகம் பற்றின சலசலப்பு கட்டமைக்கப் படுகிற ஒன்று. தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவே உண்மை. வாசக வட்டம் உள்ள எழுத்தாளர்களுக்கு இந்த தொல்லைகள் இல்லை. அசைன்மெண்டாய் வட்டத்தினருக்கே கொடுத்து விடுவார்கள். ஆனால் அதற்காய் பாசமிகு  தம்பிகளை வருடம் முழுக்க தயாரிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் இந்த புரமோஷன் வேலையை பார்க்க தனியாக ஒரு எடிட்டர் இருப்பார். அவர் நான் மேற்குறிப்பிட்ட அத்தனையும் செய்வார்.

எழுத்தாளன் தனியாக இதை செய்வது ஒரு கொடுமை தான். அதிக வேலைப் பளு கொண்டவர்களுக்கு முழி பிதுங்கிப் போகும். மேலும் இதற்கு ஒரு தனி புத்திசாலித்தனம் வேண்டும். நாக்கு சாமர்த்தியம் வேண்டும்.

நல்ல புத்தகம் தானே விற்காதா? நிச்சயம். வெளியாகி முதல் மாதத்திலே பரபரப்பாய் விற்பனை ஆனால் அது பதிப்பாளருக்கு நல்லது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த புத்தகத்தை யாரும் சீந்த மாட்டார்கள். இப்படித் தான் சில வருடங்களுக்கு முன் வெளியான ஒரு டிவீட்களின் தொகுப்பு ஆரம்ப பரபரப்புக்கு பிறகு ஒரு பிரதி கூட கூடுதலாய் விற்கவில்லை.
நல்ல புத்தகங்களை பத்து வருடங்கள் கழித்து கூட வாங்கி வாசித்து பேசுவார்கள். என்னைப் பொறுத்த மட்டில் துரித ஸ்கலிதம் எந்த படைப்புக்கும் நல்லதல்ல.

புரொமோஷன் என்பது செயற்கையாய் உருவாக்கப்படுகிற கவனம். அதை விட இயற்கையாய் வாசகர்களின் பரிந்துரை மூலமாய் கிடைக்கிற கவனம் புத்தகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

புரொமோஷன் பதிப்பாளருக்கு மிக நல்லது. எழுத்தாளனுக்கு ஓரளவு நல்லது. பதிப்பாளர் பெண்ணுக்கு அப்பா. எழுத்தாளன் பெண்ணுக்கு கணவன்.

Comments