எழுத்து எனும் பேய்

கடந்த சில மாதங்களாக நான் தினமும் சில மணிநேரங்களாவது எழுதுகிறேன். ஓய்வாக படித்து புத்தகம் வாசித்த, டி.வி பார்த்த, பகற்கனவு கண்ட நாட்கள் வெறும் கனவாகி விட்டன. எழுத்து ஒரு வேலை போல் ஆகி விட்டது. குறிப்பாய் தொடர்ந்து இரு தொடர்களை (தினமணி மற்றும் குமுதம்) எழுத ஆரம்பித்த பின் கராறாய் திட்டமிட்டு எழுத வேண்டியதாகி விட்டது. வேலை முடித்து வந்த பின் இரவிலும் காலையிலும் தொடர்ச்சியாய் மூன்று நான்கு கட்டுரைகள் எழுதுவேன். இது போக என் முனைவர் பட்ட ஆயுவு சார்ந்த எழுத்துவேலை. அது போக உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்ற பத்திரிகைகளுக்காக எழுதுவது. மிச்ச நேரத்தில் பிளாக், பேஸ்புக்கில் எழுதுவது. எழுத்து என் தினசரி இயக்கத்தின் தவிர்க்க இயலாத பகுதி ஆகி விட்டது.

 சில வாரங்களுக்கு முன்பு நண்பர் டேவிட் ஒரு நாடகம் எழுதித் தரக் கேட்டார். கொல்கொத்தாவுக்கு சென்றிருந்த போது விமான நிலையத்திலும் விமானத்திலும் இருந்து எழுதினேன். கொல்கொத்தாவின் தெருக்களில் சுற்றிய போதும், உணவகத்தில் இருந்தும், பிறகு அறையிலும், பாஷா பரிஷத் விருது மேடையிலுமாய் தொடர்ந்து எழுதி அந்நாடகத்தை முடித்தேன். என் மனைவியிடம் கூறிய போது “ஒரு ஊருக்கு போன ஜாலியா சுத்தி பார்க்காம எழுதிக்கிட்டா இருப்பே? நீயெல்லாம் திருந்த மாட்டியா?” என திட்டினாள். எனக்கு கொல்கொத்தாவில் அலைந்து திரிவது பிடித்திருந்தது. ஆனால் அந்த  அலைச்சலின் மத்தியில் எழுதும் போது தான் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது. எழுத்து என்னை மீண்டும் ஒரு மையத்தில் பொருத்தி நிலைப்படுத்த உதவியது. குழப்பங்களை, பயங்களை, கவலைகளை கடக்க செய்தது. ஒரு மணி நேரம் எழுதியபின் மனம் அலம்பி விட்டது போல் துலக்கமாகும். அந்த உணர்வுக்காகத்தான் மீண்டும் மீண்டும் எழுத்தில் போய் விழுகிறேன்.
ஆனால் எழுத்து ஒரு நெருக்கடியாகும் போது சிக்கல் தோன்றுகிறது. விருப்பப்படி எழுதுவது போக ஒரு கால அட்டவணைக்கு ஏற்ப தினமும் எழுதுவது களைப்படைய வைக்கிறது. இந்த இரண்டு தொடர்களும் என்னை அப்படித் தான் அலுக்க வைத்து விட்டன. எழுதி எழுதி திகட்டி விட்டது. சரி போதும் என ஒருநாள் முழுக்க எழுதாமல் இருந்தேன். கடந்த மூன்று நான்கு மாதங்களில் நான் முழுக்க எழுதாமல் இருந்த முதல் நாள் அது.
அன்று எப்படிப் போயிற்று? மிகவும் உற்சாகமாய், விடுதலையாய், மகிழ்ச்சியாய் உணர்தேன். கட்டற்று காற்றைப் போல் மனம் இருந்தது. இது போல் அடிக்கடி எழுத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் அன்று மாலையே நான் காரணமின்றி கலங்க தொடங்கினேன். மனம் ஒருமுகப்படாமல் சிதறிக் கொண்டே இருந்தது. விசித்திரமான சோகம் ஒன்று இருளை போல் என்னை மூடிக் கொண்டது. மது அருந்துவதை நிறுத்துபவர்களுக்கு withdrawal symptoms வரும் என்பார்கள். எழுத்து எப்படியான ஒரு போதை என அன்றைய தவிப்பு எனக்கு புரிய வைத்தது. தொடர்ந்து எழுதுவது நம் மூளையின் அமைப்பை, வேதியல் செயல்பாட்டை மாற்றுகிறது என நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுபவன் தனக்குள் வேறு ஒருவனாகிறான்.
அடுத்த நாள் மீண்டும் சற்று நேரம் எழுதினதும் மனதுக்குள் மீண்டும் வெளிச்சம் பரவியது. எழுதாமல் இருக்கும் போது நான் அந்நியமாக, துண்டித்து விடப்பட்டது போல் உணர்கிறேன். எழுதுவது மாறாக அன்றாட வாழ்வின் எந்த பிரச்சனையையும் கூலாக சந்திக்க உதவுகிறது. உதாரணமாய் நான் மூன்று மணிநேரம் எழுதி முடித்த பின் யாரும் என்ன சொல்லியும் என்னை கோபப்பட வைக்க முடியாது. போதை வஸ்து பயன்படுத்துவோர், குடிகாரர்கள் ஆகியோருக்கும் இதே நிலை தான். போதை ஏற்றிக் கொண்ட பின் அவர்களைப் போல மகிழ்ச்சியான, கூலான பேர்வழிகளை பார்க்க முடியாது. அன்றாட வாழ்வை மிக இயல்பாக நிதானமாய் கையாள்வார்கள். ஆனால் போதை கிடைக்காவிட்டால் வாழ்க்கையே தப்புத்தாளமாகி விடும்.
நிறைய எழுதுவது என் இயல்பும் அல்ல. நான் 27 வயது வரை வருடத்திற்கு சில கவிதைகள் மட்டுமே எழுதி வந்தேன். நான் இயல்பில் ஒரு சோம்பேறி. ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து படிப்பது, கனவு காண்பது, வேடிக்கை பார்ப்பது தான் என் ஒரே ஜோலி. சமீபமாய் நான் முற்றிலும் மாறி வந்திருக்கிறேன். சொல்லப் போனால் சில வருடங்களுக்கு முன்பு கூட நான் இப்படி இல்லை. அப்போது வாரத்துக்கு ஒருமுறை தான் எழுதுவேன். அதுவே போதுமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் நான் மெல்ல மெல்ல முற்றிலும் வேறொரு ஆளாக மாறி வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது.
போதையின் குணம் இது: போக போக அளவு போதாமல் ஆகும். பத்து பக்கங்கள் எழுதினாலும் எழுதாதது போன்றே தோன்றும். கை நோகும் வரை எழுத அவசியமாகும். வலுக்கட்டாயமாய் நிறுத்தினால் என்ன ஆகும்? போன வருடம் மேகாலயா சென்றிருந்த போது வேண்டுமென்று ஒன்றுமே எழுதாமல் இருந்தேன். காரில் சென்று கொண்டிருந்தேன். பக்கத்தில் ஆங்கில கவிஞரும் நாவலாசிரியருமான ஜீத் தயில் இருந்தார். அரட்டை அடித்தபடி வந்தோம். கடந்த சில மணிநேரமாக எழுதுவதற்கு ஒரு டாபிக் மாட்டியிருந்தது. பிறகு எழுதலாம் என தள்ளிப் போட்டிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டும் வெளியே மலைகளை வேடிக்கை பார்த்தும் வந்தோம். என் மனதில் எழுத வேண்டிய வரிகள் அப்போது தன்னிச்சையாக ஓடத் துவங்கின. என்னால் அதை நிறுத்த முடியவில்லை. மூன்று பத்திகள் கடந்ததும் இனியும் சரிப்படாது என லேப்டாப்பை திறந்து அப்படியே அந்த வரிகளை எழுதினேன். மனமும் உடலும் இசைவு கொண்டது.Comments

Jo said…
<<ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து படிப்பது, கனவு காண்பது, வேடிக்கை பார்ப்பது தான் என் ஒரே ஜோலி. சமீபமாய் நான் முற்றிலும் மாறி வந்திருக்கிறேன்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? ஏனென்றால் இந்த symptoms எனக்கும் இருக்கு :) .. கொஞ்சம் மாத்திக்கலாம்னு பார்க்கிறேன்.