Friday, March 25, 2016

இடதுசாரிகளும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் தொடர்ந்து தாக்கப்படுவது ஏன்?

(மார்ச் மாத “வெற்றி வேந்தனில்” வெளியான கட்டுரை)
இது பற்றி ஆர்ச்சிஸ் மோகன் Business Standard இணையதளத்தில் எழுதிய ஒரு நல்ல கட்டுரையை படிக்க நேர்ந்தது. வழக்கமாய் இப்பிரச்சனையை வலது-இடது தரப்புகளுக்கு இடையிலான புகைச்சலின் உச்சகட்ட மோதல் என்கிற தோரணையில் தான் ஊடகங்களில் விளக்குவார்கள். ஆனால் இக்கட்டுரையாளர் இந்த பிரச்சனைகள் பா.ஜ.காவால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிரச்சார வடிவம் என்கிறார். எதற்காக?
அதற்கு முன், கடந்த ஒரு வருடத்தில் நடந்த இந்துத்துவா சர்ச்சைகளை மனதில் ஓட்டிப் பாருங்கள். எழுத்தாளர்கள் கொல்லப்பட்டது, மாட்டுக்கறியை முன்வைத்து இஸ்லாமியரை கோமாதாவை தின்கிறவர்கள் என கட்டமைக்க உருவாக்கப்பட்ட சர்ச்சை இவை எல்லாம் ஒரு குறுகின காலத்தில் தேசம் முழுக்க அங்கங்கே பா.ஜ.கவின் உதிரி துணைக்கட்சியின் குட்டித்தலைவர்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. சில நாட்களில் இந்தியா முழுக்க இப்பிரச்சனைகளால் கொழுந்து விட்டெரியும் தோற்றம் உருவானது. பா.ஜ.க குட்டித்தலைவர்களும் குண்டர்படையும் யாராவது ஒருவரை தாக்குவதோ கொல்வதோ இப்பிரச்சனைக்கு தூண்டுகோலாக அமையும். அல்லது ஒரு மதக்கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்படும். இவையெல்லாம் ஏதாவது ஒரு மாநில தேர்தலுக்கு சற்று முன்பு சரியான டைமிங்கில் நடக்கும். தேர்தல் முடிந்ததும் பிரச்சனைகள் தடயம் இல்லாமல் மறைந்து விடும். எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட போதும் நான் இதே கோணத்தில் தான் இதை பார்த்தேன். எழுத்தாளர்கள் அல்ல பா.ஜ.கவுக்கு இலக்கு, தேர்தல். தேர்தல் வெற்றி மட்டுமே.

 பீகார் தேர்தலை முன்னிட்டு வலதுசாரி மேல்சாதி இந்துக்களை ஒன்று திரட்டும் நோக்கில் மாட்டுக்கறி பிரச்சார மையம் ஆக்கப்பட்டது. இந்தியா முழுக்க மாட்டுக்கறியை முன்னிட்டு கிடைத்தவர்களை எல்லாம் பா.ஜ.கவினர் தாக்கினார்கள். தலைவர்கள் சகட்டுமேனிக்கு அறிக்கை வெளியிட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் மோகன் பகவத் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போகும் நோக்கில் இட ஒதுக்கீட்டை திரும்ப பெறுவோம் என்றார். ஆனால் இட ஒதுக்கீடும் மாட்டுக்கறியும் சேர்ந்து தயிரும் காபியும் வயிற்றில் கலந்தது போல் மோசமான சேக்கையாகி தேர்தலில் பா.ஜ.கவை காலி செய்தது.
மேற்சொன்ன கட்டுரையின் தலைப்பே “பா.ஜ.க காங்கிரஸை விட இடதுசாரிகளை கண்டே அதிகம் அஞ்சுகிறது” என்பது தான். அப்படி பொருட்படுத்தத்தக்க மாற்றாக இடதுசாரிகள் இங்கு இருக்கிறார்களா என்ன? இங்கு தான் நாம் அடுத்த நடக்க உள்ள மே.வங்க, கேரள தேர்தல்களை கவனிக்க வேண்டும். இரு மாநிலங்களிலும் இடதுசாரிகள் ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளார்கள். ஹைதராபாத் மற்றும் ஜெ.என்.யு பல்கலைகளில் எ.பி.வி.பி மாணவர் அமைப்பை ஏவி விட்டு பா.ஜ.க சிறு பிரச்சனைகளை பெரிதாக்கியது. குஜராத் கலவரம் பற்றி இதுவரை எங்குமே மோடி விமர்சிகப்பட்டதில்லையா? எவ்வளவு கட்டுரைகள், எழுதப்பட்டுள்ளன, விவாதங்கள் நடந்துள்ளன. ஆனால் திடீரென அதை ஒட்டியும் மாட்டுக்கறியை முன்வைத்தும் இடதுசாரிகள் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள், புனித பசுவை இரக்கமில்லாமல் கொல்கிறவர்களை ஆதரிக்கிறவர்கள் என்றும் இடதுசாரிகளை பழிசுமத்தி போராட்டங்கள் நடத்தி, அடிதடி கலவரங்கள் நிகழ்த்தி, காவல்துறையை ஏவி அவர்களை ஒடுக்கியது பா.ஜ.க. அவர்கள் எதிர்பார்த்தது போல் இந்த உணர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளும் வன்முறையும் தேசிய கவனம் பெற்றது. இப்பரபரப்பை பயன்படுத்தி இடதுசாரிகள் ஒரு இந்து விரோத, தேசவிரோத கும்பல் எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க மேற்கொண்டது. இனி இந்தியாவில் யார் சிறுபான்மையினர் பக்கம் நின்று பேசினாலும் பா.ஜ.கவை விமர்சித்தாலும் அவர்கள் சுலபத்தில் தேசவிரோத அடைப்புக்குறிக்குள் அகப்பட்டு விடுவார்கள் என பா.ஜ.க எதிர்பார்க்கிறது. ஒரு விதத்தில் பா.ஜ.க விரித்த வலையில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் எளிதில் போய் மாட்டிக் கொண்டன.
பா.ஜ.கவினரின் அப்பட்டமான வன்முறை, அராஜகமான உணர்ச்சிகரமான அறிக்கைகள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு படுமுட்டாள்தனமாய் தோன்றின. தம் ஒவ்வொரு செயலையும் உலகமே கவனிக்கிறது என தெரிந்தும் இவர்கள் ஏன் இப்படி அநாகரிகத்தின் தலைமேல் நின்று ஒன்றுக்கு போகிறார்கள் என நாம் வியந்தோம். ஆனால் இவை அனைத்தும் திட்டமிட்ட நாடகம் ஒன்றின் பல்வேறு காட்சிகள் என இப்போது புரிய வருகிறது. இனி ஒரு பா.ஜ.க எம்பி “பசுவை கொல்கிறவர்களை என் கையாலே சுட்டுக் கொல்வேன்” என்றோ “தேசத்தை பிரிக்க நினைப்பவர்களை முச்சந்தியில் வைத்து கல்லால் அடித்து கொல்வோம்” என்றோ பேட்டி அளித்தால் யாரும் அதிர்ச்சி கொள்ள வேண்டாம். அத்தனையும் ஒத்திகை செய்யப்பட்ட வசனங்கள். இப்படிப் பேசினால் தான் விமர்சனம் வரும். கவனம் கிடைக்கும். அதன் வழி பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என உணர்ந்தே செய்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க மே.வங்க தேர்தலில் மம்தாவுக்கும் பா.ஜ.கவுக்கும் ஒரு மறைமுக கூட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மம்தாவுக்கு எதிரான இடதுசாரி ஓட்டுகளை சிதறடிப்பதே பா.ஜ.கவின் நோக்கம். அதே போல் கேரளாவிலும் இடதுசாரிகளின் வாக்கு வங்கியை கலைக்க விரும்புகிறார்கள். கேரளாவில் பா.ஜ.கவும் காங்கிரசும் மறைமுக புரிந்துணர்வுடன் தேர்தலில் பணியாற்ற திட்டமிட்டிருப்பதாய் சொல்கிறார்கள். அங்கும் இடதுசாரிகள் பலவீனப்படுவது இரு கட்சிகளுக்கும் லாபமளிக்கும். இதை கணக்கில் கொண்டே ஜெ.என்.யு சர்ச்சையில் இடதுசாரிகள் தாக்கப்பட காங்கிரஸ் மௌனமாய் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் என பா.ஜ.க எதிர்பார்த்தது. அது தான் இரு கட்சிகளுக்குமான ஒப்பந்தமும் கூட. ஆனால் ராகுல் காந்தி உணர்ச்சிவசப்பட்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்தார். அப்போது கட்சியின் சீனியர்கள் அவரை மேற்சொன்ன தேர்தல் வியூகத்தை சுட்டி முடிவை மாற்ற கேட்டிருக்கிறார்கள். ராகுல் மசியவில்லை. அவர் ஜெ.என்.யுவுக்கு சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நிலைமை முழுக்க மாறிப் போனது. காங்கிரஸின் பிற தலைவர்களும் வேறு வழியில்லாமல் பா.ஜ.கவை எதிர்க்க வேண்டியதாயிற்று.

இச்சம்பவத்தை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் தலைவர் வைத்யாவின் பேட்டி கவனிக்கத்தக்கது. அவர் ராகுலை குறி வைத்து “அரசியல் கட்சிகள் ஜெ.என்.யு சர்ச்சையில் தலையிடக் கூடாது. காங்கிரஸ் தன் பிம்பத்தை களங்கப்படுத்தக் கூடாது” என்கிறார். அதன் பொருள் ’நாம்’ கேரள தேர்தலுக்காய் உருவாக்கி உள்ள திட்டங்களை ராகுல் குழப்பி விட அனுமதிக்கக் கூடாது என்பது. ஏனென்றால் ஒரு பொது எதிரி விழும் போது எல்லா எதிரிகளுக்கும் பயன் கிடைக்கிறது, அந்த எதிரிகள் தமக்குள் நண்பர்கள் அல்ல என்றாலும்.

No comments: