Friday, March 25, 2016

வேகம்


நான் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் எனக்கு அருண் என ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு கணினியில் ஆர்வம் அதிகம். கணினியை கழற்றி பொருத்தும் அளவுக்கு சுயமாக கற்றுக் கொண்டவர். நான் அவருடன் கணினி, இணையம், மென்பொருள் பற்றி பேசிக் கொண்டிருப்பேன். ஒருநாள் எந்த இணைய சேவை வேகமானது என நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சொன்னார் “என் வீட்டு கணினியில் ஒரு இணையதளத்தை திறப்பதற்கே அரைநிமிடம் எடுக்கும். இணைப்பை சொடுக்கி விட்டு நடுவில் வேறு வேலை பார்ப்பேன். திறந்ததும் அதை கவனிப்பேன்”. நான் கேட்டேன் “வேகமான இணையம் இருந்தால் நன்றாய் இருக்குமல்லவா? காத்திருக்க வேண்டியதில்லையே?”. அவர் சொன்னார் “வேகத்தில் என்ன இருக்கிறது? வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்களுக்காய் காத்திருக்க தயாராய் இருக்கிறோம். டிராபிக்கில், அரசு அலுவலகங்களில், காண்டீனில் சாப்பாட்டுக்கு, இடத்துக்கு காத்திருக்கையில் தாமதமாகும் போது நாம் எரிச்சலாவதில்லையே. அப்படி இருக்க ஏன் ஒரு இணையதளம் நொடியில் திறக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்? அரைநொடியில் என்ன இழந்து விடப் போகிறோம். அந்த இடைவெளியில் வேறெதையாவது கணினியில் செய்யலாமே?”.

 நான் தற்போது பயன்படுத்துவது மலிவாய் வாங்கின ஒரு சின்ன மடிக்கணினி. அதில் இணையம் ஆமை வேகத்தில் நகரும். இது பற்றி எரிச்சலான போது. அப்போது அருண் சொன்னதும் எனக்கு நினைவு வந்தது. உடனடியாய் திறந்து என்ன ஆகப் போகிறது? அதேநேரம் இன்னொன்றும் தோன்றியது. வேகம் இன்று மிக அவசியமாய் உள்ளது. குறைவான வேகம் நம்முடைய தன்னம்பிக்கையை, சுயமதிப்பை பாதிக்கிறது. வேகம் என்பது உண்மையில் நம் வாழ்க்கையில் இல்லை. அது நம் மனதில் இருக்கிறது.
சாலையில் ஓடும் பைக்குள், கார்கள் வெறும் வாகனங்கள் அல்ல. அவை இந்நகரில் புழங்கும் மனிதர்களின் சுயங்களின் பிம்பங்கள். பத்தடி தொலைவில் ஒரு சிக்னல் இருக்கிறது. ஒருவர் விலையுயர்ந்த பைக்கில் வேகமாய் என்னை கடந்து சென்று பிரேக் அடித்து சிக்னலில் நிற்கிறார். நான் சில நிமிடங்கள் கழித்து மெதுவாக அவரிடம் போய் நிற்கிறேன். நாங்கள் இருவரும் சில நிமிடங்கள் காத்திருக்கிறோம். சிக்னல் விழுந்ததும் அவர் சீறிப் பார்கிறார். கொஞ்ச தூரத்தில் போக்குவரத்து நெரிசல். அவர் வேகமாய் அங்கு சென்று பிரேக் போட்டு நின்று காத்திருப்பவர்களின் ஜோதியில் கலக்கிறார். நானும் கொஞ்ச நேரத்தில் அவருடன் சேர்கிறேன். ஒருவேளை எங்கள் இலக்கை நாங்கள் சில நிமிட வித்தியாசத்தில் சென்று சேர்வோமாக இருக்கலாம். நம் சாலைகளில் என்ன தான் வேகம் கூட்ட முயன்றாலும் பயனில்லை என அவரும் அறிவார். ஆனால் அதற்காய் அவரால் 35-40 கிலோமீட்டரில் செல்ல முடியாது. அது அவருக்கு அந்நியமாய் அலுப்பாய் இருக்கும். தான் வேறு ஒரு யுகத்துக்கு பின்னுக்கு சென்று விட்டதாய் தோன்றும்.
வேகத்துக்கும் வேகமாய் உணர்வதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. தரமான வாகனங்களில் பிக் அப்பும், டார்க் எனும் எந்திர வேகமும் அதிகமாய் இருக்கும். ஆக்ஸிலேட்டரை தொட்டதும் சீறும். ஆனால் மெத்தனமான போக்குவரத்தில் வண்டி பாய்ந்து போக முடியாவிட்டாலும் ஒரு வேக உணர்வு கிடைக்கும். இந்த வேக உணர்வு தான் இன்றைய தலைமுறையின் உளவியலை மாற்றி அமைக்கிறது. திரையரங்கில் ஒரு படம் சில நிமிடங்கள் போரடித்தாலும் அவர்கள் ஆர்வமிழந்து கவனம் கலைந்து பேசுகிறார்கள். பேசுகிறார்கள். மொபைலில் பேஸ்புக் பார்க்கிறார்கள். போனில் யாருடனாவது பேசுகிறார்கள். இந்த மனநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு இன்றைய சினிமாவின் திரைக்கதையும் மாறி உள்ளது.
 ஒரு படத்தின் வேகத்தை அதன் கதை தீர்மானிப்பதில்லை. முன்பு வேகமாய் தோன்றின கதைகள் இன்று மெத்தனமாய் தோன்றுகின்றன. தொண்ணூறுகளை விடுங்கள் ரெண்டாயிரத்தில் வந்த ”சேது”, ”பருத்திவீரன்” போன்ற படங்களும் இன்றைக்கு இழுவையாக தோன்றும். இன்றைக்கு படத்தில் பாத்திரங்கள் வேகமாய் பேசுகிறார்கள். காட்சியை நீட்டிக்கக் கூடிய செண்டிமெண்டுக்கு இடமில்லை. வேகவேகமாய் காட்சிகளை வெட்டுவதன் மூலமும், அருவா கம்புக்ளுடன் ஆட்கள் வாகனங்கள் அடிக்கடி ஏறி இறங்குவதை காட்டுவதன் மூலமும் ஹரி தன் படங்களை வேகம் கொண்டவை ஆக்கின்றார். அவர் படங்களின் வெற்றிக்கு அவை வெட்டப்பட்ட விதம் முக்கிய காரணம். இன்னொரு உத்தி ஒவ்வொரு காட்சியின் இறுதியிலும் ஒரு திருப்பத்தை வைப்பது. நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், அல்போன்ஸ் புத்திரன் போன்ற மாற்று வணிகப்பட இயக்குநர்கள் இந்த உத்தியை வெற்றிகரமாய் பயன்படுத்தினார். சமீபமாய் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற “தனி ஒருவன்” படத்தில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை. திரையரங்கில் ஜெயம் ரவியை யாரும் பொருட்படுத்தவில்லை. வில்லனான அரவிந்த் சாமிக்கு மட்டுமே கைதட்டுகிறார்கள். படம் தெலுங்கு படங்களின் மிகையும் சத்தமான போக்கும் கொண்டது. ஒரு போலீஸ் அதிகாரி குற்றவாளிகளை அழிக்கும் பழைய கதை. காட்சிகளிலும் நிறைய அபத்தங்கள் உள்ளன. ஆனால் காட்சிக்கு காட்சி திருப்பம் வைக்கிறார்கள். பார்வையாளர்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனும் பரபரப்பிலேயே யோசிக்காமல் மொத்த படத்தையும் கவனிக்கிறார்கள். ரசிக்கிறார்கள் என்றில்லை கவனிக்கிறார்கள். இன்று அப்படி ஒருவரை இரண்டு மணிநேரம் கவனிக்க வைப்பது பெரிய சாதனை. இது போன்ற படத்தை ஒரே கதைச்சரடில் கோர்க்கப்பட்ட நூறு குறும்படங்களின் தொகுப்பு எனலாம்.
மீண்டும் இணையத்துக்கு வருவோம். ஒரு செய்தியை இணையதளத்தில் வாசிப்பதற்கும் பேஸ்புக்கில் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இணையதளம் பழசாகவும் பேஸ்புக் டைம்லைன் புதுசாகவும் இருப்பதாய் ஒரு தோற்றம் இன்று நமக்கு ஏற்படுகிறது. ஆனால் பேஸ்புக் எந்த செய்தியையும் புதிதாய் உருவாக்குவதில்லை. தொடர்ந்து செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாய் தோன்றி மறையும் விதம், சில நொடிகளுக்கு ஒருமுறை செய்திகள் புத்துணர்வாக்கப்படும் விதம், செய்தி குறித்து பயனர்கள் வெளியிடும் கருத்துக்கள், கருத்துக்கள் மீதான விவாதம் ஆகியவை சேர்ந்து ஒரு செயற்கையான வேகத்தை உருவாக்குகின்றன. இந்த வேகத்துக்கு இன்று டிவியால் கூட தாக்குபிடிக்க இயலவில்லை. விளைவாக இன்று ஆங்கில செய்தி அலைவரிசைகளில் ஒரு விவாத நிகழ்ச்சிக்கு கீழே அது குறித்து பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளையும் காட்டுகிறார்கள். ஆனால் சமூகவலைதளங்கள் ஜெட்வேகத்தில் போகின்றன. நம்மையும் கைபிடித்து அழைத்துப் போகின்றன.
வாகனங்கள், இணையம், மின்னணு சாதனங்கள் நம்முடைய மனவேகத்தை சுருக்கி விட்டது என்றால் அதனுடன் இடம் குறித்த நம் பிரக்ஞையும் தான் மாற்றி விட்டது. ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் மொபைல்கள் பரவலாயின. ஆனால் மொபைலில் இணையம் இல்லை. அப்போது குறுஞ்செய்தி அனுப்புவது ஒரு வியாதி போல பரவியது. அப்போது போன தலைமுறையினர்கள் இளைஞர்களைப் பார்த்து எப்படி இரண்டு விரல் கொண்டு இவ்வளவு வேகமாய் மொபைலில் தட்டச்சு செய்கிறார்கள் என வியப்பார்கள். அக்காலத்தில் என் நண்பர் ஒருவர் மொபைல் எப்படி பொது இடத்தில் ஆண்/பெண் பழகுவதை மாற்றி உள்ளது என்பதை அவதானித்து சொன்னார். முன்பு ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண் வந்தால் அவளை பார்த்து நிற்பதற்கு அங்கு பத்து ஆண்கள் தோன்றுவார்கள். அவர்கள் அவளின் கவனத்தை பெறவும் பேச்சு தொடுக்கவும் முயல்வார்கள். மொபைல் வந்ததும் பேருந்து நிலையத்தில் நிற்பவர்கள் தம் அருகில் இருப்பது யாரென்றே கவனிக்க முடியாதபடி ஆர்வமாய் குறுஞ்செய்தி அனுப்புவதும் அதை பார்ப்பதும் என மூழ்கிப் போனார்கள். ஆண்-பெண் தொடர்பு மொபைல் வழி எளிதாக பக்கத்தில் நிற்கும் ஒரு பௌதிகமான பெண்ணை கவனிக்கும் ஆர்வம் ஒரு ஆணுக்கு குறைந்து போயிற்று. மொபைல் எப்படி ஈவ் டீஸிங்கை குறைக்கிறது என நண்பர் என்னிடம் அன்று பேசினார். ஆனால் இன்று ஈவ் டீஸிங் சமூக வலைதளங்களில் வேறு ஒரு வடிவை எடுத்துள்ளது. ஆனால் நாம் இருக்கும் இடம், நம்மை சுற்றி உள்ள மனிதர்கள் குறித்த பார்வை இன்று வெகுவாய் மாறி விட்டது. சாலையில் நிற்பவரோ பேருந்தில் செல்பவரோ இன்று அங்கு இல்லை. அவர்கள் இணையம் வழி இன்னும் விரிவான பிரம்மாண்டமான மக்கள் திரள் கொண்ட மெய்நிகர் (virtual) இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
காலமும் இடமும் இன்று விரிவும் வேகமும் கொண்டதாக நம் மனங்களும் அடையாளங்களும் தான் அப்படி ஆகின்றன. ஒரு பரபரப்பும் மிகையான துடிப்பும் நம் உடலில் குடிகொள்கின்றன. சதா எதையாவது வேகமாய் பண்ணிக் கொண்டு புது இடங்களுக்கு சென்று கொண்டிருக்க விழைகிறோம். அதனால் தான் மொபைல் இல்லாமல் இருக்கையில் நாம் மிகவும் பதற்றம் கொள்கிறோம். ஏனென்றால் மொபைல் இல்லாமல் நம் காலம் மற்றவர்களின் காலத்தில் இருந்து மெத்தனமாகிறது. நாம் வாழும் இடம் சுருங்கிப் போகிறது. பைக் பழுதானால் ஒருவரது மொத்த நாளுமே குலைந்து போகிறது.
நவீன மனிதனின் தனிமனித குணத்தை வடிவமைத்ததில் வாகனப் போக்குவரத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. இந்நிலையை கோட்பாட்டு வடிவில் முதலில் விளக்கியவர் மார்க்ஸிய கலாச்சார சிந்தனையாளர் ஆண்டோனியா கிராம்ஸி. அவர் இந்நிலைக்கு போர்டிஸம் (fordism) என பெயரளித்தார். இப்பெயர் Henry Ford எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டு கார் உற்பத்தியாளரின் பெயரில் இருந்து உருவானது. ஹென்ரி போர்டு உற்பத்தியில் நூதன முறையொன்றை பயன்படுத்தினார். தரமான கார்களை மிக அதிகமான எண்ணிக்கையில் வெளியிட்டார். அதிக உற்பத்தியை தூண்டுவதற்காய் தன் தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் அளித்தார். கார்களின் அதிக எண்ணிக்கை விலையை குறைவாக்கியது. விளைவாய் நிறைய பேர் வாங்கினார்கள். இது போன்ற நிறுவனங்களில் அதிக ஊதியத்தை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கார் வாங்குவது சாத்தியப்பட்டது. இப்படி துரிதமாய் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மலிவாய் கிடைப்பதால் அது மறைமுகமாய் வேலை வாய்ப்பை அதிகமாக்கி நுகர்வை அதிகமாக்குகிறது என்பதை முதலில் உணர்ந்து கொண்டவர் போர்டு தான். அவரது செயல் வெறும் வணிக லாபத்தோடு நின்று விடவில்லை. அதிக தூரம் பயணிக்க முடிந்த அமெரிக்கர்களின் வேலைத்திறனும் வாய்ப்புகளும் அதிகரித்தன. காலத்தை அவர்கள் பார்க்கும் விதம் முழுக்க மாறியது. எந்த நேரத்திலும் எந்த இடத்துக்கு சென்று விட முடியும் எனும் நம்பிக்கை மனிதனுக்கு தான் காலம் மற்றும் இடத்துக்கு அப்பாலானவன் எனும் உணர்வை கொடுத்தது. உலகமயமாக்கல் இதன் ஒரு நீட்சி தான். இன்று போர்டு காரின் இடத்தில் மொபைலும் கணினியும் இருக்கிறது. விளைவும் பன்படங்காகி விட்டது.
இந்த போர்டிஸத்தின் நேர்மறையான பயன்களையும் நாம் பேச வேண்டும். கிராமத்தில் இருந்து பயணித்து நகரத்துக்கு சென்று வேலை பார்க்க முடியும் என்பது விவசாய வேலையில் இருந்தும், சாதிய பிடியில் இருந்தும் தலித்துகளை விடுவித்தது. தர்மபுரி கலவரத்தின் போது ஆதிக்கசாதியினர் தலித்துகளின் பைக்குகளை எரித்ததை நாம் இந்த கண்ணோட்டத்திலும் புரிந்து கொள்ள வேண்டும்.
என் மனைவி ஆரம்பத்தில் வேலைக்கு செல்ல பேருந்தை பயன்படுத்தினாள். அங்கு அவளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவுகள் நேர்ந்தன. கூட்டமில்லாத குறிப்பிட்ட பேருந்துக்காய் அவள் காத்திருக்க வேண்டி வந்தது. தனியாய் நடக்கையில் யாராவது ஆண்கள் பின்தொடர்ந்து வந்து பேசும் சிக்கல் ஏற்பட்டது. நாங்கள் ஒரு ஸ்கூட்டர் வாங்க முடிவு செய்தோம். ஸ்கூட்டர் பழகின பின் அவள் பாலியல் தொந்தரவுகளில் இருந்து முழுக்க விடுபட்டாள். ஒரு வாகனம் நீங்கள் புழங்கும் இடத்தை, சந்திக்க நேரும் அனுபவங்களை முழுக்க மாற்றி விடுகிறது.
இளம்பிள்ளை வாதத்தில் பாதிக்கப்பட்ட நான் 15 வயது வரை வெளி மனிதர்களை, உலகை காண முடியாது முடங்கி இருந்தேன். என் உலகம் என்பது பள்ளிக்கூடம் மட்டும் தான். பிறகு நான் என் அப்பாவின் ஸ்கூட்டரில் இரண்டு சக்கரங்களை உபரியாய் பொருத்தி என்னுடைய வாகனமாக்கினேன். பிறகு நான் நிறைய பயணித்தேன். கட்டுப்பாடுகள் அற்றவனாய் என்னை உணர்ந்தேன். சொல்லப் போனால் என் ஊனம் மறைந்து போனதாய் உணர்ந்தேன். எங்கள் ஊரில் இருந்து சற்று தள்ளி உள்ள தக்கலையில் எழுத்தாள நண்பர்களை சந்தித்தேன். கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் கலந்து கொண்டேன். அந்த வண்டி இல்லாவிட்டால் நான் ஒருவேளை எழுத்தாளனாக ஆகியிருக்க மாட்டேன். தைரியமாய் கல்லூரிக்கு சென்று படித்திருக்க மாட்டேன். ஒரு புது நகரத்துக்கு வந்து என்னென்னமோ இடங்களுக்கு வேலை தேடி சென்று செயல்பட்டிருக்க மாட்டேன். இதனால் தான் என்னுடய “கால்கள்” நாவலின் மையம் என்பது ஒரு ஊனமுற்ற பெண் தனக்கான ஸ்கூட்டர் வாங்கி அதை கற்றுக் கொள்வதில் உள்ளது. அவள் வாழ்க்கையை அவ்வண்டி எப்படி மாற்றியமைக்கிறது என்பது தான் நாவலின் கரு.
சீனாவில் ஊனமுற்றோருக்கான வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். அங்கு இந்த வாகனங்களின் பயன்பாடு ஊனமுற்றோரின் வாழ்க்கைநிலையை முழுக்க மாற்றி அமைத்தது. அதற்கு முன் ஊனமுற்ற ஒருவர் படிக்கவோ வேலை செய்யவோ இயலாது. அதனால் அவர் குடும்பத்துக்கு பாரமாய் மட்டுமே இருந்தார். யாராவது ஒருவர் அவரை வாழ்நாள் முழுக்க பராமரிக்க வேண்டும் எனும் நிலை இருந்தது. ஜப்பானில் இத்தகைய குழந்தைகளை பெற்றோர் பராமரிக்க முடியாததால் அரசே ஒரு தனி விடுதி ஆரம்பித்தது. அங்கு ஊனமுற்ற குழந்தைகளை மிருகங்க்ளை போல் நடத்தப்பட்டார்கள். பராமரிப்பாளர்கள் அவர்களை பாலியல் ரீதியாய் கொடுமைப்படுத்துவார்கள். ஆண்களையும் பெண்களையும் ஒன்றாய் குளிப்பாட்டுவார்கள். அவர்களுக்கு எந்த சுயநிர்ணயமும் சுயகௌரவமும் இல்லாமல் போயிற்று. பராமரிப்பாளர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. நீங்கள் தான் சுயமாய் எதுவும் செய்ய முடியாதவர்கள் ஆயிற்றே. உங்களுக்கு ஏன் கௌரவம், உரிமை எல்லாம் என அவர்கள் திரும்ப கேட்டார்கள்.
சீனாவிலும் ஊனமுற்றோர் நிலை கிட்டத்தட்ட இப்படித் தான். ஆனால் தொண்ணூறுகளில் சீனாவில் அங்கு இந்நிலை மிகப்பெரிய அளவில் மாறியது முன்னாள் ஜனாதிபதி டெங் ஸியாபொங்கின் ஆட்சிக் காலத்தில். அவரது மகன் டெங் புபாங் எடுத்த சில நடவடிக்கைகள் ஊனமுற்றோர் வாழ்க்கையில் திருப்புமுனை ஆகியது.
மாசேதுங்கின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் அதிகார பீடத்தில் இருந்த முன்னாள் ஆட்சியாளர்களின் குடும்பங்கள் ஒடுக்கப்பட்டன. டெங் புபாங் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். வதை தாங்க முடியாமல் அவர் ஒருநாள் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஊனமுற்றவரானார். அவரை மாசேதுங் ஒரு கிராமத்தில் உள்ள ஊனமுற்றோருக்கான ஒரு வசதிகுறைந்த விடுதியில் சிறை வைத்தார். நீண்ட காலத்துக்கு பிறகு அவரை மாசேதுங் தன் பெற்றோரை சந்திக்க அனுமதித்தார். மாசேதுங்கின் ஆட்சிக்காலம் முடிந்து டெங் புபாங்கின் அப்பா ஜனாதிபதியானார். டெங் புபாங் ஊனமுற்றோர் நலத்தை மேம்படுத்துவதற்காய் ஒரு ஊனமுற்றோர் கூட்டமைப்பை துவங்கினார். இந்த அமைப்பு ஊனமுற்றோர் சிகிச்சைக்காய் மருத்துவ மையங்களை திறந்தது. இதன் தொடர்ச்சியாக ஊனமுற்றோருக்கான நான்கு சக்கர ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து அளித்தது. எதிர்பாராது இந்த வாகனங்கள் பெரும் வெற்றி பெற்றன. அதிக ஆட்கள் இவ்வாகனத்துக்காய் விண்ணப்பிக்க ஊனமுற்றோர் கூட்டமைப்பு உற்பத்தியை பலமடங்காக்கியது. அதனால் ஹென்ரி போர்டு அமெரிக்க மக்களுக்கு செய்ததை இந்த கூட்டமைப்பு சீன ஊனமுற்றோருக்கு செய்தது. சில வருடங்களில் பிற வாகனங்களை விட ஊனமுற்றோர் வாகனங்களின் எண்ணிக்கை சீன தலைநகரில் பலமடங்காகின. ஒரு தலைமுறை ஊனமுற்றோர் புதிதாய் படிக்கவும் வேலை பார்க்கவும் ஆரம்பித்தனர். அதுவரை குடும்பத்துக்கு பாரமாய் இருந்தவர்கள் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுகிறவர்கள் ஆனார்கள்.
போக்குவரத்து திறன் என்பது போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிக்கும் மற்றும் ஒரு சமூகத்தின் அரசியலாக்கத்துக்கும் மிக அவசியம். உதாரணமாய் ஊனமுற்றோர் நீண்ட காலமாய் தம் உரிமைகளுக்காய் போராடதவர்களாய் அங்கு இருந்தார்கள் (இங்கும் இருக்கிறார்கள்). காரணம் குறிப்பிட்ட இடத்துக்கு எளிதில் பயணிக்க முடியாமை. ஆனால் தமக்கென வாகனம் கிடைத்த பின் ஊனமுற்றோர் அமைப்புரீதியாய் எளிதில் ஒன்று பட்டார்கள். சீன தலைநகரில் ஊனமுற்றோர் வாகனங்கள் தடைசெய்யப்பட்ட போது ஒரேநாளில் ஆயிரக்கணக்கானோர் பல இடங்களில் திரண்டு போராடினர். போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். விளைவாய் தடை அகற்றப்பட்டது. இவ்வாறு வாகன வசதி என்பது அரசியல் உரிமையையும் அளித்தது.
என்னுடைய நண்பர் ஒருவர் ஊனமுற்றவர். அவருக்கு போதுமான கல்வித்தகுதி இருந்தும் எந்த கல்லூரியிலும் அவருக்கு ஆசிரியர் வேலை அளிக்க மறுத்து விட்டார்கள். “உங்களால் மாடியில் ஏறிப் போய் வகுப்பெடுக்க முடியாது” என்றார்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டிடங்கள் கட்டுகிற நிர்வாகம் சில மின் தூக்கிகளை பொருத்தினால் இந்த பிரச்சனை மறைந்து விடும். ஊனம் என்பது உடலில் இல்லை. அது மின்தூக்கி இல்லாமை போன்ற கட்டிட அமைப்பினால் தோன்றுவது. என்னையும் இதே காரணத்தால் ஒரு கல்லூரியின் ஆசிரியர் நேர்முகத்தேர்வின் போது நிராகரித்தார்கள். பிறகு போராடி இன்னொரு கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு என் நேர்முகத்தேர்வின் போது இல்லாத ஒரு பேராசிரியர் ஒரு மாதம் கழித்து வந்தார். அவர் உடனே என்னை தேர்ந்தெடுத்த துறைத்தலைவரை கடிந்து கொண்டார் “ஏன் ஊனமுற்ற ஒருவரை தேர்ந்தெடுத்தீர்கள்? அவரால் நடந்து போக முடியுமா? ஒரு தேவையென்றால் துறைக்குள் நாற்காலிகளை தூக்கிப் போடுவது, ஓடிப் போய் வேலை செய்வது, டீ வாங்கி வருவது போன்றவற்றை செய்ய முடியுமா?” என்றெல்லாம் கேட்டார். இப்படி யோசிப்பவர்கள் இருப்பதனால் தான் ஊனமுற்றோருக்கு இட ஒதுக்கீடு இருந்தும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட நான் வகுப்புக்கு ஒருநாளும் தாமதமாய் போனதில்லை. மற்ற ஆசிரியர்கள் உட்கார்ந்து பாடமெடுக்கும் போது நான் மணிக்கணக்காய் நின்று பாடமெடுத்தேன். சென்னையில் பட கட்டிடங்களுக்கு ரேம்ப் வசதி இல்லை. மின்தூக்கி இல்லை. படிக்கட்டில் குறைந்தது கைப்பிடி கூட இல்லை. இதையெல்லாம் அரசு வலியுறுத்துவதும் இல்லை. ஊனமில்லாதவர்களுக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது ஊனமுற்ற சிலரின் சில சாதாரண பிரச்சனைகளை ஏன் பொருட்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.
ஆனால் ஒரு இடம் என்பது ஒருவரது சுயத்தை, வாழ்க்கை போக்கை, மன அமைப்பை தீர்மானிக்கிறது என இவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஊனம் என்பதும் நம் இட அமைப்பால் உருவாகிற ஒன்று. ஒரு கட்டிடம் அல்லது பொது இடத்துக்கு செல்வதற்கு ஊனமுற்ற ஒருவருக்கு எந்த தடையும் இல்லை என்றால் அவர் தன் ஊனத்தை கடந்து விடுகிறார். சமமானவர் ஆகிறார். உண்மையில் ஒருவரை நாம் சமமாக நடத்த வேண்டியதில்லை. ஏற்றத்தாழ்வை உருவாக்கும் இட அமைப்பை மாற்றினால் போதும். சமத்துவம் தானே தோன்றி விடும்.

நாம் சித்தாந்தங்கள், அன்பு, கருணையின் வழியாக்க உருவாக்க நினைத்த சமத்துவம் இன்றைய தொழில்நுட்ப மாற்றத்தின் விளைவுகளான காலத்தின் வேகம், இடச்சுருக்கம் காரணமாய் தானே தோன்றி விட்டது. சமூக போராளிகளும், மனித உரிமையாளர்களும் செய்ய வேண்டியது இந்த மாற்றத்தை அனுசரிப்பது தான்.

நன்றி: அம்ருதா, ஜனவரி 2016

No comments: