Thursday, March 24, 2016

மழைவெள்ளம்: ஒன்றிணைந்த மக்களும் கார்ப்பரேட் அரசியலும்

(பிப்ரவரி மாத உயிர்மையில் வெளியான கட்டுரை)

வெள்ளம் சென்னையின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்த போது இந்த நகரத்து மக்கள் குழம்பிப் போயினர். ஒரே நாளில் நாம் முப்பது வருடங்களுக்கு பின்னால் நகர்ந்தோம். மின்சாரமும் தொலைதொடர்பும் அற்ற ஒரு கிராமமாக சென்னை மாறிப் போனது. இந்த நகரமும் அது அளித்த வசதிகளும் உத்தரவாதங்களும் எவ்வளவு துர்பலமானவை என மக்கள் உணர்ந்தார்கள். மக்கள் பரஸ்பரம் கைகோர்த்துக் கொண்டு இணைந்து நிற்கத் துவங்கினார்கள். என் குடியிருப்பில் இதுவரை என்னிடம் பேசவே தலைப்படாதவர்கள் கூட ஆர்வமுடம் வந்து விசாரித்துப் போயினர். மக்களிடம் உள்ள இறுக்கம் கலைந்து நெகிழ்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொருவரும் மனிதத் துணைக்காக ஏங்கினர். நான் போனிலோ இணையத்திலோ அதிகம் அரட்டை அடிக்கிறவன் அல்ல. எனக்கு தனிமை பிடிக்கும். ஆனால் அந்த தனிமையின் போது மக்கள் நம்முடன் இருக்கிறார்கள் எனும் உத்தரவாதம் இருந்தது. அது தான் டிசம்பர் மாத வெள்ளத்தின் போது நொறுங்கிப் போனது.

இன்னமும் நினைவிருக்கிறது. எனக்கு ஒரு வேலைக்கான நேர்முகத்துக்கு போக வேண்டியிருந்தது. என் கையிருப்பில் மொத்தம் மூவாயிரம் இருந்தது. வேலை உடனே கிடைக்காவிட்டால் அடுத்த மாதம் சாப்பிடுவதற்கும் மருந்து வாங்குவதற்கும் வேறு செலவுகளுக்குமான பணத்துக்கு யாரிடமாவது கையேந்த வேண்டி வரும். மழை தொடர்ந்து வலுத்து வந்த போது எனக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு மேலும் தள்ளிப்போகுமே எனும் கவலை தான் அதிகம் இருந்தது. என்னைச் சுற்றி மக்கள் மழைவெள்ளத்தில் மூழ்கி சாக நேரும், தம் வீட்டையும் வாழ்வாதாரத்தையும் இழக்க நேரும் என்றெல்லாம் நான் அப்போது உணரவில்லை. கொஞ்ச நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. என் மனைவியை அழைத்து என் பொருளாதார கவலைகளைச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன். மொபைலில் சார்ஜ் குறைந்து கொண்டே வந்தது. பிறகு அழைப்பதாய் சொல்லி துண்டித்தேன். சில நிமிடங்களில் நெர்வொர்க் துண்டிக்கப்பட்டது. ஒரே நொடியில் தனித்தீவாகிப் போனேன். வெளியே போகவும் முடியாது. யாரிடமும் பேசவும் முடியாது.
மின்சாரமும் தொலைதொடர்பும் பொதுவாக மனிதர்களுக்கு இடையிலான இடைவெளியை பெருமளவில் குறைத்து விடுகிறது. பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருப்பவர்கள் கூட பக்கத்தில் இருக்கும் செயற்கையான உணர்வை அளிக்கிறது. இதனால் தான் இந்த நகரத்தில் நாம் நம் பக்கத்தில் வாழும் பல பொருளாதார நிலையில் உள்ள மக்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் இருக்கிறோம். இடமும் காலமும் இன்று நமக்கு பொருட்டே அல்ல. சென்னைக்குள் ஒவ்வொருவரும் இடத்துக்கும் காலத்துக்கும் அப்பால் தம் அறைகள், அலுவலகங்களை ஒட்டியே நூற்றுக்கணக்கான நண்பர்கள், தெரிந்தவர்களின் வட்டம் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்த வெள்ளம் துண்டுதுண்டாக்கியது அதைத் தான். போதுமான உணவும் வெள்ளம் சூழாத இடத்தில் இருக்க வாய்த்தவர்கள் கூட பெருமளவில் தவித்துப் போனார்கள். ஏனென்றால் அவர்கள் முதன்முதலில் தனிமை என்றால் என்னவென உணர்ந்தார்கள்.
இந்த ஊரில் சாலையில் புழங்கிறவர்கள் யாரெல்லாம் என கவனித்திருக்கிறார்களா? அலுவலகத்துக்கு போகிறவர்களும் திரும்பி வருகிறவர்களும் காலையிலும் மாலையிலும் சாலையை ஆக்கிமிக்கிறார்கள். அவர்கள் ஷாப்பிங் பண்ணுவதற்கும் உலாத்துவதற்கும் ஓய்வு நாட்களின் மாலை வேளைகளில் தோன்றுகிறார்கள். இம்மனிதர்களை அவர்களின் தோலின் நிறம் மற்றும் ஆடைகளின் தரம் கொண்டு எளிதில் கண்டுபிடித்து விடலாம். அவர்கள் இல்லாத பெரும்பாலான நேரங்களில் இந்நகரத்தின் சாலைகளை இதன் தெருக்களை நம்பி வாழும் கீழ்த்தட்டு மக்கள் தான் ஆக்கிரமிக்கிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை பண்ணி வாழும், முடிந்தவரை அரைபோதையில் இருக்கும் மனிதர்கள் ஏதாவது ஒரு கடையின் முன் நிற்பதை பகல் வேளைகளில் காணலாம். அந்த பகுதியில் உள்ள பெரும்பாலானோரை அவர்களுக்கு நெருக்கமாய் தெரியும். ஒரு கிராமத்து முச்சந்தியில் ஊர்க்காரர்கள் கூடி உரையாடுவது போல் அவர்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள். அலுவலக சீமான்கள் காலி செய்யும் பகல் வேளைகளில் இத்தெருக்கள் அவர்களின் கிராமமாகி விடும் ஆனால் மழைவெள்ளம் சூழ்ந்த பத்து நாட்கள் அனைத்து தட்டு மக்களையும் தெருவுக்கு கொண்டு வந்தது. வெயில் லேசாய் தலைகாட்ட தொடங்கியதும் பொந்தில் இருந்து எலிகள் போல ஒவ்வொருவராய் வெளியே வந்தோம். மெழுகுவர்த்தி, துரித உணவு போன்ற பொருட்களை வாங்குவதற்காக மட்டும் அல்ல, உடம்பில் கொஞ்சம் வெயிலின் வெம்மை படர, சக மனிதர்களுடன் இருப்பதற்காய், நம்முடைய சாலைகளை மீண்டும் ஒருமுறை மீட்டெடுப்பதற்காக. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மனிதர்கள் ஒன்றாய் கூடின அரிய காட்சியை கண்டேன். கூட்டநெரிசல் பற்றி சதா அலுத்துக் கொள்ளும் நாம் கூட்டத்தின் அரவணைப்புக்காய் ஏங்கினோம்.
இன்னொரு விசயம் மிக அதிகமாய் இளம் பெண்கள் சாலையில் திரிவதை இந்த வெள்ள நாட்களில் பார்த்தேன். இது போல் பெங்களூரில் தான் பார்க்க முடியும். பொதுவாய் சென்னை சாலைகள் ஆண்களால் ஆதிக்கம் செய்யப் படுபவை. மிகச் சில இடங்களில் தான் மத்திய/மேல்மத்திய வர்க்க பெண்கள் பெருங்கூட்டமாய் புழங்குவதை பார்க்கலாம். பகலில் கல்லூரி அல்லது அலுவலகம், மாலையில் சீக்கிரமே வீடு திரும்பி சாப்பிட்டு டிவி பார்ப்பது என இருந்த பெரும்பாலான பெண்கள் இம்முறை வெளியே வந்து வெள்ளத்தில் கணுக்காலுக்கு மேல் மூழ்கின தெருக்களில் நடந்தார்கள். சொல்லப்போனால் மழைவெள்ளம் வடியத் துவங்கி கொஞ்சம் இயல்பு நிலை திரும்பி இருந்த நகரப் பகுதிகள் மாலையில் ஒரு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது என்று கூட சொல்லலாம்.
எனக்கு இந்த சூழல் என் குழந்தைப்பருவத்தை, பால்யத்தை நினைவுக்கு கொண்டு வந்தது. அப்போது எங்கள் ஊரில் பெரும்பாலான மாலை வேளைகளில் மின்சாரம் இருக்காது. நிரந்தரமாய் மண்ணெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை நான் எங்கள் பக்கத்து தெருவில் உள்ள ஒரு அக்காவிடம் டியூசன் படித்தேன். அவருக்கும் கணவருக்கும் பிணக்கு ஏற்பட்டு துணையில்லாமல் பல வருடங்கள் தனியாய் இருந்தார். அவருக்கு டியூசன் தவிர எந்த வருமானமும் இல்லை. கடும் வறுமை காரணமாய் அவர் வீட்டில் மின்சார இணைப்பே இல்லை. அங்கு செல்லும் நாங்கள் மண்ணெண்ணெய் விளக்கை சுற்றி இருந்து தான் படிப்போம். புகையின் கரி சுலபத்தில் நாசிக்குள் படிந்து கொள்ளும். நாசிக்குள் விரலை விட்டு எவ்வளவு கரி படிந்திருக்கிறது என பார்த்து விளையாடுவோம். மின்சாரமற்று அரை இருளில் இருப்பது அப்போது எங்களுக்கு மிக இயல்பாய் இருந்தது. ஆனால் நகர வாழ்க்கை இன்று என்னை வெகுவாய் மாற்றி விட்டது. இந்த வெள்ள நாட்களில் நகரத்தின் இருட்டு பெரும்பீதியை ஏற்படுத்தியது. படிக்காமலோ பேசாமலோ டிவி பார்க்காமலோ இணையத்தில் புழங்காமலோ எந்த வேலையும் செய்யாமலோ சும்மா இருப்பது எப்படி என்றே தெரியவில்லை. மாலை ஐந்தரை மணிக்கு மேல் ஒவ்வொரு நிமிடத்தை கழிப்பதும் பெரிய பாரத்தை கழுத்தில் கட்டிக் கொண்டு நடப்பது போல் இருந்தது. இந்த பத்து நாட்களும் நான் தூங்கிக் கொண்டே இருந்தேன். கடந்த பத்து வருடங்களில் நான் இந்தளவுக்கு தூங்கியிருக்கவில்லை. இயல்பு வாழ்வு மீண்ட போது நான் உண்மையில் புத்துணர்வோடு இருந்தேன். இந்த மழைவெள்ளத்தின் ஒரே நன்மை தனிப்பட்ட முறையில் அது தான்.
சமூக அளவில் இந்த மழைவெள்ளம் நம் இளம் தலைமுறையினரின் அபாரமான அர்ப்பணிப்புணர்வை, துடிப்பை, மக்களுக்காய் பணியாற்றும் உத்வேகத்தை, பிணைப்பை வெளிக்கொணர்ந்தது. இன்று இந்தியாவே சென்னையின் spiritஐ கொண்டாடுகிறது. அரசும் கட்சிகளும் விழித்துக் கொள்ளும் முன்னரே நம் இளைஞர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தனர். உணவும் பொருளுதவிகளும் குவிந்தன. இது ஒரு புறம் ஆளுங்கட்சியினருக்கு பெரும் பதற்றத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் தூண்டியது. தம் இடத்தை, தமக்கான அங்கீகாரத்தை இந்த இளைஞர்கள் பெற்று விடுவார்களோ என அஞ்சினார்கள். அதன் விளைவு தான் அவர்கள் நிவாரணப் பொருட்களை வழிமறித்து அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அபத்தமும் நிராவண பணிகளுக்காய் சென்றவர்க்ளை முரட்டுத்தனமாய் விரட்டிய கேவலமும்.
 இந்த வெள்ளம் நம் அரசியல் கட்சிகள் எந்தளவு மக்களிடம் இருந்து விலகிப் போயுள்ளன என்பதையும் தான் காட்டியது. இன்று கட்சி நடத்துவது ஒரு தனியார் நிறுவனத்தை நடத்துவது போல் ஆகி விட்டது. கட்சிக்குள் வேலை செய்து சம்பாதிப்பதும் அதிகாரத்தை கைப்பற்றுவதும் மட்டுமே இவர்களின் நோக்கம். சொல்லப்போனால் ஒரு தனியார் நிறுவன ஊழியர் போன்றே இவர்களும் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் பிரச்சனைகளுக்காய் போராடின அரசியல்வாதிகளின் தலைமுறை அஸ்தமித்து விட்டது. இது கார்ப்பரேட் அரசியல்வாதிகளின் காலம்.
நான் ஒரு ஆளுங்கட்சி நண்பரிடம் இது குறித்து விவாதித்தேன். “அம்மா ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் எப்படி உங்கள் கட்சிக்காரர்கள் எல்லா தெருக்களை நிறைத்தபடி நின்று கொண்டாடினார்கள் எனப் பார்த்தோம். எவ்வளவு கட்டமைப்பு மற்றும் ஆள்பலம் கொண்டது உங்கள் கட்சி. இந்த வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ அதை ஏன் நீங்கள் பயன்படுத்தவில்லை?” எனக் கேட்டேன். அவர் மிக நேர்மையாய் சில காரணங்களைச் சொன்னார். ஒன்று அம்மா நினைத்திருந்தால் கட்சிக்காரர்களை நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம். சொல்லப்போனால் பொதுமக்கள் ஆற்றியதை விட பலமடங்கு வீரியமாய் அவர்களால் செயல்பட்டிருக்க முடியும். ஆனால் அவர்களை யார் கட்டுப்படுத்தி ஒருங்கிணைப்பது? அவர்கள் குடித்து விட்டு கலாட்டா பண்ணினால் யார் பொறுப்பாவது? எனக்கு இது நியாயமான் காரணமாய் படவில்லை. ஒரு கட்சியால் தன் தொண்டர்களை கட்டுப்படுத்த இயலாதா? பின்னர் யோசித்துப் பார்த்த போது அவர் தரப்பு எனக்கு விளங்கியது.
கட்சிக்காரர்கள் நேரடியாய் மக்களுக்காய் பணிசெய்யும் பயிற்சி அற்றவர்கள். அவர்கள் இன்று ஒன்றிணைவதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் கருத்தரங்கு கூட்டங்களின் போதும் தான். தேர்தலில் வேலை பார்ப்பதில் அவர்களுக்கு நேரடியான அனுகூலங்கள் உள்ளன. அதில் நிறைய பணம் புழங்குகிறது. சொல்லப்போனால் தேர்தல் தான் கட்சிக்காரர்களுக்கு வளமான காலம். ஆனால் வெள்ளத்தில் நீந்தியும் போராடியும் மக்களை காப்பாற்றினால் இவர்களுக்கு எந்த பொருளாதார லாபமும் இல்லையே! ஆம், பணம், அதிகாரம் எனும் இரு அளவுகோல்களின் படி அரசியல் செய்து கட்சிக்காரர்கள் பழகி விட்டார்கள். தேர்தலின் போதுள்ள உத்வேகத்துடன் துடிப்புடன் அவர்கள் வெள்ளநிவாரணத்தில் பணியாற்றுவார்கள் என கற்பனையே பண்ண முடியாது. ஆனால் நாம் மிகவும் சுயநலவாதிகள் என நினைத்த பல தனியார் நிறுவன, மென்பொருள் துறை ஊழியர்கள் மிகுந்த சமூக தொண்டு மனப்பான்மையுடன் செயல்பட்டார்கள். இந்த முரண் உண்மையில் மிகவும் விசித்திரமானது.
மேலும் இம்முறை ஆளுங்கட்சியினர் இந்த வெள்ளபாதிப்புகளின் கெட்டபெயரில் இருந்து தம்மை எப்படி பாதுகாப்பது என கவலைப்பட்டார்களே ஒழிய, மக்களை காப்பாற்றி இந்த சூழ்நிலை நேர்மறையாய் பயன்படுத்துவது எப்படி என யோசிக்கவில்லை. ஒருவிதத்தில் அவர்களின் முட்டாள்தனமான தன்னம்பிக்கையும் தேர்தலை விகிதாச்சார கூட்டல்கழித்தல்களின் தொகுப்பாய் காணும் மனப்பான்மையும் ஏற்படுத்திய விளைவு தான் இது. அடுத்த சில மாதங்களில் வரும் தேர்தலில் எவ்வளவு பணத்தை அள்ளி இறைக்கப் போகிறார்கள், எவ்வளவு லட்சம் பேர் ஆவேசமாய் வேலை பார்க்கப் போகிறார்கள் பாருங்கள். ஆனால் ஒரு பேராபத்தின் போது தம்மை தனித்து விட்டவர்கள் இப்போது மட்டும் வீட்டுக்கு வந்து கவரில் ஐயாயிரம் போட்டு ஓட்டுக் கேட்டால் மக்கள் எவ்வளவு கடுப்பாவார்கள் என இவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்கள்.
நண்பர் சொன்ன இன்னொரு காரணம் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள், வட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மக்கள் தம்மை தாக்கி விடுவார்களோ எனும் பயத்தில் இருந்தர்கள் என்பது. மக்களைப் பார்த்து இவ்வளவு பயந்து போகும் அளவுக்கு அவர்கள் மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறார்கள்! பிரான்ஸில் 1789இல் புரட்சி வந்த போது நிலப்பிரபுக்களும் ராஜவிசுவாசிகளை முதலில் பார்த்து பயந்தது மக்களைத் தான். இத்தனைக் காலமும் தம்மைக் கண்டு முதுகு வளைந்து வணங்கி நின்ற அடிமைகள் புரட்சியின் போது தம்மை வேட்ட்டையாடுவார்களோ என அஞ்சி நடுங்கினர். அவர்கள் பயந்தது போன்றே நிகழ்ந்தது. பிரான்ஸில் ரத்த ஆறு ஓடியது. நம் நாட்டில் இந்த ரத்த ஆறு அரூபமாய் அதிகார இழப்பாய் வரும் மாதங்களில் ஓடப்போகிறது.

 இன்று ஒவ்வொரு கட்சியின் கவுன்சிலர்கள், வட்டச்செயலாளர்களும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்தும் கார்களும் வணிக ஸ்தாபனங்களும் உள்ளன. இது தான் அவர்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. மக்களிடம் இருந்து நகர்ந்து அவர்கள் மற்றொரு தட்டுக்கு போய் விட்டார்கள். ஒரு பேரிடர் நேரும் போது மக்களுடன் நின்று போராடாமல் தம் சொத்தையும் அதிகாரத்தையும் எப்படி பாதுகாப்பது எனத் தான் அவர்களுக்கு யோசிக்க தோன்றுகிறது. இது ஒட்டுமொத்தமாய் இன்று நம் அரசியலை பாதித்துள்ள வியாதி. இந்த வெள்ளத்தின் போது நம் அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. கில்லெட்டின் தயாராகி விட்டது!

No comments: