சாருவின் வாசகர்கள்
நமக்கு
முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் சுரண்டலாகவும் தோன்றுகிற விசயங்களை ரொம்ப நேர்மையாக
உண்மையாக செய்கிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாய், எழுத்தாளர்களுக்கு ரசிகர் மன்றம்
அமைப்பவர்களை நான் என்றும் எதிர்க்கிறவன். எழுத்தாளனின் பிம்பம் அவன் எழுத்தை ஆக்கிரமிப்பது
தவறு என நினைக்கிறேன். எழுத்தாளனை முழுக்க அகற்றிய பின்பு தான் வாசிக்க துவங்க வேண்டும்.
ஆனால் அதேநேரம் இந்த ரசிகர்களின் அன்பும் தூய்மையானது தான். அதை நான் இத்தனைக் காலமும்
புரியாமல் இருந்து விட்டேன். நான் அவர்களை ஒருவித உளவியல் அடிமைகள் என புரிந்திருந்தேன்.
அது தவறான புரிதல்.
நேற்று சாரு வாசகர் வட்டத்தின் இரண்டு பெரிய தலைகள்
உரையாடிக் கொண்டிருந்ததை கவனித்த போது எனக்கு இப்படி பட்டது: “இவர்கள் அவரது குறைகளையும்
பிரச்சனைகளையும் தெரிந்தே அவரை நேசிக்கிறார்கள். இதற்குள் சந்தர்ப்பவாதமும் சுரண்டலும்
இருக்கிறது. அதேநேரம் ஆத்மார்த்தமான பிரியமும் இருக்கிறது. அவர் ஒரு father figure
ஆகவும் நண்பராகவும் இவர்களுக்கு இருக்கிறார்.”
சு.ரா வாசகர்களை சமமான நண்பனாக நடத்துவார். அந்த
உறவு சீராக நிதானமாக அக்கறை சார்ந்ததாக இருக்கும். சாருவை போன்றவர்கள் வேறு வகை. வாசகர்களை
கோழி தன் குஞ்சுகளை கொண்டு திரிவது போல் அழைத்து போவார். கொத்தி விரட்டுவார். பாதுகாக்கவும்
செய்வார். இதை அவர்கள் தெரிந்தே கூட இருக்கிறார்கள்.
சாருவின்
வாசக நண்பர்களில் ஒ.பி.எஸ், சசிகலா, நத்தம் போல் ஒரு உள் அதிகார வட்டம் உள்ளது. அவர்களை
சமாதானப்படுத்த அடிக்கடி சாரு யாரையாவது போட்டு மிதிப்பார். மிதிபடுகிறவர்களுக்கு சாரு
ஏன் இப்படி பண்ணுகிறார் என தெரியும். அவர்கள் அவரது கோபம் ஆறும் வரை, அரசியல் வானம்
தெளியும் வரை பொறுமையாக இருக்கிறார்கள். நேற்று நான் இவர்கள் இதையெல்லாம் தெரிந்தும்
அவரோடு இணக்கமாக இருக்கிறார்கள் என அறிந்து வியந்தேன். இது சமத்துவமான உறவு அல்ல. எழுத்தாள-வாசக
உறவு இப்படி இருக்கக் கூடாது என நான் நம்புகிறேன். ஆனால் வாழ்க்கையில் சிலநேரம் பிழைகளில்
நிறைய உண்மை இருக்கும். இந்த பிழையான உறவில் பூரணமான கனிந்த அன்பு உள்ளது. சமத்துவமாகவோ
சமத்துவமற்றோ எப்படியும் நேசிக்கலாம் என்பது தானே சுதந்திரம்.
மற்றவர்
பார்வையில் இருந்து உலகைப் பார்க்கும் போது மனம் சட்டென விரிகிறது.
Comments