சாதியை கடந்தவர்கள் இருக்கிறார்களா?


ஆணவக்கொலைகளை சாடுவது எளிது, ஆனால் சாதியை கடப்பது அது போல் சுலபம் அல்ல என கார்டூனிஸ்ட் பாலாவின் பதிவு ஒன்று பார்த்தேன். எனக்கு இது பற்றி இரண்டு விசயங்கள் தோன்றுகின்றன.

1)   எதையும் துண்டு போட்டு தாண்டும் மனநிலையில் இருக்க வேண்டியதில்லை. ஒருவர் சாதியை ஆதரித்தபடி இன்னொரு நிலையில் அதை எதிர்க்கலாம். உதாரணமா, சாதி வன்முறையை எதிர்க்கிறவர் ஒரு அடையாளமாய், பண்பாடாய், சௌகர்யமாய் அதை ஏற்கலாம். அதில் எந்த பாசாங்கும் இல்லை.
2)   சாதியை ஏன் தவிர்க்க முடிவதில்லை? கிராமத்தில் அது நிலம் சார்ந்த கட்டமைப்பை உருவாக்குகிறது. இன்னொரு புறம் உறவுகளின் அருகாமைக்கு சாதி தான் ஒரே மார்க்கம். சின்ன சின்ன உதவிகள், பிரச்சனைகளின் போது ஆசுவாசம் எல்லாமே உறவுகளிடம் இருந்து சுலபத்தில் கிடைக்கின்றன (சிலநேரம் அவர்களே தலைவலியாக இருந்தாலும் கூட). உறவுக்காரர்கள் தாம் நீங்கள் சமூகத்தில் எங்கு இருக்கிறீர்கள் என உறுதிப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களுக்கு தரும் மரியாதை சமூகம் தரும் மரியாதையாக நீள்கிறது. உறவுகள் எனும் வலைப்பின்னல் சாதியை நம்பி உள்ளது. அதை விட முக்கியமாய் உங்கள் பிள்ளைகளுக்கு சாதி சார்ந்த சம்பிரதாயங்கள், கதைகள், முன்னோர் வரலாறு, செண்டிமெண்டுகளை ஊட்டுவதும் உறவுக்காரர்கள் தாம்.
சுட்டிக்காட்ட ஒரு உறவுக்காரர் இல்லாத ஒருவரை கற்பனை பண்ணிப் பாருங்கள். அவர் தனக்கென ஒரு ஊரே இல்லாதவராக இருப்பார். ஆக சாதி உறவுகளைத் தருகிறது, உறவுகள் ஊரைத் தருகின்றன. சாதி இல்லாதவன் உறவுகளோ ஊரோ இல்லாத ஒரு நாடோடியாக இருக்க வேண்டும். அப்படியானவர்களை எனக்குத் தெரியும். அது ஒரு தனி மனநிலை. பெரும்பாலானோருக்கு அது முடியாது.

பிள்ளைகளுக்கு “சாதிகள் இல்லையடி பாப்பா” என சொல்லி வளர்ப்பதிலோ சாதியற்றவன் என சான்றிதழ் வாங்குவதிலோ பயனில்லை. அவர்களை தம் உறவுகளில் இருந்தும் ஊரில் இருந்து முழுக்க துண்டிக்க வேண்டும். வேரோடு பிடுங்கி வேறு மண்ணில் நட வேண்டும். அது எவ்வளவு வறட்சியாய் கொடூரமாய் இருக்கும் யோசியுங்கள்.

இறுதியாய், சங்கரின் ஆணவக்கொலையை கண்டிப்பவர்கள் தம் பெண்களை வேறு சாதியில் மணம் புரிந்து கொடுப்பார்களா என்றும் சில அறிவுக்கொடுக்குகள் கேட்கிறார்கள். என்ன ஒரு முட்டாள்தனமான லாஜிக். ஆணவக்கொலையை தான் கண்டிப்பவர்கள் ஆணவக்கொலை செய்ய மாட்டார்கள். அவ்வளவு தான். அவர்கள் ஏன் மாற்றுசாதி மணத்தை ஆதரிக்கவில்லை என கேட்கக் கூடாது.


அப்படியே மாற்றுசாதி மணத்தை ஆதரிப்பவர்களும் ஒன்றும் முற்போக்கோ சாதி மறுப்பாளர்களோ அல்ல. என் பிராமணத் தோழி ஒருவர் தன் உறவுகளில் இத்தலைமுறையில் வெவ்வேறு சாதியில் மணம் புரிந்த நான்கைந்து பேர்களை குறிப்பிட்டார். பிறகு அவர் சொன்னார் “எங்க உறவுகளில் சொந்த சாதியில் மணம் புரிந்தவர்கள் ஒரு சில பேர் கூட கிடையாது”. இதன் பொருள் அவரின் உறவுக்காரர்கள் சாதியை விட்டு விட்டார்கள் என்றல்ல. அவர்கள் இன்னும் சாதியுடன் பிணைப்பாய் தான் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் விட்டுக் கொடுக்க, சமரசம் செய்ய தயாராக இருக்கிறார்கள். சிலரிடம் இந்த நெகிழ்வு இருக்காது. இதை சுலபத்தில் விளக்க இயலாது. மனிதர்கள் இப்படித் தான் கலவைசாதம் போல் இருப்பார்கள். அவர்களை சாதி வெறியர்கள், சாதியற்றவர்கள் என தனித்தனியாக பார்சல் கட்ட முடியாது.

Comments