Sunday, March 13, 2016

எது குற்றம்?


-    (இம்மாத “வெற்றி வேந்தன்” பத்திரிகையில் வெளியான கட்டுரை)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை சேர்ந்த சிராஜிதின் சமீபத்தில் ஐ.எஸ் தீவிரவாதி எனும் முத்திரையில் தீவிரவாத தடுப்புக் குழுவால் (ATS) கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் தான் என்ன? அவர் ஐ.எஸ்ஸுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் எழுதினார். ஐ.எஸ்ஸின் பிரச்சார பத்திரிகையை தன் கணினியில் வைத்திருந்தார். இதனால் அவர் குற்றவாளி ஆகி விடுகிறாரா? என்னைப் பொறுத்த மட்டில் இல்லை.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப் படையினரின் அட்டூழியங்கள் பற்றி வெளியிட்ட நூல் ஒன்று பரவலாக கைமாறப்பட்டு படிக்கப்பட்டது. புலிகளுக்கு ஆதரவாய் எழுதாத பேசாத எத்தனை பேர் இங்கு இருக்கிறோம்? ராஜீவ் எப்படியெல்லாம் துண்டு துண்டாய் சிதறி சாக வேண்டும் என ஒரு சிறுபத்திரிகை எழுத்தாளர் கவிதை கூட எழுதினார். நாம் உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஒரு பிரச்சனையில் நாம் சிலநேரம் அரசின் வெளியுறவுக் கொள்கை நேர் எதிரான தீவிர நிலைப்பாடு எடுக்க நேரிடும். தீவிர எதிர்நிலைப்பாடுகள் எப்போதுமே கொந்தளிப்பான மனநிலையையும் கோபமான சொற்களையும் தூண்டும். இப்படி எழுதியவர்கள் எல்லாம் குற்றவாளிகள் ஆகி விடுவார்களா? இளவரசன் கொல்லப்பட்ட போது நான் ஒவ்வொறு பா.ம.கவினரும் சாக வேண்டும் என எழுதினேன். அதற்காய் நான் பயங்கரவாதியா? சிராஜிதின் இந்த அளவுக்கு தீவிரமாய் எழுதியதாய் கூடத் தெரியவில்லை. ஐ.எஸ்ஸின் வரலாற்றை படிக்கிறவர்களுக்கு அதன் தோற்றத்தில் அமெரிக்காவுக்கும் பிற ஐரோப்பிய தேசங்களுக்கும் சம பங்கு உண்டு என அறியலாம். சொல்லப்போனால் சிரியாவை இரண்டாய் பிளந்து அங்குள்ள ஆளுங்கட்சியை பலவீனமாக்கி எப்போதும் தம் கட்டுப்பாட்டில் வைக்க அமெரிக்கா விரும்பியது. ஆரம்பத்தில் ஐ.எஸ்ஸுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்ததற்கும் ஆதாரம் உள்ளது. ஒரு கட்டத்தில் ஐ.எஸ் பெரிய தலைவலியாய் மாறியதும் அமெரிக்கா அங்குள்ள பழங்குடிகளுக்கு ஆயுதங்களும் அரசியல் ஆதரவும் கொடுத்து ஐ.எஸ்ஸுக்கு எதிராய் போரிட வைத்தது. பழங்குடிகள் ஐ.எஸ்ஸை ஓரளவு முறியடித்து பின்வாங்கவும் வைத்தன. இப்போர்களில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக பிரான்ஸ் உள்ளிட்ட அமெரிக்க துணை நாடுகளின் போர்விமானங்களும் பயன்படுத்தப்பட்டன. தோல்வியின் விளிம்பில் மீண்டும் தன் தரப்பை வலுப்படுத்தவும் தன் ஆதரவாளர்களுக்கு தெம்பூட்டும் வகையில் ஐ.எஸ் பிரான்ஸில் பொதுமக்களை தாக்கி கொன்று குவித்தது. நான் இத்தாக்குதலை நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஐ.எஸ் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டுமானால் நாம் முதலில் அமெரிக்க ஜனாதிபதியை தான் கைது செய்து சிறையில் அடைத்தாக வேண்டும்.
இதையெல்லாம் நான் எழுதலாம். நான் முஸ்லீம் அல்ல. ஆனால் ஒருவேளை நான் ஒரு முஸ்லீம் என்றால் இவ்வளவு வெளிப்படையாக எழுத தயங்குவேன். என்னை தீவிரவாதி என வழக்கு தொடுத்து ரிமாண்டில் வைக்கவும் பத்திரிகையில் என் படத்தை வெளியிடவும் இவர்களுக்கு எவ்வளவு நேரமாகும் சொல்லுங்கள்.
 நமக்கும் சிராஜிதினுக்கும் இரண்டு வித்தியாசங்கள். நாம் நம்முடைய நம்பிக்கைகளுக்கு சாதகமான அரசியல் சூழல் கொண்ட மாநிலத்தில் வாழ்கிறோம். சிராஜிதின் அப்படி எந்த சாதகமும் அற்ற ஒரு நாட்டில் வாழ்கிறார். மேலும் அவர் ஒரு முஸ்லீம். மிக சுலபமாய் அவர் மீது தீவிரவாத முகமூடியை மாட்ட முடிகிறது.
இங்கு இன்னொரு பிரச்சனையும் எழுகிறது. ஒரு குற்றம் செய்ய சாத்தியமுண்டு என நாமாக கற்பனை பண்ணி, எந்த உறுதியான ஆதாரமும் இன்றி, ஒருவரை கைது செய்யலாமா? இப்போது இந்த பாணியிலான குற்றபுலனாய்வு பிரபலமாகி வருகிறது, இதன் தந்தை அமெரிக்கா தான். அங்கு சி.ஐ.ஏ சிலரை வட்டம் போட்டு தேர்வு செய்து மறைமுகமாய் புலனாய்வு செய்யும். அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் எந்த தொடர்பும் இருக்காது. மிக இயல்பான வாழ்க்கையில் இருப்பார்கள். ஆனால் இவர்கள் ஒருவேளை மதவாத உணர்வுகளைத் தூண்டும் ஆட்களை சந்தித்தால் தீவிரவாதி ஆவார்களா என சி.ஐ.ஏ சந்தேகிக்கும். உடனே புலனாய்வு அதிகாரி ஒருவர் மப்டியில் அவருடன் நட்பாய் பழக ஆரம்பிப்பார். அவருடன் தொடர்ந்து மதவாதத்துக்கு ஆதரவாய் பேசி உணர்ச்சிகளைத் தூண்டுவார். அவர் அதற்கு இசைந்தால் அவரிடம் தான் வெடிகுண்டு போன்ற பொருட்களை கொடுத்து தாக்குதலுக்கு உதவப் போவதாய் உறுதி அளிப்பார். ஏதோ ஒரு கட்டத்தில் இவரும் உளவியல் அழுத்தம் தாளாமல் ஒத்துக் கொள்வார். உடனே அவர் தீவிரவாதி என முடிவு கட்டி சி.ஐ.ஏ கைது செய்யும்.
 இந்த பாணியிலான புலனாய்வு மனித உரிமைகளுக்கு மட்டும் அல்ல அடிப்படை உளவியலுக்கே எதிரானது. மனிதர்கள் சூழலுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுப்பவர்கள். இதனால் தான் விஞ்ஞானிகள் மனித மூளையை plastic தன்மை கொண்டது என்கிறார்கள். மதவாத கலவர சூழலில் வாழ்பவர்கள் இயல்பாகவே அதனால் தூண்டப்படுபவர்களாக இருப்பார்கள். மனித மனம் தன்னுடன் செயல்படுகிறவர்களைக் கண்டு போலச் செய்யும் தன்மை கொண்டது (பக்கத்தில் உள்ளவர் கொட்டாவி விட்டால் உங்களுக்கும் கொட்டாவி வருவது போல). இதனால் தான் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தனியான பொது உளவியல் தோன்றுகிறது. உதாரணமாய் மனித உரிமை, சிறுபான்மையினர் உரிமை, கடவுள் மறுப்பு, இடதுசாரி சிந்தனை, தமிழ்தேசியம் போன்ற சில அடிப்படை நம்பிக்கைகள் சார்ந்து சிறுபத்திரிகை வட்டத்தினர் ஒரே போல யோசிப்பதை பார்க்கலாம். தென்மாவட்ட மக்களுக்கு சாதி சார்ந்தும் இது போல் ஒரு வன்முறை உளவியல் இருக்கும். அவர்கள் அவ்விடத்தில் இருந்து புலம்பெயர்த்தால் புது மனிதர்கள் ஆகி விடுவார்கள். எதுவுமே ரத்தத்தில் இல்லை; மதத்திலோ சாதியிலோ இல்லை – சூழலிலும் உரையாடல்களிலும் மொழியிலும் இருக்கிறது. இதனாலேயே ஒரு மனிதனின் இன்றைய பேச்சை வைத்து அவன் நாளைய நடவடிக்கையை தீர்மானிக்க இயலாது. ஒருவேளை இன்றைய நடவடிக்கையை வைத்து நாளைய நடவடிக்கையை ஓரளவு கணிக்கலாம் (நம் செயல்கள் நம் நியூரான்களுக்கும் ஒரு பாதையை, டெம்பிளேட்டை அமைக்கின்றன.)

மேற்சொன்ன வகை புலனாய்வின் முதல் கட்டம் தான் ஒருவரது பேச்சு மற்றும் எழுத்தை கண்காணிப்பது. அதன் மூலம் அவரை குற்றவாளி என தீர்மானிப்பது. அமெரிக்க அதிகாரிகளைப் போல் மப்டியில் பழகி தீவிரவாதத்துக்கு தூண்டும் வேலையை இன்னும் நம் அதிகாரிகள் செய்ய ஆரம்பிக்க வில்லை. ஆனால் மாதக்கணக்காய் அவர்கள் இஸ்லாமியரின் பேஸ்புக் பக்கங்களை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். இப்படி சும்மா கணினி முன் உட்கார்ந்து பேஸ்புக் பார்த்துக் கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால் என்றாவது ஒருநாள் வேலை செய்ததாய் காட்ட வேண்டாமா? அதனால் அடிக்கடி சிராஜிதின் போல் யாராவது ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டு பலிபீடம் முன் கட்டி வைக்கிறார்கள். முட்டாள்தனமான சோம்பேறித்தனமான போலீஸ் விசாரணை வேலையின் உச்சபட்ச உதாரணம் இது. 

No comments: