Friday, February 5, 2016

இணைய சமத்துவமும் பொதுமக்களும்

இன்று சன் நியூஸ் சண்டே ஸ்பெஷல் விவாத மேடை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் கலந்து கொண்டேன். தலைப்பு இணைய சமத்துவம் (net neutrality). Free Basicsஇன் அடிப்படை பிரச்சனைகளை நான் ஏற்றுக் கொண்டேன். அதேவேளை இது ஒரு லட்சியபூர்வமான பிரச்சனை மட்டுமே என குறிப்பிட்டேன். அதாவது நடைமுறையில் இது இணைய சமத்துவத்தை அழிக்கவோ பயனர்களை அடிமையாக்கவோ போவதில்லை. எதிர்காலத்தில் இதை முன்னுதாரணமாய் கொண்டு வேறு நிறுவனங்களும் தம்மை முன்னிட்டு மட்டுமே கட்டுப்பாடான இணைய வசதியை வழங்கினாலும் இன்னொரு பக்கம் சுதந்திரமான இணையமும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஏனென்றால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு இணையத்துக்கான 100 ரூ உண்மையில் பெரிய செலவல்ல. எப்படி பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மக்களை பயன்படுத்துவதற்கு இது போன்ற திட்டங்களை கொண்டு வருகிறதோ மக்களும் இது போன்ற திட்டங்களை தமக்கு தேவையான படி பயன்படுத்திக் கொள்வார்கள்.

Free Basicsஐ பயன்படுத்தும் ஆரம்ப கட்ட பயனர்களுக்கு இணைய சுதந்திரம் என்றாலே என்னவென தெரியாமல் போய் விடும் என்பது புருடா. நாளை சன் குழுமத்தின் அலைவரிசைகளை மட்டும் ஒரு சேவையில் இலவசமாய் தருகிறார்கள் என்றால் மக்கள் சன் நியூஸை மட்டும் பார்த்து மூளை சலவை ஆவார்களா? இல்லை? செய்தி இன்று பல வித ஊடகங்கள் மூலம் மக்களை போய் சேர்ந்தபடியே உள்ளது. யாரும் அதை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. பார்வையாளர்கள் சன்மியூஸிக்குக்காகவோ சீரியல் பார்க்கவோ இந்த சேவையை பயன்படுத்துவார்கள். பலவித செய்தி அலைவரிசைகளை பார்க்க விரும்புகிறவர்கள் வேறு சேவையை பயன்படுத்துவார்கள். மக்களுக்கு இது போன்ற சலுகைகளை எப்படி தமக்கு தோதாக பயன்படுத்த வேண்டும் என தெரியும்.
போனில் புதிதாய் இணையம் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு கூட இணையத்தின் வரம்பு என்னவென தெரியும். அவர்கள் முட்டாள்கள் அல்ல.
இதன் மூலம் பேஸ்புக் பயனர்களை தனக்கு அடிமையாக்கும் என்பதும் மிகை தான். பேஸ்புக்கு ஏற்கனவே இல்லாத அடிமைகளா புதிதாக உருவாக போகிறார்கள்?
இதன் மூலம் பேஸ்புக் நம் இணைய பயன்பாட்டு பாணியை அறிந்து அதை வியாபாரத்துக்கும் லாபத்துக்கும் பயன்படுத்துமென்றால் அது தவறல்லவா? இது இன்றைய யுகத்தில் தவிர்க்க முடியாத சமரசம். நம் போனில் உள்ள கணிசமான செயலிகளுக்கு நமது பயண விபரம், இணைய பயன்பாட்டு விபரங்கள் தெரியும். கோர்ட்டானா, சிரி போன்ற விர்ச்சுவல் அஸிஸ்டெண்டுகளுக்கு அதை விட நுணுக்கமான தகவல்கள் நம்மைப் பற்றி தெரியும். பெரிய நஷ்டமில்லை, ஆனால் நிறைய பயன் நமக்குண்டு என தெரிந்தே அனுமதிக்கிறோம்.
பொதுவாக இது போன்ற விவாதங்களில் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் × சுரண்டப்படும் தனிமனிதன் எனும் எதிரிடையை பயன்படுத்துவது வழக்கம். கார்ப்பரேட்டுகளுக்கு நம்மால் எப்படி பயனுள்ளதோ அதே போல் நமக்கும் கார்ப்பரேட்டுகளால் பயன் உண்டு. சில இடதுசாரிகள் இதை ஒருதலைபட்சமான ஒடுக்குமுறையாக பார்க்கும் தேய்வழக்கான பார்வையை கைவிட வேண்டும். ஒரு பக்கம் தாராளமயமாதலால் பயன்பெற்றபடியே, தனியார் நிறுவனங்களில் கைநிறைய சம்பாதித்து அனைத்து நுகர்வு சார் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு இன்னொரு பக்கம் ஏ கார்ப்பரேட் ஏகாதிபத்தியமே என பொருமுவது பாசாங்கு.
Free Basics ஒரு கருத்தியலாக தவறு தான். ஆனால் நடைமுறையில் அதனால் பிரச்சனைகள் அதிகமிருக்காது. மக்கள் தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள் என்றேன். உடனே மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சிந்தன் “ஒரு விசயம் லட்சியபூர்வமாய் தவறு என்றால் அது நடைமுறையில் மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்?” என்று கேட்டார்.
 லட்சியங்களுக்கும் நடைமுறைக்குமான தூரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். லட்சியம் என்பது அடைய முடியாது இலக்கு. உதாரணமாய் வணிக நோக்கே இல்லாமல் அனைவருக்குமான இணையம் என்பது லட்சியம். அது நடக்காது. வணிக நோக்குடன் அளிக்கப்படும் இணையத்தை தன் தேவைக்கேற்ப பயன்படுத்துவது நடைமுறை. இரண்டுக்குமான சமரசம் எதிர்காலத்தில் நடக்கும் போது வணிக நோக்கு குறைவான அதிக சுதந்திரமுள்ள இலவச இணையம் சாத்தியமாகலாம். இந்த சமரசத்துக்கான உரைகல் மட்டுமே லட்சியம். மற்றபடி லட்சியத்துக்கு பயனில்லை.
ஓட்டுக்கு பணம் வந்து விட்டதனால் ஜனநாயகம் அழிந்து விட்டதா? இல்லை. தேர்தல் செலவு அதிகமாகி விட்டது. ஊழல் பெருத்து விட்டது. ஆனால் மக்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு தமக்கு தேவையான கட்சியை தான் தேர்கிறார்கள். இல்லாவிட்டால் ஒரே கட்சி மட்டுமே நூறு வருடத்துக்கு ஆட்சியில் இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் தவறா என்றால் தவறே. ஆனால் நடைமுறையில் அது ஒரு பிரச்சனை அல்ல. சொல்லப்போனால் நாலு ஓட்டுகள் உள்ள வீட்டில் ஒரு மாத செலவுக்கு பணம் கிடைத்து விடுகிறது. அரசியல்வாதிகள் தம்மை பயன்படுத்துவது போல் தாமும் அரசியல்வாதிகளை பயன்படுத்துவோம் என மக்கள் நினைத்து பணத்தை வாங்குகிறார்கள். Free Basicsஉம் அப்படித் தான்.
இந்த ஞாயிறு இரவு விவாத மேடை ஒளிபரப்பாகிறது. பாருங்கள்.


No comments: