Thursday, February 18, 2016

யார் தலையில் தீயை வைப்பது?

 
நம் அரசியல்வாதிகளில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் ஆட்கள் தனி ரகம். முரட்டுத்தனம், நாகரிகமற்ற பேச்சு, பேசி ஜெயிக்க முடியாவிட்டால் வன்முறையில் இறங்குவது என தனி கலாச்சாரம் கொண்டவர்கள். ரொம்ப பணிவாய் தோன்றும் சில ஆர்.எஸ்.எஸ் ஆட்களின் பேச்சிலும், கண்களிலும் உள்ளூர ஒரு வன்முறை நொதிக்கும். இந்து மகாசபையில் துவங்கி நீண்ட காலமாய் அவர்களுக்கு அப்படி ஒரு அழிவு மனப்பான்மை உள்ளது. சாவார்க்கர், கோட்சே போன்றவர்களைப் பற்றி மனோகர் மல்கோங்கர் எழுதிய “காந்தியை கொன்றவர்கள்” நூலில் இது பற்றி ஒரு துல்லியமான சித்திரம் வருகிறது.

இந்து மகாசபையினர் அக்காலத்தில் மக்கள் தொண்டு, தேசியவாத உணர்வு, லட்சியவாதம் கொண்டவர்களாய் கிட்டத்தட்ட காங்கிரஸ்காரர்கள் போலே இருந்திருக்கிறார்கள். ஒரே வித்தியாசம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னிருந்தே துப்பாக்கி, வெடிகுண்டு சேகரிப்பது, வன்முறையில் ஈடுபடுவது ஆகிய விருப்பங்கள் அவர்களுக்கு உண்டு. இவர்களை ஒருமாதிரி வலதுசாரி நக்சலைட்டுகள் எனலாம். கோட்சேவை எடுத்துக் கொள்வோம். இளமையில் அவர் தன் கிராமத்தில் மக்கள் தொண்டாற்றும் துடிப்பானவராய் இருந்து பின்னர் இந்து மகாசபையில் சேர்ந்து வறுமையிலும் இயற்கை அழிவுகளிலும் மாட்டின மக்களுக்காய் நிறைய பணி செய்திருக்கிறார். சாதி அமைப்பை அழிப்பது பற்றியெல்லாம் கூட தீவிரமாய் யோசித்திருக்கிறார். தன் சாதியை விட்டுக் கொடுக்காவிட்டாலும் தாழ்த்தப்பட்டவர்களை மேம்படுத்த வேண்டும் என விரும்பியிருக்கிறார். தன் கிராமத்தில் அதற்கான முயற்சிகளை செய்திருக்கிறார் போன்ற தகவல்களை மனோகர் மல்கோங்கர் தருகிறார். திருமணமோ தனக்கென பொருளாதார வசதிகளோ பண்ணிக் கொள்ளாமல் லட்சியத்துக்காக வாழ்ந்திருக்கிறார்.
கோட்சே ஆரம்பத்தில் காந்தி மீது மிகுந்த அபிமானம் கொண்டவராய் இருந்திருக்கிறார். சாவார்க்கரை சந்திப்பது மிக எதேச்சையாய் தான் நடக்கிறது. ஆனால் அது ஒரு திருப்புமுனை. அந்தமான் தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த சாவார்க்கருக்கு காங்கிரசார் ஆங்கிலேய அரசிடம் பரிந்து பேசி விடுதலை வாங்கி அளிக்கிறார்கள். அவரை இந்தியாவுக்கு திரும்ப வழிவகை பண்ணுகிறார்கள். இனிமேல் அரசியலில் நேரடியாய் ஈடுபட மாட்டேன் என அவர் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டு இங்கு வருகிறார். முதுமையில் ஓய்வுக்காய் ஒரு கிராமத்தில் வந்து தங்குகிறார். அது கோட்சேவின் கிராமம். காந்தியை சந்தித்து அவருடன் இணைய நினைத்திருந்த கோட்சே சாவார்க்கரை சந்தித்து பேசி அவரால் கவரப்படுகிறார். விரைவில் சாவார்க்கரின் சீடனாகி விடுகிறார்.
கோட்சே ஒருவேளை காந்தியிடம் சேர்ந்திருந்தாலும் விரைவில் ஏமாற்றமடைந்து விலகி இருப்பார் என நினைக்கிறேன். அவருக்கும் காந்திக்குமான ஒரே வித்தியாசம் காந்தி மக்கள் நலன் சார்ந்த லட்சியத்துக்காய் தன்னை அழிக்க நினைப்பார்; கோட்சே தனது லட்சியத்துக்காய் பிறரை அழிக்க நினைப்பார். கொஞ்சம் இந்த பக்கம் நகர்ந்திருந்தால் அவர் ஒரு நல்ல காங்கிரஸ் தலைவராய் உருவெடுத்து ஜெயிலுக்கு போய் விடுதலைக்காய் காந்தியுடன் போராடி பிறகு சுதந்திரத்துக்கு பின் கசப்புற்று தனிமைப்பட்டு தியாகி பென்சன் வாங்கி உதிர்ந்து மறைந்திருப்பார். அப்படி இருக்க முடியாமல் செய்தது அவரது அடிப்படை இயல்பு தான்.
இந்த இயல்பை – அதாவது அழிவினால் ஒன்றை மாற்ற முடியும் என நம்பும் இயல்பை – உளவியல்ரீதியானது என்றும் சொல்லாம். இதை ஒரு கட்சி கட்டியெழுப்பும் கலாச்சாரம் சார்ந்தது என்றும் கூட கூறலாம். காந்தி படுகொலைக்கு பிறகான தடை நீக்கப்பட்டு மெல்ல மெல்ல இந்துத்துவா கட்சிகள் தேசிய மைய நீரோட்ட அரசியலுக்கு நகர்ந்து தம்மை வேறு வகையில் மாற்றிக் கொண்டன. அடிப்படையான அழிவு உளவியலை மதவாதம், இஸ்லாமிய வெறுப்பு என வடிவமைத்து மக்கள் திரளுக்குள் கலந்து கட்சியை வளர்த்தெடுத்தன. ஒரு காலத்தில் அவர்கள் பிரிட்டீஷ்காரர்களை குண்டு வைத்து கொன்று நாட்டை விடுதலையடைய வைக்கலாம் என திட்டமிட்டனர். ஆங்கிலேயர் நாட்டை விட்டு சென்று காங்கிரஸுக்கு அதிகாரத்தை கொடுக்கும் எனும் நிலை வந்த போது அவர்களுக்கு மற்றொரு பொது எதிரி தேவைப்பட்டது. காங்கிரசுடன் சேரவும் முடியாது, ஜனநாயக அரசியலிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. உடனே காந்தியை பொது எதிரியாய் தேர்ந்தெடுத்தனர். அதுவரை ஆங்கிலேயர் தான் இந்துக்களின் எதிரி என்றவர்கள் இப்போது அவ்விடத்தில் காந்தியை வைத்தனர். நாட்டை பாதுகாப்பதற்கு காந்தியை கொல்ல வேண்டும் எனும் விநோதமான ஒரு நம்பிக்கையை கொள்கிறார்கள். அவரைக் கொல்வதற்காய் ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதில் துடிப்பாய் செயல்படுகிறார்கள். சொல்லப்போனால் காந்தி படுகொலைத் திட்டம் இந்து மகாசபையினருக்கு ஒரு புது உயிர்ப்பை, உத்வேகத்தை அளிக்கிறது. ஏனென்றால் தேசம் விடுதலை பெறும் சூழல் அவர்களை ஒருவிதத்தில் துவண்டு போக வைக்கிறது. உடனடி நோக்கம் இல்லாமல் அவர்கள் திசை தவறிய கப்பலைப் போல் தத்தளிக்கிறார்கள். எப்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு எப்போதும் ஒரு தாக்குதல் வாய்ப்பு அவசியமாய் உள்ளதோ இந்து மகாசபையினரும் அப்படியே இருந்தார்கள். இயல்பான, அமைதியான அரசியல் என்பது அவர்களுக்கு மிகவும் அலுப்பூட்டக்கூடியது.
 ஒரு காலத்தில் காந்தியை வழிபட்ட கோட்சே இப்போது அவரைக் கொன்றே தீருவது எனும் தீவிர ஏதிர்நிலையை எடுக்கிறார். ஒருவேளை இரண்டாம் உலகப்போர் நடக்காமல் இருந்து, ஆங்கிலேய அரசு மிகவும் வலுவான சாம்ராஜ்யமாய் இருந்து, இந்தியாவை மேலும் ஒரு முப்பது ஆண்டுகள் ஆண்டிருந்தால் கோட்சே காந்தியை கொல்வது பற்றி கனவு கண்டிருக்க மாட்டார். அவர் காந்தியின் அதே லட்சியத்துக்காய் இன்னொரு புறம் நின்று ஆயுதஙக்ள் மூலம் ஆங்கிலேயரை வீழ்த்த முயன்றிருப்பார். சொல்லப் போனால் வரலாறு தான் கோட்சேவின் கையில் காந்தியை கொல்லும் துப்பாக்கியை வழங்கியது.

காந்தி படுகொலைக்கு பின் நீண்ட காலம் இந்துத்துவா அமைப்பினர் மிகவும் சோர்வாக, உறக்க நிலையில் இருந்தனர். அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸின் அரசியல் பலமோ, நாட்டில் காந்தியை கொன்றவர்கள் என இந்துத்துவா அமைப்பினருக்கு இருந்த கெட்டபெயரோ அல்ல. அவை சிறு காரணங்கள் மட்டும் தான். இந்தியாவில் தேசியவாத உணர்வு என்பது ஏதாவது ஒரு தீவிர வரலாற்று சூழலின் போது மட்டும் தான் ஒட்டுமொத்த மக்களையும் கட்டி இணைத்து ஒன்றாக்க முடியும். ஆங்கிலேய ஆட்சியின் போது ஒரு பொது எதிரியும் பொது நோக்கமும் தேசியவாத அலை மேலெழுந்திட உதவின. அதற்கு அடுத்த நீண்ட காலகட்டம் இந்தியா பொருளாதார ரீதியாகவும் சமூக, கட்டமைப்பு சார்ந்தும் நிலைப்பட போராடி வந்தது. லட்சியாதம் வடிந்து சுயநிலைப்பாட்டுக்காய் சமூகம் போராடிய நிலையில் எந்த அழிவு அரசியலுக்கும் தேவையோ ஆதரவோ மக்கள் மத்தியில் கிடைக்காது. அதனாலே இந்துத்துவா கட்சியினரும் அப்போது உறக்கநிலையில் ஒரு தகுந்த சூழலுக்காய் காத்திருந்தார்கள்.
 தொண்ணூறுகளில் உலகமயமாக்கல், தாராளமயமாதல் இறக்குமதியாகி இந்திய சமூகம் சட்டென வளர்ச்சி எனும் வெள்ளத்தில் இறங்கி பாய்ந்தோட தொடங்கியது. ஒரு பக்கம் மத்திய சாதியினர் வளம் பெற்று தம்மை வலுவான சக்தியாய நிறுவிக் கொண்டனர். இன்னொரு புறம் தலித் அரசியல் உள்ளிட்ட அடையாள அரசியல் அமைப்புகளுக்கான இடமும் ஏற்பட்டது. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்களின் (இடஒதுக்கீடு சார்ந்த) அடையாள அரசியல் என்பது இந்துத்துவா அடையாள அரசியலுக்கும் ஒரு முகத்தையும் அளித்தது. சட்டென மக்களுக்கு தேசியவாத உணர்வும் அதிகரித்தது. இதை இக்கட்டத்தில் வடமாநிலங்களில் தான் அதிகம் பார்க்க முடிந்தது. ஏனென்றால் பெரும்பாலான வளர்ச்சியும் அதிகார குவிப்பும் அங்கு தான் நடந்தது. பொதுவாய் எந்த சமூகமும் பொருளாதார ரீதியில் வளர்ந்த நிலையில் தன் அடையாள அதிகாரம் பற்றி அதிகம் அக்கறை கொள்ள ஆரம்பிக்கும். அப்போது சாதி அல்லது மதம் சார்ந்த ஒரு தேசியவாதம் அவர்களிடம் தோன்றி தீவிரமாகும். வளர்ச்சியடைந்து நிலைப்பெற்ற பெருவாரியான மத்திய சாதி மற்றும் மேல்சாதி இந்துக்களுக்கு தம் அடையாளம் என்ன எனும் கேள்வி எழுகிறது. சமூக அதிகாரத்தில் தம் இடம் கலாச்சார ரீதியாய் என்ன என யோசிக்க துவங்கினார்கள். இப்போது இந்துத்துவா கட்சியினர் சட்டென உயிர்ப்பு கொண்டார்கள். ஏனென்றால் இப்போது அவர்களின் தேசியவாதத்துக்கு தீனி கிடைத்து விட்டது. ஒரு பொது எதிரியும் அமைந்து விட்டார்கள் – இஸ்லாமியர்.
 பெருவாரி இந்துக்கள் ஒரு நவீன உலகில் தம்மை பண்பாட்டு ரீதியில் அந்நியப்பட்டு உணர்ந்தனர். அப்போது அவர்களுக்கு தம் மரபை மீட்டெடுத்து பேசவும் ஒன்றிணையயும் ஒரு பொது எதிரி தேவையாகிறது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்து மகாசபையினருக்கு எதிரி நம்பர் மூன்றாக இருந்த இஸ்லாமியர் இப்போது நம்பர் ஒன்றாக மாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் நாடு முழுக்க பாபர் மசூதியை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். பாபர் மசூதியை இடிக்கிறார்கள். வன்முறை நடத்தி இஸ்லாமியரை படுகொலை செய்கிறார்கள். ஒரு பொது எதிரியும் வன்முறைக்கான சாத்தியமும் இருந்தால் தான் இந்துத்துவா அரசியல்வாதிகள் உற்சாகம் கொண்டு வேலை செய்வார்கள். சட்டென கட்சி வளர்ந்து பெருவாரி இந்துக்களின் ஆதரவு பெற்று பின்னர் ஆட்சியையும் கைப்பற்றினார்கள்.
ஆனால் இந்துத்துவா என்பது ஆரம்பத்தில் இவர்களின் பிரதான லட்சியம் அல்ல. அதாவது இன்றுள்ள இந்துத்துவா அல்ல. அன்று வெள்ளையரை துரத்தி இந்து மகாதேசத்தை கட்டமைக்கலாம் என கனவு கண்டார்கள். அந்த நிலையில் இருந்து இன்றுள்ள இந்துத்துவா மற்றொரு பரிமாணம் பெற்று விட்டது. இதுவும் நிலைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விசயம். ரெண்டாயிரத்துக்கு பின்னர் மக்கள் மதவாத வெறுப்பு அரசியலை ஆதரிக்கவில்லை என பா.ஜ.க புரிந்து கொண்டது. அதனாலே அவர்கள் மோடியை முன்வைத்து பொருளாதார முன்னேற்றம், சீரான நிர்வாகம் என ஒரு புது நோக்கத்தை கண்டெடுத்தனர். அதை வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரமாக மாற்றி மீண்டும் ஆட்சியையும் கைப்பற்றினர். ஆனால் கட்சிக்குள் கணிசமான தொண்டர்களுக்கு பொருளாதார வளர்ச்சி கோஷம் ஏற்புடையதாகவோ உத்வேகம் அளிப்பதாகவோ இல்லை. ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து வளர்ந்து வந்த பல எம்.எல்.ஏக்கள், மத்திய மந்திரிகள் இன்றும் கடுமையாய மத/சாதி துவேசம் கொண்ட அறிக்கைகளை விடுப்பதும் பேட்டிகளை அளிப்பதும் இதற்கு உதாரணம். சமீபத்தைய பீகார் தேர்தலில் ஒரு பக்கம் பா.ஜ.க மைய தலைவர்கள் பொருளாதார கோஷம் வைத்து பிரச்சாரம் செய்ய உள்ளூர் பா.ஜ.க குட்டித்தலைவர்களோ கடுமையாய் இஸ்லாமியரை தாக்கி பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் இட ஒதுக்கீட்டுக்கு எதிராய் பேசினார். இந்த எதிர்/வன்முறை அரசியல் உண்மையில் அவர்களுக்கு மிகவும் பாதகமாய் போனதால் தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்தார்கள்.
 ஏன் பா.ஜ.க தலைமை தனது குட்டித்த்லைவர்களின் வெறுப்பு அரசியலை கண்டிக்காமல் மௌனம் சாதிக்கிறது என நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். அதற்கு பதில் இதுவே. பா.ஜ.கவால் என்றுமே வெறுப்பு அரசியலில் இருந்து முழுக்க விலக முடியாது. அதுவே அவர்களின் அடிப்படை கலாச்சாரம். அவர்களின் முழுஆற்றலின் ஊற்றுமுகம் என்பது அழிவு இச்சையில் இருக்கிறது. பா.ஜ.க என்பது ஜனநாயக வேஷம் போட்ட ஒரு நக்சலைட் அமைப்பு.
ஆனால் பா.ஜ.க தன்னை இன்று அமைதியை விரும்பும், ஓரளவு முற்போக்கு குணம் கொண்ட கட்சியாக காட்டிக் கொள்ள முயற்சி எடுப்பதையும் காண்கிறோம். அம்பேத்கரை தம் தலைவராய் வரிப்பதற்காய் அவர்களுக்கு செய்யும் தகிடுதித்தங்கள் இதற்கும் ஒரு உதாரணம். தலித் ஆதரவு என்பதை விட தாம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவானவர்கள் என ஒரு பிம்பம் கட்டமைப்பது அவர்களுக்கு இன்று அவசியமாக உள்ளது. ஒருவேளை நாளை (அதாவது அடுத்த அரைநூற்றாண்டில்) இஸ்லாமியர் தம்மை எண்ணிக்கை அளவில் அதிரடியாய் உயர்த்திக் கொண்டால் பா.ஜ.க நிச்சயம் தன்னை இஸ்லாமிய தோழன் என்று கூட காட்டிக் கொள்ளும். ஆனால் கட்சியை தொடர்ந்து புதுப்பிக்கவும் உத்வேகம் ஊட்டவும் அவர்களுக்கு பொது எதிரியும் வன்முறை செயல்திட்டமும் மிகவும் அவசியம். ஆங்கிலேயர் – காங்கிரஸார் - காந்தி என படிப்படியாக அவர்கள் இஸ்லாமியர் நோக்கி நகர்ந்து வந்திருப்பது இஸ்லாமிய வெறுப்பு கூட அவர்களின் அடிப்படை சித்தாந்தம் அல்ல என்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கு தேவை குத்துவதற்கு ஒரு உடல். குத்திய ரத்தம் படிந்த வாளை உருவி உயர்த்திப் பிடித்து முழங்க ஒரு கோஷம். ஏதோ ஒரு வகையிலான தேசியவாதம்.
பா.ஜ.கவின் செயல்திட்ட அமைப்பில் வாங்கு வங்கி அரசியல், அரசியல் அதிகார கணக்கிடல்களுக்கு உள்ள இடத்தையும் நான் இங்கு மறுக்கவில்லை. ஆனால் ஒரு கட்சியாக தொண்டர்களை இணைத்து செயல்பட வைப்பதற்க்கு அவர்களுக்கு இருக்கிற ஆதார விழைவு, மைய ஈர்ப்பு சக்தி என்ன என்பது பற்றி மட்டுமே பேசுகிறேன்.
எல்லா சமூகங்களிலும் அழிவு மனப்பான்மை கொண்ட மக்கள் ஒரு தரப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு சமூக, கலாச்சார, அரசியல் ரீதியாக ஒரு வடிகால், இடம் இருந்து கொண்டும் தான் இருக்கும். ஒன்று இப்படியான மக்கள் எதிர்கலாச்சார நடவடிக்கைகள், குற்றங்கள் மூலம் தம்மை அழித்துக் கொள்வார்கள் (அமெரிக்காவில் போல்). அல்லது அவர்கள் விளிம்பு நிலை அரசியலில் நக்சல்கள், மாவோயிஸ்டுகள், ஆயுத போராளிகள் என நீடிப்பார்கள். மைய அரசியலும் பா.ஜ.கவாகவும் வடிவெடுப்பார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் அவர்களின் உதிரிக்கட்சிகள் தொடர்ந்து நிகழ்த்தும் தாக்குதல்கள், அவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சுகள் ஆகியவற்றை இப்படித் தான் புரிந்து கொள்ள இயலும். ஏனென்றால் இந்த நடவடிக்கைகள் இல்லாமல் அவர்கள் இல்லை; அவர்களுக்கு என்று ஒரு நிலைப்பு இல்லை.
சொல்லப் போனால் இந்துத்துவாவை முறியடிப்பது தான் பா.ஜ.கவை தோற்கடிப்பதற்கும், மதவாதத்தையும் எதிர்ப்பதற்குமான வழி என நான் நம்பவில்லை. இந்துத்துவா என்பது வரலாற்றில் ஒரு தற்காலிக கருத்தாக்கம் மட்டுமே. ஏனென்றால் பெரும்பாலான பா.ஜ.க, ஆர்.எஸ்.ஏஸ் ஆட்களுக்கு இந்து மதம் மற்றும் இந்துக்களின் மேம்பாட்டில் எந்த ஈடுபாடும் இல்லை. பசுவதையை எதிர்க்கிறோம் என அவர்கள் லாரி லாரியை மறித்து கைப்பற்றும் பசுக்களை கூட அவர்கள் உணவளித்து பாதுகாப்பதோ அப்படி கைப்பற்றின பசுக்களுக்காய் தொண்டு நிறுவனங்கள் நடந்தும் கோசாலாக்களுக்கு நிதி அளிப்பதோ கூட இல்லை என சமீபத்தில் ஒரு செய்தித்தாளில் அறிக்கை வந்தது. மேலும் அவர்கள் இந்துத்துவா எனும் புள்ளியில் இருந்து நகரும் சமிக்ஞைகள் கூட வரத் தொடங்கி விட்டன. எதிர்காலத்தில் இதை விட ஆபத்தான ஒரு வன்முறை கருத்தாக்கத்தை வேறு ஒரு எதிரியைக் கொண்டு அவர்கள் வளர்த்தெடுக்கக் கூடும்.
ஒரு பழைய படத்தில் வரும் காட்சி இது. என்.எஸ். கிருஷ்ணன் தலைப்பாகை கட்டி, கோட்டு அணிந்து தன் வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பார். அங்கு ஒரு சிறுவன் கையில் தீக்கொள்ளியை வைத்து வீட்டில் அங்கங்கே பற்ற வைத்து விளையாட முயன்று கொண்டிருப்பான். என்.எஸ்.கிருஷ்ணன் அவனை அழைத்து “வீட்டில கண்ட இடத்தில் தீயை வைக்காதேடா” என கண்டிப்பார். ஆனால் பையன் சமாதானம் ஆக மாட்டான். தொணதொணவென சிணுங்கிக் கொண்டிருப்பான். என்.எஸ் கிருஷ்ணனுக்கோ அவனை கையாள பொறுமை இல்லை. “என்னடா வேணும்?” என்பார். “இந்த தீயை எங்கே கொண்டு போய் வைக்கிறது?” என அவன் பாவமாய் கேட்பான். அவர் “என் தலையில வை” என எரிச்சலில் சொல்லி விடுவார். பிறகு என்ன சொன்னோம் என மறந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்குவார். பையன் நைசாக அவர் தலையில் நெருப்பை வைத்து விட்டு ஓடி விடுவான். தலைப்பாகை எரிந்து புகைய ஆரம்பித்த பின் தான் என்.எஸ். கிருஷ்ணனுக்கு நடந்தது விளங்கும். பா.ஜ.க ஆட்சி நடக்கும் இந்த வேளையில் பலருக்கும் உள்ள கவலை இது தான்: தூங்கும் போதும் விழித்துக் கொண்டிருக்கும் போதும் இந்த பையன்கள் கையிலிருந்து நம் தலையை எப்படி காப்பாற்றுவது?

நன்றி: உயிர்மை, பிப்ரவரி 2016

No comments: