வேகமாய் வாசிப்பது எப்படி?

நேற்று “எப்படி வாரம் ஒரு புத்தகம் படிப்பது?” என்றொரு ஆங்கிலக் கட்டுரை படித்தேன். எழுதினவர் புத்தகம் என்பது அபுனைவுகளையே. தான் ஒரு மெதுவான வாசகன் என்று கூறும் அவர் எப்படி கல்லூரியில் தன் பேராசிரியர் கூறிய அறிவுரை அவரது வாசிப்பை பன்மடங்காக்க பெருக்க உதவியது என விளக்குக்கிறார்.

 ஒருமுறை அவர் வகுப்பில் தன் வரலாற்று பேராசிரியரிடம் பாடத்திற்கான துணை நூல்களை வாசித்து முடிப்பதற்கு தான் திணறுவதாய் கூறுகிறார். பேராசிரியர் உடனே வகுப்பை பார்த்து “எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை?” எனக் கேட்கிறார். கிட்டத்தட்ட அத்தனை பேரும் கையை தூக்குகிறார்கள். அடுத்து அவர் அபுனைவு நூல்களை எப்படி படிக்கலாம், எப்படி படிக்க கூடாது என விளக்குகிறார். அவர் கூறும் வழிமுறைகள் ஏற்கனவே நாம் அறிந்த scanning, skimming போன்றவை தான். ஸ்கானிங் என்றால் “எந்திரன்” படத்தில் ரோபோ ரஜினி புத்தகம் படிப்பது போல் சர்ரென வாசிப்பது. ஒரு கட்டுரையை மேலும் கீழுமாய் நாலு வாக்கியங்கள் வாசித்தால் அது எதைப் பற்றி என புரிந்து விடும். ஸ்கிம்மிங் அதை விட கொஞ்சம் பொறுமையாய் ஒரு கட்டுரை அல்லது நூலின் முக்கியமான பகுதிகளை மட்டும் ஆடு புல்லை மேய்வது போல் படிப்பது.
 நான் பொதுவாய் இலக்கிய பத்திரிகை கட்டுரைகள், நாளிதழ் நடுப்பக்க கட்டுரைகளை இறுதிப் பத்தியில் இருந்து தான் வாசிக்க துவங்குவேன். பெரும்பாலான கட்டுரையாளர்கள் சொல்ல வந்ததை இறுதிப் பத்தியில் தான் சொல்வார்கள். அது பிடித்திருந்தால் கீழிருந்து மேலாக ஒவ்வொரு பத்தியாக படித்து வருவேன். விவரணைக் கட்டுரைகள் உண்டு. உதாரணமாய், ”நான் 1989இல் தில்லியில் காலை ஒன்பது மணிக்கு ராஜீவ் காந்தியை அவரது பங்களாவில் சந்திக்க காத்திருந்த போது…” என ஒரு கட்டுரை ஆரம்பித்தால் அதை சத்தியமாய் பாதியில் இருந்து தான் படிப்பேன். ஏனென்றால் அப்போது தான் ராஜீவ் கட்டுரைக்குள் நுழையவே செய்வார். வெகுஜன மீடியாவில் பொதுவாக முக்கியமான கருத்துக்களை ஹைலைட் செய்து கட்டுரை நடுவில் காட்டுவார்கள். இப்போது இலக்கிய பத்திரிகைகளிலும் அந்த பாணியை பின்பற்றுகிறார்கள். அந்த வாக்கியங்களை நம்பக் கூடாது. அவை பெரும்பாலும் தவறான புரிதலைத் தான் தரும்.
புத்தகத்தை எடுத்தவுடன் அதன் பின்னட்டையை படிப்பது, அத்தியாயத் தலைப்புகள் கொண்ட உள்ளடக்கம் பக்கத்தை பார்வையிடுவது சில நொடிகளில் அதைப் பற்றி ஒரு பார்வையை கொடுக்கும் என்கிறார். அதாவது உங்களிடம் பத்து புத்தகங்கள் உள்ளன. அத்தனையையும் படிக்க நேரமில்லை என்றால் இவை இரண்டையும் பார்த்தால் அதன் அடிப்படை ஓரளவு புரியும். இதற்கு அடுத்த கட்டமாய் முன்னுரைகளை படிக்கலாம் என்கிறார். ஆனால் இது கொஞ்சம் ஆபத்தான வேலை. சில புத்தகங்களில் முன்னுரையே நாற்பது ஐம்பது பக்கங்கள் இருக்கும், புத்தகத்தை விட சிரமமாக கூட முன்னுரைகள் அமைவதுண்டு.
 ஒரு புத்தகத்தை பற்றின மதிப்புரைகளை படிப்பது அதைப் பற்றி சுருக்கமாய் பிறர் என்ன நினைக்கிறார்கள் என அறிய உதவும். ஒரு வருடம் முக்கியமான ஐநூறு புத்தகங்கள் வருகின்றன என்றால் அத்தனையையும் படிக்க முடியாமல் போகலாம். ஆனால் அவற்றில் 400 புத்தகங்களை பற்றியாவது பொதுவாக சுருக்கமாய் அறிந்து வைத்திருப்பது ஒரு வரலாற்று பார்வை தரும், வேறு நூல்களை வாசிக்கையில் அவற்றை எந்த இடத்தில் பொருத்துவது என தெரிய வரும், நண்பர்களுடனான உரையாடல்களில் உதவும்.
இவையெல்லாம் பொதுவாய் நாம் அறிந்த உத்திகளே. ஆனால் பேராசிரியர் புதிதாய் ஒன்று சொல்கிறார். வாசிப்பு மெத்தனமாவதற்கு காரணம் நாம் கட்டுரை நூல்களை ஒரு நாவலை போல் முழுமையாய் அணு அணுவாய் படிக்க நினைப்பதனால் தான் என்கிறார். இது எனக்கு சட்டென ஒரு வெளிச்சத்தை தந்தது. நாவலை அல்லது ஒரு கதையை அதில் முழுக்க மூழ்கி வாசிக்க வேண்டும். இதை immersive வாசிப்பு என்கிறார்கள். நீருக்குள் மூழ்கி இருப்பது போல் புனைவுக்குள் மூழ்கி விட வேண்டும்.
 இலக்கிய வாசகர்கள் சிறு வயது முதலே இப்படித் தான் பழக்கப்படுகிறார்கள். பயிற்றுவிக்கப்படுகிறார்கள். விளைவாக ஒரு கட்டுரை நூலை படிக்கையில் அதன் ஒவ்வொரு தகவலையும் விவரணையும் வாதத்தையும் உள்வாங்கி அதில் மூழ்கி வாசிக்க முனைகிறார்கள். ஆனால் அதன் மூலம் நாம் ஒரு நாவலின் அனுபவத்தையும் பெற முடியாது. அந்நூலும் அந்தளவுக்கு ஆழமான அனுபவமோ பக்கத்துக்கு பக்கம் ஞானம் கொப்புளிக்கிறதாக இருக்காது. விளைவாக அவர்கள் மெத்தனமான வாசகர்கள் ஆகிறார்கள்.
நான் மெதுவாக வாசிக்கிறவன். வேகமாய் வாசிப்பது எப்படி என ஒருமுறை ஜெயமோகனிடம் கேட்டேன். அவர் இரண்டு விசயங்களை சொன்னார். ஒன்று வழக்கம் போல் இடமிருந்து வலமாய் பார்வையை பக்கத்தில் ஓட விடாமல் மேலே-கீழே, கீழே-மேலே என ஓட்டி வாசிப்பது. இன்னொன்று சொற்களின் அர்த்தத்தை பற்றி கவலைப்படாது நூலில் மூழ்கிப் போய் வாசிப்பது. இதற்கு நிறைய கற்பனையும் உணர்வுவேகமும் போதும்.
மேற்சொன்ன உத்திகளை நான் நாவல் வாசிப்புக்கு கூட பயன்படுத்தினது உண்டு. குறிப்பாய் மோசமாய் எழுதப்பட்ட நாவல்களை அங்குலம் அங்குலமாய் வாசிக்க தேவையில்லை எனத் தோறும் போது வேகமாய் அதன் முக்கிய பத்திகளை மட்டும் வாசித்து விட்டு சென்று விடுவேன். ஒருமுறை 350 பக்க தமிழ் நாவல் ஒன்றை இம்முறையில் 6 மணிநேரத்தில் வாசித்து விட்டேன். அதை பொறுமையாக மூன்று நாட்களாய் வாசித்திருந்தால் நேரம் வீணாகி இருக்கும் என முடித்த உடன் தோன்றியது. கல்லூரியில் படிக்கும் போது டி.எச் லாரன்ஸின் ரெயின்போ நாவலை இது போல் வாசிக்க முயன்றேன். ஒவ்வொரு பக்கத்திலும் உணர்ச்சிகரமான நாடகியமான இடங்களில் மட்டும் பார்வையை பதித்து மிச்சத்தை ஊகித்தபடி நகர்ந்தேன். முழுக்க என்னை மறந்து ஆழ்ந்து வாசிக்க முடிந்தேன். ஒரு மணிநேரத்தில் 100 பக்கங்கள் படித்தேன். ஆனால் அதன் பிறகு என்னால் அது போல் வாசிக்க முடிந்ததில்லை.
இப்படித் தான் வாசிக்க வேண்டும் என்றில்லை. இவை வாசிப்பின் பல்வேறு சாத்தியங்கள் என நினைத்துக் கொள்ள வேண்டும்.

நம்மையே அறியாமல் பேஸ்புக் ’ஸ்கேனிங்’ உத்தியை நமக்கு பயிற்றுவித்துள்ளது என நினைக்கிறேன். வேகமாய் ஒரு பதிவின் சில வரிகளை மட்டும் அங்கங்கே வாசிக்க, அதன் படம், அதில் வருகிற பரபரப்பான கமெண்டுகள் ஆகியவற்றை மேய்ந்து விட்டு அதைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிற வழக்கம் நமக்கு ஏற்பட்டு விட்டது. நீங்கள் பேஸ்புக் பதிவை படிக்கிற பாணியை தான் நான் ஒருவிதத்தில் மேலே புத்தகங்கள் படிப்பதற்கான வழிமுறையாக விளக்கி இருக்கிறேன். பேஸ்புக்கில் பழகியவர்கள் பெரிய கட்டுரைகளை வாசிக்க முடியாது என நான் நினைக்கவில்லை மாறாக மற்றவர்களை விட வேகமாய் அவர்களால் படிக்க முடியும். ஒருவேளை ஆழமாய் படிக்க முடியாமல் போகலாம் என்றாலும்.

Comments