சீனியர் எழுத்தாளர்களும் விசித்திர தந்தை உளவியலும்


தொடர்ந்து எழுதுகிறவர்களை யாரும் புரமோட் செய்ய வேண்டியதில்லை. அவர்களாகவே மேலே வந்து விடுவார்கள். ஆனால் எழுத்தில் விருப்பம் இல்லாதவர்களை சீனியர் எழுத்தாளர்கள் புகழ்ந்து முன்னெடுத்தபடியே இருப்பார்கள். அவர்களும் ஒரே வருடத்தில் எழுதுவதை விட்டு மாயமாகி விடுவார்கள். இதை நான் என் ஞான திருஷ்டியால் ஒன்றும் சொல்லவில்லை. கடந்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களின் சிறு பட்டியலை எடுத்து பார்த்தால் யாருக்கும் புரியும். தமிழில் இந்த விசித்திரத்துக்கு முன்னுதாரணங்கள் உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன்பே கா.ந.சு இது போல் சில எழுத தெரியாதவர்களை அடுத்த தலைமுறையின் சாதனை எழுத்தாளன் என பாராட்டி தள்ளி இருக்கிறார். அவர்களின் பெயரைப் இன்று பார்த்தால் யாரென்றே உங்களுக்கு தெரியாது. ஏன் திறமையும் எழுதும் வெறியும் இல்லாதவர்களை க.நா.சுவில் இருந்து இன்றுள்ளவர்கள் வரை புரமோட செய்ய வேண்டும்? இது ஒரு நிலப்பிரபுத்துவ ஆண்மைய குடும்ப மனநிலையில் இருந்து தோன்றும் விசித்திரம். நிலப்பிரபுத்துவ குடும்பங்களில் பொதுவாக அப்பாவுக்கு திறமை குறைந்த வேலையே செய்யாத உதவாக்கரை பையனையே பிடிக்கும்.

 விவிலியத்தின் Prodigal Son கதை இந்த உளவியலைத் தான் பேசுகிறது. பூஞையான பிள்ளை மீது அப்பாவுக்கு பிரியமும் வலுவான பிள்ளை மீது பொறாமையும் மென்மையான வெறுப்பும் ஏற்படுகிறது. விவிலியத்தில் ஆரம்பித்து இன்று வரை பல குடும்பங்களில் இதைப் பார்க்கலாம்.  சமகாலத்தில் கலைஞர்-அழகிரி உறவை உதாரணமாய் சொல்லலாம். கலைஞருக்கு ஸ்டாலின் மீது பொறாமையும் அழகிரி மீது பிரியமும் இருக்கும். நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டருக்கான ஒரு பாராட்டு நிகழ்வின் போது பிரபுதேவாவிடம் உங்க அப்பாவுக்கு மகன்களில் யாரை பிடிக்கும் என்று கேட்டார்கள். பிரபுதேவா அதற்கு தன்னையோ அண்ணன் ராஜுவையோ விட தம்பி நாகேந்திர பிரசாத்தை தான் அப்பாவுக்கு அதிகம் பிடிக்கும் என்றார். நாகேந்திர பிரசாத் தான் சகோதரர்களில் வெற்றி பெறாதவர். இதை விளக்கவே முடியாது. தந்தையின் உளவியல் அப்படித் தான்.

நம் சீனியர் எழுத்தாளர்கள் இயல்பிலேயே நிலப்பிரபுத்துவ சூழலின் நீட்சி. ஒரு தந்தையை போலத் தான் அவர்கள் இளைய எழுத்தாளர்களை நோக்குகிறார்கள். அடுத்த தலைமுறையினர் சீனியர்களாகும் போது நிலைமை நேர்கீழாக இருக்கும் என நினைக்கிறேன்.

Comments

சுஜாதாவின் மாஞ்சு என்ற சிறுகதையில் இந்த உளவியலை காண முடியும். ஆனால் அதில் அப்பாவுக்கு பதிலாக அம்மா.