Tuesday, February 16, 2016

ஜெ.என்.யுவில் நடந்தது என்ன?

பொதுவாக கூறப்படுவது போல் ஜெ.என்.யு இடதுசாரிகளின் கூடாரம் ஒன்றும் அல்ல. ஆனால் படித்து உலகெங்கும் தொடர்புகள் வைத்திருக்கும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தலைவர்களால் இடதுசாரி அறிவுஜீவிகளுக்கான வலுவான முகாம் அங்கு உருவாகி உள்ளது. அங்கு ஒரு இடதுசாரி விவாத மரபு, discourse வலுவாக உள்ளது. இட ஒதுக்கீடு பயன்படுத்தி அங்கு சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மேல்சாதி கம்யூனிசத்தை பன்முகம் கொண்டதாய் மாற்றி இருக்கிறார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை, பெண்ணுரிமை, அம்பேத்கரியம், நடைமுறை அரசிய சமூக பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். இது போன்ற நிறுவனங்களில் இன்று இடதுசாரி சிந்தனை முக்கியமான பரிமாணம் பெற்றுள்ளது. இது தான் உண்மை நிலை. மற்றபடி சில மீடியா ஆட்கள் சித்தரிப்பது போல் மாவோயிச சிந்தனை கொண்டோரின் கூடாரமல்ல அது. இன்னொரு விசயம் ஜெ.என்.யுவில் இடதுசாரிகளுடன் பல்வேறு வலதுசாரி மாணவர் அமைப்புகளும் செயல்படுகின்றன. விவாத ரீதியாக அவர்கள் இடதுசாரிகள் அளவுக்கு தீவிரமாக இல்லை என்றாலும் பரபரப்பாக தான் இயங்குகிறார்கள்.

வேறெந்த பல்கலைக்கழகத்திலும் இல்லாத ஒரு அறிவுச்சூழலும் ஜெ.என்.யுவில் உள்ளது. அங்கு தினமும் மாலை மாணவர் விடுதியின் மெஸ்களில் சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டுவார்கள். இது அதிகாரபூர்வமான கூட்டமாக இருக்காது. எந்த மாணவர் குழுவும் இதை செய்யலாம். தேவை உணவுமேஜை மட்டுமே. சிறப்பு விருந்தினர் அதில் ஏறி நின்று பேசலாம். அதைத் தொடர்ந்து விவாதங்கள் நடக்கும். ஒரே சமயம் இது போல் பல விவாதங்கள் நிகழும். விவாதங்கள் பற்றின விபரம் தெரிய வரும் மாணவர்கள் தம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கலந்து கொள்வார்கள். இவ்வளவு அற்புதமான ஒரு அரசியல் சமூக கல்வி நிலையை நீங்கள் வேறெங்கும் காண இயலாது.
மாணவர்களை நீங்களும் பேசவும் விவாதிக்கவும் அனுமதித்தால் அவர்கள் அதிகாரம் பெறுவார்கள். இதைத் தடுக்கவே பொதுவாய் கல்வி நிலையங்களில் அவர்களின் பேச்சுரிமை துண்டிக்கப்படுகிறது. ஜெ.என்.யுவில் அறிவுவாதத்தை பொறுத்தமட்டில் பேராசிரியர்களும் மாணவர்களும் சமதட்டில் நிற்கிறார்கள். சேர்ந்தே போராடுகிறார்கள்.
பா.ஜ.க போன்ற பாசிச அரசுகள் நிச்சயம் இது போன்ற மாணவர் அதிகாரத்தை கண்டு அஞ்சுவதில் வியப்பில்லை. வலதுசாரி அறிவுஜீவிகளைக் கொண்டு தம்மால் கல்வித்துறையையும் கலைஞர்களையும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்று ஆகும் போது பா.ஜ.க காவல்துறையை ஏவி வன்முறையால் அச்சூழலையே அழிக்கப் பார்க்கிறது. பா.ஜ.க பக்தர்கள் ஒரு பக்கம் ஜெ.என்.யு தீவிரவாத ஆதரவாளர்களின் கூடாரம் என பொய் பரப்புரை செய்கிறது. இப்படி பேசுகிறவர்கள் ஒருபோதும் ஜெ.என்.யுவுக்குள் எட்டிப் பார்த்திராதவர்கள்.
இது ஒரு புறம் இருக்க மாணவர் தலைவர் கன்ஹய்யா குமாரின் கைதுக்கு காரணமான கூட்டத்துக்கு வருவோம். அப்சல் குருவின் நினைவு நாளை ஒட்டி அவருக்கு ஆதரவாக கூட்டம் நடத்த மாணவர்கள் நிர்வாகத்திடம் அனுமதி பெறுகிறார்கள். பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான எ.பி.வி.பி அக்கூட்டம் தேசவிரோதமானது என புகார் கொடுக்க அனுமதி ரத்தாகிறது. இந்நிலையில் குமார் தாமே முன்வந்து அக்கூட்டம் நடத்த முடிவெடுக்கிறார். அக்கூட்டத்தில் தேசவிரோத கோஷம் எல்லாம் பேச்சாளர்கள் எழுப்பவில்லை. ஆனால் அப்போது அங்கு வரும் எ.பி.வி.பியினர் கொந்தளிப்பான கோஷங்கள் எழுப்பி கூட்டத்தை வன்முறையால் கலைக்க பார்க்கிறார்கள். அப்சல் குருவுக்காக அங்கு வந்து சேர்ந்த காஷ்மீரிய இளைஞர்கள் சிலர் எ.பி.வி.பிக்கு எதிராகவும் அப்சல் குருவுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்புகிறார்கள். அவர்கள் ஜெ.என்.யு மாணவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் சொற்களுக்கு ஜெ.என்.யு பொறுப்பாக முடியாது. நான் நாளை ஒரு டிவியில் சென்று அப்சல் குருவுக்கு ஆதரவாக பேசினால் அதற்காக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரை கைது செய்யக் கூடாது இல்லையா? ஆனால் இந்த நிலையில் தான் தான் செய்யாத குற்றத்துக்காக குமார் கைதாகிறார்.
மேலும் மேடையில் அன்று பேசின பேராசிரியர்கள் தமக்கு காஷ்மீரிய மாணவர்களின் கருத்துடன் உடன்பாடில்லை என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி இருந்தும் அவர்களும் காவல்துறையால் விசாரிக்கப்படுகிறார்கள்.
அப்சல் குருவுக்கு ஆதரவாக, காஷ்மீரிய விடுதலையை கோரி ஒருவர் இந்தியாவில் பேசலாமா? தாராளமாக பேசலாம் என்கிறது நம் அரசியல் சட்டம். ஒருவர் அப்படி பேசி ஒரு கூட்டத்தை கிளர வைத்து அவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே அது தேசவிரோத குற்றமாகும். மற்றபடி விடுதலைபுலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம், அதை நானோ நீங்களோ ஆதரித்து பேசினால் அது குற்றமல்ல. ஆக குமார் செய்தது எப்படியும் குற்றம் அல்ல. ஒருவேளை அவர் காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக பேசியிருந்தாலும் அதற்காய் அவரை சட்டப்படி தண்டிக்க முடியாது. அலைகழிக்கலாம். அவ்வளவு தான்.
இனி இப்பிரச்சனையின் தேசியவாத நியாயத்துக்கு வருவோம். ஒரு குடிமகன் தன் தேசத்துக்கு எதிராய் பேசலாமா, செயல்படலாமா? கூடாது. ஆனால் தன் தேசத்தை அரசியல் நிலைப்பாட்டை அவர் தாராளமாய் எதிர்க்கலாம், எதிர்த்து செயல்படலாம். அதை நம் சட்டம் அனுமதிக்கிறது. தேசவிரோதம் என்பது நம் தேசத்தை ராணுவ ரகசியங்களை எதிரிநாட்டுக்கு தெரிவிப்பது, தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பது, ஆட்சியை வன்முறை மூலம் கவிழ்க்க பார்ப்பது ஆகியவை தான். மற்றபடி ஒரு தமிழனுக்கு தன் மாநிலம் ஒரு தனிநாடாக வேண்டும் என கோர உரிமை உள்ளது, அதை அவன் ஜனநாயக பூர்வமாய் அமைதியான முறையில் செய்யும் பட்சத்தில். ஆக தேச விரோதம் வேறு தேசிய அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பதும் மறுப்பதும் வேறு.
தேசிய அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பது உண்மையில் நீதியை நிலைநாட்ட மிகவும் அவசியமாக அமையலாம். உதாரணமாய் ஈழப்போர் நடந்த வேளையில் இன்று இந்துத்துவாவுக்கு எதிராய் கிளரும் இடதுசாரி அமைப்புகள், வட இந்திய மாணவர்கள், பேராசிரியர்கள், ஆங்கில, இந்தி மீடியா தமிழர்களுக்கு ஆதரவாய் திரண்டு போராடி இருந்தால் லட்சக்கணக்கான மக்கள் இன அழிவில் இருந்து தப்பி இருக்க முடியும். அன்று அனைவரும் அமைதியாக இருந்தார்கள். காஷ்மீரிய போராட்டத்தை உரிமை போராட்டமாக பார்க்கிறவர்கள் ஈழப்போராட்டத்தை தீவிரவாதமாய் கண்டார்கள்.
இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் விடுதலைப்போராட்டங்கள் பற்றின பார்வை நமது நிலைப்பாடு மற்றும் உணர்ச்சிநிலையால் ஆளாளுக்கு மாறக் கூடியது. நான் எம்.ஸி.ஸியில் படிக்கையில் என்னுடன் பழகிய மணிப்பூர் மாணவர்கள் சில நேரடியாய் இந்தியாவை பழித்து பேசுவதை கேட்டிருக்கிறேன். அவர்களை நான் தேச விரோதியாய் கருதவில்லை. ஏனென்றால் தமிழ்தேசியத்தின் நியாயங்களை ஏற்று வளர்ந்தவன் நான். எனக்கு மணிப்பூர் மக்களின் தேசியவாதம் புரியும். ஆனாலும் என்னுடன் படித்த வட இந்திய மாணவர்கள் இதை எதிர்த்தார்கள். ஏனென்றால் வட இந்தியாவில் தேசிய பெரும்பான்மைவாதம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்களுக்கு தமிழ் தேசியம், மணிப்பூர் தேசியவாதம், காஷ்மீர் தேசியவாதம் எல்லாமே தீவிரவாதம் தான்.
ஆக இந்த பிரச்சனையை தர்க்கரீதியாய் அணுகாமல் ஒவ்வொரு தரப்பை சேர்ந்தவர்களின் உணர்ச்சிநிலையை புரிந்து கொண்டு அதன் பின் விவாதிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து கொண்டே காஷ்மீர் விடுதலையை ஆதரிக்கலாமா என கேட்கக் கூடாது. அரைநூற்றாண்டாய் நாம் அம்மக்களுக்கு இழைத்துள்ள அநீதிகள் கண்ணீரை வரவழைப்பவை.
அப்சல் குரு குற்றவாளி இல்லையா? அவர் ஒரு முன்னாள் தீவிரவாதி. ஆனால் பின்னர் திருந்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர். பாராளுமன்ற தாக்குதலுக்கு அவர் உதவியதாய் எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. வாழ்வுரிமைக்கான அவகாசம் அளிக்கபடாமலே அவரை தூக்கிலிட்டோம். காஷ்மீரிய மக்களுக்கு அவர் ஒரு தியாகியாக தெரிவதில் வியப்பில்லை. அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எல்லாம் கோஷமிடவில்லை. பாதுகாப்பின்மையின் விளிம்பில் இருக்கிற அம்மக்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்திய அரசுக்கு எதிராக பேசுவதை நாம் ஒரு தேசவிரோத குற்றமாக பாவித்து அவர்களையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தக் கூடாது. மாறாக அவர்களுடன் உரையாட வேண்டும். தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ராணுவத்தை அப்பள்ளத்தாக்கில் இருந்து மெல்ல அகற்ற வேண்டும். வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அங்கு அன்றாடம் எளிய அப்பாவி இளைஞர்கள் ராணுவத்தால் வேட்டையாடப்படும் போது அவர்களுக்கு எப்படி நம் தேசம் மீது நம்பிக்கை வரும். இதுவே உங்கள் வீடுகளில் உங்கள் பிள்ளைகளுக்கு நிகழ்ந்தால் எப்படி உணர்வீர்கள்?

கருணையும் அன்பும் மனிதாபிமானமும் இல்லாதவர்கள் தான் இச்சூழலில் பா.ஜ.கவை ஆதரிப்பார்கள். மும்பையிலும் தில்லியிலும் தாக்குதல் தொடுத்தவர்கள் காஷ்மீரிகள் அல்ல என அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாத ஆதரவாளர்கள் என ஈழப்போரின் போது முத்திரை குத்தியவர்களால் ஒரு போதும் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது.

No comments: