Thursday, January 21, 2016

பேய்கள் அரசாண்டால்….

12487095_10156329841080315_1319418043815133185_o

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் மெல்ல மெல்ல சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வது எப்படி இருக்கும் என நமக்கு புரிய வந்துள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலையும் அதன் பின்னணியும் இந்த சர்வாதிகார வெறியாட்டத்தின் உச்சம் எனலாம். இதற்கு முந்தைய எந்த அரசும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள், போராளிகள் அனைவரின் கழுத்தையும் சதா சுருக்குக் கயிற்றில் கட்டி வைத்திருக்க முனைந்ததில்லை. இந்த அரசும் அதன் கட்சித் தலைவர்களும் முற்றிய மனநோயாளிகளைப் போல் பாதுகாப்பின்மையின் விளிம்பில் தவிக்கிறார்கள். தமக்கெதிராய் ஒரு சொல், ஒரு அசைவு, ஒரு கருத்து தோன்றினால் போதும் கத்தியை தூக்க, சாட்டையை சொடுக்க, தூக்குக்கயிறை முறுக்க துவங்கி விடுகிறார்கள். என் நண்பர் ஒருவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் அரசை விமர்சித்து பேசினார். ஒரு சில நாட்களுக்குள் அப்பேச்சை குறிப்பிட்டு விளக்கம் வேண்டி மத்திய கல்வி அமைச்சகத்திடம் இருந்து நிர்வாகத்திற்கு கடிதம் வந்து விட்டது. சமீபமாய் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசும் போது மோடியை குஜராத் இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாளி என்று சொன்னேன். உடனே அங்கிருந்த பா.ஜ.க ஆள் என்னை கிரிமினல் என நேரலையிலே திட்ட தொடங்கி விட்டார். போன வாரம் மீண்டும் அந்த டிவிக்கு போயிருந்த போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்னிடம் ஒரு தகவல் சொன்னார். நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க தரப்பில் இருந்து என்னைப் பற்றி நிறைய புகார்கள் வந்து கொண்டே இருந்தனவாம். ஒரு சின்ன வாக்கியத்துக்கே இவ்வளவு புகார்கள் என்றால் நேரடியாய் பல்கலைக்கழகத்துக்குள் இந்துத்துவாவுக்கு எதிராய் கூட்டங்கள் நடத்தி, எ.பி.வி.பி போன்ற இந்துத்துவா அமைப்புகளை நேரடியாய் எதிர்த்த ரோஹித் வெமுலாவுக்கு எந்தளவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கும் யோசியுங்கள்.

 எ.பி.வி.பி தலைவர் சுஷீல் குமாரை தாக்கினதாய் ரோஹித் வெமுலா மீது பொய் வழக்கு தொடுக்கிறார்கள். எந்த ஆதாரமும் இல்லை. குமார் அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்கிறார். அதை ரோஹித் தன் மீது தொடுத்த தாக்குதலில் ஏற்பட்ட காயத்துக்கான சிகிச்சை என திரித்து புகார் கொடுக்கிறார். இதை அடுத்து ரோஹித் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படுகிறார், விடுதியில் இருந்து வெளியேற்றப்படுகிறார், அவரது உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. இவை எல்லாமே சட்டத்துக்கு புறம்பாய் நடக்கின்றன. எந்த நியாயமும் இன்றி ஒருவரது வாழ்க்கையை நிர்மூலமாக்க முடியும் என மத்திய அரசு இங்கு வெளிப்படையாய் ஒரு செய்தியை விடுக்கிறது. ரோஹித்தின் ஒடுக்குமுறை என்பது அந்த பல்கலைக்கழகத்தின் முற்போக்கு அரசியல் கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் விடுக்கப்பட்ட நேரடியான மிரட்டல். “எங்களை எதிர்த்தால் முதலில் உன் அடையாளத்தை அழிப்பொம், எதிர்காலத்தை இருளாக்குவோம். குற்றவாளி ஆக்குவோம். கடைசியில் உதவித்தொகையை நிறுத்தி உன் தட்டில் விழுகிற சோறை பறிப்போம். உன் கை, காலை கட்டி கடலில் தூக்கிப் போடுவோம்.” இந்த அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு எதிராய் ரோஹித் தொடர்ந்து போராடிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இறுதியில் விரக்தியின் உச்சத்தில் அவர் தூக்கில் தொங்கினார்.
ஒரு மாணவரை ஒடுக்கி முதுகெலும்பை ஒடிப்பது எளிது. அவரை நீக்கம் செய்தால் போதும். எதிர்காலமே காலியாகி விடும். கல்வி வளாகத்தில் இருந்து நீக்கினால் அவரது அரசியல் இடம் காணாமல் போய் விடும். ஒரே ஆணை மூலம் ஒரு மாணவரை பூஜ்யமாக்க முடியும். அடையாளங்களும் எதிர்காலமும் மாய்க்கப்பட்ட இளைஞர்களின் மன அழுத்தமும் அச்சமும் உச்சபட்சமானது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தன் ஆட்களை கல்வி நிறுவனங்கள் எங்கும் நுழைக்க தொடர்ந்து முயன்று வந்தது. ஆனால் இந்துத்துவா பின்னணி கொண்ட அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் மிகவும் குறைவு. ஆனால் எந்த சுப்பன் கிடைத்தாலும் போதும், திண்ணையை ஆக்கிரமிப்போம் என்பது பா.ஜ.க கொள்கை. அப்படித் தான் சுப்பாராவை ஹைதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆக்குகிறார்கள். அவர் பதவியேற்றதும் தன் விசுவாசத்தை நிரூபிப்பதற்காய் அரசுக்கு எதிரான மாணவர்களை ஒரேயடியாய் நீக்கம் செய்கிறார். அவர் ஏற்கனவே விடுதி வார்டனாக இருந்த போது அசைவம் உண்ணும் மாணவர்களை தனியாய் உட்கார வைக்க முயன்று சர்ச்சையை உண்டு பண்ணினவர். அப்போது தன்னை எதிர்த்த மாணவர்களையும் இது போல் விடுதியில் இருந்து நீக்கினார். அவர் ஆதிக்க சாதி மனப்பான்மை மிக்கவர் என்கிறார்கள் மாணவர்கள். அவருடைய அரசியல் காரணமாய் தான் இப்போது ரோஹித்தின் மரணம் ஒரு தலித் ஒடுக்குறையாய் பார்க்கப்படுகிறது.
 ஆனால் இந்த தற்கொலையில் சாதியின் பங்கு என்ன என்பது தெளிவில்லை. ரோஹித் ஒரு தலித் போராளி என்பதால் மட்டுமே அவரது தற்கொலை ”தலித் படுகொலை” ஆவதில்லை.
சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராய் போராடியதற்காய் சில மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். ஹைதராபாதில் நடந்தது போன்றே இங்கும் எந்த வலுவான காரணமும் இல்லாமல் தான் உச்சபட்ச தண்டனை கொடுக்கப்பட்டது. சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கில் ஒரு மாணவர் தமிழக அரசு வெள்ளத்தின் போது மெத்தனமாய் நடந்து கொண்டது என பேச அவரை அரங்கில் இருந்து வெளியேற்றியதுடன் இல்லாமல் தற்காலிக நீக்கமும் செய்தார்கள். அது மட்டுமல்ல அடுத்த நாள் செய்தித்தாளில் அப்போதைய துணைவேந்தர் முதல்வரை விமர்சித்ததனால் தான் நாங்கள் மாணவரை வெளியேற்றினோம் என பேசி தன் விசுவாசத்தை நிரூபிக்க வேறு செய்தார். ஐ.ஐ.டியில் அம்பேத்கர் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதும் இது போன்ற ஒரு நோக்கத்தினால் தான். சொல்லப்போனால் அரசே கேட்கும் முன் கல்வி நிறுவன நிர்வாகிகள் தாமே முனைந்து மாணவர்களை கடுமையாய் ஒடுக்கி தம் அரச சார்பை நிரூபிக்கிறார்கள். ஆளும் அரசுக்கு தம் முதுகை வளைத்துக் காட்ட இந்த துணைவேந்தர்கள், முதல்வர்களுக்கு மாணவர்கள் ஒரு சிறு வாய்ப்பு அன்றி வேறேதுமில்லை. இரண்டு தரப்பினர் இடையிலான பகடையாட்டத்தில் மாணவர்கள் வாழ்க்க்கையையும் உயிரையும் இழக்கிறார்கள்.
எல்லா பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களின் தலைமையையும் தேர்ந்தெடுக்கிற உரிமையை ஆட்சியாளர்களிடம் இருந்து முதலில் பறிக்க வேண்டும். இந்தியாவின் சிறந்த அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள் மற்றும் நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதே போல மாணவர்களை நேரடியாய் நீக்கம் செய்யும் உரிமையையும் கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் இருந்து பறிக்க வேண்டும். இந்த இரண்டையும் புது சட்டங்கள் நிறைவேற்றி நிலுவையில் கொண்டு வந்தால் இப்போதுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கேரளாவில் உள்ளது போல் மாணவர்கள் அமைப்புகள் பெரிய கட்சிகளின் பகுதியாய் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு போதுமான ஆதரவும் பாதுகாப்பும் வெளியில் இருந்து கட்சி அளவில் கிடைக்கும். இன்னொரு பக்கம், மாணவர்கள் எதிர்காலத்தில் கட்சி அரசியலில் பங்கேற்று வளரவும் வாய்ப்பிருக்கும்.

ரோஹித் வெமுலாவின் தற்கொலை கடிதத்தை படிக்கும் போது ஒரு புறம் நெகிழ்கிறோம். இன்னொரு புறம் “இவ்வளவு அறிவும் முதிர்ச்சியும் படைத்த இளைஞரை இழந்து விட்டோமே” என மனம் விம்முகிறது. ஒரு எழுத்தாளனான என்னால் கூட இவ்வளவு அழகான ஆழமான இறுதிக் கடிதத்தை படைத்து விட முடியாது. கடிதத்தின் முடிவில் அவர் சொல்கிறார் “என் மரணத்தை முன்னிட்டு என் நண்பர்களையோ எதிரிகளையோ துன்புறுத்தாதீர்கள்”. இதைப் படிக்கும் போது எனக்கு விஷம் அருந்தும் முன் சாக்ரடீஸ் பேசின இறுதி உரை நினைவு வருகிறது. அவரும் தன் விரோதிகளை நினைத்து இரக்கம் கொண்டார். ஒரு உன்னத லட்சியவாதிக்கு யாருமே எதிரி இல்லை. எ.பி.வி.பியின் சுஷீல்குமார் கூட ரோஹித்துக்கு எதிர்முகாமில் உள்ள ஆளே அன்றி தனிப்பட்ட எதிரி அல்ல. எவ்வளவு பரந்து பட்ட மனம் உனக்கு ரோஹித். தலை வணங்குகிறேன். போய் வா நண்பா! 

No comments: