காந்தியும் மாஸ் ஹிஸ்டிரியாவும்

Image result for tasmac protests

நான் சிறுவயதில் லூயிஸ் பிஷர் எழுதிய காந்தியின் வாழ்க்கை கதையை (Life of Mahatma Gandhi) படிக்கையில் நிறைய இடங்களில் நெகிழ்ந்திருக்கிறேன். சில இடங்களில் அழுதிருக்கிறேன். அதில் என்னை வியப்படைய செய்த இடம் 1947இல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் நடந்த கலவரங்கள் பற்றின அத்தியாயம். கல்கத்தாவிலும் பீஹாரிலும் தில்லியிலும் கலவரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தான் பிரிவது என்பது வெறுமனே ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தனி நாட்டை பெற்று செல்வதாய் எளிதாய் இருக்கவில்லை. பஞ்சாப் மற்றும் வங்கத்தின் வளமான பகுதிகள் உடைக்கப்பட்டன. அப்போது இந்திய பகுதியை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தார்கள். நிலம் என்பது மக்களின் உணர்ச்சிகளோடு மிகவும் அந்தரங்கமாய் பிணைக்கப்பட்டது. நீங்கள் என்னிடம் இருந்து ஐந்து லட்சத்தை திருடினால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால் ஐந்து லட்சம் மதிப்புள்ள என் பூர்வீக நிலத்தை பிடுங்கினால் எனக்கு கொலைவெறி தோன்றும். இந்த உளவியல் இன்றும் வேலை செய்கிறது. இன்றும் சாதிய/மத கலவரங்கள் நிலம் சார்ந்ததாய் இருப்பதை காண்கிறோம்.

 மேலும் இந்த பிரிவினை சரியாக திட்டமிடப்பட்டு சில வருடங்களில் பொறுமையாய் நிகழாமல் அவசர கதியில் நடந்ததாலும் இரண்டில் இருந்து ஐந்து லட்சத்துக்கு உட்பட்ட மக்கள் பயணங்களிலும் தாக்குதல்களிலும் இறந்தனர். வன்முறையின் முதல் தூண்டுதல் முதலில் நிலத்தை இழந்த வங்காள, பஞ்சாபியர்களிடம் தான் தோன்றியிருக்க வேண்டும். ஸ்டோக்ஹோம் பல்கலையின் இஷ்தியாக் அகமது தனது Punjab: Bloodied, Partitioned and Cleansed எனும் நூலில் வடபஞ்சாபில் பெரும்பான்மையிராய் இருந்த இஸ்லாமியர் அங்குள்ள சீக்கியர்களுக்கு எதிராய் முதலில் வன்முறையை துவக்கினார்கள்; ஆனால் இந்த தீப்பொறி பின்னர் பெரும் கலவரங்களாய் பரவ முதலில் கொல்லப்பட்ட சீக்கியர்களை விட பலமடங்கு அதிகமான எண்ணிக்கையில் இஸ்லாமியர் கிழக்கு பஞ்சாபில் கொல்லப்பட்டனர் என்கிறார். ஒரு கட்டத்தில் இது இருபக்கமும் பழிவாங்கும் வெறியாட்டங்கள் நெருப்பாய் பரவி நாட்டை சூழ்ந்தன. காந்தி தன் போராட்ட வாழ்வில் திகைத்து நின்ற இடம் இது. அவர் கையை மீறி மத வெறுப்பு கிளர்ந்து எரிகிறது.
காந்தியின் நோக்கம் என்றுமே பலவீனமானவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது (அவர்களுக்கு சம அரசியல் உரிமை தர வேண்டும் என்பதல்ல). அவர் இது போன்ற சமயங்களில் இஸ்லாமியரை பாதுகாக்கவே விரும்பினர். இதனால் வலதுசாரி இந்துக்கள் அவரை வெறுக்க நேர்ந்தது. இன்னொரு பக்கம் ஜின்னாவின் கட்சியினரும் ஆதரவாளர்களும் காந்தியை ஒரு மறைமுக இந்து ஆதரவாளராய் பார்த்தனர். கணிசமான இந்து மற்றும் இஸ்லாமிய அகதிகள் தில்லியில் குவிந்திருந்தனர். எந்நேரமும் இருசாராருக்கும் இடையே மோதல் வெடிக்கும் ஆபத்து ஒரு பக்கம். மெஹ்ரௌலி எனும் இடத்தில் உள்ள குதுப் உதின் பகிதியாய் சிஷ்டி எனும் ஒரு மசூதி இந்துக்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. மத நல்லிணக்கத்தையும் வேண்டியும், இந்த மசூதியை இஸ்லாமியருக்கு விட்டுத் தர வலிறுத்தியும் 1948 ஜனவரி மாதம் 13ஆம் தேதி காந்தி தில்லியில் தன் இறுதி ஆயுதமான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்கிறார். இதுவே காந்தி மேற்கொண்ட கடைசி உண்ணாவிரத போராட்டம். சில நாட்களிலேயே மக்கள் கலவரங்களை கைவிடுகின்றனர். இரு பக்கமும் உள்ள தலைவர்களும் காந்தியிடம் வந்து மன்னிப்பு கோருகிறார்கள். மத நல்லிணக்க பிரகடனம் ஒன்றில் கையெழுத்திடுகின்றனர். ஜனவரி 18ஆம் தேதி காந்தி தன் உண்ணாவிரதத்தை வெற்றிகரமாய் முடித்தார்.
 இது வழக்கமாய் நமக்கு திரும்ப திரும்ப சொல்லப்பட்ட வரலாறு. நானும் இத்தனை நாள் இதையே தான் நம்பினேன். ஒரு மனிதன் தனியாய் தன் உடலை வதைத்து மொத்த தேசத்தின் அன்பையும் மன எழுச்சியையும் தன் பால் திருப்பி தன்னுடைய சொல்லுக்கு அடி பணிய வைக்கிறானே என வியந்தேன்; இந்த இடத்தை படிக்கும் போதெல்லாம் எனக்கு புல்லரிக்கும். ஆனால் இப்போது வேறுவிதமாய் தோன்றுகிறது. குறிப்பாய் சமீபமாய் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தர்மபுரி போல் நம் மாவட்டங்களிலும் நடந்த மத/சாதி படுகொலைகள், கலவரங்கள், சசி பெருமாளின் மரணத்தை ஒட்டி ஒருவாரம் இங்கு கொழுந்து விட்டெரிந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளும் போது காந்தியின் காலத்து கிளர்ச்சிகளுக்கு புது அர்த்தம் கிடைக்கிறது.
சுதந்திரத்துக்கு முந்தின இந்தியாவில் கடுமையான பஞ்சங்களும் வறுமையும் இருந்தன. ஆனாலும் மக்கள் எல்லாவற்றையும் சகித்து தம் அன்றாட கடமைகளை ஆற்றி வந்தார்கள். இப்படியான வாழ்க்கை இட்லி குக்கர் போல. மெல்ல மெல்ல ஆவி நிரம்பி அது வெளியாகும் வேளை வரும். அப்போது மக்களுக்கு ஆவேசம் வரும். யார் மீதாவது தமக்கு இந்த வாழ்க்கை மீதுள்ள கசப்பையும் வெறுப்பையும் காட்ட தோன்றும். தம்மை அறியாமல் தமக்குள் பொங்கும் நெருக்கடியின் அழுத்தத்தை வெளிப்படுத்த மக்களுக்கு அப்போது ஒரு நியாயமும் பொது எதிரியும் வேண்டும். காந்தி இத்தகைய தருணங்களை சிறப்பாய் அடையாளம் கண்டு கொண்டு மக்களின் மாஸ் ஹிஸ்டிரியாவுக்கு ஒரு வடிவம் அளிக்கிறார். அது அஹிம்சை என்பதும் மக்களை மிகுந்த ஒழுக்கத்துடன் அவரால் ஒருங்கிணைக்க முடிந்தது என்பதும் தான் அவரது தனி சாதனை.
 அந்நிய வஸ்திரங்களை புறக்கணித்து எரிப்பது, சட்டத்தை மீறி உப்பு செய்வது போன்ற அவருடைய போராட்டங்கள் பார்க்க ரொம்ப எளிதாக தோன்றும். ஆனால் எப்போதுமே மாஸ் ஹிஸ்டிரியாவை தூண்டுவதற்கு நோக்கமும் இலக்கும் எளிதாக இருக்க வேண்டும். உதாரணமாய் இந்துக்களின் இடத்தில் ஒரு இஸ்லாமிய வழிபாட்டு தலத்தை கட்டி விட்டார்கள், இட இதுக்கீடு காரணமாய் நம் பிள்ளைகள் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள், நம் சாதி பெண்களை அடுத்த சாதிக்காரன் ஏமாற்றி பயன்படுத்துகிறான் போன்ற சிறுபிள்ளைத்தனமான காரணங்களை மக்களுக்கு அளித்தால் போதும்; அவர்கள் கிளர்ந்து எழுவார்கள். ஆனால் மற்ற சமயங்களில் ஒரு இந்துவின் வீட்டருகே ஒரு மசூதி இருந்தால் அவன் பொருட்படுத்த மாட்டான். தன் கண்ணெதிரே தன் சாதி பெண் மற்றொரு சாதி ஆணோடு பைக்கில் போவது பார்த்தால் வேடிக்கை பார்ப்பதோடு நின்று கொள்வான். இதெல்லாம் ஒரு பிரச்சனையா நமக்கு அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறதே என்று தான் அவன் நினைப்பான். ஆனால் அவனுக்குள் ஆவி நிறைந்து விசில் வழி வெளிவரும் வேளை வரும் போது இது போன்ற அற்ப காரணம் தான் அவனுக்கு வேண்டும்.
காந்தி இது போன்ற மலினமான காரணங்களை பயன்படுத்த மாட்டார். ஆனால் அவர் மிக எளிதான ஒரு காரணத்தை தான் தேர்வார். உதாரணமாய் உப்புக்கு வரி விதிக்கிறார்கள் என்பது சாதாரண மக்களுக்கு ஒரு பிரச்சனையாகவே தெரியாது. மார்ச் மாதம் 12, 1930இல் துவங்கி நாடு முழுக்க காந்தி 24 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு வரி செலுத்தாது உப்பு உற்பத்தி செய்யும்படி மக்களைத் தூண்டினார். இந்த தண்டி நடைபயண போராட்டத்துக்கு பின் எத்தனை பேர் உப்பு வரியை பற்றி கவலைப்பட்டிருப்பார்கள்? ஆனால் உப்பு அனைவருக்குமான ஒன்று. உப்பை முன்வைத்து போராடும் போது விதிவிலக்கில்லாமல் எல்லாருக்கும் புரியும். இது போன்ற சாதாரண பொருளை வைத்து போராடுவது பிரித்தானிய அரசை சீண்டுவதற்கும் பயன்பட்டது. ஆனால் இது மக்களின் நிரந்தர அன்றாட பிரச்சனை அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உப்பு என்பது வெறும் சாக்கு தான். மதுவுக்கு எதிரான சமீபத்தைய போராட்டத்தையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாரம் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், சிறு அரசியல் கட்சி ஆட்கள், ஏன் முன்னாள் குடிகாரர்கள் கூட ஒன்றாய் தர்ணா செய்தார்கள், தெருவில் போராடினார்கள், டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்தார்கள், டாஸ்மாக் ஊழியர்களை தாக்கினார்கள். அரசு ஒரு டாஸ்மாக் கடையை கூட மூடவில்லை. ஆனாலும் இப்போராட்டம் அது துவங்கின ஆவேசத்துக்கு சற்றும் பொருத்தமற்ற முறையில் எந்த ஓசைகளும் இன்றி ஒருநாள் முடிவுற்றது. அரசு போராட்டக்காரர்களை கடுமையாய் ஒடுக்கி அதன் மூலம் முடித்து வைத்தது என்றும் கூற முடியாது. மக்களே தாமாய் போதும் என நினைத்து நிறுத்திக் கொண்டார்கள்.
நான் மேலே குறிப்பிட்ட சாதி/மத கலவரங்கள் மற்றும் திட்டமிட்ட படுகொலைகளிலும் இதே பாணி தான் பின்பற்றபட்டது. இது அரசுக்கு எதிரான போராட்டம் என்றால் அவை ஒரு பகுதி சிறுபான்மையினருக்கு எதிரான கிளர்ச்சி அல்லது திட்டமிட்ட தாக்குதல். கும்பலாய் வன்முறையாளர்கள் போய் ஒரு கிராமத்தை அல்லது காலனியை தாக்குவார்கள். அங்குள்ள பணக்கார, வசதியான குடும்பங்களின் வீடு மற்றும் பொருட்களை தேர்ந்தெடுத்து தீ வைப்பார்கள். இவர்களுக்கு பயந்து மக்கள் இடம்பெயர்வார்கள். இது முடிந்ததும் போலீஸ் வந்து பார்க்கும். மக்களுக்கு தங்கவும் சாப்பிடவும் சில வசதிகள் அளிப்பார்கள். கலவரக்காரர்களில் அல்லக்கைகள் சிலரை மட்டும் கைது செய்வார்கள். ரொம்ப முற்றின வன்முறை என்றால் ஊரடங்கு உத்தரவு போடுவார்கள். எப்படியும் ஒரு வாரம் அல்லது சில வாரங்களில் மக்கள் தம் பகுதிக்கு திரும்பி அன்றாட வாழ்க்கையை தொடர்வார்கள்.
இம்மாதிரி கலவரங்களுக்கு ஒரு காலாவதி காலம் உள்ளது என்பது விநோதமானது. அதெப்படி ஓரிருமுறை சிலரை தாக்கி தீ வைத்ததும் மக்களின் கோபம் அடங்குகிறது? பிரச்சனை அப்படியே இருக்க ஏன் கலவரங்கள் முடிந்து போகின்றன? உண்மையில் பிரச்சனை முக்கியமல்ல என்பதற்கு இது ஒரு சான்று. பிரச்சனை ஒரு சாக்கு மட்டும் தான்.
நம்முடைய வாழ்க்கை என்பது கடிகாரம் போல. அது ஒரு விதிமுறைக்கு உட்பட்டு ஒரே கணக்கில் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் நடுவில் கடிகாரம் பழுதாகி நின்று விடும். அப்போது கலவரங்கள், போராட்டங்கள் நடக்கும். பிறகு மீண்டும் கடிகாரம் ஓடத் துவங்கும். மக்களுக்கு அடிப்படையான இயல்பு ஒன்று உண்டு. தமது அன்றாட வாழ்க்கை காரியங்களான காலையில் எழுந்து கடனகள் கழித்து, ஆடையை தேய்த்து, சாப்பிட்டு அலுவலகம் போவது அல்லது டி.வி பார்ப்பது, அரட்டை அடிப்பது, சமைப்பது, தூங்குவது ஆகியற்றை தொடர்ந்து செய்வது தான் அவர்களுக்கு வாழ்க்கை மீது ஒரு அர்த்த்தையும் நியாயத்தையும் அளிக்கிறது. இந்த வழமையை அவர்களால் முழுக்க குலைக்க முடியாது. என்ன தான் மதுவை தடை செய்ய வேண்டும் என கொதித்து எழுந்தாலும் செய்ய வேலையும் தட்டில் சோறும் பார்க்க டிவியும் தான் அவர்களின் ஆதார செயல்பாடுகள். அவற்றுக்கு அவர்கள் திரும்பியே ஆக வேண்டும். இதை காந்தி நன்றாய் அறிவார். அதனால் அவர் தனது எந்த போராட்டத்தையும் ஒரு கட்டத்துக்கு மேல் நீட்டித்ததில்லை. சட்டென நிறுத்தி விடுவார்.

பிரிவினை வன்முறையை நிறுத்தும் பொருட்டான காந்தியின் உண்ணாவிர போராட்டத்துக்கு வருவோம். காந்தி விரதம் இருக்காவிட்டால் கூட அந்த கலவரங்கள் தாமாகவே நின்று போயிருக்கும். கலவரங்களின் ஆவி தீர்ந்து விசில் அடங்கும் வேளையில் காந்தியின் உணர்ச்சிகரமான கோரிக்கையும் வருகிறது. ஆனால் காந்தி தன்னந்தனியாய் கலவரங்களை நிறுத்தினார் என நான் முன்பு போல் இப்போது நம்பவில்லை. வரலாறு எப்போதுமே பெரும்புள்ளிகளின் அடையாள அரசியல் செயல்பாடுகளை வைத்து எழுதப்படுகிறது. ஆனால் உண்மை அதற்கு அடியில் முழுக்க விநோதமான மற்றொன்றாய் இருக்கும்.
நன்றி: அம்ருதா ஜனவரி 2016

Comments