Thursday, January 14, 2016

சென்னையை மீட்பது நான் புதிதாய் யாரை சந்தித்தாலும் ரெண்டு கேள்விகளைத் தான் முதலில் கேட்கிறார்கள். எங்கு வேலை செய்கிறீர்கள்? சொந்த வீட்டில் வசிக்கிறீர்களா? இந்த இரண்டின் விகிதாச்சாரம் தான் சென்னை வாழ்வின் தரத்தை தீர்மானிக்கிறது.

சென்னையில் வசிப்பதன் மிக்கப்பெரிய பிரச்சனை வேலையோ சம்பளமோ விலைவாசியோ கூட அல்ல. வாடகை.
 கணிசமானோருக்கு தம் சம்பளத்தின் 40-50% வாடகையில் போய் விடுகிறது. மிச்சத்தை கொண்டு வாழ்வது தான் சவால். நேற்று என் அலுவலகத்தில் உள்ள செக்யூரிட்டியான ஒரு பெரியவர் என்னிடம் வந்து வாடகை வீட்டு அவலங்களை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உரிமையாளர் வாடகையை அதிகப்படுத்துவார். அது அவரை அங்கிருந்து அகற்றுவதற்கான உரிமையாளரின் தந்திரம். உடனே அதிக வாடகை தர முடியாது என்றால் “அப்பிடீன்னா கிளம்புங்க. இதை விட ரெண்டாயிரம் தரதுக்கு ஆள் ரெடியா இருக்கு” என்கிறார் உரிமையாளர். புரோக்கர்கள் தாம் இப்படி செய்யும்படி உரிமையாளர்களை தூண்டுகிறார்கள். சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வருடா வருடம் வீடு வீடாய் சாமான்கள், அறைகலன்களோடு அலைய வேண்டும். இது தான் உச்சபட்ச வதை.
அந்த பெரியவர் என்னிடம் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கே தான் திரும்ப போகப் போவதாய் திரும்ப திரும்ப சொன்னார். ஒரு புது சட்டை கூட வருடத்துக்கு வாங்க முடியவில்லை என்றார். எனக்கு அவர் போக மாட்டார் எனத் தோன்றியது. நகரத்தின் ருசி பழகி விட்டால் கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும் திரும்பி போக முடியாது. கிராமத்தில் ஒருவருக்கு 3 சட்டைகளுக்கு மேல் இருக்காது. இப்போது நிலைமை மாறி இருக்கலாம். ஆனால் நான் ஊரில் வாழ்ந்த போது சட்டை வாங்க முடியவில்லை என யாரும் கவலைப்பட்டு பார்த்ததில்லை. என் அப்பா 10 வருடங்களுக்கு ஒருமுறை தான் சட்டை வாங்குவார். நானும் கல்லூரியில் படிக்கும் போது ரெண்டு சட்டைகள் தான் வைத்திருந்தேன். ஆனால் நகரத்தில் இதுவே நமக்கு போதாமை உணர்வை ஏற்படுத்துகிறது. மனம் ஏங்குகிறது. இந்த ஏக்கம் தான் நம்மை நகரத்தோடு பிணைக்கிறது.
இங்கு வாடகை கொடுத்து கட்டுப்படியாகவில்லை என ஏன் நாம் ஊருக்கு திரும்ப வேண்டும்? நான் இதையே தான் யோசித்துக் கொண்டிருந்தேன். வெள்ளப்பெருக்கை ஒட்டி சைதாப்பேட்டை பகுதியில் ஆக்கிரமித்திருந்ததாய் சொல்லி வீடற்றவர்களை அரசு அகற்றிய போது டிவியில் சில விவாதங்கள் பார்த்தேன். அடையாறு பகுதியில் அவர்களுக்கு இலவச வீடு கட்டித் தர அரசுக்கு இடம் உள்ளது என ஒரு தோழர் கூறினார். ஆனால் அரசு ஏன் செய்ய வில்லை? அரசு மக்களுக்கு விரோதமானதா? அல்ல.
 அரசு நம் பிரதிநிதி. நாம் ஏற்றுள்ள ஒரு பொருளாதார கொள்கையை தான் அரசும் பின்பற்றுகிறது. அது நகரத்துக்குள் வாடகை, வீடு ஆகியவை நடுத்தர, ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுகிறது. அது தான் competitive pricing.
ஒரு பொருளின் விலையை அதன் சந்தை தேவைக்கு ஏற்ப எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம் என்பதே இந்த பொருளாதார கொள்கை. சென்னை விலைவாசியின் எமன் இது தான். நீங்கள் அத்தியாவசிய பொருட்களின் விலையை இது போல் ஏற்ற முடியாது. பெட்ரோல் விலையை அரசு தீர்மானிப்பது இல்லை என்றாலும் ஒரு மறைமுக கட்டுப்பாடு உள்ளது. பொருட்களை பதுக்கி விலையை செயற்கையாய் உயர்த்துவது சட்டவிரோதமானது. ஆனால் ரியல் எஸ்டேட்டில் மட்டும் எந்த கட்டுப்பாடும் இல்லை.
கறுப்புப்பணம் மிகுதியாகும் போது அது கணிசமாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடாகிறது. சென்னையில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் கிட்டதட்ட சமமான விலை ஒன்றை அரசு தீர்மானித்து சட்டபூர்வமாக்கலாம். இதன் மூலம் பெரும்பாலான மக்களின் தோள் மீதுள்ள பாரம் லேசாகும்.
 ஆனால் இது கறுப்பு பண சந்தைக்கு பலத்த அடியாகும். கோடிக்கணக்கான பணத்தை நகரத்து வீடுகளிலும் கடைகளிலும் மால்களிலும் முதலீடு செய்தவர்கள் நஷ்டப்படுவார்கள்.
அதனால் ஒரு இடைநிலை ஏற்பாடாக முதலில் அரசு சமச்சீரான வாடகை ஒன்றை நகரம் முழுக்க நிலுவையில் கொண்டு வரலாம். தாம்பரத்தில் இருந்து அடையாறு வரை எல்லா வகையான வீடுகளிலும் நீங்கள் 3000--5000க்குள் வாடகையில் வசிக்கலாம் என்றால் பிறகு பணமில்லாதவர்கள் ஏன் நகர எல்லையை தாண்டி போய் வசிக்க வேண்டும்? ஏன் தினமும் மூன்று மணிநேரம் பேருந்தில் பயணித்து சென்னை நோக்கி வேலைக்காய் அலைய வேண்டும்? ஏன் கண்ணகி நகர்களில் ஏழைகளை குடியமர்த்த வேண்டும்? மூவாயிரத்துக்கு நல்ல வீடு கிடைத்தால் அவர்கள் நகரத்துக்கு உள்ளேயே வசிப்பார்களே.
சட்டத்துக்கு அதிகமான வாடகை வசூலிப்பவர்களின் வீடுகளை அரசு கைப்பற்றும் சட்டத்தையும் கொண்டு வர வேண்டும். வாடகை மீது கடும் கட்டுப்பாடுகள் இது போல் கொல்கொத்தாவில் உண்டு என ஒரு நண்பர் சொன்னார். அங்கு வாடகைக்கு இருப்பவர்களின் நலன்களை அரசு பாதுகாக்கிறது.
இது வியாபாரிகளுக்கும் பெருமளவில் பயன்படும். இன்று நகரத்தின் ”வளமான” அடையார், ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளை சின்ன கடைகளை எங்குமே பார்க்க முடியாது. சில பகுதிகளில் ஒரு டீக்கடை கூட இருக்காது. முழுக்க முழுக்க பிராண்டட் வெளிநாட்டு கடைகள் மட்டுமே இருக்கும். மக்கள் அதிகமாய் புழங்கும் நகரப்பகுதிகளில் ஆளே வராத ரெபோக் ஷோரூம்களை மட்டும் பார்ப்பது ஒரு விசித்திரம். ஏன் இந்த பகுதிகளில் மத்திய தர கடைகள் வரக் கூடாது. அதற்கு முக்கிய தடை தாங்க முடியாத கடை வாடகை. இந்த கணிசமான கடை வாடகை மறைமுகமாய் வாடிக்கையாளர்கள் மீது பொருளின் விலையெனும் பெயரில் சுமத்தப்படுகிறது.
 இணைய ஷாப்பிங்கில் எப்படி 30-40% கழிவை தருகிறார்கள்? ஏனென்றால் கடையற்ற இணைய வியாபாரிகள் வாடகை கொடுக்க வேண்டியதில்லை. அந்த வாடகை செலவை குறைத்தால் பொருட்களை மிக குறைந்த விலையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும். கடை வாடகையை கட்டுப்படுத்தினால் இன்று வாங்கும் பொருட்களின் விலை மளமளவென இறங்கும். இது விற்பனையை அதிகமாக்கும். சரிந்துள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும்.
ரியல் எஸ்டேட் வாடகையை கட்டுப்படுத்த வேண்டும். தடையற்ற விலை நிர்ணயம் எனும் பொருளாதார கொள்கையை தடை செய்ய வேண்டும்.
இந்த ”தடையற்ற வாடகை நிர்ணயத்தால்” லாபமடைபவர்கள் மிகச்சிறுபான்மையினர் தான். 5-10% கூட இருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சட்ட மாற்றம் மூலம் 90% மக்களை அரசு விடுவிக்க முடியும். இதை செய்யாமல் அடையார் பகுதியில் ஏழைகளை இலவச வீடு கட்டித்தருவது பெரும்பாலான மத்தியவர்க்க மக்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும். மேலும் தனது பொருளாதார கொள்கைக்கு எதிரான ஒரு அரசின் நலத்திட்டங்கள் இருக்க முடியாது.
முதலில் வாடகையை சமச்சீராக்கி விட்டு மெல்ல மெல்ல ரியல் எஸ்டேட்டையும் மாபியாவிடம் இருந்து மீட்க வேண்டும். அப்போது சென்னை போன்ற நகரங்கள் எளிய மக்களுக்கு உரியதாகி விடும்.

No comments: