Friday, December 25, 2015

எழுத்தாளனும் பிச்சைக்காரர்களும்”இந்த புத்தாண்டில் தினத்தில் உன் புத்தகம் வராதா?” என மனைவி சற்று துயரம் தோய்ந்த குரலில் கேட்டாள். நான் வராது என்றதும். “ச்சே ஒவ்வொரு வருடமும் அப்படி கொண்டாட்டமாக ஆரம்பித்து பழகி விட்டது” என்றாள். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை ரகசியமாய் ஒரு புரளியை கிளப்பி விட்டு அது பெரிய கதையாக ஊரெல்லாம் பரவும் போது ஒரு உள்ளார்ந்த உற்சாகம் தோன்றுமே, புத்தகம் வெளியாகிற நாட்களில் எழுத்தாளனுக்கு அப்படியான பரபரப்பு தான் இருக்கும். தமிழர்கள் எந்த புத்தகத்தினாலும் சலனப்பட மாட்டார்கள் என்றாலும் நமக்கென உள்ள ஒரு சிறு வட்டத்தில் சில அலைகள் கிளம்பும். அதை கவனிக்கவும் பின் தொடரவும் ஆர்வமாக இருக்கும். என்னுடைய இரண்டாவது நாவல் வெளியான போது அதன் முழுமகிழ்ச்சியையும் புத்தகத்தின் பிரதியை ஏந்தியபடி தனியாக வீடு திரும்பும் இரவு வேளையில் தான் உணர்ந்தேன்.

 ஆனால் இவ்வருடம் தனிப்பட்ட முறையில் எனக்கு கொஞ்சம் வேற மாதிரி. கடந்த சில மாதங்களில் கடுமையான பொருளாதார சிரமங்களை அனுபவித்து மனம் மரத்துப் போய் விட்டது. ஓட்டை விழுந்த ஒரே சட்டையை போட்டுக் கொண்டு அலைந்தேன். அம்மா உணவகத்தில் ஐந்து ரூபாய்க்கு இரவுணவை முடித்துக் கொள்ள பழகினேன். பணம் இல்லையென்பது ஒரு நடைமுறை பிரச்சனை மட்டும் அல்ல. அது நம் ஈகோவை கடுமையாய் தளர்த்துகிறது. பண பயம் போதை வஸ்துவை போல் மனதை விசித்திரமாய் யோசிக்க வைக்கிறது. ”வானம்” படத்தில் சிம்பு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் ஆளின் கையில் இருக்கும் கத்தை கத்தையான பணத்தையே தன்னை அறியாமல் பார்த்துக் கொண்டிருப்பார். என் மனம் இப்படித் தான் இயங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் எனக்கு ஒரு விசித்திரமான கற்பனை வந்தது. வேலை கிடைக்காவிட்டால் முச்சந்தியில் நின்று பிச்சை எடுக்க வேண்டும் என நினைத்தேன். குறிப்பாக சிக்னல் உள்ள நெருக்கடியான சாலை ஒன்றில். அது எந்த இடமாக இருக்கும் என்று கூட என் மனதில் தோன்றி விட்டது. அப்போது என்ன உடை அணிய வேண்டும், எந்த பாத்திரத்தில் பிச்சை எடுக்க வேண்டுமெல்லாம் கூட யோசித்தேன். (எழுத்தாளனாக இருப்பதன் சிக்கல் இது – மனம் படுவேகமாய் வேலை செய்யும்). கொஞ்ச நேரத்தில் என்ன அபத்தம் இது என என்னை பார்த்து நானே சிரித்துக் கொண்டேன். அதன் பிறகு பொருளாதார கவலைகள் ஓரளவு அகன்று விட்டன.
 போன வாரம் அடையாறில் இருந்து ராஜ்பவன் போகிற வழியில் உள்ள ஒரு சந்தில் இரவு பதினொரு மணிக்கு ஒரு சின்ன ஓட்டலில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு காயிலாங்கடை. பிளாஸ்டிக் கேன்களும் பாட்டில்களும் தொங்க விட்டிருந்தார்கள். அதை வாங்குவதற்காய் அழுக்கான தார்பாய்ச்சிய வெள்ளை வேட்டியும், குர்தாவும், முண்டாசும் அணிந்த ஒல்லியான கறுப்பான மனிதர்கள் வந்தார்கள். கையில் ஒரு கழி வைத்திருந்தார்கள். ஏதோ ஒரு விசித்திரமான மொழியில் கடைக்காரனுடன் பேரம் பேசினார்கள். பிறகு சில பழைய கேன்களை வாங்கிக் கொண்டு போனார்கள். நான் எதற்கு என கடைக்காரனிடம் விசாரித்தேன். தண்ணீர் பிடிப்பதற்காக வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் கேனுடன் திரும்ப வந்தார். இன்னொரு கேனைக் காட்டி அது வேண்டும் என்றார். கடைக்காரரும் கொடுத்தார். கொடுக்கும் போது சொன்னார் “நல்லா கழுவிட்டு தண்ணி பிடி”. அந்த கேன்களில் எண்ணெயோ மண்ணெண்ணெயோ பெட்ரோலோ கூட பிடிக்க பயன்படுத்தி இருக்கலாம். அதில் அப்படி ஒரு மோசமான நாற்றம் அடிக்கும் என எனக்குத் தோன்றியது. அதில் தண்ணீர் குடித்தால் நிச்சயம் வீச்சமடிக்கும். ஆனால் அப்படி ஒரு கேனுக்காய் சண்டை போட்டு வாங்கிப் போகும் ஆட்கள் இந்த ஊரில் இருக்கிறார்களா? தண்ணீர் பிடிக்க ஒரு காலி புட்டி கூட இல்லாதவர்கள் இருக்கிறார்களா? யார் இவர்கள்? என்றெல்லாம் யோசித்தேன்.
அடுத்த நாள் வீடு திரும்பும் போது நான் கற்பனையில் கண்ட அதே சிக்னலில் வண்டியில் நின்று கொண்டிருந்தேன். அன்று கேன் வாங்க வந்தவர்கள் சாரி சாரியாய் பிச்சை கேட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் என் கண்களை நோக்கி எதையோ முணுமுணுத்தபடி கைகளை நீட்டி ஏந்தி நின்றார். அவர் கண்களில் நான் என்னையே பார்த்தேன். அவருக்கு பிச்சை அளிப்பது எனக்கே பிச்சை அளிப்பது போல் இருக்கும் எனத் தோன்றியது. பார்வையால் மறுப்பு தெரிவித்தேன். அவர் உடனே அகன்று விட்டார். நமக்கு ஒரு சிறு எல்லைக்கோடு உள்ளது. ஒரு அடி எடுத்து வைத்தால் அதை தாண்டி விடலாம். காலம் இன்னும் கொஞ்சம் கழுத்தை நெரித்தால் யார் வேண்டுமானாலும் கோட்டின் அந்த பக்கம் போய் விடுவோம்.
வாழ்க்கை இப்படி இருக்கையில் புத்தகம், வாசகர்கள், விவாதம் எல்லாவற்றின் மீதும் கடும் அலுப்பு வந்து விட்டது. மரணம் நிகழ்ந்த வீட்டில் உடனடியாய் திருமணம் போன்ற வைபவங்கள் நடத்தக் கூடாது என்பார்கள். என் மனதுக்குள் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டது. வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது ஒரு பிரச்சனையே அல்ல என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கை செத்து விட்டது. எவ்வளவு தான் வேலை செய்தாலும் உணவுக்காக இருட்டில் எலியை போல் ஒருநாள் ஓட நேரிடலாம் என பயம் வந்து விட்டது.
இலக்கியம், கலை, பிரசுரம் பற்றின என் லட்சியங்கள் தற்காலிக கோமாவுக்குள் சென்று விட்டன. எந்த இலக்கிய ஏமாற்றமும் குதூகலமும் இனி என் மனதை தீண்டாது. அது மரத்துப் போய் விட்டது.
மீண்டும் முன்பு போல் மகிழ்ச்சியில் திளைக்க எனக்கு இன்னும் சற்று கால அவகாசம் தேவை. ஏப்ரல், மே காலத்தில் புத்தக கண்காட்சி என்றால் நான் இன்னும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பேன். பழையபடி இலக்கியம் பற்றின வெற்று கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்க தொடங்கி இருப்பேன். வரட்டும்!

1 comment:

Savitha. Rajesh said...

this is not writer's block.... For there is a flow of words... U ld ve ended up as a mediocre writer without these experiences...