Sunday, December 27, 2015

செக்ஸ் என்பது செக்ஸ் அல்லImage result for indian girls holding hands
நான் என்னுடைய நாய் ஜீனோவை கொஞ்சினால் அது உடனே மகிழ்ச்சியில் தன் மர்ம ஸ்தானத்தை நக்கி விடும். அடுத்து உடனே அதே நாவால் என் முகத்தை நக்க வரும் என்றாலும் நான் சுதாரித்து தப்பி விடுவேன். மனிதர்களுக்கு இந்த பழக்கம் உண்டா? சிறுகுழந்தைகளுக்கு இப்பழக்கம் உண்டு என பிராயிட் சொல்கிறார்.

 மனிதர்களுக்கு தம்மை யாரும் நேரடியாய் பாராட்டவோ கொஞ்சவோ அவசியம் இல்லை. பகற்கற்பனை செய்வது மனிதனின் தனித்துவமான திறன். அப்போது அவர்கள் தம்மையே பல கற்பனை சூழல்களில் எதிர்கொள்கிறார்கள். அப்போது மேற்கண்ட விசயத்தை குழந்தை செய்யக் கூடும் என பிராயிட் சொல்கிறார். ஆனால் நாம் சிறுவயதில் இருந்தே கடுமையாய் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் அவர்களிடம் இருந்து இப்பழக்கத்தை அகற்றி விடுகிறோம். வளர்ந்த பின் இதை சமூகம் ஏற்கிற சைகைளாய் வெளிப்படுத்துகிறோம். ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விசயத்தை கிளர்ச்சியுடன் சொல்லும் ஆண்கள் தன்னிச்சையாய் தம் வயிற்றையே தடவுவது, ஆண்மையை காட்ட விரும்புகிறவர்கள் தம் புஜங்களை, மயிரடர்ந்த மாரை வருடுவதை, தோற்றம் பற்றி விருப்பம் கொண்டவர்கள் முடியை தாமே கோதுவது ஆகியவற்றை காணலாம். இனிமேல் யாருடனாவது பேசும் போது அவர்களின் கைகளை கவனியுங்கள். உதட்டை அடிக்கடி நாவால் ஈரப்படுத்தி பேசுகிறவர்கள் உண்டு. பெண்களிடம் இது அதிகம் என்றாலும் ஆண்களிடமும் உண்டு.
 ஆண்களை விட பெண்கள் தம் மனநிலையை அதிகமாய் உடல்மொழியில் வெளிப்படுத்தக் கூடியவர்கள். தெருமுனையில் பெண்கள் நின்று பேசுவதைப் பார்க்க சின்ன வயதில் ஏதாவது நாடக கம்பனியில் பயிற்சி எடுத்திருக்கிறார்களோ எனத் தோன்றும். கால் மேல் கால் இட்டு பேசுவது, கூந்தலை விரல்களால் கோதிக் கொண்டே இருப்பது, அடிக்கடி நகைகளை தொட்டுப் பார்ப்பது ஆகியவற்றை பெண்களின் சைகைகளாய் குறிப்பாய் சொல்லலாம். சில பெண்கள் அடிக்கடி சேலையை அரை அங்குலம் தூக்கி விட்ட படி நடப்பார்கள். இறுக்கமாய் மேலாடை அணிந்தவர்கள் அதை அடிக்கடி கீழே இழுத்து விடுவார்கள். குட்டையாய் கீழாடை அணிந்த பெண்களின் அவஸ்தை தனியாக தெரியும். இதெல்லாம் அவர்களுக்கே தெரியாமல் அபோத மனதில் நடக்கிற விசயங்கள். நம்மையே அறியாமல் நெர்வஸாக இருக்கும் போது இதையெல்லாம் செய்கிறோம். தன்னம்பிக்கை தளும்பும் போது கூந்தலை வருடுவது, கால் மேல் காலிடுவது எல்லாம் செய்கிறோம்.
மகிழ்ச்சியை நம்முடைய உடல் மீது வெளிப்படுத்தும் இயற்கை விழைவை நாம் இன்னும் இழக்கவில்லை. சமூகம் நம்மை நமது மொழி மற்றும் இசை மற்றும் நடனம் போன்ற பண்பாட்டு வடிவங்கள் வழி இதைக் காட்ட கோருகிறது. ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. கூட்டமாய் செல்லும் போது கைகோர்த்துக் கொள்ளும் இளம்பெண்களை பார்க்கும் போதெல்லாம் புன்னகைத்துக் கொள்வேன். ஆண்களால் இது ஒரு போதுமே முடியாது. ஆனால் இதே பெண்கள் படித்து வேலை கிடைத்து திருமணமாகி சமூகத்தில் மேல் தட்டுக்கு நகர்ந்ததும் பிற பெண்களை சட்டென தொட்டுப் பேசும் பழக்கத்தை இழந்து விடுகிறார்கள். அதே போல ஆண்களைப் பற்றி பெண்கள் பேசும் போது கவனியுங்கள். நெருங்கிய தோழிகள் என்றால் கையை பற்றி வருடியபடி பேசுவார்கள். அல்லது ஆர்வத்தில் முகங்களை மிகவும் நெருக்கமாய் வைத்துக் கொள்வார்கள்.
செக்ஸ் என்பது உடலுறவுக்கான மட்டும் செயல் அல்ல. அதற்கு சமூக அரசியல் பரிமாணங்கள் உண்டு. சொல்லப்போனால் 90% நேரம் சமூக அரசியல் புலங்களில் தான் செக்ஸ் வெளிப்படுகிறது. பெரிய கூட்டம் நடுவில் ஒரு தலைவன் / நட்சத்திரம் தோன்றும் போது அவரைத் தொட்டுப் பார்க்கும் இச்சை மிக எளிதாக லட்சக்கணக்கானோருக்கு நிச்சயம் தோன்றுகிறது. அவருடைய தோல் ஒன்றும் தனியான தன்மை கொண்டது அல்லது என அனைவரும் அறிவோம். அவரது கருத்துக்கள், ஆட்டம், இசை அல்லது பிற செயல்பாடுகள் வழி அவரை முழுமையாய் அறிந்து கொள்ளவும் இயலும். ஆனாலும் ஒருமுறை அவரை தொட்டுப் பார்த்து விட்டால் நமக்கெல்லாம் அனுபூதி கிடைத்து விடுகிறது. ஒரு தலைவர் / நட்சத்திரத்தை நோக்கி லட்சோபலட்சம் கரங்கள் நீளுகின்றன. இதை எப்படி விளக்குவது?

No comments: