Tuesday, December 22, 2015

மோகன்லால்: உளவியலும் உடல்மொழியும்கமலின் நடிப்பு பற்றி ஒரு ஓரு பேட்டியில் மணிரத்னத்திடம் கேட்கிறார்கள். அவர் ”நாயகன்” படத்தில் ஒரு காட்சியை படமாக்கிய அனுபவம் பற்றி சொல்கிறார். அது ரொம்ப முக்கியமான காட்சி. அதனால் அதை டாப் ஆங்கிளில் படமாக்க நினைக்கிறார் மணிரத்னம். அது போல் பின்னணி சூழல் அமைப்பிலும் கவனம் செலுத்துகிறார். ஆனால் கமல் நடிக்க துவங்கியதும் மொத்த காட்சியையும் அவர் ஆதிக்கம் செலுத்துகிறார். அதாவது ஒளிப்பதிவாளர், பின்னணி இசை அமைப்பாளர், கள அமைப்பாளர், கூட நடிப்பபவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் கமல் தன்னந்தனியாக காட்சியை தன் முதுகில் தூக்கி செல்கிறார். மணிரத்னம் இதை ஒரு சிறப்பாக வியந்தாலும் கூட இது ஒரு குறை அல்லவா எனவும் நமக்கு தோன்றுகிறது.

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. ஒரு காட்சியில் உச்சம் பெற வேண்டிய உணர்ச்சியை மெல்ல மெல்ல உருவாக்கி அந்நிலைக்கு கொண்டு வருவதில் பின்னணி, இசை, சக நடிகர்கள், காட்சி அமைப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு உருவாக்கும் படிமங்கள் என பல விசனங்களுக்கு ஒரு பங்கு உண்டு. பல சமயங்களில் ஒரு முக்கிய காட்சிக்கு முந்தின காட்சிகள் ஒரு சிறப்பாக அழுத்தத்தை ஒன்று சேர்ந்து அளிக்கும். அவை உருவாக்கும் பின்னணியில் இக்காட்சியில் வரும் சிறு உணர்ச்சி கூட பிரம்மாண்டமாய் உருக்கமானதாய் தோன்றக் கூடும். கமல் சுயமாய் ஒரு காட்சியின் மொத்த அர்தத்தையும் நாடகீய உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் தேவையில்லை. அவர் அக்காட்சியில் ஒரு சிறு பகுதி மட்டுமே. ஆனால் அவரது அகங்காரம் அதை ஏற்க அனுமதிக்காது. அதே போல என்னதான் சினிமா தொழில்நுட்பத்தில் கரைதேர்ந்தவர் என்று சொல்லப்பட்டாலும் அவர் உண்மையில் சினிமாவின் அடிப்படை குணாம்சியத்தை புரிந்து கொண்டிருக்கிறாரா என சந்தேகம் வருகிறது. ஒரு சிறந்த நடிகன் ஒரு காட்சியில் தனக்கு தேவையான அளவு மட்டுமே நடிப்பான். அந்த நடிப்பை உச்சத்துக்கு கொண்டு போகும் வேலையை இன்னொரு புறம் இயக்குநருடன் சேர்ந்து பிற கலைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
 இதே மணிரத்னத்தின் “இருவரில்” ஒரு பிரபலமான காட்சி வரும். சினிமா நடிகனாகி புகழ் பெற்ற பின் ஆனந்தன் தமிழ்ச்செல்வனைக் காண அவன் வீட்டுக்கு வருகிறான். அங்கு உணவருந்துகிறான். அவனைக் காண தமிழ்ச்செல்வனின் உறவினர்களும் பக்கத்து வீட்டாரும் ஆசைப்படுகிறார்கள். ஆனந்தன் சிறிது கூச்சத்துடன் அவர்களை அழைத்து பேசுகிறான். தன் நடிப்பை விரும்பும் விசிறிகளின் சிறு வட்டம் மட்டுமே அவன் பாதுகாப்பாய் உணரும் வெளி. ஆனால் அதற்கு வெளியே வெறித்தனமாய் அவனை கொண்டாடும் ஆயிரக்கணக்கான விசிறிகள் பலர் உள்ளனர். அவர்கள் அப்போது அவனைக் காண தமிழ்ச்செல்வனின் வீட்டை சூழ்ந்து கொள்கிறார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு ஆனந்தனை அவர்கள் முன் கொண்டு சென்று காட்டுவதே ஒரே வழி என உணரும் தமிழ்ச்செல்வன் அவனை மொட்டைமாடிக்கு அழைத்து செல்கிறான். அங்கிருந்து அந்த கூட்டத்தை பார்க்கும் ஆனந்தனுக்கு ஒருநொடி ஒன்றும் விளங்கவில்லை. அவன் பதற்றமாக இருக்கிறான். தமிழ்ச்செல்வன் அவனிடம் இந்த கூட்டம் சாதாரணமானதல்ல. காந்தி போன்ற மிகப்பெரிய தலைவர்கள் சிரமப்பட்டு சேர்த்த கூட்டம். இதை உன் சினிமா நடிப்பு உனக்கு அளித்திருக்கிறது. இதை வைத்து என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்கிறான். தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்த கேள்வி இது.
 இந்த இடத்தில் ஆனந்தனாய் நடித்த மோகன்லால் தன் மீது திமுக-அதிமுக வரலாற்றின் மொத்த பாரத்தையும் ஏற்றிக் கொண்டு உலகே மெச்சும் நடிப்பை வெளிப்படுத்த முயலவில்லை. தன் மூலமாய் மொத்த கதையையும் பலமடங்கு தூக்கும் விதம் நடிக்க முனையவில்லை. அந்த நேரத்தில் அப்பாத்திரம் எப்படி உணர்வான் என யோசிக்கிறார். அவன் மிகவும் எளியவனாய், அந்த கூட்டத்தின் முன் பதற்றமானவனாய் இருப்பான் என கணிக்கிறார். அந்த உளவியலை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் என நினைக்கிறார். மோகன் லாலின் கையை பிரகாஷ் ராஜ் பற்றிக் கொண்டு தூக்கி விசிறிகளுக்கு காட்டும் இடத்தில் அக்கைகளில் நடுக்கம் தெரியும். முகத்தில் தயக்கம் இருக்கும். மெல்ல மெல்ல ஆனந்தன் அந்த புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் பழகிக் கொள்வதை சில நொடிகளில் உடல்மொழி மூலமாய் வெளிப்படுத்தி விடுவார். அவ்வளவு தான். அதற்கு மேல் தேவையில்லை என மோகன்லாலுக்கு தெரியும். சந்தொஷ் சிவனின் ஒளிப்பதிவும் ரஹ்மானின் இசையும் மெல்ல மெல்ல அச்சிறு தருணம் ஒரு  வரலாற்று சம்பவமாய் விரிவதை காட்டி விடும்.
இது தான் கமலுக்கும் மோகன்லாலுக்குமான வேறுபாடு. மோகன்லால் தான் சினிமாவில் ஒரு சிறுபகுதி தான் என உணர்ந்து கொள்கிறார். கமல் மொத்த சினிமாவுமே தானாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். விளைவாக கமல் மொத்த காட்சியிலும் துருத்திக் கொண்டு நிற்கிறார். மணிரத்னம் ஒருமுறை சொன்னார் “இந்தியாவின் தலை சிறந்த நடிகன் என மோகன்லாலை சொல்வேன்”. பாலுமகேந்திரா சொன்னார் “மோகன்லால் தென்னிந்தியாவின் சிறந்த நடிகன் என சொல்ல எனக்கு விருப்பம் தான். ஆனால் கமல் கோபித்து கொள்வார்”. ஒப்பிட்டு பார்த்தால் ஒரு நடிகனாக மோகன்லாலை விட பலமடங்கு அதிக திறமையானவர் கமல். கமலால் கிட்டத்தட்ட எந்த பாத்திரமாகவும் உடல்ரீதியாக தன்னை மாற்றிக் கொள்ள இயலும். ஆனால் மோகன்லாலால் ஒரு கூலியாகவோ மீனவனாகவோ விளையாட்டு வீரனாகவோ நடிக்க இயலாது. கமல் அளவுக்கு வட்டார வழக்குகளில் விளையாடவும் அவருக்கு வராது. அவர் நம்பூதிரி மலையாளம் பேச முயன்றாலும் அதில் சற்று திருவனந்தபுரம் வழக்கின் சாயல் இருக்கும். கமல் நடிக்க துவங்கின காலத்தில் இருந்தே அபாரமான திரை இருப்பு (screen presence) கொண்டிருந்தார். ஆனால் மோகன்லாலில் ஆரம்ப கால படங்கள் பார்க்கையில் அவர் எந்தளவுக்கு காட்சியுடன் பொருந்த இயலாமல் திணறினார் என தெரிய வரும். எண்பதுகளின் இறுதியில் பரதன், பத்மராஜன் போன்ற திறமையான நடுநிலை இயக்குநர்களின் படங்களில் நடிக்க துவங்கியதும் தான் மோகன்லாலின் நடிப்பு மெருகேறியது. அதுவரை அவரும் மிகையாகத் தான் நடித்து வந்தார். அவ்விசயத்தில் லாலை தமிழில் சூர்யா, விக்ரம் போன்றோருடன் ஒப்பிடலாம். ஆனால் நிலைப்பெற்ற பின் மோகன்லால் சினிமா எனும் கலைவடிவத்தை மிகச்சரியாய் புரிந்து கொண்டார். அது தான் அவரது தனிப்பெரும் சிறப்பு.
மணிரத்னமும் பிரியதர்ஷனும் மோகன்லாலின் நடிப்பை பற்றி குறிப்பிடும் போது அவர் ஒருமுறை நடிப்பது போல் அடுத்த டேக்கில் இருக்காது என்கிறார்கள். ஒரு பாத்திரத்தின் உளவியல் பற்றி சற்றும் எதிர்பாராத ஒரு அவதானிப்பை தன் நடிப்பில் அவரால் வழங்க இயலும். இந்த காட்சியில் அந்த பாத்திரம் இப்படித் தான் நடிக்க வேண்டும் என திட்டமிட்டு அவரை நடிக்க வைக்க இயலாது. திட்டமிடாமல் நடிக்கிற மிகவும் தன்னிச்சையான் கலைஞர் மோகன்லால். அதனாலே அவர் நடிக்கிற காட்சிகளில் கட் சொல்ல மறந்து தான் நின்று விடுவதுண்டு என மணிரத்னம் சிலாகிக்கிறார்.
 ஒரு சின்ன முகக்குறி, கண்ணசைவு அல்லது சைகை மூலம் அப்பாத்திரத்தின் மனம் எப்படி இயங்குகிறது என மோகன்லால் காட்டி விடுவார். உதாரணமாய் “கிரீடம்” படத்தில் அவர் ஒரு அப்பாவியான இளைஞனாய் வருகிறார். எதேச்சையாய் ஒரு புது ஊரில் வந்து சேர்ந்து அங்குள்ள வன்முறையால் தூண்டப்பட்டு அவர் ஒரு ரௌடியாய் உருமாறுவதே கதை. தன்னையும் மீறி மற்றொன்றாய் அவர் மாறுவதே அவரது உளவியல் பரிமாணம். இறுதிக் காட்சியில் பிரதான வில்லனை கொன்று விட்டு கையில் கத்தியுடன் அவர் சந்தையில் ஒரு மாட்டுவண்டியின் நுகத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருப்பார். தன்னை பிடிக்க வருகிற போலீஸ்காரர்களை நோக்கி கத்தியை வீசுவார். அவர் தன் பாதுகாப்புக்காக தான் சண்டையிட்டு எதிர்பாராமல் வில்லனை கொல்கிறார். ஆனால் தன்னையும் அறியாமல் அந்த வன்முறை செயலுக்குள் தொலைந்து போகிறார். இதை உணர்த்துவதற்காய் மோகன்லால் வாயில் எதையோ மெல்லுவதான பாவனையை காட்டுவார். சற்றும் திட்டமிடாமல் அக்காட்சியில் அவர் வெளிப்படுத்துகிற முக்குறி இது. இறுதில் தன் அப்பா வந்து அவரை கண்டிக்கையில் உடல்மொழியை மாற்றி இளகிப் போய் அழுவார். பழைய அப்பாவியான இளைஞனாகி விடுவார். இக்காட்சியின் நடிப்பு அவரை மலையாள சினிமாவின் உச்சத்துக்கு கொண்டு சேர்த்தது.
மோகன்லால் ஒரு பாத்திரத்தின் அடிப்படை இயல்பை தன் கண்களின் அசைவு மூலமே உணர்த்தி விடுவார். இது சிவாஜியும் சூர்யாவும் செய்வது போல் நாடகீயமாய் உணர்ச்சிகளை காட்டுவதற்கான உத்தியாக இருக்காது. மிக மிக நுட்பமாய் அப்பாத்திரத்தின் சிக்கலை காட்டுவதற்காக மட்டுமே கண்களின் அசைவுகளை பயன்படுத்துவார். அவரது மிகச்சிறந்த படமென நான் நம்பும் “தசரதத்தில்” ராஜீவ் மேனன் எனும் சமூகரீதியாய் குறைபட்ட (socially defective) ஆளுமை கொண்ட பாத்திரமாக நடித்திருப்பார். ராஜீவ் மேனன் ஒரு பணக்கார பொறுப்பற்ற இளைஞன். வாழ்க்கையே கொண்டாட்டம் என நம்புகிறவர். அவருக்கு ஒரே குறை தான். அவர் அனாதை என்பதாலும் அம்மா தன்னை சிறுவயதில் துறந்து விட்டு சென்றாள் என நம்புவதாலும் ஆழமான தாழ்வுணர்வு கொண்டவராக இருப்பார். மனிதர்கள் தன்னை மதிக்கவோ விரும்பவோ இல்லை என உள்ளூர நம்புவார். அதனால் அவரால் பிற மனிதர்களை சுலபமாய் ஏற்கவோ அன்பு காட்டவோ இயலாது. அதற்கு பதில் பணத்தினால் ஊறவுகளை வாங்க முயல்வார். திருமணம் செய்வதற்கு பதில் விலைமாதுகளுடன் வாழ்ந்தால் போதும் என நினைப்பார், குழந்தை ஆசை வந்ததும் செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள நினைப்பார். இப்பாத்திரமாய் நடிக்கையில் மோகன்லால் ஒரு செல்வந்தனின் அகந்தையும் செயற்கையான துணிச்சலையும் உடல்மொழியில் கொண்டு வருவார். ஆனால அவனது தாழ்வுணர்வு கண்களில் மட்டும் வெளிப்படுத்துவார். இப்படத்தில் எங்குமே மோகன்லால் பிற பாத்திரங்களை நேரடியாய் கண்ணில் பார்க்க மாட்டார். பிறரிடம் பேசும் போது அவர் பார்வை எப்போதும் தரையில் தான் இருக்கும். இந்த விசயத்தை தான் மோகன்லாலிடம் விவாதிக்கவோ திரைக்கதையில் குறிப்பிடவோ இல்லை என இயக்குநர் சிபி மலையில் சொல்கிறார். நடிக்கும் போது தன்னிச்சையாக இவ்விசயத்தை மோகன்லால் தன் நடிப்பில் கொண்டு வருகிறார். பின்னர் தான் ஒரு உளவியலாளரிடம் பேசும் போது உளவியல் சிக்கல் கொண்ட மனிதர்களுக்கு இயல்பாகவே பிறரது கண்ணை நேரடியாய் பார்ப்பதில் சிரமம் உண்டு என்றும், இந்த குணாதசியத்தை மோகன்லால் அவதானித்து வெளிப்படுத்தியது ஒரு அபாரமான கண்டுபிடிப்பு என வியந்ததாயும் சிபிமலையில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். “தாளவட்டம்” எனும் படத்தில் மனச்சிக்கல் கொண்ட பாத்திரமாய் நடிக்கும் போதும் மோகன்லால் இதே உத்தியை பயன்படுத்தி இருப்பார்.
“மிதுனம்” படத்தில் சேதுமாதவன் எனும் பாத்திரத்தை ஏற்றிருப்பார். சேதுமாதவன் ஒரு முன்னேற துடிக்கும் தொழிலதிபர். தொழிற்சாலையை துவக்க முடியாமல் போராடிக் கொண்டிருப்பார். ஏகப்பட்ட கடன் தொல்லை. வீட்டில் உறவினர் மற்றும் மனைவியின் பிடுங்கல். இந்த பாத்திரம் எப்போதும் மனதளவில் நிலைப்படாமல் பரபரப்பாக இருப்பான் என்பதால் இப்படத்தில் மோகன்லாலின் கண்கள் ஒருவரிடம் பேசும் போது சுழன்று கொண்டே இருக்கும். அது அவரது மனம் ஒரே சமயத்தில் ஒரு நூறு பிரச்சனைகளை பற்றி கவலைப்படுவதைக் காட்டும்.
”தேன்மாவின் கொம்பத்து” பின்னர் “முத்துவாக” தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாள படத்தில் மோகன்லால் மாணிக்யனாக நடித்திருப்பார். நெடுமுடி வேணு அவரது முதலாளியும் நிலப்பிரபுவுமான ஸ்ரீகிருஷ்ணன் தம்புரான் எனும் பாத்திரம் ஏற்றிருப்பார். நெடுமுடி வேணு தன் வேலைக்காரனான மோகன்லாலை சில இடங்களில் ஒரு காளை மாட்டோடு ஒப்பிடுவார். இது முக்கியமான இடம். இப்படத்தில் இருவரும் இடையில் உருக்கமான நட்பு இருந்தாலும் இன்னொரு புறம் இவ்வுறவு ஆண்டான்-அடிமை உறவாகவும் இருக்கும். மாட்டுவண்டி ஓட்டுவதில் சமர்த்தனான மாணிக்யன் அதனாலே மனதளவில் ஒரு மாடு போல் ஆகி விட்டான் என்பது தம்புரானின் எண்ணம். இதை உறுதிப்படுத்துவது போல் மோகன்லால் தன் உடல்மொழியில் ஒரு “மாட்டுத்தனத்தை” கொண்டு வந்திருப்பார். ஆரம்ப காட்சிகளில் தம்புரானை சுமந்து போகும் காளை மாடுகளுக்கும் அவற்றை ஓட்டும் மோகன்லாலுக்கும் நுட்பமான ஒரு உறவு இருக்கும். படம் காதல், நட்பு, விசுவாசம், உணர்ச்சி மோதல் என வேறு களத்தில் பயணித்தாலும் மோகன்லால் தன் நடிப்பின் மூலம் இப்பாத்திரத்தின் உளவியலை நுணுக்கமாய் வெளிப்படுத்தி இருப்பார்.
நன்றி: ’நடிப்பு’ இதழ், நவம்பர் 2015

1 comment:

Veldurai Rajkumar said...

நல்ல அவதானிப்பு
மிகச்சிறந்த பகுப்பாய்வு..நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படங்களை ஏற்கனவே பார்த்திருந்தாலும்..இப்போது மீண்டும் வேறோரு பரிமாணத்தில் பார்க்க தூண்டுகிறது, அதுவே ஒரு வாசகனுக்கு எழுத்தாளர் அருளும் மாபெரும் கொடை..நன்றி