Friday, December 18, 2015

கல்தோசைக்காரரும் டாஸ்மாக் எதிர்ப்பாளரும்நேற்றிரவு ஒரு சின்ன கடையில் கல்தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடை முதலாளி தன் மூக்குக் கண்ணாடிக்கு மேலாக பார்க்கும் அந்த பாணி எனக்கு போகன் சங்கரை நினைவூட்டியது. அவர் சும்மா வானத்தை பார்வையிடும் பாணியில் லேசாய் முகவாயை தூக்கி பார்த்து தான் “கல் தோசை ரெண்டா போட்டிருட்டுமா?” என்று கேட்கையில் பல சிறுபத்திரிகை எழுத்தாளர்களை நினைவுபடுத்தினார். அது எப்படியோ போகட்டும். அவருக்கு ஒரு பழக்கம். தெரிந்தவர்கள் யாராவது கடைக்கு வந்தால் வராத ஒருத்தரைப் பற்றிக் கேட்பார். ஒரு பத்து வயது சோனிப் பெண் நைட்டி அணிந்து துள்ளலாய் குதித்தபடி பார்சல் வாங்க வந்தாள். அவளிடம் “ஏன் உன் அக்கா வரல? என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். அவளோ “இது போல நூற்றுக்கணக்காண ஆண்களை பார்த்தாச்சு” என்கிற கணக்கில் ஒரு பாவனை காட்டி விட்டு பழையபடி நின்ற வாக்கி ஆடிக் கொண்டிருந்தாள்.

 அப்போது வாடிய கீரையை போல் ஒரு பெண் வந்தாள். மிகவும் சின்ன வயதில் திருமணம் கொடுத்திருக்க வேண்டும். 24, 25 இருப்பாள். ஆனால் ஒரு யுகம் திருமணம் எனும் செக்கில் ஓடிய அலுப்பும் இளைப்பும் தெரிந்தது. அவளிடமும் நம் சிறுபத்திரிகை தோசை கடைக்காரர் “ஏம்மா ஒரு வாரமா ஆளையே காணலே?” என்றார். அவள் தனக்கு நான்கைந்து நாளாய் ஜுரம் என்றும், இப்போது தான் உடல் தணிந்து வெளியே வந்திருப்பதாயும் சொன்னாள். நம் ஆள் எப்போதும் வராத ஆளைப் பற்றித் தானே பேசுவார். உடனே அவள் கணவனைக் குறிப்பிட்டு சொன்னார். “அவன் நேத்து கூட வந்து பீப் வாங்கிப் போனானே”. அந்த பெண்ணின் முகமே மாறி விட்டது. தன் கணவன் சரியாய் வேலைக்கு போவதில்லை, தினமும் குடித்து குடித்தே பணத்தை அழிக்கிறார், வீட்டையே கவனிப்பதில்லை என ஒரே புலம்பல். கடைக்காரர் புது வாடிக்கையாளர்களைப் பார்க்க நகர்ந்து விட்டார். கேட்க ஆள் இல்லை என்றாலும் அப்பெண் கணவனை இரைந்து திட்டிக் கொண்டிருந்தார். அடுத்து அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கினார். பத்தடிக்கு ”நாலு கடையிருந்தா குடிக்காம என்ன பண்ணுவாங்களாம்? குடியால கெட்டுப் போற குடும்பங்களுக்கு இந்த அரசு என்ன நிவாரணம் பண்ணப் போகிறது?” என வரிசை வரிசையாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். அவர் ஒரு கண்காணாத படக்கருவியை நோக்கி கருத்து சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரு நிமிடம் சன் நியூஸ் விவாத மேடையில் இருக்கிறோமோ எனும் எண்ணம் வந்து விட்டது. அவ்வளவு தெளிவாக சரளமாக தர்க்கரீதியாய் திட்டினார். பொதுவாக யார் வேண்டுமானாலும் யாரையும் காறித் துப்பலாம். ஆனால் அடுக்கடுக்காய் கருத்து சொல்வது ஒரு கலை என இத்தனைக் காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு. இந்த மீடியா யுகத்தில் இனி நிபுணர்கள் என தனியாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பொதுமக்கள் எல்லாரும் இனி நிபுணர்களே. மக்கள் இவ்வளவு criticalஆக மாறி வருவது ஒரு நல்ல விசயம்.
அது மட்டுமல்ல டாஸ்மாக் நடத்தி இப்படி பல குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் அரசு மீது கணிசமான பெண்களுக்குள் கடும் கோபம் நொதிக்கிறது. அரசும் ஆளுங்கட்சி சாராய ஆலை முதலாளிகளும் சம்பாதிக்கும் கோடிகள் ஒரு கீழ்த்தட்டு குழந்தையின் ஒரு வேளை உணவு, படிக்க வேண்டிய புத்தகம், நிம்மதியான சூழல், கல்விக்கான செலவு என ஒவ்வொன்றையும் பறித்து உருவான பணம். ஒருநாள் இந்த கோபம் கண்ணகியின் ஒற்றை முலையைப் போல் இந்த அரசை எரித்து சாம்பலாக்க போகிறது.  

No comments: