Friday, December 11, 2015

இருவர் (ஒரு பேஸ்புக் நாடகம்)
காலம்: ஒரு இரவு மற்றும் பகல்
இடம்: வெளியிடம் மற்றும் விர்ச்சுவல் இடம்
பாத்திரங்கள்: கலை மற்றும் ராம்

மேடையில் சின்ன இடைவெளி விட்டு நீல வண்ண நாற்காலிகள் ஒழுங்காக இடப்பட்டிருக்கின்றன. நாற்காலி கையுடன் லைக் மற்றும் ஷேர் அட்டைகள் கட்டப்பட்டுள்ளன. மேடையில் இரண்டு காலி நாற்காலிகளில் மட்டும் ஸ்பாட் லைட் விழுகிறது. மிச்ச இடம் முழுக்க அரை இருளில். இருட்டான நாற்காலியில் கலை இருக்கிறான். அவன் ஒரு மிஷ்கின் ஸ்டைல் கண்ணாடி அணிந்திருக்கிறான். நிறைய மேக் அப் போட்டு லிப் ஸ்டிக் போட்டிருக்கிறான். பென்சில் மீசை. முன் தலை முடியில் ஒன்றை சுருட்டி நெற்றியில் விட்டிருக்கிறான். கறுப்பு சட்டை மற்றும் பேண்ட். தோளில் பளீர் நிறத்தில் ஒரு ஸ்டோல். அது மஞ்சளோ நீலமோ சிவப்போவாக இருக்கலாம். உட்கார்ந்தபடி பத்து நொடிகள் தூங்குகிறான். கையில் பார்க்கிற வாகில் போன் வைத்திருக்கிறான். தூக்கத்தில் பேசிக் கொள்கிறான். சிரிக்கிறான். ஒரு கொசு அவன் முகத்தை மொய்க்கிறது. “ச்சீ” என்கிறான். பிறகு தன் கன்னத்தில் உட்கார்ந்த கொசுவை அடிக்கிறான். கண்ணைத் திறக்காமலே அதை நசுக்கி முகர்ந்து பார்க்கிறான். “உன்கிட்ட என்ன இப்பிடி கவுச்சி வாசனை வருது. ஓ அப்பிடித் தானா? (கொஞ்சலாய்) ஆங் ஆங்…” மீண்டும் தூங்கிப் போகிறான்.
மேடை விளிம்பில் ராம் இருக்கிறான். தலையில் வெள்ளைத் தொப்பி. நிறைய மேக் அப் போட்டு வெள்ளைப் பெயிண்ட் அடித்தது போல் இருக்கிறான். உதட்டில் லிப்ஸ்டிக். கலையைப் போன்றே கறுப்புக் கண்ணாடி. வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் வெள்ளை செருப்பு. கழுத்தில் வெள்ளை ஸ்டோல். சட்டைப் பாக்கெட்டில் ஒரு சிவப்பு ரோஜா. அவனும் அரைத்தூக்கத்தில் இருக்கிறான். அடிக்கடி கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்து விட்டு மீண்டும் தூங்குகிறான். கடிகாரத்தை கழற்றி வைத்து விட்டு தூங்குகிறான். பிறகு மீண்டும் எடுத்து நேரம் பார்த்து விட்டு தூங்குகிறான். பிறகு அதை எடுத்து தன் பின்புறத்துக்கு கீழ் வைத்து உட்கார்ந்து கொள்கிறான். உட்கார்ந்த வாகில் லேசாய் சாய்ந்து கடிகாரத்தை பாதி தூக்கி உடலை வளைத்து கழுத்தை நீட்டி பார்க்கிறான்.
ராம் (பார்வையாளர்களை நோக்கி): “போனை, டிவியை ஸ்டிட்ச் ஆப் பண்ற மாதிரி இந்த வாட்சை ஸ்விட் ஆப் பண்ண புடியாதா? தூங்க விட மாட்டேங்குது”. அவன் தனக்கு முன் உள்ள கற்பனைத் திரையை திரும்பப் படித்து திருப்தி ஆகி கிளிக் செய்கிறான். “க்ளிக்” என்கிறான்.
ராம்: “என்ன எவனுமே ஆன்லைனில இல்லியா?” (கற்பனைத் திரையின் வலதுபக்கம் பார்க்கிறான்) “இவ்வளவு பேரு இருக்கிறானுங்களே? ஒருத்தனும் லைக் போடக் காணோம்?”

“சரி நாமளே ஒண்ணை போட்டு துவக்கி வைப்போம்” (தன் பக்கத்தில் உள்ள லைக் அட்டையை தூக்கி காண்பிக்கிறான்)
பீப் சத்தம் கேட்கிறது.
கலை விழித்து சுற்றும் முற்றும் பார்க்கிறான். பிறகு தன் போனை உற்றுப் பார்க்கிறான். கண்ணைத் திருமி விட்டு மீண்டும் பார்க்கிறான்.
கலை: “எவண்டா அது அவன் ஸ்டேட்டஸுக்கு அவனே லைக் போட்டிருக்கிறான். கொய்யால லூசுப் பய. தூங்குடா”
கலை எழுந்து அரைத்தூக்கத்தில் போனுடன் நடக்கிறான். அவன் போகும் இடமெல்லாம் ஸ்பாட் லைட் பின் தொடர்கிறது. அவன் ஒரு நாற்காலியில் அமர்கிறான். லைக் அட்டையை தூக்கிப் பிடிக்கிறான். பீப் ஒலி.
ஒலி கேட்டு ராம் விழித்துக் கொள்கிறான். அவன் மகிழ்ச்சியில் பூரிக்கிறான். கலை எழுந்து இன்னொரு நாற்காலியில் அமர்கிறான். மீண்டும் பீப்பொலி. கலை கைதட்டுகிறான். ராம் பல நாற்காலிகளிலாய் மாறி மாறி அமர்ந்து லைக் அட்டையை தூக்கிப் பிடிக்கிறான். அடிக்கடி ஷேர் அட்டையை தூக்கி காட்டுகிறான். தொடர்ந்து பீப் ஒலி கேட்டபடி இருக்கிறது. கலை எழுந்து கைதட்டியபடி துள்ளுகிறான். குத்தாடுகிறான். களைப்பாகி மீண்டும் அமர்கிறான்.
ராம் மற்றொரு நாற்காலியில் போய் அமர்ந்து “good night”
கலை: “ஆங்?”
ராம் மற்றொரு நாற்காலியில் போய் அமர்ந்து “good night. Sweet dreams”
கலை: “யார்ரா அவன்?”
ராம் பக்கத்து நாற்காலியில் போய் அமர்ந்து “தூக்கம் வராதவங்க இந்த பாட்டை கேட்டுக்கிட்டு இருங்க. அப்பிடியே மனசு கரைந்து தன்னையே மறந்திடுவீங்க. இசைஞானியின் தெய்வீக இசை”
கலை லைக் அட்டையை தூக்கி காட்டுகிறான். பீப். அவன் தன் முன் உள்ள கற்பனைத் திரையில் விரலால் அழுத்துகிறான். சில நொடிகளில் இளையராஜாவின் பாடல் ஒலித்து நிற்கிறது.
ராம் மீண்டும் பல நாற்காலிகளிலாய் அமர்ந்து லைக் போடுகிறான். பீப் ஒலிகள். கலை: “இந்த லிங்குக்கு இவ்வளவு லைக்கா? என் பிரச்சனை என்ன இவன் என்ன போடுறான்…டேய்? இப்ப இந்த கமெண்டை டெலீட் பண்றேன் பாரு” அவன் திரை நோக்கி கை நீட்டி விட்டு நிற்கிறான் “இல்ல வேணாம். இதைக் கேட்டாலும் எதமா தான் இருக்கு”
ராம் மீண்டும் எழுந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து “ராஜா இஸ் கிரேட்.”
கலை: “சரி டா”
ராம்: “ராஜா மாதிரி எவனும் மியூசிக் போட முடியாது. தமிழ்ல இப்ப போடறதெல்லாம் பாட்டே இல்ல”
ராம் மற்றொரு நாற்காலியில் போய் அமர்ந்து “நான் சின்ன வயசில உசிலம்பட்டியில இருந்தப்போ இந்த பாட்டை பல தடவை கேட்டு ரசிச்ச ஞாபகம். எங்க அப்பா அப்போ அங்க ஒரு வங்கியில வேலை செஞ்சாரு என்ன சாங்? இப்போ இந்த பாட்டை கேட்கையில எங்க அப்பா ஞாபகம் வரதை தடுக்க முடியல. ஐ மிஸ் யூ அப்பா”
சற்று நேர அமைதிக்கு பின் ராம் “ஐ மிஸ் யூ ராஜா”
ராம் பல நாற்காலிகளாய் மாறி அமர்ந்து “ஐ மிஸ் யூ ராஜா” என்று விட்டு லைக் அட்டையை தூக்கி காட்டுகிறான். பீப் ஒலிகள்.
ராம் மற்றொரு நாற்காலியில் இருந்து “ராஜாவுக்கு என்ன ஆச்சு?”
பக்கத்து நாற்காலியில் போய் அமர்ந்து “ஐயோ”
கலை: “அடங்குங்கடா”
கலை போன் திரையை உற்றுப் பார்த்தபடி கோபமாகிறான்: “ஒரு பொண்ணு வந்து கமெண்ட் போடணுமே  உடனே லைக்கா குவியுமே. உடனே உன் கமெண்டை அழிக்கிறேன் பாரு…என்ன பேரு வித்யா…வித்யாவா? எங்கியோ பார்த்த மாதிரி இருக்கா இல்ல? இல்ல. அழகா தான் இருக்கா…(க்ளிக் செய்து திரையில் பார்க்கிறான்) திருப்பூரா? பிஎஸ்ஸி கெமிஸ்டிரி. இதென்ன போட்டோ? இதென்ன புரொபைல் பிக்சர்ல செமையா இருக்கா. கொழுக்மொழுக்குன்னு. நெற்றியில அந்த சந்தன தீற்றல் பாரு க்யூட். நல்ல பேமிலி கெர்ல் ஆகத் தான் தெரியுறா. ஓ நம்ம பிரண்ட் லிஸ்டில இருக்கிறாளா? கையில வெண்ணெயெ வெச்சுக்கிட்டா…அடடா” லைக் அட்டையை தூக்கிக் காட்டுகிறான்.
கலை: “எனக்கும் ராஜா ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரி தனித்துவமா தீவிரமான உணர்ச்சிகளை காட்டுற மாதிரி யாரால பாட்டு போட முடியும். ராஜா நம் கலாச்சார மனதின் ஒரு பகுதி.” அவன் அதை படித்துப் பார்க்கிறான் “இதெப்பிடி? இண்டெலக்சுவலா இல்ல? திவ்யா சாரி வித்யா பார்த்தா என்ன நினைப்பா? கண்டிப்பா லைக் போடுவா இல்ல” அவன் கிளிக் செய்கிறான். பீப்.
சற்று நேரம் அமைதி. கலை பொருமலாய்: ”அதானே பார்த்தேன் வித்யான்னா லைக்கா போடுவீங்களே லைக். எல்லாம் பச்ச பொறுக்கிங்க டா. ஒரு பொண்ணை இங்க நிம்மதியா புழங்க விடுவீங்களா டா? ஆல் பாஸ்டர்ட்ஸ்”
ராம் இன்னொரு நாற்காலியில் போய் அமர்ந்து: “வித்யா நீங்க கவலைப்படாதீங்க. கண்ணை மூடி இந்த பாட்டை கேளுங்க. உங்க அப்பா கூடவே இருக்கிற மாதிரி தோணும். யு வில் பி ஒகே. காட் பிளஸ் யூ”
பெண் குரல்: “தேங்க்ஸ் அண்ணா”
கலை மகிழ்ச்சியாய் பெண் குரலை இமிடேட் செய்து “தேங்க்ஸ் அண்ணா”
ராம்: “உன் நம்பர் என்ன? இன்பாக்ஸில சொல்லு”
அமைதி. கலை திரும்பி திரும்பி பார்க்கிறான்
ராம்: இன்பாக்ஸில போட்டிட்டியா? ஆங்? ஒகெ இதானா? ரைட். இப்ப கூப்டவா?
பெண் குரல்: வேண்டாம்ணா. வீட்ல தூங்கிட்டிருக்காங்க
ராம் ரகசியம் சொல்லும் தொனியில் கைகளை குவித்து அவள் காதில் சொல்வது போல மெதுவாய்: “வாட்ஸ் ஆப் வாயேன்”
பெண் குரல்: “எதுக்குண்ணா? எதுன்னாலும் இங்கியே சொல்லுங்க”
ராம் மிக மெதுவாய் ரகசிய தொனியில்: “அதில்லமா ரொம்ப பெர்சனல். ஜஸ்ட் ஒரு நிமிசம் தான். வாயேன். இதோ பாரு நான் ஒரு விசயம் போட்டிருக்கேன். அதை பார்த்திட்டு வாட் ஆப்பிலயே சொல்லு”
பெண் குரல்: “போடா பொறுக்கி”
ராம் அமைதியாகி சுற்றுமுற்றும் பார்க்கிறான். பிறகு புன்னகைத்து விட்டு போனையே பார்க்கிறான்.
கலை: “வித்யா…வித்யா…அட போயிட்டியா? ஒரு பொண்ணு அபூர்வமா வரக் கூடாதே! நாயிங்க நூறு வந்து தொரத்தி விட்ரும். சும்மாவா இந்தியா இன்னும் வல்லரசாகாம இருக்கு. அப்துல் கலாம் என்ன சொன்னார்?”
பெண் குரல்: “ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி ஒரு கிளாஸ் பால் குடிச்சிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்”
கலை: “பால் கொடுத்தா நான் குடிக்க மாட்டேன்னா சொன்னேன்? யாரு இது? கௌரி லஷ்மி..ம்ம்ம் ஆண்டி. பல்லைப் பாரு. சரி பரவால்ல. இப்போதைக்கு இவங்களாவது இருக்கட்டும்”
கலை திரையை நோக்கி சொல்கிறான் “அருமை கௌரி லஷ்மி. இப்பியே போய் பால் குடிச்சிட்டு வந்திடறேன்”. கிளிக்குகிறான். பீப்
கலை: “ஆஹா பால்னா இவ்வளவு டேஸ்டுன்னு இப்பத் தான் உணர்ந்தேன். லைட்டா தூக்கம் வரால்ப்ல கூட இருக்கு” மீண்டும் கிளிக்குகிறான். பீப்.
ராம் லைக் அட்டையை தூக்கி காட்டுகிறான். பீப்
கலை: ஆஹா நம்ம கமெண்டுக்கா? நீ என் இனமடா. அட நம்ம ராம்?.
கலை: “டேய்! நீ இன்னும் தூங்கல?”
ராம்: எங்க மாம்ஸ் தூங்க விடறா? இந்த மாலு எதாவது கேட்டுக்கிட்டே இருக்கா. அவ கிட்ட கடலை போட்டு போட்டே நான் விரல் வலிக்குது. கடவுள் நமக்கு நூறு விரல் கொடுத்திருக்கணும்
கலை: அழகு முக்கியம் இல்லடா. பேச்சு. பொண்ணுங்ககிட்ட இண்டெலக்சுவலா பேசக் கூடாது. விஷுவலா பேசணும். சென்ஷுவலா பேசணும். நீலகண்ட சாஸ்திரிகளோட சோழர் வரலாறு படிச்சேன்னு பேசக் கூடாது.
 ராம்: ஓ
கலை: ஆமாடா. ஒரு பொண்ணு உனக்கு பிடிக்கலேன்னா கோவமா கத்தினேன்னு வச்சுக்கே அது உன்னை விடவே செய்யாது. பொண்ணுங்களுக்கு திட்டுற பசங்களை ரொம்ப பிடிக்கும். அதாண்டா சைக்காலஜி
ராம்: செம மாம்ஸ். இதையே ஸ்டேட்டஸா போட்டா ஆயிரம் லைக் அள்ளுமே
கலை: வேணாம்டா. இது கம்பெனி சீக்ரெட்
ராம் (போனை பார்த்தபடி): ஒகெ மாம்ஸ். ஆனா அவ கிட்ட என்ன ஸ்வீட்டா சொன்னாலும் விழ மாட்டேங்குறா! ஏதோ என் அழகை வச்சு ஏதோ ஓட்டிக்கிட்டிருக்கேன்
கலை: உன் அழகை தூக்கி குப்பையில போடு. நான் உனக்கு சொல்லித் தரேண்டா. I will teach you the art of seduction
ராம் (சட்டென உற்சாகமாகி தலையை தூக்கி பார்க்கிறான்): அப்டீன்னா?
கலை: “எந்த ஒரு பெண்ணையும் எப்பிடி எளிதில் அடையறதுன்னு நான் உனக்கு சொல்லித் தரேன். இது ஒரு ஆறு மாச course. சரி நான் நேத்து சொல்லித் தந்த பாடம் ஞாபகம் இருக்கா? ஒரு பெண்ணை அடையறதுல ஆறு நிலைகள் இருக்கு. அது என்னெல்லாம் சொல்லு?”
ராம்: ஓ ஞாபகம் இருக்கே! முத ஸ்டேஜ் taxiing. அதாவது ஒரு விமானம் ரன்வேயில ஓடி அது மேலே ஏறுவதற்கான இடத்துக்கு போய் நிற்கிறது.
கலை: அந்த நிலைக்கான அடிப்படை விதி என்ன?
ராம்: ம்ம்ம் மஞ்சக் கோட்டை ஒட்டியே கவனமா ஓட்டணும்.
கலை: ஏன் ஒரு விமானம் நின்ன இடத்தில இருந்தே take off ஆகிறதில்ல?
ராம்: ஏன் பாஸ்?
கலை: இது ரொம்ப முக்கியம் கலை. கவனமா கேட்டுக்கோ. seductionல நிறைய பேர் பண்ற தப்பு இது. இடம் முக்கியம். நாம ஆண்கள் எங்க நின்னும் எதுவும் பண்ணுவோம். டிரான்ஸ்பார்மர் பார்த்த உச்சா போவோம். ரோட்ல நின்னு பெர்சனல் டீடெய்ல் எல்லாம் கத்தி பேசுவோம். ஆனா பெண்கள் வேற மாதிரி. அவங்க தான் இருக்கிற இடத்தை பத்தி ரொம்ப கேர்புலா இருப்பாங்க. ஒரு பொண்ணுகிட்ட முதல்ல பேசும் போது எப்பிடி அப்ரோச் பண்ணி எங்க நின்னு பேசுறியோ அதைப் பொறுத்து தான் ரியாக்‌ஷன் இருக்கும்.
ராம்: பாஸ் நீங்க இதை சொல்லித் தரல
கலை: ஆமா பழத்தை உரிச்சு ஊட்டுவாங்களாம். எல்லாம் அப்பப்போ தான் போற போக்கில சொல்லுவேன். நீ தான் காட்ச் பண்ணிக்கணும். கேளு. பொண்ணுங்க அதிகமா உள்ள இடங்களை நாம choose பண்றோம். ரொம்ப கூட்டமாவும் இருக்க கூடாது. அதுக்குண்ணு அந்த பொண்ணு சும்மாவும் இருக்கக் கூடாது. ஏதாவது சின்ன வேலையா இருக்கணும். அப்போ நீ எண்டிரி ஆகுற. எப்பிடி? முன்னாடி இருந்து? பின்னே இருந்தில்ல
ராம்: ஏன் மாம்ஸ்?
கலை: பேஸிக் சைக்காலஜி டா. பின்னாடி இருந்து வரதெல்லாம் ஆபத்தின்னு நம்ம மனசு நினைக்கும். பயந்திடுவோம். அதனால முன்னால இருந்து அவளை நோக்கி போகணும்.
ராம்: ஒகெ மாம்ஸ்
கலை: என்ன ஒகெ? அதெல்லாம் சும்மா விளையாட்டில்ல. ஒரு கலை. அதுக்கு நிறைய பிரேக்டீஸ் வேணும். பதற்றமே இல்லாம கூலா போய் பேசணும். அவளை நீ எந்த நோக்கத்தோட நெருங்கிறேன்னு சுத்தமா தெரியக் கூடாது. டெய்லி ஒன் அவராவது ஒரு புதுப் பொண்ணை நோக்கி போய் பேசிப் பழக சொன்னேனே அந்த பயிற்சியை ஒழுங்கா செய்றியா?
ராம்: செய்யுறேன். ஆனா மாம்ஸ் இப்ப ஆன்லைன்ல பொண்ணுங்களை மடக்கிறச்சே இதெல்லாம் தேவைப்படாதே
கலை: யார் சொன்னா? அப்போ கூட நாம அவளை ஒரு எடத்தில தான் மீட் பண்றோம். இப்போ நாளைக்கு மாலு எங்க மீட் பண்ணலாமுன்னு சொல்லி இருக்கா?
ராம்: புக் ஷாப்பில. நீங்க தானே பாஸ் அங்க போதுமுன்னு சொன்னீங்க?
கலை: யெஸ். ஏன்? காபி ஷாப்னா நாம அடிக்கடி போற இடம். அங்க போனதும் அவ இயல்பாயிடுவா. ஆனா ஒரு பொண்ணை முதமுதல்ல எதிர்பாராத இடத்தில மீட் பண்ணனும் அல்லது பார்த்ததும் எதிர்பாராத ஒண்ணை சொல்லனும். அவங்க கொஞ்சம் பதற்றமா தன்னைப் பத்தி conscious இருக்கணும். அப்போ நீ சரியா பேசினே வொர்க் அவுட் ஆயிடும். நாளைக்கு புக் ஷாப்ல அவளை நாம மீட் பண்றச்சே taxiing தொடங்கிடுது. அந்த ஸ்டேஜ் இல்லாம ரொமேன்ஸே இல்லடா.
ராம்: மாமா, லோக்கல் லேங்வெஜ்ல தள்ளிக்கிட்டு போறதிங்கிறது இதானே?
கலை: அடச்சீ! அதெல்லாம் சாதாரண ஆட்கள் பண்றது. நாம ஒரு கலையை பழகுறோம். நாம ரெண்டு பேரும் ஆர்டிஸ்ட். நமக்கு காதல் தான் முக்கியம், காதலி இல்ல. புரியுதா? The means justifies the end, even if there is no end. அதான் நம்ம பிலாஸபி. சரி அடுத்த ஸ்டேஜ்?
ராம்: Take off
கலை: இல்லடா சாதாரண லேங்வெஜ்ல சொல்லு. அந்த பொண்ணை நாம நினைக்கிற எடத்துக்கு வரவழைக்கணும். அதை உடனே பண்ணனும். செகண்ட் மீட்டிங்கில.
ராம்: ஏன் மாமா அவவ்ளவு அவசரம். தெர்ட், போர்ட்த் மீட்டிங்கில பாத்துக்கலாமே?
கலை: தெர்டு மீட்ல அவ உன்ன அண்ணேன்னு கூப்டுவா? ஒகெயா?
ராம்: ஐயோ
கலை: சரி அடுத்த ஸ்டேஜ். ஒரு விமானம் எப்பிடி மேலே ஏறி பறக்குது சொல்லு?
ராம்: அதுக்கும் இதுக்கும்…
கலை: நமக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம் ராம்? நம்மைப் பொறுத்தவரையில் seduction is a science. We are scientists bloody. ஸ்கூல்ல physics படிச்சிருக்க இல்ல? Aerodynamics ரொமான்ஸ் ரெண்டுக்கும் ஒரே ரூல்ஸ் தான். விமானத்தோட எஞ்சின் வேகமாய் சுழல அது மேலே நோக்கி thrust ஆகுது. அதுக்கு காரணம் சாய்வா இருக்கிற ரெண்டு wings. விமான இறக்கை மேலே அடிக்கிற காத்து இறக்கையோட ஆங்கிள் காரணமா கீழே தள்ளப் படுது. கீழே காத்தோட வேகம் அதிகமாகும் போது இறக்கைக்கு மேலே உள்ள காத்தோட அழுத்தம் குறையுது. அதனால கீழே இருந்து விமானம் மேலே தள்ளப்படுது. ஐ மீன் lift ஆகுது.
ராம்: புரியல மாம்ஸ்
கலை: சரி விடு. நீ கார்ல போகும் போது கையை இப்பிடி வெளியே விட்ருக்கியா?
ராம்: ஆமா
கலை: அப்போ கையை இப்படி சாய்வா லேசா தூக்கினேன்ன எதிர்க்காத்தில கையை மேலே தூக்கிற மாதிரி இருக்கும்.
ராம் ஒரு கையை வெளியே விட்டு விமானம் போல் சித்தரிக்கிறான். பிறகு இரு கைகளையும் சாய்வாக நீட்டி பறப்பதாய் நடிக்கிறான்.
ராம்: ஆமா மாம்ஸ் கையை காத்து மேலே தூக்கிற மாதிரியே இருக்கு. ஐயோ என் கை மேலே போகுது. நான் பறக்கிறேன்
கலை: சரி சரி அடங்கு. இதுக்கும் ரொமான்ஸுக்கும் என்ன சம்மந்தம்? ஒரு பொண்ணு விமானம் போல. அவளை நீ எந்த திசை நோக்கி தள்ளுறியோ அதுக்கு நேர் எதிர் திசையில போவாள். விமானத்தை மேலே இருந்து கீழே தள்ளினா அது மேலே போகும். ரன்வேயில ஓடுற ஸ்டேஜில ஒரு பொண்ணுகிட்ட நாம பெண் மொழியில பேசணும். உதாரணமா நேத்து ஒரு ஐஸ்கிரீம் சாப்டேன். அதோட கலர், டெக்ஸ்ச்சர், அது நாக்கில பட்டு கரையும் போது எப்பிடி டிவைனா இருந்துது இப்பிடி நீ சொல்றதை கேட்டா அவளுக்கு ஐஸ்கிரீம் சாப்ட்ட பீல் வரணும். இது மாதிரி ஒவ்வொண்ணையும் சொல்லணும். ஏன்னா கெர்ல்ஸ் பரஸ்பரம் இப்படித் தான் பேசிப்பாங்க.
ராம்: மாம்ஸ் சின்ன வயசில நான் அதிகமா பொண்ணுங்ககிட்ட தான் பேசுவேன்.
கலை: ரைட். ஆனா உன் இடத்துக்கு அவ வரும் போது, தட் இஸ் செகண்ட் மீட்டிங்கில, நீ அவளை take off பண்ணனும். அதுக்கு நீ அவ கிட்ட திமிரா நடந்துக்கணும். அவளை டாமினேட் பண்ணனும். வெறுப்பா பழகணும். அவ உன்னோட பிராபர்டிங்கிற பீலிங்கோட பேசணும். அதே நேரம் மென்மையாகவும் இருக்கணும். அதாவது மேலே இருந்து அழுத்தணும். அப்போ அவ lift ஆகி டேக் ஆப் நடக்கும். உன் கூட பறக்க தொடங்குவா?
ராம்: அடுத்த ஸ்டேஜ்?
கலை: இதை ஆக்சிடெண்ட் இல்லாம பண்ணிக் காட்டு. அப்பால பார்க்கலாம். சரி டைம் கன்பர்ம் தானே.
ராம்: கரெக்டா பதினொரு மணி
கலை: நாம முன்னெயே போய் அந்த எடத்துக்கு பழகிக்கணும்.
ராம்: அப்புறம் மாம்ஸ்… ஏன் நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவளை மீட் பண்ணனும், தனித் தனியா பாக்கலாமேன்னு கேட்டா?
கலை: நீ என்ன சொன்னே?
ராம்: அது எங்க பாலிஸின்னு சொல்லிட்டேன்.
கலை: கரெக்ட். அந்த விமானத்தோட ரெண்டு விங்ஸில நீ ஒண்ணு, நான் ஒண்ணு
ராம்: மாமா அப்போ பைலட்?
கலை: பைலட்? பைலட்? டேய் நீ விமானத்தில போகும் போது பைலட்ட பாத்திருக்கியா? கார்ல, பஸ்ஸில பார்க்கலாம். ஆனா பைலட் தூங்கிட்டா கூட நீ எழுப்பி விட முடியாது. எதாவது தப்பு பண்ணினா கேட்க முடியாது. பாதியில எறங்க முடியாது. டேய் நீ இந்த உலகத்தில கடவுளை பாத்திருக்கியா?
ராம்: இல்ல
கலை: பார்க்காம தானே எந்த கவலையும் இல்லாம வாழற? அப்புறம் ஏன் இப்போ போய்? ஆங்? நாம அப்புறம் அந்த விமானம். அவ்வளவு தான். வேற யாரும் இல்லன்னு நெனச்சிக்கணும். சரி இப்போ போய் தூங்கு. நாளைக்கு முக்கியமான வேலை இருக்கில்ல? நான் உன்ன இனி ஆன்லைன்ல பார்க்க கூடாது. காலைல பத்தரைக்கெல்லாம் அங்க கரெக்டா இருக்கணும்
ராம் தலையாட்டிக் கொண்டே உட்கார்ந்த வாகில் தூங்குகிறான். கலை மேடை விளிம்பில் உடற்பயிற்சி செய்கிறான். பீப் ஒலிகள் விட்டு விட்டு கேட்க இருவரும் திடுக்கிடுகிறார்கள். ராம் எழுந்து சுற்றிலும் பார்க்கிறான். போனை சோதிக்கிறான்.
ராம்: சைன் ஆப் பண்ணிட்டோமே. அப்புறம் எங்கிருந்து இந்த சத்தம் வருது?
கலை சத்தங்களை புறக்கணித்து விட்டு தியானத்தில் அமர்கிறான். ஒரு கொசு அவனைச் சுற்றி பறக்கிறது. அடிக்கடி அதை அடிக்க முயன்று மனதை ஒருமுகப்படுத்துகிறான். கொசு அவனை விடாமல் தொந்தரவு பண்ணுகிறது
கலை: “இந்த கொசு தான் என் மனசு. நான் என்னை சுத்தி வந்து தொந்தரவு பண்றேன். ஓம் ஓம் ஓம்” அவன் ஆழ்ந்த தியானத்தில் போகிறான். சட்டென கொசுவை அடித்து முகர்கிறான்.
கலை: “மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்தி விடு
தேகத்தை சாய்த்து விடு அல்லால்
அதில் சிந்தனை மாய்த்து விடு
யோகத் திருத்தி விடு அல்லால்
இந்த ஊனைச் சிதைத்து விடு
சிந்தை தெளிவாக்கு அல்லால்
இதை செத்த உடலாக்கு”
தொடர்ந்து பீப் ஒலிகள் கேட்டபடியே உள்ளன. ராம் கண்ணைத் திறந்து தன் போனை பார்க்கிறான். அதன் பொத்தானை சற்று நேரம் அழுத்துகிறான்: “ஸ்விட்ச் ஆப். இனி பார்ப்போம்.”
ஆனால் பீப் ஒலிகள் தொடர்கின்றன
ராம்: “எங்கேடா இருக்கீங்க டேய்?” சற்று இடைவெளி விட்டு நிர்கதியாய் வேதனையுடன் “நான் எங்கடா இருக்கேன் டேய்?”
கலை அமைதியாய் தியானத்தில் இருக்கிறான். ராம் வலுக்கட்டாயமாய் கண்ணை மூடித் தூங்குகிறான். அவன் இருக்கை இருட்டில் மூழ்குகிறது/ சட்டென விழித்து அரைமயக்கத்தில் எழுந்து வெளிச்சமுள்ள இருக்கைகள் நோக்கி நடந்து ஒன்றில் அமர்கிறான். லைக் அட்டையை தூக்கி காட்டுகிறான். பீப்.
கலை கண் திறந்து பார்க்கிறான். இருட்டில் இருக்கும் அவன் மீது ஸ்பாட் லைட் விழுகிறது. அவன் சுற்றிலுமாய் பார்க்கிறான்.
ராம் சொல்கிறான்: “காலைல எழுந்ததும் தேனில் பச்சை வெங்காயத்தை அரைத்து கலைந்து சாப்பிடணும். உணவில் ஆரைகீரையும் தயிரும் சேர்க்கலாம். தூக்கமின்மைக்கான சிறந்த இயற்கை மருந்துகள் இவை”
தொடர்ந்து லைக்குக்கான பீப் ஒலிகள் கேட்கின்றன. கலை எழுந்து நின்று மேடையை பார்க்கிறான்.
ராம் மற்றொரு நாற்காலியில் போய் அமர்கிறான்: “படுக்கைக்கு மேல் கொல்லங்கோவை செடியை கட்டி தொங்க விட்டா கண்டிப்பா படுத்த உடனே தூக்கம் வரும். நாட்டு மருந்து கடைகளில தேடிப் பார்த்தா கெடைக்கும்”
பிறகு அவன் ஒவ்வொரு நாற்காலிகளாய் மாறி மாறி அமர்ந்து சொல்கிறான். அப்போது பீப் ஒலிகள் பின்னணியில் கேட்டபடியே இருக்கின்றன.
கலை: டேய் யாருடா நீங்கெல்லாம்?
ராம்: இளையராஜா பாட்டு கேட்கலாம்
ராம்: புடிக்காத புக்ஸ் படிக்கலாம்.
ராம்: எவண்டா அது என் தலைவன் மியூசிக்கை கேவலமா சொன்னது? இப்ப போடறானுங்களே அதெல்லாம் மியூசிக்காடா?
கலை: டேய் நிறுத்துங்கடா. அதான் சைன் அவுட் பண்ணிட்டோமே. எங்கிருந்துடா வரீங்க?
ராம்: சவுண்ட் மிக்ஸிங் தெறமையா பண்ணி செயற்கையா பாட்டு போட்டு ஆஸ்கார் வாங்கினா நீயெல்லாம் பெரிய ஆளாடா? ராஜா மாதிரி மண் வாசனையோட ஒரிஜினலா போட வருமாடா?
பின்னணியில் இருந்து ஒரு ஆண் குரல்: டேய் எவண்டா அது? அழுகாச்சியா சொய்ங் சொய்ங்னு போட்டா அதெல்லாம் மியூசிக்காடா? இன்னிக்கு காலத்துக்கு ஏத்த மாரி ஜாலியா கூலா போடணும். அதான் எங்க புயலோட மியூசிக்.
ராம் மற்றொரு நாற்காலியில் உட்கார்ந்து: நீ மட்டும் என் கைல சிக்கினே மவனே அப்பிடியே உன் கழுத்தை நெரிச்சு
கலை: டேய் டேய் நிப்பாட்டுங்கடா…அய்யோ முடியலியே…(அவன் பார்வையாளர்கள் நோக்கி ஓடி மறைகிறான்)
ராம் அமைதியாக மீண்டும் தூங்க ஆரம்பிக்கிறான். பின்னணியில் பீப் ஒலிகள் மெல்ல கேட்கின்றன. சத்தம் வெகுவாய் குறைந்து மிக மெல்ல கேட்டபடி இருக்க ராம் குறட்டை விடுகிறான். மேடை முழுக்க இருட்டாகிறது. சற்று நேரத்தில் இரண்டு குறட்டை ஒலிகள் சத்தமாய் கேட்கின்றன. எதுவும் தெரியவில்லை.
ஒரு பெண் குரல்: இருபது அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொலை. ஏ தமிழ் சமூகமே இன்னும் தூங்கிக் கொண்டா இருக்கிறாயா? உன் தன்மானமும் சுரணையும் எங்கே போச்சு?
கொட்டாவி தொடர்கிறது. அடுத்து ஒவ்வொரு பீப் ஒலியாக கேட்க அதனுடன் ஸ்பாட் லைட்டும் ஒவ்வொரு நாற்காலியாக தாவுகிறது. இருவரும் கண்ணை திறக்காமலே தூக்கத்தில் கையை மட்டும் தூக்கி லைக் அட்டையை காமிக்கிறார்கள்.
சட்டென மேடை முழுக்க ஒளியால் நிரம்புகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்குகிறார்கள். மிஷின் கன் வெடிப்பது போல் லைக் பீப் ஒலிகள் இடை விடாது சத்தமாய் ஒலிக்க இருவரும் காதைப் பொத்துகிறார்கள். பிறகு எழுந்து காதை இருகைகளாலும் பொத்தியபடி கண் திறக்காமலே நடக்கிறார்கள். நடக்கும் போது நாற்காலிகளில் தடுக்கி விழுகிறார்கள். பீப் ஒலிகள் பொறுக்க முடியாமல் ஓ என கத்தியபடி நாற்காலிகள் இடையே ஓடுகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் மோதி விழுகிறார்கள். அப்போது ஒரு பெண்ணின் அழுகை ஓலம் பின்னணியில் கேட்கிறது. பீப் ஒலி நிற்கிறது. இருவரும் விழுந்த நிலையில் அவ்வோலத்தை கேட்கிறார்கள். கண் திறக்கிறார்கள்.
கலை: “அது…?”
ராம்: மாலு?
கலை: ஆமா. மாலு மாலு!
பதிலின்றி அந்த ஓலம் தொடர்கிறது. இருவரும் எழுந்து ஆளுக்கொரு நாற்காலியில் அமர்கிறார்கள்.
ராம்: எனக்கும் அழுகையா வருது மாலு
கலை: மனித குலத்தின் மாபெரும் அவலம். மனித உயிர்கள் அல்ல இங்கு மாய்க்கப்பட்டது மனித உரிமைகள் மீதான நம்பிக்கை!
தொடர்ந்து பீப் ஒலிகள்.
ராம் எதிரே வெறித்து பார்த்தபடி: “திருப்பதி உண்டியல் மாதிரி விழுந்து கிட்டே இருக்கு. யப்பா இதுவரை 32 லை. ஒரு கமெண்டுக்கா.”
ராம் தள்ளிப் போய் உட்கார்கிறான்: இந்த இருபது பேரும் என்ன தப்பு செஞ்சாங்க? பட்டினியில குடும்பம் வாடுறது பொறுக்காம மரம் வெட்ட போனதா? இதுக்கு போய் என்கவுண்டரா? பாவம்! மரக்கடத்தலுக்கு காரணமான முதலாளிகளை பிடிக்க சொரணயில்லாம அப்பாவிகளை போட்டுத் தள்றதா உங்க வீரம்?
விட்டு விட்டு பீப் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அது நிற்கும் வரை அவன் காற்றில் அதை எண்ணிக் கொண்டே இருக்கிறான். ராம்: 42, 44, 47, 49…ம்ம்ம் இன்னும் ஒண்ணே ஒண்ணு. கொய்யால 49இல ரன் அவுட்டா?”
கலை எழுந்து இன்னொரு நாற்காலியில் அமர்கிறான்
கலை:”போன மாசமே போலீஸ் கமிஷ்னர் இனிமே இங்க தமிழ்நாட்ல இருந்து மரம் வெட்ட போகாதீங்கன்னு எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் மீறிப் போனது நம்ம பேராசை தானே?”
அவன் மற்றொரு நாற்காலியில் போய் அமர்கிறான்
கலை: போனா? சுட்ருவாங்களோ? எந்த வளர்ச்சி திட்டமும் இல்லாத மலைப்பிரதேச கிராமத்து பழங்குடி இளைஞர்கள் அவங்க. அவங்களுக்கு வேலை கொடுத்து காப்பாத்திறது நம்ம அரசாங்கத்தோட பொறுப்பு. உயிரை பணயம் வச்சு போறாங்கன்னா என்ன மாதிரி வறுமையில இருந்திருப்பாங்கன்னு யோசுச்சு பாருங்க. இது உங்களுக்கு பேராசையா? வாயில என்னமோ வருது…
லைக் பீப்கள் மழை போல கொட்டுகின்றன. இருவரும் மழையில் இருந்து தம்மை பாதுகாப்பது போல கைகளால் மூடிக் கொள்கிறார்கள். பீப் ஒலிகள் நிற்க கலை எண்ணுகிறான்: “75, 77, 78, 83… பாரு செம” அவன் உற்சாகத்தில் கைதட்டி உட்கார்ந்தபடி துள்ளுகிறான்.
ராம்: பிரண்ட்ஸ் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவுங்க இந்த பாட்டை கேட்டு
(ஒரு குத்துப் பாட்டு பின்னணியில் ஒலிக்க ராம் ஆடுகிறான் கலை அவனை வியப்பாக பார்க்கிறான்)
கலை: இது விவாதத்தை திசைதிருப்பும் தமிழர் விரோத குள்ளநரிகளின் முயற்சி. நாம் இங்கு என்ன பேசிக் கொண்டிருக்கிறோம், என்ன நடந்து கொண்டிருக்கிறது? 7 அப்பாவிகள் புனித பயணம் மேற்கொண்டிருக்க அவர்கள் பஸ்ஸில் இருந்து அழைத்து செல்லப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். பழைய மரக்கட்டைகள் அவர்கள் அருகில் வைக்கப்படு அவர்களின் பிணங்கள் அடுக்கப்படுகின்றன. இது அப்பட்டமான போலி கொலைகள். நீதி தேவதையின் கண்களில் ரத்தம் வடிகிறது. என் இதயம் சுக்குநூறாகிறது தோழர்களே
ஒரு பெண்ணின் அழுகை ஒலி.
ராம்: ஐயோ அழாத மாலு
பெண் குரல்: சிச்சுவேசனுக்கு ஏத்ததா எதாவது நல்ல பாட்டா போடுப்பா
ராம்: ஒகே. (க்ளிக் செய்கிறான்) “இதைக் கேளேன்”
ஒரு சோகப்பாடலின் சில வரிகள் கேட்க ராம் அதற்கு மெல்ல ஆட கலை அவனை கலவரமாய் பார்க்கிறான். அவன் அங்கிருந்து மேடை விளிம்பு வரை டைம்லைனில் உள்ள பலரது ஸ்டேட்டஸ்களையும் படித்தபடி நடக்கிறான்.
ராம்: அப்பாவித் தமிழர்கள் 25 பேர் படுகொலை. உங்க கண் துடைப்புக்கு எங்க மக்கள் உயிராடா? ம்ம்ம் 32 பேர் கொலை, 45 பேர்…இதென்ன நம்பர் ஏறிக்கிட்டே போகுது? கொலைகாரா ராஜபக்சே இருபது தமிழர்கள் உயிரென்ன உனக்கு கிள்ளுக்கீரையா? இவரு எங்க இருந்து வந்தாரு? ஒரே குழப்பமா இருக்கே? (தலையை சொறிகிறான்)
”இன்றைக்கு என் சமையல் கத்திரிக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல்… போட்டோவெல்லாம் தூக்கலாத் தான் இருக்கு…அப்பிடியே சாப்பிடவும் கூப்பிட்றது?”
பல நாற்காலிகளிலாய் அமர்ந்து லைக் அட்டையை தூக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் ராம்: “தாராளமா வாங்கோ, சூடு அறிடறதுக்கு முன்ன வாங்கோ”
(அவன் அங்கிருந்து படித்தபடி நகர்கிறான். கலை அருகே போய்) “டேய் டைம் ஆச்சு. எந்திருச்சு கெளம்பு”
ராம் (கற்பனை ஸ்கிரீனில் எதையோ வெறித்து பார்த்தபடி): கொஞ்சம் வெயிட் பண்ணுடா. இண்டெரஸ்டிங்கா ஒண்ணு போய்க்கிட்டு இருக்கு
கலை: அந்த பொண்ணு அவ பாட்டுக்கு போயிடுவா? பங்சுவாலிட்டி பத்தி காந்தி என்ன சொல்லி இருக்காருன்னு தெரியுமா?
ராம்: மாலு எங்க போறதுக்கு? இங்க தானே இருக்கா! மாலு மாலு…ஏய் அவளை காணோம்டா
கலை: நான் தான் சொன்னேனே கிளம்பு. (கலை மீண்டும் படித்தபடி நடந்து மேடையின் விளிம்புக்கு வருகிறான்)
ராம் பல்துலக்கி குளித்து ஆடையணிகிறான். அவன் நடந்து மேடையின் ஒரு பக்கமாய் வெளியேற கலை இன்னொரு பக்கமாய் வெளியேறுகிறான். சட்டென இருட்டாகிறது. அடுத்து மேடையின் விளிம்பில் மட்டும் வெளிச்சம். அங்கு ராம் அமர்ந்து போனை பார்த்தபடி இருக்கிறான்.
ராம்: பணக்காரன் வசதியா வாழறான். ஏழை நிம்மதியா வாழறான்…த்தூ இதுக்கு போய் 3000 லைக், 78 ஷேர்ஸ். கொய்யால ஒரு பொண்ணு எதைப் போட்டாலும் உடனே அத்தனை நாயும் லைக்கை போடுமே. குட் நைட்னு போட்டா போதும், அதுக்கு ஆயிரம் லைக் விழும்
கலை எழுந்து ராமிடம் வருகிறான்: “டேய் இங்க என்னடா பண்றே?”
கலை: புக் ஷாப் தேடி இங்க வர வந்திட்டேண்டா. அப்புறம் எல்லாத்தையும் மறந்து இங்கியே ஒக்காந்திட்டேன்
ராம்: அவ போயிடப் போறாடா
கலை: இருடா…செமையா போய்க்கிட்டு இருக்கு
ஒரு பெண் குரல்: என்ன ஒரு திமிர்த்தனம்! எப்பிடி பெண்களை இப்படி கொச்சைப்படுத்தலாம்? இதுக்கு நீங்க மன்னிப்பு கேட்டுத் தான் ஆகணும் ராம்
ராம்: மன்னிச்சுங்க
பெண் குரல்: என்கிட்ட மட்டுமில்ல இங்க உள்ள எல்லா பெண்கள் கிட்டயும் மன்னிப்பு கேளுங்க
ராம்: எல்லார் கிட்டயுமா?
பெண் குரல்: ஆமா கேளுங்க இல்லாட்டி உங்கள விடப் போறதில்ல
ராம்: ஐயோ வாடா ஓடீரலாம் டா
ராமும் கலையும் அங்கிருந்து ஓட பின்னால் பெண் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது: ராம் ராம் மன்னிப்பு மன்னிப்பு
அவர்கள் மேடையின் மறுவிளிம்பில் போய் நின்று மூச்சு வாங்குகிறார்கள்.
இருவரும் கைக்கடிகாரம் பார்க்கிறார்கள்
ராம்: பதினொண்ணே கால் ஆச்சு
கலை: கண்டிப்பா வந்து தேடிக்கிட்டு திரும்ப போயிருப்பா எல்லாம் ஒன்னால தான்
ராம்: இல்ல வாங்க மாம்ஸ் நடப்போம். போயிடலாம்
கலை போனை காதில் வைத்தபடி: போனை கூட எடுக்க மாட்டேங்குறா
ராம்: நான் வாட்ஸ் அப், சேட் எல்லாம் டிரை பண்ணிட்டேன். நோ ரெஸ்பான்ஸ் (அவன் ஒரு ஆப்பிளை எடுத்து கடிக்கப் போகிறான். கலை அவன் கையை பிடிக்கிறான்)
கலை: நிறுத்து நிறுத்து. இது யாருடா கொடுத்தது?
ராம்: அவ தான் மாம்ஸ்
கலை: கீழே போடு
ராம்: ஏன் மாம்ஸ்?
கலை: அந்த பாவக்கனியை கீழே போடு. அதை நீ சாப்பிட கூடாது. சாப்பிட்டே உன் வாழ்க்கை நரகமாயிடும்
ராம் அதற்குள் அதை கடித்து விட கலை அவனது கழுத்தைப் பிடிக்கிறான்
கலை: துப்பு
ராம் துப்புகிறான்.
 ராம்: மாமா என் தொண்டையை பாரு செவந்து போச்சு. ஆலகண்ட விஷம் மாதிரி எதையாவது சாப்டுட்டேனா?
கலை: கழுத்தை இறுக்கிப் பிடிச்சதுனால ரத்தம் அங்கியே தேங்கிப் போய் சிவந்திருக்கும். நீ விஷத்தை சாப்டா கூட விட்டிருப்பேன் ராம். இது அதை விட ஆபத்து. நம்ம ஆபரேஷன்ல முதல் ரூலை நீ இப்ப மீறப் பாத்தே.
ராம்: என்ன?
கலை: அவ தர எதையும் வாங்கக் கூடாது. ஓட்டல்ல ஒரு பொண்ணு பில்லுக்கு முந்திக்கிட்டு காசு பண்ணினா அவ ரத்த காட்டேறின்னு அர்த்தம். உன் ரத்தம் உறிஞ்சிடுவா. அதே மாதிரி தான் சட்டை, கர்ச்சீப், கீ செயின்னு கிப்ட் வாங்கித் தர பொண்ணுங்க. இதெல்லாம் வாங்க கூடாது. விலக்கப்பட்ட பொருட்கள். இதுவரை என்னென்ன வாங்கி இருக்க? வெளியே எடு
ராம் கர்ச்சீப், கீசெய்ன், பேனா என ஒவ்வொரு பொருளாக கீழே போடுகிறான்.
கலை: அவ்வளவு தானா?
ராம் சட்டையை கழட்டி போடுகிறான்.
ராம் ஆப்பிளை எடுத்து மீண்டும் பார்த்து: ஆனா இது மட்டும் ரொம்ப டேஸ்டு மாமா ஒரே வாய் கடிச்சிக்கிறேனே
கலை: இந்த ஆசை இது தான் நமக்கு கூடாது. ஆசையா சொர்க்கமா?
ராம்: சொர்க்கம்
கலை ஆப்பிளை பிடுங்கி வீசுகிறான்: ஆசைங்கிறது ஒரு நீர்க்குமிழி மாதிரி. கையில அதுவா வந்து உட்கார்ந்தா பார்த்து ரசிக்கனும். ஆனா சொந்தமாக்கணும்னு நெனைச்சு தொட்டோம் உடைஞ்சிரும். புஸ்ஸ் அவ்வளவு தான் போயிரும். இந்த வாழ்க்கையில எல்லாமே அப்பிடித் தாண்டா. எதை வேணும்னாலும் எஞ்சாய் பண்ணலாம். ஆனா சொந்தமாக்கணமுன்னு ஆசைப்படக் கூடாது. பொண்ணுங்களையும் சேர்த்து
ராம்: இப்போ நீ தூக்கி எறிஞ்சது ஆப்பிள் இல்ல, ஒரு பொண்ணோட மனசு
கலை: சீக்கிரம் நட. லேட் லேட்
பெண் குரல்: தேன் சுமந்த பூவின் காத்திருப்பின் வலி அறியாதா அந்த வண்டு
தொடர்ந்து பீப் ஒலிகள்.
ராம்: மாலு. அவ தான் அது
கலை: நம்மளையா சொல்றா? ஆனா ரொம்ப பொதுவா சொல்ற மாதிரியும் இருக்கு.
ராம்: அதுக்குள்ள எத்தன லைக்கு? இதைப் பாரேன் at Black Arrow Bookshop அப்டீன்னு ஸ்டெட்டஸ் போட்டிருக்கா அஞ்சு நிமிசம் முன்னாடி. அப்போ நம்ம பத்தித் தான் போட்டிருக்கணும்
கலை: அஞ்சு நிமிசத்துக்கே பொறுமை இல்லியா?
ராம் மேடையின் ஒரு பக்கமாய் திரும்பி நின்று: எக்ஸ்கியூஸ் மீ நாங்க ஒரு இடத்தை தேடி ரொம்ப நேரமா அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். கேன் யு ஹெல்ப் அஸ்
பெண் குரல்: ஆங்? நீங்க எங்க போணும்?
ராம்: மசனக்குடின்னு ஒரு கிராமம். அது இங்க இருந்து பக்கமாங்க?
பெண் குரல்: இங்க இருந்து திரும்பி அரை கிலோ மீட்டர் போனா ஒரு கோயில் வரும்…
ராம் குறுக்கிட்டு: நீங்க இந்த ஊராங்க?
பெண் குரல்: ஆமா
ராம்: என் பேரு ராம்சந்தர். நான் ஒரு டைரக்டர்.
பெண் குரல்: டைரக்டரா?
ராம்: ஆமா நீங்க கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. நாங்க அவார்ட் பிலிம்ஸ் எடுப்போம். வெளிநாட்டு திரைப்பட விழாக்கள்ல மட்டும் தான் ரிலீஸ் ஆகும். நிறைய அவார்ட்ஸ் வாங்கி இருக்கோம். இவர் என்னோட ஸ்கிரிப்ட் ரைட்டர் கலையரசன்.
கலை கை கொடுக்கிறான்: ஹலோ
ராம்: அவருக்கு ரொம்ப கூச்ச சுபாவம். பொண்ணுங்க கிட்ட அவ்வளவோ பேச மாட்டாரு.
பெண் குரல்: எனக்கு லேட்டாகுதுங்க. அம்மா தேடும்
ராம்: உங்களுக்கு ஒரு பதினாறு வயசிருக்குமா?
பெண் குரல்: இல்ல பதினாலு தான் ஆகுதுங்க
ராம்: பெர்பெக்ட். எதுக்கு கேட்டேன்னா நான் ஒரு படத்துக்கன லொக்கேஷன் தேடித் தான் இங்க வந்தேன். பச்சைப்பசேலுன்னு இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம். அங்கே பால்வெள்ளை மனசோட ஒரு இளம் பெண். நீங்க தான் எங்க ஹீரோயின் முடிவு பண்ணிட்டேன். நாம் உட்கார்ந்து பேச எதாவது இடம் உண்டா? ஸ்டோரி சொல்லட்டுமா?
பெண் குரல்: அம்மா தேடுமுங்க. நான் போணும். வழி கேட்டீங்கன்னு தான்
ராம்: ஐயோ நீங்க வெட்கப்படும் போது கன்னம் சிவக்கிறது அப்ப்டியே பாலில குங்குமப் பொடி கலந்ததும் ஒரு லேசான சிவப்பு பரவுமே அது மாதிரி…
கலை: டேய் டைம் ஆகுது. இவளா அவளான்னு முடிவு பண்ணிக்கோ
ராம்: இரு மாம்ஸ். கையில ஒரு புறா மரத்தில இன்னொரு புறா
பெண் குரல்: நான் அம்மாகிட்ட கேட்டு சொல்றேங்க
ராம்: சரி கேட்டுட்டு வரீங்களா… அந்த ஒரு கோயில் சொன்னீங்களே அங்க வெயிட் பண்றோம்…எங்க கார் இங்க தான் நிக்குது. அப்பிடியே ஏறி லொக்கேஷன் பார்த்துக்கிட்டே கதை கேட்கலாம். என்ன சொல்றீங்க? இல்லேன்னு மட்டும் சொல்லாதீங்க. ஆமாவா இல்லையா? சொல்லுங்க… ஹலோ ஹலோ போயிட்டாளா?
இருவரும் நடந்து மேடையில் இருந்து இறங்குகிறார்கள். மேடை இருண்டு வெளிச்சமாக அவர்கள் மேடையில் ஏறுகிறார்கள். அங்கு நடக்க முடியாதளவு நாற்காலிகள் நிரம்பி கிடக்கின்றன. அவர்களால் மேடை விளிம்பைத் தாண்டி உள்ளே போக முடியவில்லை.
கலை: என்னடா இங்க யாரையும் காணல? நான் தான் சொன்னேனே? இப்போ ரெண்டு புறாவும் போச்சா?
ராம்: ஒருத்தி போனா என்ன மாம்ஸ் இன்னொருத்தி டேக் ஆப் ஆயிட்டாளே. நேரே கோயிலுக்கு போறோம். கூட்டிக்கிட்டு ஜிவ்வுன்னு பறக்கிறோம்
நடந்து எதிர்விளிம்புக்கு வருகிறார்கள். ராம்: என்னது கோயில் பூட்டிக் கெடக்கு. யாருமே இல்ல. சரி வருவா? வராம எங்க போயிடப் போறா?
கலை: அவ அம்மாகிட்ட சொல்லி இருந்தா நிச்சயம் விட மாட்டாங்க
பெண் குரல்: my debut as film actress very soon.
ராம்: அவ தான். ஹலோ ஹலோ (அவன் மேடைக்குள் குதித்து கத்த குரல் வெளிவர வில்லை. ஆனால் வெளியே வந்து பேச குரல் வருகிறது) ஹலோ ஹலோ ஏன் நான் சொல்றது பதிவாக மாட்டேங்குது. சைன் இன் ஆகித் தானே இருக்கு
கலை உள்ளே போய் கையை ஆட்டி எதையோ சொல்ல அவன் குரலும் கேட்கவில்லை. அவர்கள் லைக் அட்டையை தூக்க முயல முடியவில்லை. மேடையில் இருந்து இறங்கி கத்துகிறார்கள்.
ராம்: என்ன நடக்குது இங்கே? அவங்க பாட்டுக்கு பேசிக்கிறாங்க. நான் மட்டும் வெளியே இருக்கேன். எதாவது பிரச்சனையா?
பெண்குரல் இன்னொரு பக்கமிருந்து கேட்கிறது: அன்பே நீ எங்கே? உன் நிழலை கைப்பிடித்த பிடி நின்று கொண்டிருக்கிறேன் தனியாய்!
கலை மேடையின் இன்னொரு பக்கம் ஓடி: இங்கே இங்கே (கிளிக்கை அழுத்த முயன்று தோற்கிறான். தொடர்ந்து பீப்கள் மட்டும் கேட்கின்றன)
ராம்: மாலு மாலு கோச்சுக்காத. சாரி நான் உன்ன மட்டும் தான்…
பெண் குரல்: இன்று ஒரு டைரக்டர் வழி கேட்டார். அப்படியே என் வாழ்க்கையின் வழியும் மாறி விட்டது. (பீப் ஒலிகள்)
ராம் மேடையின் எதிர்முனைக்கு ஓடுகிறான்: ஆமா ஆமா நான் தான். இங்க இங்க கேட்கலியா ஐயோ இதென்னடா கொடுமை
தொடர்ந்து பீப் ஒலிகள் கேட்டுக் கொண்டே இருக்க அவர்கள் காதுகளை பொத்தியபடி கத்துகிறார்கள். மேடையில் ஏறி கத்துகிறார்கள். ஆனால் வாய் மட்டும் திறக்க குரல் வரவில்லை. அப்படியே வெளியே ஓடி வர பாதியில் இருந்து குரல் வெளிவருகிறது. இப்படி ஏறி இறங்கி ஓடி களைத்து மூச்சு வாங்குகிறார்கள்.
ஆண் குரல்: ஹை கய்ஸ். I am extremely sorry for the inconvenience caused
ராம்: யார்டா நீ
ஆண் குரல்: நான் தான் உங்க பைலட்
ராம்: பைலட்டா? அதான் உன்ன பார்க்க முடியாதே?
ஆண் குரல்: இப்ப தான் உங்க முன்னாடி வந்திட்டேனே? ஆக்சுவலி கய்ஸ் எங்க சைடில இருந்து ஒரு சின்ன டெக்னிக்கல் பிராப்ளம். கோடிங்கில ஒரு சிக்கல். அதான் டிராபிக்ல இருந்து உங்களை கொஞ்ச நேரம் விலக்கி வைக்க வேண்டியதாயிருச்சு. You are temporally deactivated. ஆனா உங்களை மத்தவங்க பார்க்கலாம். நீங்க தான் ஒண்ணும் பண்ண முடியாது. எவ்வளவு கத்தினாலும் பிரயோஜனமில்ல. வேணும்னா உங்க டைம்லைன்ல கொஞ்ச நேரம் தனியா சுத்திக்கிட்டு இருக்கலாம்.
கலை: மார்க்?
ஆண் குரல்: ஆமா நான் தான்
ராம்: இதை நான் ஒத்துக்க முடியாது. வெண்ணெய் திரண்டு வரும் போது நீ எப்பிடி உடைக்கலாம். இது என் வாழ்க்கை. நீ எப்பிடி அதை மாத்தலாம்?
ஆண் குரல்: ஒத்துக்கிறதா? யார் உங்க கிட்ட அனுமதி கேட்டாங்க ஒத்துகிறதுக்கு? You are powerless. Like a fly that I crush between my fingers.
கலை: மார்க் இது உண்மையிலேயே நீயா இல்ல உன்னோட வெர்ச்சுவல் பிம்பமா?
ஆண்குரல்: ரெண்டுமே நான் தான்
ராம்: அது எப்பிடி? ஒண்ணு நீ மார்க் இல்ல அவரோட பிம்பமா இருக்கணும்
ஆண் குரல்: நீ, அந்த பொண்ணுங்க, இப்போ பேசற என்னோட வெர்ச்சுவல் இமேஜ் எல்லாம் ஒண்ணு தான்
ராம்: சுத்த உளறல்
ஆண் குரல்: நான் தான் ராம்.
ராம்: நான் தான் ராம்
ஆண் குரல்: நான் தான் ராம், கலை, இந்த விமானம் எல்லாமே
ராமும் கலையும் சேர்ந்து: நான் தான் ராம், கலை, இந்த விமானம் எல்லாமே
ஆண் குரல்: ஹா ஹா
ராமும் கலையும் சேர்ந்து: ஹா ஹா
ஆண் குரல்: ஹா ஹா ஹா
ராமும் கலையும் சேர்ந்து: ஹா ஹா ஹா
ஆண் குரல்: ஹோ ஹோ ஹோ
ராமும் கலையும் சேர்ந்து: ஹோ ஹோ ஹோ
(முடிவுறுகிறது)No comments: