Monday, November 9, 2015

பீகார் தேர்தல் முடிவு சொல்வதென்ன?

பீகார் தேர்தலில் பா.ஜ.க பெற்றுள்ள பெரும் தோல்வி பற்றி சில செய்திக் கட்டுரைகள் படித்தேன். பா.ஜ.க மதவாத, பிரிவினைவாத பிரச்சாரம் செய்ததால் தோற்றது எனத் தான் பொதுவாக பல கட்டுரையாளர்களும் சொல்கிறார்கள். இத்தோல்வி ஒரு பலத்தமான அடி எனும் மீடியா கணிப்பு சரி தான். அடுத்து வரப் போகும் தமிழக, மேற்கு வங்காள தேர்தல்களில் எப்படியும் பா.ஜ.கவுக்கு எலும்புத் துண்டுகளே கிடைக்கும். அஸாம் தேர்தலில் பா.ஜ.க நிமிர வாய்ப்புண்டு என்கிறார்கள். எப்படியும் மீண்டும் ஒரு வலுவான தேர்தல் வெற்றி கிடைக்க பா.ஜ.க அடுத்து இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


 பீகார் தேர்தலில் மிகவும் மும்முரமாய் பிரச்சாரம் செய்த மோடி மக்களிடம் தன் அபிமானத்தை இழந்து விட்டதான ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிரதமர் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து மைக் பிடித்து உள்ளூர் கட்சியை போட்டிக்கு இழுப்பதன் சிக்கல் இது. நம் வரலாற்றில் எந்த பிரதமரும் இந்தளவுக்கு மாநில பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை. மோடி கட்சித் தலைவரா அல்லது தொண்டரா எனும் குழப்பம் ஏற்படுகிறது. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கிழித்த கோட்டை தாண்டாத ஒரு பள்ளி மாணவனைப் போன்றே அவர் நடந்து கொள்கிறார். அவர் அதிகாரங்களை முழுக்க தன்னிடத்து மையமாக்கிய சர்வாதிகாரி என்றார்கள். ஆனால் கட்சியின் துக்கடாக்களை கூட அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஏதோ மாவட்ட செயலாளர் போல் கூப்பிட்ட இடங்களில் எல்லாம் போய் கலந்து கொண்டு சின்ன தலைவர்களுடன் மல்லுக்கு நின்று மண்ணைக் கவ்வுகிறார். இதனோடு ஒப்பிடுகையில் காங்கிரஸ் தலைமை மாநில தேர்தல் பிரச்சாரங்களை இன்னும் கவனமாய் கௌரவமாய் கையாண்டதாய் கூறலாம். காங்கிரஸின் மாநில தேர்தல் தோல்விகளை யாரும் சோனியாவின் முகத்தில் பூசப்பட்ட கரியாக காணவில்லை. கட்சி மீது வாஜ்பாய்க்கு இருந்த பிடிமானமும் அதிகாரமும் கூட மோடிக்கு உள்ளதா என்பது சந்தேகம் தான்.

மோடியின் பிம்பம் நிஜமாகவே சரிந்து விட்டதா? பழைய நகை போல் அவர் சற்று மங்கி விட்டார். முக்கியமான காரணம் அருண் ஷோரி சொல்வது போல மோடியால் தான் முன்வைத்த பொருளாதார சீர்திருத்த/ முன்னேற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பது. பொருளாதாரம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போலத் தான் இப்போதும் உள்ளது. தேசிய அளவில் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை துவங்குவதிலோ புது தொழில்களை ஊக்குவிப்பதிலோ மோடிக்கு கவனம் இல்லை. உண்மையில் இந்த அரசாங்கத்துக்கு செலவு செய்ய காசும் இல்லை தான். அது battery saving modeஇல் இருக்கிறது. நிதியை செலவு செய்யாமல் சிக்கனம் பிடிக்கிறது. நிதியை செலவிடாவிட்டால் மக்கள் அதிக வறுமையில் மூழ்குவார்கள். செலவிட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். குரங்கின் வால் ஆப்பில் மாட்டியது போல் தான்.

 மோடி பிரதமாராகும் தருணத்தில் சொர்க்க ராஜ்ஜியம் மண்ணில் வரும் என புகழ்ந்தார்கள். அப்போது நான் உயிர்மையில் எழுதிய கட்டுரையில் (என்ன செய்ய போறீங்க மிஸ்டர் மோடி?) நமது பொருளாதார மந்தநிலை மாறாமல் தொடரும் என்றிருந்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அசோகமித்திரனை சந்தித்த போது “இப்போ தானே ஆட்சிக்கு வந்திருக்காங்க. இப்பவே தீர்ப்பெழுதினா எப்பிடி?” என்றார். ஆனா இப்போது போதுமான காலம் கடந்து விட்டது. இந்த தேசத்தில் எதுவும் மாறவில்லை. மாற்றத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் எதையும் மாற்றாவிட்டால் மக்கள் ஏமாற்றம் கொள்வார்கள் தானே? இன்றும் கிராமங்களில் வேலையில்லை. நகரங்களில் வேலையுண்டு. ஆனால் கிடைக்கிற சம்பளத்தில் சாதாரணமாய் வாழவே தடுமாற வேண்டி உள்ளது. நாம் ஒரு மூட்டை நிறைய பணத்துடன் ஓட்டலில் சாப்பிட போகும் காலம் விரைவில் வரும் என இயக்குநர் ராம் ஒரு பேட்டியில் சொன்னார். அக்காலம் வந்து கொண்டே இருக்கிறது. மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் போது மோடியை இன்னும் நம்பிக்கை நாயகனாக காட்டி வாக்கு வாங்க முடியாது என்பதையே பீகார் தேர்தல் காட்டுகிறது.

பீகார் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் பா.ஜ.க பிரச்சாரத்தை பொருளாதார வளர்ச்சியில் இருந்து மதவாதம், பிரிவினைவாதம் நோக்கி நகர்த்தியதாகவும் அதுவே பெரும் சறுக்கலுக்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். அவர்களின் ’பொருளாதார மாற்றம்’ பிரச்சாரம் நடப்பில் சொதப்பியதை உணர்ந்து கொண்டதால் தான் அவசரமாய் பிரிவினைவாதத்தை கையில் எடுத்தார்கள் என புரிந்து கொள்கிறேன். மற்றபடி மதவாதம், இட ஒதுக்கீடு ஆகியவை முழுமையான தோல்வி காரணங்களாய் இருக்காது. ஏனென்றால் போன முறை பா.ஜ.க வென்ற போது அது ஒரு இந்துத்துவா கட்சியாகத் தானே இருந்தது? இம்முறை பீகார் மக்கள் நித்தீஷை நம்ப தலைப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான்.

 ஆட்சிக்கு வந்த பின் பா.ஜ.க தன்னை எவ்விதத்திலும் நிரூபிக்காததை ஒரு முக்கிய காரணமாய் சொல்லலாம். அதே போல மதவாத ஆயுதத்தை எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாய் பிரயோகிக்க முடியாது என்பதையும் பா.ஜ.க இத்தோல்வியில் இருந்து புரிந்து கொண்டிருக்கும்.
ஒரு மாநிலத்தேர்தலின் முடிவுகளை வைத்து ஒரு கட்சி பலவீனமாகி விட்டதாய் கணிப்பதும் தவறு தான். தொடர்ந்து வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வேலையே செய்யாமல் இருந்தால் இறுதியில் என்ன கதியாகப் போகிறார்கள் என்பதற்கு மக்கள் கொடுத்த ஒரு சிறு எச்சரிக்கை என புரிந்து கொள்ளலாம். விரைவில் பொருளாதாரம் சீரடையாவிட்டால், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றம் வராவிட்டால் மோடி அடுத்த முறை பிரதமராவது சாத்தியமில்லை. இஸ்லாமியர்கள் மிக மிக சிறுபான்மையினராய் இருப்பவர்கள். அவர்களை ஒரு பொது எதிரியாய் இந்துக்கள் கருதுவதற்கான விகிதாச்சார பிரதிநுத்துவம் கூட அவர்களுக்கு இல்லை. இங்குள்ள பெரும்பான்மை இந்துக்களுக்கு இஸ்லாமியர் மீது அச்சமோ வெறுப்போ இல்லை. விதிவிலக்காய் மேற்தட்டு இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் போன்ற சில மாநிலங்களை சொல்லலாம். பொருளாதார வளர்ச்சி எனும் கனவு பலிக்காது எனத் தெரிந்ததும் பா.ஜ.க இல்லாத மத எதிரியை கட்டமைத்து அரசியலில் அறுவடை செய்யப் பார்ப்பது அபத்தமான வியூகம். ஒரு மத தலைவராக மோடி மீது பெரும்பான்மை இந்துக்களுக்கு இன்னும் வசீகரம் இருக்கலாம். ஆனால் மதத்தலைவருக்கும் மதவாதத் தலைவருக்கும் வித்தியாசம் உண்டு.  

No comments: